மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி- 5)

தேமொழி

Nov 4, 2017

V. ‘மறைந்தாலும்’ மறக்கப்படாத கைதிகள்:

Siragu alcatraz5-1ஃபிரான்க் மோரிஸ் மற்றும் ஜான் ஆங்க்லின், கிலாரென்ஸ் ஆங்க்லின் சகோதரர்கள் அதிக கண்காணிப்பு கொண்ட அல்கட்ராஸ் தீவின் சிறையில் இருந்து தப்பியதற்கு மறுநாள், ஜூன் 12, 1962 அன்று காலையில் ஆறரை மணிக்கு மணியடித்து அனைவரையும் எழுப்பி அவர்கள் சிறைக் கதவருகில் நிற்கும் பொழுது எண்ணிக்கை எடுக்கப்பட்ட நேரம், தப்பிய மூவரும் தூங்குவது போலிருக்க, காவலாளிகள் அவர்களை அசைக்க முற்பட, பொம்மைத் தலைகள் தரையில் விழுந்து உருண்டோட, சிறையின் எச்சரிக்கை மணிகள் அலறியது. அறைகளைச் சோதனை செய்ததில் அவர்களது பொய்ச்சுவர் குட்டு வெளியாகியது, மற்ற அறைகளையும் சோதனை செய்த பொழுது ஆலன் வெஸ்ட்டும் மாட்டிக் கொண்டார். அவர் கூறிய தகவல்களைக் கொண்டும், புகை போக்கி அருகே கரி படிந்த கால் தடயங்கள் கொண்டும், மிதவை, துடுப்பு, தப்பிய முறை யாவும் காவலாளிகளுக்குத் தெரிய வந்தது. வழக்கமாக அனைவரும் முயற்சிப்பது போல தெற்கு நோக்கி சான் பிரான்சிஸ்கோ செல்லாமல், வடக்கு நோக்கி ஏஞ்சல் தீவுக்கு மூவரும் தப்பிச் சென்று, அங்கிருந்து மேலும் பயணித்து வடகரையில் ஏறி, ஒரு துணிக்கடையில் கொள்ளையடித்து ஆடைகளை மாற்றிக் கொண்டு, கார் ஒன்றைத் திருடி தப்பிவிடத் திட்டம் என்று ஆலன் வெஸ்ட் கூறியிருந்தார். காவல்துறையினர் தீவையும் கடலையும் அங்குலம் விடாமல் சோதனை செய்ததில் அவர்கள் அப்பகுதியில் இல்லை என்று தெளிவானது. இரண்டு நாட்கள் கழித்து மிதக்க உதவும் மேலங்கிகள் மூன்றும், துடுப்புகளும் கடலில் ஆங்காங்கே கிடைத்தன. அவற்றுடன் ஆங்க்லின் சகோதரர்கள் குடும்பப் படங்கள் நீர்ப்புகமுடியாத உரையொன்றில் கண்டெடுக்கப்பட்டது. அதனால் அவர்கள் மூழ்கிவிட்டார்கள் என்று கூறப்பட்டது. இல்லை அவர்கள் மூழ்கி இறந்துவிட்டதாக மற்றவர்கள் கருத வேண்டும் என்று ஏமாற்றும் நோக்கில் அவை வேண்டுமென்றே விட்டுச் செல்லப்பட்டன என்றும் மற்றொரு பிரிவினர் கருதினர்.

ஃபிரான்க் மோரிஸ்ஸின் அறையில் கிடைத்த மெக்சிகோ நாட்டு வரைபடங்கள் மூலம் அவர்கள் அந்த நாட்டிற்குத் தப்ப திட்டமிட்டிருக்கலாம் என்று கருதப்படுகிறது. ஃபிரான்க் மோரிஸ் ஸ்பானிஷ் மொழியைக் கற்றுக் கொள்ள ஆர்வம் காட்டினார் என்பதும் தெரிகிறது. அவர்கள் உயிருடன் தப்பியிருந்தால் அவர்கள் மெக்சிகோவில் இருக்கலாம் என்றும் நம்பப்படுகிறது. பொதுவாக வெளியில் வரும் குற்றவாளிகள் மீண்டும் ஏதேனும் தவறு செய்து சிக்கிக் கொள்வது வழக்கம். ஆனால் தப்பிய மூவர் குறித்து பிறகு எந்த நடவடிக்கையும் இல்லை என்பதால் அவர்களை அலைகள் கடலுக்கு இழுத்துச் சென்று அவர்கள் இறந்துவிட்டார்கள் என்பது எஃப்.பி.ஐ. தரும் விளக்கம். அதே நாளில் அதே இரவில் தனது உறவுடன் ஏற்பட்ட தகராறு காரணமாகப் பலர் காணத் தற்கொலை செய்து கொள்ள கோல்டன் கேட் பிரிட்ஜில் இருந்து கடலில் குதித்த ஒருவரைக் காப்பாற்ற எடுத்த உடனடி நடவடிக்கையில் அவர் உடலும் அகப்படவில்லை. இது எஃப்.பி.ஐ. சொல்வதை ஒப்புக் கொள்ள வேண்டிய சூழலை உருவாக்குகிறது. ஒன்பது மாதங்கள் கடந்த பிறகு கடலில் கிடைத்த அடையாளம் கண்டறிய இயலாதவகையில் சிதைந்து போன உடல் ஒன்று தப்பியவர்களில் ஒருவராக இருக்கலாம், குறிப்பாக ஃபிரான்க் மோரிஸ்ஸின் உடலாக இருக்கலாம் என்று உளவுத்துறையால் கருதப்பட்டு மரபணு ஆய்வு செய்யப்பட்டது. ஆனால் சோதனை முடிவு அது ஃபிரான்க் மோரிஸ் அல்ல என்று காட்டியது. ஆங்க்லின் சகோதரர்களில் ஒருவராக இருக்கலாமோ என்று மரபணு சோதனை செய்ய விரும்பிய பொழுது அக்குடும்பத்தினர் ஒத்துழைக்க மறுத்துவிட்டனர்.

தப்பிய மூவரும் உண்மையிலேயே தப்பியிருக்க வாய்ப்புள்ளதா அல்லது எஃப்.பி.ஐ. சொல்வது போல உயிரிழந்திருப்பார்களா எனப் பலரும் பல கோணங்களில் கருத்துகள் கூறி வருவதும் தொடர்ந்தது. ஒரு சில பல்கலைக்கழக ஆய்வாளர்கள் அவர்கள் தப்பிய நாளன்று கடலின் அலைகளின் வேகம், அந்த இரவில் கடலின் ஓதம், கடலை நோக்கி நீரோட்டத்தின் வேகம், அன்றைய காற்றின் வேகம், தட்ப வெப்ப நிலை, வானிலை அறிக்கைத் தரவுகள் அனைத்தும் உள்ளடக்கிய கணினி மாதிரிகளை உருவாக்கி, எந்த இடத்தில் கைதிகள் கரையேறி இருந்தால் அவர்கள் பயன்படுத்திய துடுப்புகள், மிதக்க உதவும் மேலங்கிகள், ஆங்க்லின் சகோதரர்கள் குடும்பப் படங்கள் ஆகியன பின்னர் அவை கிடைத்த இடத்தில் சென்று சேர்ந்திருக்கும் எனக் கணக்கிட்டு, அவர்கள் கோல்டன் கேட் பிரிட்ஜ் பகுதியில் கரையேறி தப்பி இருக்கலாம் என்கிறார்கள். முதலில் மிதவையும் கிடைக்கவில்லை, சுற்றுப்புற ஊர்களில் கார் திருட்டு எதுவும் நடக்கவில்லை என்று கூறப்பட்டதும் பின்னர் தவறு என்று கண்டறியப்பட்டது. கார் ஒன்றும் திருட்டுப் போனதாகவும், அதை மூவர் எடுத்துச் சென்றார்கள் என்ற சாட்சி இருப்பதாகவும் தெரிய வந்தது.

தீவின் அருகே அரசுக்குச் சொந்தமான படகு தவிர வேறு படகுகள் செல்லக்கூடாது என்ற சட்டத்தையும் மீறி அவர்கள் தப்பிய அன்று நள்ளிரவில் ஒரு படகு வெகு நேரம் தீவின் அண்மையில் நின்றதாகவும், பின்னர் கோல்டன் கேட் பிரிட்ஜ் நோக்கிச் சென்றதாகவும் ஒரு செய்தியும் உண்டு. பணி முடிந்த பிறகு சான் பிரான்சிஸ்கோ கரையின் மதுபானக்கடையொன்றில் தான் ஓய்வெடுத்த பொழுது, படகை அவர் நள்ளிரவில் பார்த்ததாக காவல்துறைக் காவலர் ஒருவர் நாளிதழ் ஒன்றுக்குப் பேட்டி கொடுத்திருந்தார். அதனால் அந்தப் படகை அவர்கள் பயன்படுத்தி இருக்கலாம் என்றும் கூறப்படுகிறது.

சமீபத்திய ஹிஸ்டரி சேனல் ஆவணப்படம் ஒன்று இவை யாவற்றையும் இணைத்து, கைதிகள் மிதவையில் ஏறி துடுப்பு வலித்து, தீவைச் சுற்றி வந்து படகுத் துறையில் காத்திருந்தார்கள். பிறகு, தீவிலிருந்து இறுதியாக நள்ளிரவில் செல்லும் கடைசிப் படகின் பின்புறத்துடன் மிக நீளமான 120 அடி மின்சார வயரை இணைத்து, சான் பிரான்சிஸ்கோ வரை பாதி தூரம் சென்று, பின்னர் மிதவையின் இணைப்பைத் துண்டித்து பக்கவாட்டில் மேற்கு நோக்கி மிதவையைச் செலுத்தி துடுப்பை வலித்து அங்குக் காத்திருந்த படகில் மூவரும் ஏறி, மிதவையையும் தங்களுடன் ஏற்றிக் கொண்டார்கள். துடுப்புகளையும் அங்கிகளையும் மட்டும் கடலில் விட்டெறிந்து மிதவை சிதைந்து நீரில் அவர்கள் மூழ்கியது போன்றதொரு தோற்றத்தை உருவாக்கிவிட்டு, படகில் கோல்டன் கேட் பிரிட்ஜ் பகுதிக்கு சென்று கரையேறி மெக்சிகோவிற்குத் தப்பிவிட்டார்கள் என்ற மற்றொரு கோணத்தைக் கொடுத்தது. சிறையில் எண்ணிக்கை எடுக்கும் மறுநாள் காலைவரை அவர்களுக்கு முழுதாக ஒன்பது மணிநேரம் தப்பிக்க வாய்ப்பிருந்திருக்கிறது. அத்துடன் யாரோ வெளியில் இருந்து அவர்களுக்குப் படகும் கொடுத்துத் தப்பவும் உதவியுள்ளார்கள் என்றும் கூறப்பட்டது.

Siragu alcatraz5-2எஃப்.பி.ஐ.-க்கு கைதிகள் தப்பிய பிறகு பற்பல துப்புகள் கிடைத்தன, அவற்றில் பொய்யான சில உளவுத்துறையைத் தேவையின்றி அலைய வைத்ததும் உண்டு. மூவரையும், குறிப்பாக ஆங்க்லின் சகோதரர்களை பல இடங்களிலும், தென் அமெரிக்க நாடொன்றிலும் பார்த்ததாக கூறியவர்களும் உண்டு. ஆங்க்லின் சகோதரர்களின் தாய் இறந்த பிறகு, அதிக ஒப்பனையுடன் இருந்த உயரமான இரண்டு பெண்கள் இறுதிச் சடங்கில் கலந்து கொண்டபொழுது, ஆங்க்லின் சகோதரர்கள் இருவரும் அவ்வாறு மாறு வேடத்தில் வந்திருக்கலாம் என்ற புரளியும் கிளப்பியது. எஃப்.பி.ஐ. அவர்கள் குடும்பத்தைத் தொடர்ந்து கண்காணித்தார்கள். அவர்களது அஞ்சல்களையும், தொலைப்பேசியையும் தொடர்ந்து கண்காணித்து வந்தார்கள். அவற்றில் சில முறை ஏதோ மர்மச் செய்திகள் வருவதாகவும் சந்தேகித்தார்கள்.

இதற்கிடையில், ஆங்க்லின் சகோதரர்கள் வங்கியில் கொள்ளையடித்த பொழுது அவர்களில் ஒருவரான மூத்தவர் ஆல்ஃபிரெட் ஆங்க்லின், அவர் அடைத்து வைக்கப்பட்டிருந்த அலபாமா சிறையில் இருந்து தப்பி ஓட முயன்ற போது மின்சார வேலியில் மாட்டி உயிரிழந்ததாக அவரது உடல் குடும்பத்திடம் ஒப்படைக்கப்பட்டது. விடுதலைக்குச் சிலகாலமே இருந்த பொழுது அவர் தப்பும் எண்ணத்தில் இருந்திருக்க மாட்டார் என்றும், மற்ற இருவரைப் பற்றி இவருக்கு ஏதேனும் தெரியலாம் என்று அவரைச் சித்திரவதை செய்ததில் அவர் இறந்துவிட்டார் என அதிர்ச்சியடைந்த ஆங்க்லின் குடும்பத்தினர் உறுதியாக நம்பினார்கள். தொடர் எஃப்.பி.ஐ. தொல்லை அவர்களை வெறுப்பின் உச்சத்திற்குத் தள்ளி எஃப்.பி.ஐ.யை அவர்கள் மிகவும் வெறுத்து ஒத்துழைக்க முற்றிலும் மறுத்துவிட்டார்கள்.

 Siragu alcatraz5-3

தப்பிய மூவரும் இன்று உயிருடன் இருந்தால் அவர்களுக்கு 80 வயது கடந்துவிட்டது. இந்த வயதைக் கடந்த பிறகு அவர்களை அமெரிக்கக் கைதிகள் எனக்கூறி அமெரிக்காவிற்குத் திருப்பி அனுப்புமாறு பிறநாடுகளை அமெரிக்கா வற்புறுத்த இயலாத வகையில் உலகப் பொதுச் சட்டமொன்று மனிதநேய அடிப்படையில் தடை செய்வதாகத் தெரிகிறது. இந்தச் சூழ்நிலையில் ஒரு புதுத் திருப்பம் ஏற்பட்டுள்ளது. ஆங்க்லின் சகோதரர்களின் சகோதரி ‘மேரி ஆங்க்லின் வைட்னெர்’ (Marie Anglin Widner) என்பவரின் மகன்கள் டேவிட் மற்றும் கென் வைட்னெர் என்பவர்கள் தங்கள் மாமாக்களுக்கு என்ன நேர்ந்தது என்ற தகவலை உலகிற்கு அறிவிக்கும் நோக்கில் தங்கள் குடும்ப இரகசியத்தை வெளியிட்டு, அதற்குச் சான்றான படம், வாழ்த்து அட்டைகள் ஆகியவற்றை அமெரிக்க உளவுத் துறைக்கு சமர்ப்பிக்க விரும்புவதாகவும், பதிலுக்கு மின்சாரம் தாக்கி இறந்ததாகக் கூறப்படுபவர் உண்மையில் எவ்வாறு இறந்தார் என்பதை மீண்டும் சவப்பரிசோதனை செய்து முடிவை வெளியிட்டால், அவரது மரபணுவையும் சான் பிரான்சிஸ்கோ கடலில் கிடைத்த எலும்புகளுடன் ஒப்பிட்டு இவர்கள் சான்றுகளை உறுதி செய்து கொள்ளத் தருவதாகப் பேரம் பேசினார்கள்.

அமெரிக்க உளவுத்துறையின் பிரிவுகள் இந்தப் பேரத்தை ஏற்றுக் கொண்டன. மூத்தவர் ஆல்ஃபிரெட் ஆங்க்லின் உடல் மீண்டும் தோண்டியெடுக்கப்பட்டு சவப்பரிசோதனை செய்யப்பட்டது. ஆனால் முடிவு அந்தக் குடும்பத்தாருக்கு ஏமாற்றம் அளித்தது. ஆல்ஃபிரெட் ஆங்க்லின் இறந்தது மின்சாரம் தாக்கிதான், வன்முறையால் இறக்கவில்லை என்று தெரிய வந்தது. அவரது மரபணுக்கள் சான் பிரான்சிஸ்கோவில் ஒன்பது மாதங்களுக்குப் பிறகு கிடைத்த எலும்புகளுடனும் தொடர்புடையதாகவும் இருக்கவில்லை. எனவே உளவுத்துறையினரிடம் கிடைத்தவை ஆங்க்லின் சகோதரர்கள், ஃபிரான்க் மோரிஸ் ஆகியோருடையவை அல்ல என்று உறுதியானது. உளவுத்துறைக்கு இந்த முடிவு ஏமாற்றம் அளித்தது.

ஆங்க்லின் சகோதரியின் மகன்கள் அவர்கள் மாமாக்கள் தப்பியதில் இருந்து தொடர்ந்து அவர்கள் அஞ்சல் பெட்டியில் வாழ்த்துகள் வைக்கப்பட்டிருந்ததாகக் கூறி ஆங்க்லின் சகோதரர்கள் கையொப்பமிட்ட வாழ்த்து அட்டைகளைக் காட்டினர். இவை அஞ்சல் துறை வழி வந்தவையல்ல. அவற்றில் காணப்பட்ட கையெழுத்துகள் கைதிகளின் கையெழுத்துகளுடன் ஒத்துப் போனாலும் அது அவர்கள் தப்பிய பின்னர் அனுப்பியவைதானா என உறுதி செய்ய வழியில்லாததால் உளவுத்துறை அந்தச் சான்றை ஏற்க மறுத்துவிட்டது.

‘ஃபிரெட் பிரிஸ்ஸி’ (Fred Brizzi) என்பவர் ஆங்க்லின் சகோதரர்களின் சிறுவயது முதல் அவர்களுடன் நெருக்கமான நண்பராகவும் குடும்பத்தின் நண்பராகவும் இருந்தார். இவர் ஆங்க்லின் சகோதரர்கள் தப்பி 12 ஆண்டுகள் கழிந்த பின்னர், 1975 ஆண்டு வாக்கில், பிரேசில் நாட்டுக்குச் சென்ற பொழுது, எதிர்பாராத விதமாக ஆங்க்லின் சகோதரர்களை ‘ரியோ டி ஜெனிரோ’ நகரின் மதுக்கடை ஒன்றில் சந்தித்ததாகவும்,   சகோதரர்கள் அந்த நாட்டில் நிலம் வாங்கி ஒரு புதிய வாழ்க்கை தொடங்கியிருப்பதையும், அங்கு அவர்களைத் தான் எடுத்த படம் என்று கூறி அவர் ஒரு படத்தைக் கொடுத்தார் என்றும் படம் ஒன்றையும் உளவுத்துறைக்குக் காட்டினர். அத்துடன், ஃபிரெட் பிரிஸ்ஸி அவர்கள் இல்லத்திற்கு 1990 களில் வந்து குடும்பத்திற்குத் தகவல் சொன்ன பொழுது அவர் ஆங்க்லின் குடும்பத்துடன் உரையாடும் படத்தையும், அவர் அருகில் அவர் பேச்சை ஒலிப்பதிவு செய்த கருவி இருப்பதையும் காண்பித்து, அதே ஒலிப்பதிவுக் கருவி, ஒலிநாடா ஆகியவற்றையும் கொடுத்தார்கள்.

படங்களை அத்துறை வல்லுநர்கள் ஆராய்ந்து பார்த்து அதில் இருப்பவர்கள் தப்பிய கைதிகளாகவே இருக்க அதிக வாய்ப்பிருப்பதாக அறிக்கை கொடுத்தனர். ஃபிரெட் பிரிஸ்ஸி போதைப் பொருட்கள் கடத்தும் தொழிலின் காரணமாகப் பலமுறை தென்னமெரிக்க நாடுகளுக்குச் செல்பவர், அதனால் கைதாகி சிறைத் தண்டனையும் பெற்றவர். அவரே ஆங்க்லின் சகோதரர்கள் தப்புவதில் உதவி செய்து பிரேசிலில் கொண்டு போய் சேர்த்திருக்கலாம் என்றும், அவர் மாட்டிக் கொள்ளாத வகையில் ஃபிரெட் பிரிஸ்ஸி இறந்த பின்னர், ஆங்க்லின் சகோதரர்களுக்கும் 80 வயது கடந்து இனி அவர்கள் இருப்பதை உளவுத்துறை கண்டறிந்தாலும் அமெரிக்காவிற்கு அவர்களை வரவழைக்க முடியாத கால எல்லையைத் தாண்டிய பிறகே ஆங்க்லின் குடும்பம் இத்தகவல்களை வெளியிடுகிறது என்பதையும் நாம் இங்குக் கவனத்தில் கொள்ள வேண்டும்.

அமெரிக்க வரலாற்றில் தரை, வான், கடல் ஆகிய பகுதிகளில் மிகத் தீவிரமாக பெரிய அளவில் அமெரிக்க உளவுத்துறை நடத்திய மனிதவேட்டை குறித்து உறுதியாக இன்றுவரை யாராலும் எதையும் அறுதியிட்டுச் சொல்ல முடியாமல் போனாலும், ஆங்க்லின் சகோதரர்கள் உயிருடன் குறைந்தது 1975 வரையிலாவது இருந்திருப்பார்கள் என்று இப்பொழுது சந்தேகிக்கப்படுகிறது. உண்மையில் கைதிகள் தப்பிய முறையை அவர்களே உயிருடன் (இருந்தால்) திரும்பி வந்து சொன்னால்தான் உண்டு.

Images courtesy of Wikipedia& US Government Agencies Websites

For more Information:

Bureau of Prisons ― http://www.bop.gov/about/history/alcatraz.jsp

Indian Occupation of Alcatraz ― https://www.nps.gov/alca/learn/historyculture/we-hold-the-rock.htm

Alcatraz Federal Penitentiary ― https://en.wikipedia.org/wiki/Alcatraz_Federal_Penitentiary

Alcatraz Escape ― https://www.fbi.gov/history/famous-cases/alcatraz-escape

Alcatraz Island ― https://en.wikipedia.org/wiki/Alcatraz_Island

Alcatraz History ― http://www.alcatrazhistory.com/

Inside Alcotraz: A New London Pop-Up Bar Inspired By San Francisco’s Legendary Prison ― https://www.forbes.com/sites/lisakocay/2017/09/06/alcotraz-london-pop-up-bar-prison-alcatraz/#60d163986a1a

History Channel Documentary: Escape! Breakout From Alcatraz

History Channel Documentary: Alcatraz – Search for the truth

National Geographic Channel Documentary: Alcatraz No Way out

National Geographic Channel Documentary: Alcatraz Breakout New Evidence

June 1962 Alcatraz escape: https://en.wikipedia.org/wiki/June_1962_Alcatraz_escape

Alcatraz Island https://en.wikipedia.org/wiki/Alcatraz_Island

 

Other:

Mobile App for visitors ― http://www.alcatrazhistory.com/guidekick-mobile-guide-app.htm


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அல்கட்ராஸ் தீவில் . . . (பகுதி- 5)”

அதிகம் படித்தது