மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவில் உணவுப் பணவீக்கம்

பேராசிரியர் பு.அன்பழகன்

Aug 6, 2022

siragu inflation

பணவீக்கம் தேசிய அளவிலும் உலக அளவிலும் முக்கிய விவாதப் பொருளாகத் தற்போது உள்ளது. பணவீக்கத்திற்கு பல்வேறு உள்நாட்டு, பன்னாட்டுக் காரணிகள் காரணமாக அமைகிறது. பணவீக்கத்தினால் அனைத்து தரப்பினரும் பாதிப்படைந்தாலும் ஏழை மக்கள் பெருமளவிற்கு பாதிக்கின்றனர். பணவீக்கம் பணத்துடன் தொடர்புடையது இது குறிப்பிட்ட காலங்களில் பொருட்களின் விலை தொடர்ந்து உயர்வதினைக் குறிப்பதாகும். இதனை விலை குறியீட்டு எண் வழியாக அறிந்துகொள்ள முடியும். மொத்த விலை குறியீட்டு எண் மற்றும் சில்லரை விலை குறியீட்டு எண் (இதனை நுகர்வோர் விலை குறியீட்டு எண் வழியாகக் கணக்கிடப்படுகிறது) பொருளாதார, அரசியல், வணிப தளங்களில் முக்கியமானதாகும். இந்தியாவில் ஜூன் 2022ல் மொத்த விலை குறியீட்டு எண் ஆனது 15.18 விழுக்காடாகவும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆனது 7.01 ஆகவும் இருக்கிறது. இவ்வுயர்விற்கு அடிப்படைக் காரணம் சமையல் எண்ணெய், உணவு தானியங்கள், காய்கறிகள், கச்சா எண்ணெய், இயற்கை எரிவாயு, அடிப்படை உலேகங்கள், வேதியியல் உற்பத்தி பொருட்கள் போன்றவற்றின் விலை கடந்த ஆண்டைவிட அதிகரித்ததாகும். உணவு தானியப் பொருட்களின் விலை கடந்த ஆண்டைவிட 14.39 விழுக்காடு அதிகரித்துள்ளது குறிப்பாக காய்கறிகள், பழங்கள், பால், முட்டை, மீன் போன்றவைகளின் விலை உயர்ந்ததாகும் (The Indian Express 22.07.2022). உணவு பணவீக்கம் கடந்த ஆண்டைவிட சுமார் 11 விழுக்காடு அதிகரித்துள்ளது. இவ்விரு குறியீட்டு எண்களுக்கிடையே அடிப்படையில் உற்பத்தி பொருட்களின் தொகுப்பிலும், அதற்கான மதிப்புறு அளவிலும், மாதிரியின் விலை மேற்கொள் போனற்வற்றில் வேறுபாடுடன் உள்ளது.

அட்டவணை:1 மொத்த விலை குறியீட்டு எண் மற்றும் நுகர்வோர் விலை குறியீட்டு எண் அடிப்படை வேறுபாடுகள்

 

விவரங்கள்

மொத்த விலை

குறியீட்டு எண்

நுகர்வோர் விலை குறியீட்டு எண்
அடிப்படை ஆண்டு 2011-12 2012
விலை மேற்கோள்/சந்தை (எண்) 5482 2295
பொருட்களின் கணக்கு (எண்) 697 299
மதிப்புறு (%)    
உணவு மற்றும் திரவ பானங்கள் 22.55 45.86
எரிபொருள் தொகுதி 14.91 6.84
எரிபொருட்களில் பெட்ரோலியம் 9.36 1.84
உணவல்லா உற்பத்தி பொருட்கள் 54.76 23.86
கனிம மற்றும் உணவல்லா முதன்மைபொருட்கள் 5.78 இல்லை
வீட்டு வசதி மற்றும் பிற சேவைகள் இல்லை 23.76

ஆதாரம்: www.mospi.nic.in and www.eaindustry.nic.in.

நுகர்வோர் விலை குறியீட்டு எண் ஆனது குடும்ப நுகர்வுப் பொருட்களின் தொகுதியினை பெருமளவிற்குச் சார்ந்துள்ளது. இதில் உணவு மற்றும் திரவ பானங்களின் மதிப்புறு பங்கு 46 விழுக்காடு ஆகும். எரிபொருள் தொகுதி, கனிம எண்ணெயின் மதிப்புறு பங்கு 1.84 விழுக்காடு ஆகும், பெட்ரோலிய உற்பத்தி மதிப்புறு பங்கு 4.6 விழுக்காடு ஆகும். நுகர்வோர் விலை குறியீட்டு எண் புள்ளிவிவரங்கள் 2295 சந்தைகளில் (1114 கிராமப்புறம், 1181 நகர்புறம்) திரட்டப்படுகிறது (Tulsi Lingareddy2016).

siragu pana veekkam1

நுகர்வோர் விலை குறியீட்டு எண்ணில் உணவு மற்றும் திரவ பானங்கள் பணவீக்கத்தில் பாதிஅளவிற்குமேல் பாதிப்பினை உண்டாக்குகிறது. ஆனால் இது மொத்த விலை குறியீட்டு எண்ணில் ஒப்பீட்டு அளவில் குறைவான பாதிப்பினையே உண்டாக்குகிறது. மொத்த விலை குறியீட்டு எண், நுகர்வோர் விலை குறியீட்டு எண் போன்றவற்றுடன் ஒப்பிடும்போது நுகர்வோர் உணவு விலை குறியீட்டு எண் ஆனது 2012ஆம் ஆண்டு முதல் 2021ஆம் ஆண்டுகளுக்கு இடையே அதிக அளவில் காணப்படுகிறது. பணவீக்க குறியீட்டு எண்ணின் போக்கு 2012லிருந்து 2015முடிய ஒரு திசையிலே பயனிக்கிறது ஆனால் 2016முதல் 2019முடிய இவற்றுக்கு இடையே உள்ள இடைவெளி குறையத் தொடங்கியது ஆனால் 2020ல் இவ்விரண்டும் எதிர் திசையில் பயனித்தும் இடைவெளி அதிகரித்தும்காணப்படுகிறது. குறிப்பாக 2022ல் இவ்விரண்டிற்கும் உள்ள இடைவெளி இதுவரையில்லாத அளவிற்கு அதிகரித்து காணப்படுகிறது. மொத்த விலை குறியீட்டு எண்ணும் நுகர்வோர் விலை உணவு குறியீட்டு எண்ணும் கடுமையான உயர்வினைச் சந்தித்துள்ளது. இதற்கு முக்கியக் காரணம் கோவிட் பெருந்தொற்று, பன்னாட்டு அரசியல்-பொருளாதாரச் சூழ்நிலை மற்றும் அரசின் வரி போன்றவைகள் ஆகும்.

பெட்ரோல், டீசல் எண்ணெய் விலை    

இந்தியாவில் எண்ணெய் நிறுவனங்கள் அன்றாட அடிப்படையில் ஜூன் 2017முதல் உலக சந்தையின் அடிப்படையில் பெட்ரோல், டீசல் விலைகளை அறிவிக்கின்றன. மே 2014ல் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 106.85 டாலராக இருந்த போது சில்லரை விலையில் பெட்ரோல் விலையானது லிட்டருக்கு ரூ.74.41ஆகவும் டீசல் விலை ரூ.55.49ஆகவும் இருந்தது இது ஜூலை 2022ல் ஒரு பீப்பாய் கச்சா எண்ணெய் 95.06 டாலராக உள்ளது ஆனால சில்லரை விலையில் பெட்ரோல் விலையானது ஒரு லிட்டருக்கு சுமார் ரூ.100க்கு அதிகமாகவும், டீசல் விலை ரூ.90யினையும் தொட்டுள்ளது. பன்னாட்டு அளவில் கச்சா எண்ணெய் விலை குறைந்திருந்தாலும் சில்லரை விலையில் விற்கப்படும் பெட்ரோல், டீசல் விலைகள் கடுமையாக அதிகரித்துள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

உண்மையில் பன்னாட்டு எண்ணெய் விலையானது உள்நாட்டு சில்லரை பெட்ரோல், டீசல் விலையில் சிறிய அளவிலே தாக்த்தினை ஏற்படுத்துகிறது. அதாவது பன்னாட்டு அளவில் நிலவுகின்ற எண்ணெய் விலையின் அடிப்படையில் இந்திய எண்ணெய் நிறுவனங்களினால் தீர்மானிக்கின்ற விலையானது மூன்றில ஒரு பங்கு மட்டுமே பெட்ரோல், டீசல் விலையில் தாக்கத்தை ஏற்படுத்துகிறது. எஞ்சிய மூன்றில் இரண்டு பங்கு உள்நாட்டு வரியினால் ஏற்படுகிறது. பெட்ரோல், டீசல் சில்லரை விலையினை தீர்மானிப்பதில் பன்னாட்டு எண்ணெய் விலை, ஒன்றிய, மாநில வரிவிதிப்புகள் என மூன்று முக்கியக் கூறுகள் பங்காற்றுகிறது. ஒன்றிய அரசின் வரிவிதிப்பு 2014-15க்கு பிறகு சுமார் 60 விழுக்காடு உயர்ந்துள்ளது. ஆனால் மாநில அரசுகளின் வரியானது சராசரியாக குறைந்து 40 விழுக்காடு அளவிற்கு உள்ளது. எனவே மாநில அரசுகளின் பெட்ரோல், டீசல் மூலம் பெறப்படும் வரி வருவாயனது குறைந்துள்ளது. அக்டோபர் 2014ல் ஒன்றிய அரசு ஒரு லிட்டர் பெட்ரோலுக்கு ரூ.9.48ம் டீசலுக்கு ரூ.3.56ம் கலால் வரி விதித்தது, மே 2020ல் ரூ.32.98 மற்றும் 31.83 என்று முறையே இதனை உயர்த்தியது. தொடர்ந்து பெட்ரோல், டீசல் விலை உயர்வினால் பொருளாதாரம் பெருமளவிற்கு பாதிக்கப்பட்டதால் ஒன்றிய அரசு கலால் வரியினைக் குறைத்தது, இதனால் கடந்த மே 2022ல் சில்லரை விலையில் பெட்ரோல் லிட்டருக்கு ரூ.9.50ம், டீசலுக்கு ரூ.7ம் குறைந்தது. தற்போது பெட்ரோல் மீதான வரியானது (கலால் மற்றும் மதிப்புக் கூட்டல் வரி) ரூ.35.62ஆகவும், டீசல் மீதான வரி ரூ.28.91ஆகவும் உள்ளது. 2020-21ஆம் ஆண்டு பெட்ரோல், டீசல் வரி மூலம் ஒன்றிய அரசுக்கு ரூ.3.73 லட்சம் கோடி வருமானமாகக் கிடைத்துள்ளது. இவ் வரி குறைப்பினால் ரூ.3.63லட்சம் கோடியாக 2021-22ல் கிடைக்கும் என எதிர்பார்கப்படுகிறது. கடந்த எட்டு ஆண்டுகளில் பெட்ரோல், டீசல் மீதான வரியின் வழியாக ஒன்றிய அரசால் பெறப்பட்ட வருமானம் ரூ.26.5 லட்சம் கோடியாகும்.

அட்டவணை 2: டெல்லியில் பெட்ரோல், டீசல் விலை கட்மைப்பு (01.08.2022 அன்று லிட்டருக்கு)

கூறுகள் டீசல் பெட்ரோல்
வணிகர்களின் விலை 58.19 57.37
கூட்டல்: கலால் வரி 15.80 19.90
கூட்டல்: வணிகர் தரகு 2.56 3.76
கூட்டல்: மதிப்பு கூட்டல் வரி 13.11 15.72
சில்லரை விற்பனை விலை 89.66 96.76

ஆதாரம்: https://www.hindustanpetroleum.com/pricebuildup.

-தொடரும்


பேராசிரியர் பு.அன்பழகன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவில் உணவுப் பணவீக்கம்”

அதிகம் படித்தது