மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அரசியலின் உலகக் குறியீடு- பசி

இல. பிரகாசம்

Jul 14, 2018

(மாமிசம் சிறுகதைத் தொகுப்பு நூல்- தமிழில்: ரவிக்குமார்)

உலக அளவில் வெவ்வேறு வகையான அரசியல் தத்துவங்கள் பின்பற்றப்படுகின்றன. அவை நிலம் சார்ந்த மொழி, இனம், மதம், பண்பாடு ஆகியவைகளின் அடிப்படையில் வேறுபடுகின்றன. ஆனால் உண்மையில் அரசியல் எப்போதும் தனக்கான தனித்தன்மையை மேற்கண்ட எந்த ஒன்றுக்காகவும் இழக்க விரும்புவதில்லை என்பதே நிதர்சனம். எதனடிப்படையில்? இந்தியா ‘பன்முகம்” என்ற ஒரு வார்த்தையில் பல சிக்கலான அரசியல் கூறுகளைக் கொண்ட போதிலும், தேர்தல் அரசியலில் கட்சிகள் தங்களது அரசியலை வெவ்வேறு மாநில மக்களின் தன்மைக்கேற்ப கட்சிகள் தங்களின் நிலைப்பாடுகளை அமைத்துக் கொள்வதை ஒரு உதாரணமாகக் கொண்டால் மிக எளிதாக புரிந்து கொள்ளலாம்.

Sirgu pasi1

தென்னிந்திய மக்களின் மொழி, உணவு, உடை என்று எடுத்துக் கொண்டால் வடகிழக்குப் பகுதி மாநிலங்களான திரிபுரா, நாகலாந்து, மிசோரம் ஆகியவைகள் முற்றிலும் வேறுபடுகின்றன. அதே போல் பிற மாநிலங்களான பீகார், இராஜஸ்தான், குஜராத் போன்றவைகள் முழுக்க ஒரு சார்பிலான அடிப்படை பண்பாடுகளில் ஒற்றுமையுடனும் மொழி அடிப்படையில் வேறாகவும்இருப்பதை காண்கிறோம். மேலும் மத்திய, மாநிலங்களிலும் அரசியல் நிர்வாக ரீதியிலும் இது போன்று காணமுடிகிறது. ஆனால் இது முழுக்க மத்தியில் அரசியல் காரணங்களில் மாறுபடுகிறது என்பதை தேர்தல்களின் முடிவுகளின் மூலம் மக்களின் அரசியல் ரீதியிலான கோபங்களை பார்க்க முடிகிறது. ஆனாலும், சுதந்திர காலத்தில் பல வேறுபட்ட மொழி மற்றும் பண்பாடுகளைக் கொண்டிருந்தாலும் மக்கள் சுதந்திரம் என்ற ஒரு கோரிக்கையை முன்வைத்து ஒன்று திரண்டனர். அதற்கு அரசியலில் ‘சுதந்திரம்” என்ற சொல் மக்களிடத்தில் உணர்வு ரீதியிலான தேவையானதாக ஒரு குறியீட்டு மந்திரமாக பயன்படுத்தப்பட்டது என்பது அடிப்படையில் மிக எளிதில் விளங்கும்.

அரசியல் என்ற சொல் சாதாரண மக்களின் வாழ்வின் மீது கட்டமைக்கப்பட்ட மிக நுட்பமான சங்கதிகளைக் கொண்ட அமைப்பு. ஏன்? அதன் பொதுத்தன்மை எல்லா மக்களிடத்திலும் பசி ஒன்றைத்தான் குறியீடாக ஒவ்வொரு காலத்திலும் பயன்படுத்தி வந்திருக்கிறது. இன்றும் கூட. ஏன் நாளையும் அதன் மையப்பொருள் ‘பசியே” ஆதார சுருதி என்பதில் மாற்று இல்லை.

ஆனால் அதனை போக்கிக் கொள்ள (உண்மையில் ஒரு போதும் பசியை யாராலும் போக்கி விடுவதில்லை.) உணவு தேவைப்படுகிறதே. அதன் பொருட்டு விளிம்பு நிலை மக்கள் எழுப்பும் அரசியல் மிக கவனமாக புறக்கணிக்க அல்லது எழும் போராட்டத்தை நீர்த்துப்போகச் செய்வது எல்லா நாட்டிலும் அதிகாரத்தால் தொடர்ந்து செய்யப்பட்டு வருகிறது. அதனை எழுத்து வடிவில் போராடுவது இலக்கியமே. அதனை பிற மக்களுக்கு தெரிவிக்க மொழிபெயர்ப்பு கருவி தேவைப்படுகிறது.

உலக அளவில் பசியானது ஒரு குடையின் கீழ் மக்களைத் திரட்டும் சக்தி கொண்டது என்பதை ரவிக்குமார் தொகுத்து மணற்கேணி பதிப்பில் 2014ம் ஆண்டு வெளியிடப்பட்ட ‘மாமிசம்” என்ற சிறுகதைத் தொகுப்பில் பார்க்கமுடிகிறது. இத்தொகுப்பில் உள்ள பத்து கதைகளும் முற்றிலும் முன்னே குறிப்பிட்டதைப் போல நிலம், மொழி, நிறம், பண்பாடு சார்ந்து வெவ்வேறு நாட்டிலிருந்து மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன. இது முழுக்க ஒரு அரசியலை மையமாக நோரடியாகவோ அல்லது சாதாரண உரையாடல் நிகழ்வின் மூலமாகவோ சொல்லப்பட்ட இதிலுள்ள கதைகளை வாசகர்கள் அறிந்து கொள்ளமுடியும்.

சில கதைகளும் -அரசியலும்:

Sirgu pasi2

இத்தொகுப்பில் எல்லாக்கதைகளும் அரசியலைப் பற்றித்தான் பேசுகின்றன என்றாலும் அது யாருக்கான அரசியல் என்பதை சுட்டிக்காட்டத் தவறவில்லை என்பதே இத்தொகுப்பின் சிறப்பு என்று கூறலாம். உணவு -பசி இதன் மையத்தில்தான் ஒவ்வொரு நாட்டின் அரசியல் சட்டங்கள் இயற்றப்பட்டிருப்பதாகவே தோன்றுகிறது. ‘மாமிசம்” கதையில் வரும் கதாபாத்திரம் உணவிற்காக செய்கிற செயல் நெஞ்சிலிருந்து இரத்தத்தை தரையில் வழிந்தோடச் செய்வதாக இருக்கிறது.

கதையில் நகரமேயர் இதனைக் கண்டு நகரம் முழுவதும் வினோதமான ஒரு உத்தரவைப் போடுகிறார் அதனை மற்றவர்களும் பின்பற்றுகின்றனர். இதனை விர்ஜிலியோ பினேரா கதைசொல்கிற பாணியானது இயல்பான முறையில் அமைத்திருப்பது வியப்பை ஏற்படுத்தவில்லை என்றாலும் பதைபதைப்பு சொற்களில் துடிப்பதை உணரமுடிகிறது.

உலகில் பெண்மையில் எத்தணை மாற்றங்கள் வேண்டுமானாலும் வரலாம் போலிருக்கிறது. ஆனால் ஒரு குழந்தை பசிக்காக அழுவதைப் பார்க்கிற போது நிச்சயம் எல்லா நாட்டிலும் தாய்மை மாறிவிடுவதில்லை. அது எத்தகைய உணர்ச்சி வயமானது அதில் இரக்கம் எத்தகைய தன்மையிலும் எப்படியான பாசத்தை வெளிப்படுத்தும் என்பதைப் பற்றிய கதையாக மிகேல் ரகோடோசன் ‘அம்மா” வை படைத்திருக்கிறார்.

யுத்தகளத்திலிருந்து ஒரு நாட்டிலிருந்து மற்றொரு நாட்டிற்கு அகதியாக சென்றவர்களின் துயர்மிக்க நிமிடங்கள் மிக பததைக்க வைக்கும் சம்பவங்கள் என்றிருந்தாலும் அவர்கள் பிற நாட்டில் எவ்வாறு நடத்தப்படுகிறார்கள் அவர்களின் அன்றாட பால், ரொட்டி, உணவிற்கும் பிற அடிப்படைத் தேவைக்கும் படுகிற இன்னல்கள் அவர்களுக்கு, நாம் இன்னும் யுத்தகளத்தில் தான் நின்று கொண்டிருப்பதாக எண்ணத்தோன்றும். அத்தகைய நிலையை ‘பிழைப்பு” கதையில் துப்ரவ்கா உக்ரேசிச்-ன் எழுத்துக்கள் இன்னமும் வடுக்களாக இருப்பதை காணமுடிகிறது.

‘நிறம்” என்ற கதையானது மேற்குறிப்பிட்ட துணைக் கண்டமான இந்தியாவிற்கு மிகப் பொருத்தமானதென்று கூட நாம் கூறலாம். இது முழுக்க உலகில் நிறத்தாலும், மொழியாலும், உடலமைப்பாலும் ஒதுக்கபட்ட சராசரி குடிமகன்கள் முதற்கொண்டு பிற நாடுகளில் சோதனை என்ற பெயரில் அவமானப்படுத்தப்பட்ட எல்லா நாட்டுத் தலைவர்களுக்கும் இது பொருந்தும். யாரும் அவசியம் படிக்க வேண்டிய மொழிபெயர்ப்புக் கதையாக இந்தோ-ஆசிய பல்கலைக் கழகங்கள் பரிசீலித்து பாடத்திட்டமாக வைக்க வேண்டும்.

‘சுதந்திர தினம்” என்ற கதையானது ஜிம்பாப்வே நாட்டின் காலணிய காலத்தின் கொடுமையை ஒரு குடிமகனின் பார்வையில் வெளியிடுகிறது. தனது நாட்டிற்கு சுதந்திரம் வழங்க மற்றொரு நாட்டைச் சேர்ந்தவனுக்கு எப்படி அதிகாரம் வந்தது? அப்படியானால் உண்மையில் அவன் அதுவரை சுதந்திரம் என்ற காற்றை எங்கு சிறைவைத்திருந்தான்? என்ற கேள்வி யுவோன் வோராவால் மிக இயல்பாக எழுப்பப்படுகிறது.

தற்போது வரை அரசியல் பற்றிய விழிப்புணர்வு என்பது தமிழ்நாட்டில் தொழில்நுட்பங்களின் துணையோடு முன்னெடுக்கப்படுகிறதை பார்க்கமுடிகிறது. அதனை இலக்கியங்கள் ஒவ்வொரு காலகட்டத்திலும் செய்து கொண்டு தான் வந்திருக்கின்றன. (தமிழில் திருக்குறள் முதற்கொண்டு ஐம்பெருங் காப்பியங்கள், ஐஞ்சிறு காப்பியங்கள் அரசியலை முதன்மையாகப் பேசியவை).

மாமிசம் தொகுப்பில் மொழிபெயர்க்கப்பட்ட கதைகள் மிக சிரத்தையோடும் சமூகப் பொறுப்புணர்வோடும் சமூக நீரோட்டத்தின் நாடியில் அரசியலைப் பேசும் கதைகள் மொழிபெயர்க்கப்பட்டிருக்கின்றன என்பது தெளிவு. ஒரு சமூகம் மேன்பட்ட சமூகம் என்பதை இலக்கியம் பறைசாற்றும் என்றால் அது, அந்நாட்டு மக்களின் அடிப்படைத் தன்மையான உணர்வுப்பூர்வமான அரசியலைப் பிரதிபலிப்பவையாக இருந்தால் மட்டுமே அது சாத்தியம். அது இத்தொகுப்பில் சாத்தியப்படுத்தும் முயற்சி தென்படுகிறது.

இத்தொகுப்பு உலகில் உள்ள எல்லா மக்களையும் பசி என்னும் பொதுக் குறியீட்டின் கீழ் திரட்ட முயல்கிறது. ஏனெனில் அதுவே எல்லா நாட்டின் அடிப்படையான அரசியல் சாசனத்திலும் உப்பைப் போல உரத்துக்கிடக்கிறது. உணர்ச்சி மழுங்காத அனைவருக்கும் உப்பின் சுவை உரைக்காமலா போய்விடும்?.


இல. பிரகாசம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அரசியலின் உலகக் குறியீடு- பசி”

அதிகம் படித்தது