மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

அவி சொரிந்து ஆயிரம் வேட்டல்!

உதயபாஸ்கர் நாச்சிமுத்து

Dec 12, 2015

தினமணியில் மாலன் எழுதிய தரையில் வீழ்ந்த நட்சத்திரம்! என்ற கட்டுரையில் இரண்டு பிரச்சினைகளை நாட்டுப்பற்றிற்கு எதிரானவை என்று சாடியிருக்கிறார்:

avi sorindhu fi1) நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்து வருவதால் நாட்டைவிட்டு வெளியேறிவிடலாம் என்று தன் மனைவி தன்னிடம் சொன்னதாக அமீர் கான் சொல்லியது.

2) இந்து மத அடிப்படைவாதிகளுக்கு எதிராகவும் சாதீயக் கட்டமைப்புக்கு எதிராகவும் குரல் கொடுத்து வந்த எழுத்தாளர் குல்பர்கி வன்முறையாளர்களால் சுட்டுக் கொல்லப்பட்டதைக் கண்டித்து பிற எழுத்தாளர்கள் தங்களுடைய சாகித்ய அகாதமி விருதுகளை திருப்பி அனுப்பிக் கண்டனம் தெரிவித்தது.

இந்த இரண்டு நிகழ்வுகளும் நாட்டில் இந்து மத நம்பிக்கையின் பெயரில் நடந்த வன்முறைகளுக்கு எதிரான கண்டனங்கள்.

அமீர் கான் என்ற நடிகரையாவது அவர் சார்ந்த மதத்தை வைத்து, மாட்டுக்கறி தின்றதற்காகக் கொல்லப்பட்ட ஒரு இஸ்லாமியருக்காகப் பரிந்து பேசும் மதவெறியர் என்று ஓரளவு கதைகட்டிவிடலாம். அறிவுசார் எழுத்தாளர்கள் மத வேறுபாடின்றி, தங்களுக்கு அளிக்கப்பட்ட சாகித்ய அகாதமி விருதுகளைத் திருப்பி அனுப்பித் தங்கள் எதிர்ப்பைக் காட்டியதை “ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்” என்று மாலன் சாடியிருப்பதை என்னவென்று சொல்வது? இந்துத்வ வெறியர் என்றா அல்லது நாட்டுப் பற்றாளர் என்றா?

இவையிரண்டையும் எந்தவிதத்தில் ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்டாக எடுத்துக் கொள்ளமுடியும்? நாட்டில் நடக்கும் கொடுமைகளை எதிர்த்து குரல் கொடுப்பவர்களைத் நாட்டுப்பற்று இல்லாதவர்கள் என்று மக்களைத் திசைதிருப்பும் நோக்கில் அரசியல்வாதிகள் தூற்றலாம். அந்த வேலையை எழுத்துத் துறையில் இருக்கும் மாலன் செய்திருப்பது ஆராயப்பட வேண்டிய ஒன்று.

அமீர் கான் ஒரு இந்தியக் குடிமகனாகத் தன் குமுறலைச் சொல்லியது “ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்” என்பது ஒருபக்கம் இருக்கட்டும். நாட்டில் சகிப்புத்தன்மை குறைந்துவிட்டதாக அவரைக் குமுற வைத்த நிகழ்வுகளில் ஒன்றைப் பார்ப்போம்.

avi sorindhu4உத்தரப்பிரதேசத்தில் உள்ள பிசரா என்னும் சிற்றூரில் முகமது அக்லாக் என்ற இஸ்லாமியரின் வீட்டில் பசு கொல்லப்பட்டு அதன் இறைச்சி அவர் குடும்பத்தினர் உண்ணுவதற்காகச் சேமித்து வைக்கப்பட்டிருக்கிறது என்ற செய்தி தீயாய்ப் பரவியதால் அந்த இஸ்லாமியர் கொல்லப்பட்டார். அது உண்மையா இல்லையா என்பதில் அந்த வன்முறைக் கும்பலுக்கு ஆர்வம் இருந்திருக்காது. அந்த மனிதர் கொல்லப்பட்டதன் நோக்கம் பசுவைக் கொன்றதற்குப் பழிக்குப் பழி தீர்ப்பது என்பதுதான். பசு இந்துக்களுக்குப் புனிதமானது என்பதனால் அதைக் கொல்வது பாவம். எனவே, பசுவைக் கொன்று உண்பவன் கொல்லப்படவேண்டும் என்ற மூட நம்பிக்கையில் உணர்ச்சிவயப்பட்டு நடத்தப்பட்ட கொலை.

இதை இந்துத்வத் தீவிரவாதமா அல்லது இஸ்லாமியர்களுக்கு எதிரான வன்முறையா என்று மத அடிப்படையில் அலசுவதைவிட இந்துத்வம் என்றால் என்ன, பசுவதை பற்றி இந்துமதம் என்ன சொல்கிறது, என்னவெல்லாம் புனிதம் என்று வரையறுக்கப்பட்டிருக்கிறது என்பவை பற்றித்தான் முதலில் பார்க்கவேண்டும்.

இந்து மதம்:

avi sorindhu1இந்து மதம் என்ற பெயரே பிறரால் கொடுக்கப்பட்டது என்பது அனைவருக்கும் தெரியும். அப்படியானால், அதன் உண்மையான பெயர் என்ன? “சனாதன தர்மம்” என்று இந்துமதப் பெரியோர்கள் சொல்கிறார்கள். இது ரிக் வேதத்தில் விளக்கப்பட்டிருப்பதாகச் சொல்கிறார்கள்.

ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான  நீலகேசி இதை வேதமதம் என்று அழைப்பது மட்டுமில்லாமல் முழுமுதற் கடவுள் என்று ஒன்றில்லாத “கடவுள் மறுப்பு மதம்” என்றும் அழைக்கிறது. மேலும், தொடக்கம் அறியப்படாததால் வேதங்கள் தொடக்கமற்றவையாகாது என்றும் அவை மனிதர்களால் புனையப்பட்டவைதான் என்றும் கூறுகிறது. குடிப்பதையும், இறைச்சி உண்பதையும், சிற்றின்பம் கொள்வதையும் வேதங்கள் ஆதரிக்கின்றன என்பது நீலகேசியில் குறிப்பிடப்படும் ஒரு செய்தி. நீலகேசியில் கேட்கப்பட்டிருக்கும் கேள்விகள் போலத்தான் பெரியாரும் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்டார்.

நான்கு வேதங்களிலும் கடவுள்கள் பற்றியும், பல்வேறு வேள்விகள் பற்றியும் விளக்கங்கள் உள்ளன. வேள்விகளில் பசுக்களும் பலி கொடுக்கப்படுவது வழக்கம். இதன் தாக்கம் காஞ்சிப் பெரியவர் எழுதியதெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்திலும்தெரிகிறது.

யாகம் பற்றி தெய்வத்தின் குரலில்:

avi sorindhu6இந்திரன், விஷ்ணு, வருணன், அக்னி, ருத்ரன் ஆகிய கடவுள்களே பெரும்பாலும் வேதங்களில் பேசப்படுகின்றன. தீ வளர்த்து அதில் மந்திரங்களை உச்சரித்து அவிசு என்பதைச் சொரிந்து கடவுள்களை வழிபடுவதே வேதங்கள் கூறுவது. இதில் அவிசு என்பது நெய்யுடன் கூடிய பல பொருட்கள். அவற்றில் பசு இறைச்சியும் அடங்கும்.

தெய்வத்தின் குரல் இரண்டாம் பாகத்தில் காஞ்சிப் பெரியவர் இவ்வாறு கூறுகிறார்:

ஒருத்தன் செய்ய வேண்டியதாக 21 யக்ஞங்கள் விதிக்கப் பட்டிருக்கின்றன. பாக யக்ஞம், ஹவிர் யக்ஞம், ஸோம யக்ஞம் என்று மூன்று விதமான யக்ஞங்களில், ஒவ்வொன்றிலும் ஏழு வீதம் மொத்தம் 21 சொல்லியிருக்கிறது. இவற்றிலும் பாக யக்ஞம் ஏழிலும் பசு பலி இல்லை. ஹவிர் யக்ஞங்களிலும் முதல் ஐந்தில் பசுபலி இல்லை. நிரூட பசுபந்தம் எனற ஆறாவது யக்ஞத்திலிருந்துதான் பசுபலி ஆரம்பிக்கிறது. … பிராம்மணர்கள் செய்வதில் மிகவும் உயர்ந்ததான வாஜபேயத்துக்கும் 23 பசுக்களே சொல்லப்படுகின்றன. சக்ரவர்த்திகளே செய்கிற மிகப் பெரிய அச்வமேதத்துக்குக்கூட 100 பசுக்கள்தான் சொல்லியிருக்கிறது.

யாகத்தில் சொரியப்படும் அவிசு யாகம் செய்தவர்களால் உண்ணப்படவேண்டும். காஞ்சிப் பெரியவர் அதைக் கீழ்க்கண்டவாறு குறிப்பிடுகிறார்:

ஒரு பசுவின் இன்னின்ன அங்கத்திலிருந்து மட்டுமே இத்தனை அளவுதான் மாம்ஸம் எடுக்கலாம். அதில் இடாவதரணம் என்பதாக ரித்விக்குகள் இவ்வளவுதான் புஜிக்க வேண்டும் என்பதற்கெல்லாம் சட்டம் உண்டு. அது துவரம் பருப்பளவுக்குக் கொஞ்சம் அதிகம் தானிருக்கும். இதிலும் உப்போ, புளிப்போ, காரமோ, தித்திப்போ சேர்க்காமல், ருசி பார்க்காமல் அப்படியே முழுங்கத்தான் வேண்டும். ஆகையால், வேறு என்ன காரணம் சொல்லி யக்ஞத்தை கண்டித்தாலும் சரி, ‘பிராம்மணர்கள் இஷ்டப்படி மாம்ஸம் தின்னுவதற்கு யக்ஞம் என்று பெரிய பெயர் கொடுத்து ஏமாற்றினார்கள்என்றால் கொஞ்சங்கூட சரியில்லை.

கண்டிப்பாக யாகம் செய்பவர்கள் யாகம் செய்யத் தகுதியுள்ள இந்துக்களே! 23 பசுக்கள் பலியிடப்பட்டு  நடத்தும் யாகத்தில் துவரம்பருப்பளவு இறைச்சி மட்டுமே ஒருவரால் உண்ணப்படுமெனில் அந்த வேள்வியை நடத்த எத்தனை பேர் தேவைப்படுவார்கள்? அல்லது யாகத்திற்கு எடுத்த இறைச்சி போக மீதி என்ன ஆகும்? இந்தக் கேள்விகளுக்கு வேதங்களை ஊன்றிப் படித்தாலன்றி விடை தெரியாது.

ஆபுத்திரன் கதையில் புலைசூழ் யாகசாலை:

avi sorindhu7ஒருவன் செய்யவேண்டிய 21 வேள்விகளில் பசு பலி அடிக்கடி செய்யப்பட்டதா இல்லையா என்பதையறிய பிராமணர்களின் அக்ரகாரத்தில் இருந்த யாகசாலையைப் பற்றிஆபுத்திரன் திறம் அறிவித்த காதையில்மணிமேகலை கூறுவதைப் பார்க்கலாம்.

ஆபுத்திரன் கதைச் சுருக்கம் இதுதான்:

வாரணாசியில் வாழ்ந்த பார்ப்பனப் பெண் சாலி முறைதவறியதால், தன்  பாவத்தைத் தொலைக்க குமரி முனைக்கு வரும்வழியில் ஒரு குழந்தையை ஈன்று வழியிலேயே போட்டுவிட்டுச் சென்று விடுகிறாள். ஒரு பசு அந்தக் குழந்தையின்பால் இரக்கப்பட்டு ஏழுநாட்களுக்கு பால் கொடுத்துக் காக்கிறது. அந்தக் குழந்தையை இளம்பூதி என்ற பார்ப்பனன் எடுத்து இவன் ஆபுத்திரன் அல்லன் என்று கூறி தன் குலம் செழிக்கப் பிறந்தவன் என்று மகிழ்ந்து பார்ப்பனற்கு ஒப்பாக வேதங்களைக் கற்றுக் கொடுத்து வளர்க்கிறான். ஆபுத்திரன் வளர்ந்தபின் பார்பனர் வாழும் இடத்தில் உள்ள வேள்விச் சாலையில் நின்ற பசுவின் மேல் இரக்கப்பட்டு அதைத் தப்பவிடுகிறான். அதன்பின் அவனை எடுத்து வளர்த்த தந்தை உட்பட எல்லாப் பார்பனர்களும் ஆபுத்திரனை புலைமகன் என்று தூற்றித் துரத்துகின்றனர். பின்னர், உண்ண உணவின்றி வாடும் நிலையில் தான் இருந்தும் மக்களின் பஞ்சம் போக்க நினைந்து உருகும் ஆபுத்திரனுக்கு அமுதசுரபி கிடைத்து, பிறர் துன்பம் போக்குகிறான்.

மணிமேகலையில் வரும் கீழ்க்கண்ட வரிகள் வேள்விச் சாலையில் பசுவதையைப் பறை சாற்றுகின்றன:

அப்பதி தன்னுள்ஓர் அந்தணன் மனைவயின்

புக்கோன் ஆங்குப் புலைசூழ் வேள்வியில்

குரூஉத்தொடை மாலை கோட்டிடைச் சுற்றி

வெரூஉப்பகை அஞ்சி வெய்துயிர்த்துப் புலம்பிக்

கொலைநவில் வேட்டுவர் கொடுமரம் அஞ்சி

வலையிடைப் பட்ட மானே போன்றுஆங்கு

அஞ்சிநின்று அழைக்கும் ஆத்துயர் கண்டு

[பதி = இடம், மனைவயின்= வீட்டில், புக்கான்= புகுந்தவன், குரூஉத்தொடை மாலை= நிறம் பொருந்திய  மாலை, கோட்டிடை= கொம்பின் இடையில், வெரூஉப்பகை அஞ்சி= அச்சம் ஏற்படுத்தும் பகைவரை அஞ்சி, வெய்துயிர்த்துப் புலம்பி-  வெப்ப மூச்செறிந்து வருத்தமுற்று, கொலைநவில் வேட்டுவர் கொடுமரம்= கொலைபுரியும் வேடர் வில்,  ஆத்துயர்= பசுவின் துயர்]

“புலைசூழ் வேள்வி” என்றால் விலங்குகளைப் பலி கொடுப்பதால் குருதியும் இறைச்சியும் தெறித்து இருக்கும் தூய்மையற்ற வேள்விச் சாலை என்று பொருள். எப்பொழுதாவது பலிகொடுப்பது வழக்காமாயின் “வேள்வியில்” என்று மட்டுமே இருந்திருக்கவேண்டும்.

இராமாயணத்தில் புலால்:

avi sorindhu8மணிமேகலையைப் புத்தசமய நூல் என்றும் நீலகேசியைச் சமண மத நூல் என்றும் தள்ளிவிடலாம். வால்மீகி எழுதிய ராமாயணம் என்ற இதிகாசம் புலால் உண்பதைப் பற்றி என்ன சொல்கிறது? அயோத்தியா காண்டத்தில் வனவாசத்திற்குப் புறப்படும் முன் சீதைப்பிராட்டி கீழ்க்கண்டவாறு கங்கையை வணங்குகிறார்:

suraaghaTasahasreNa maamsabhuutodanena cha |

yakshye tvaam prayataa devi puriim punarupaagataa || 2-52-89

[89. devii= “Oh, goddess! Upaagata= After reaching; puriim= the city (Ayodhya); punaH= again; yakshhye= I shall worship (you); suraaghata sahasreNa= with thousand pots of spirituous liquor; maamsa bhuutodanena cha = and jellied meat with cooked rice; prayataa= well-prepared for the solemn rite.”]

Oh, goddess! After reaching back the city of Ayodhya, I shall worship you with thousand pots of spirituous liquor and jellied meat with cooked rice well prepared for the solemn rite. [ஓ தேவதையே! வனவாசம் முடிந்து மீண்டும் அயோத்தியாவிற்குத் திரும்பி வந்தபின்பு, ஆயிரம் குடம் புனித மதுவும் இறைச்சித் துண்டுகளுடன் வேகவைத்த சோறும் படைத்து உன்னை வணங்குவேன்!]

இதில் வரும் “jellied meat with cooked rice” என்பது பிரியாணியின் அக்காலத்திய வடிவம்.

இதுதவிர, அதேஅயோத்திய காண்டத்தில்(2-96), சீதை பசியாற இராமர் கொடுக்கும் இறைச்சி பற்றி வரும் சில பாடல்கள்:

taaM tathaa darshayitvaa tu maithiliiM girinimnagaam |

niSasaada giriprasthe siitaaM maaMsena chandayan || 2-96-1

[1. tathaa= thus; darshayitvaa= having shown; girinimnagaam= the mountaneous river Mandakini; taam siitaam= to that Seetha; maithiliim= the daughter of the king of Mithila; niSasaada= sat; giriprashthe= on the hill side; chhandayan= in order to gratify her appetite; maamsena= with flesh.]

Having shown Mandakini River in that manner to Seetha, the daughter of Mithila, Rama sat on the hill-side in order to gratify her appetite with a piece of flesh. [அந்நிலையில் மந்தாகினி ஆற்றை மிதிலை மகளான சீதைக்குக் காட்டிவிட்டு, அவளின் பசியாற்ற ஒரு துண்டு இறைச்சியைக் கொடுப்பதற்காக  மலையின் பக்கமாக இராமர் அமர்ந்தார்.]

idaM medhyamidaM svaadu niSTaptamidamagninaa |

evamaaste sa dharmaatmaa siitayaa saha raaghavaH || 2-96-2

[2. saH raaghavaH= that Rama; dharmaatmaa= of righteousness; aaste= stayed; siitayaa sha= with Seetha; evam= thus speaking; idam= this meat; madhyam= is fresh; idam= this; niSTaptam= was roasted; agninaa= in the fire.]

Rama, whose mind was devoted to righteousness stayed there with Seetha, saying; “This meat is fresh, this is savoury and roasted in the fire. [தர்மத்திலேயே நிலைத்திருக்கும் மனம் கொண்ட இராகவர், “இந்த புத்தம் புது இறைச்சி தின்பதற்கேற்பத் தீயில் பக்குவமாக வாட்டப்பட்டுள்ளதுஎன்று சீதையிடம் கூறி அங்கேயே தங்கினார்.]

கம்பனின் கவித்திறத்தில் மயங்கியோரும் ஹிந்து மதப் புனிதங்களில் மூழ்கியிருப்போரும் வால்மீகி இராமாயணத்தின் மேற்கண்ட வரிகளைப் படிக்கும்போது மனம் புண்படுவர். இருப்பினும், வன்முறைக்கு இங்கே இடமில்லை. ஏனெனில், எழுதியவர் வால்மீகி!

அஸ்வமேத யாகம்:

avi sorindhu10இராமாயணம் கூட புலால் உண்டும் போர் புரிந்தும் வாழும் ஒரு சத்திரிய அவதாரம் பற்றிய கதை என்று காரணம் சொல்லித் தேற்றிக் கொள்ளலாம். ரிக் வேதமும் அதர்வண வேதமும் ஹிந்துமதத்தின் புனித நூல்கள். அவை 100 பசுக்கள் கொண்டு நடத்தும் அஸ்வமேத யாகம் பற்றி விளக்குகின்றன. கடவுள் அவதாரமான இராமரும், எல்லா தர்மங்களும் தெரிந்த பாண்டவர்களில் மூத்தவரான தருமரும் அஸ்வமேத  யாகம்  செய்ததாக இராமாயணமும் மகாபாரதமும் கூறுகின்றன.

அஸ்வமேதயாகம் என்றால் என்ன? அனில் அகர்வால் எழுதிய “Forensic and Medico-legal Aspects of Sexual Crimes and Unusual Sexual Practices” என்ற நூலில் இவ்வாறு குறிப்பிடப்பட்டிருக்கிறது:

புகழுக்காகவும், வலிமையான அரசுக்காகவும், பக்கத்து நாடுகளின் செல்வத்தைப் பெறவும், மேன்மேலும் செல்வம் செழிப்புடன் இருக்கவும் நடத்தப்படும் அஸ்வமேத யாகத்தில் 24-லிருந்து 100 வயதுக்குட்பட்ட பொலிக்குதிரை பலி கொடுக்கப்படுகிறது. பலியிடப்படுமுன் குதிரையைக் குளிப்பாட்டி, பட்டத்து ராணியும் மற்ற ராணிகளும் அதை நெய்யால் அபிஷேகம் செய்வர். அந்தக் குதிரை கொல்லப்பட்டபின் ராணிகள் மந்திரம் உச்சரித்தபடி குதிரையை வலம் வருவர். அதன்பின் பட்டத்து ராணி இறந்து குதிரையுடன் புணர்வதுபோல பாசாங்கு செய்ய, அவரைச் சூழ்ந்து மற்ற ராணிகள் கொச்சையான வார்த்தைகளால் அர்ச்சிப்பது போன்ற மந்திரங்களை சொல்வர். அடுத்த நாள் காலையில், இரவு முழுதும் இறந்த குதிரையுடனேயே கழித்த பட்டத்து ராணியைப் புரோகிதர்கள் எழுப்பி கொச்சை வார்த்தைகளால் அர்ச்சிக்கப்பட்ட தீட்டு போக தாத்ரிகா மந்திரம் கூறி அவளைப் புனிதப்படுத்துவர்.

அஸ்வமேத யாகம் செய்யும் முறையும் அது சார்ந்த மந்திரங்களும் அதர்வண வேதத்தில் விளக்கப்படுகின்றன.ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அதர்வண வேத நூலில் 213-ஆம் பக்கத்தில் Book 23 Verse 20 -லிருந்து Book 23 Verse 31 வரை அச்சிடப்படாததற்குக் கீழ்க்கண்டவாறு காரணம் சொல்லப்பட்டு இருக்கிறது:

This and the following nine stanzas are not reproducible even in the semi-obscurity of a learned European language ; and stanzas 30, 31 would be unintelligible without them. (இந்தப்பாட்டும் அடுத்துவரும் ஒன்பது பாடல்களும் ஐரோப்பிய மொழிகளில் ஓரளவு தெளிவில்லாமல், அதாவது குத்துமதிப்பாகக், கூட அச்சிடப்பட முடியாதவை. இவையின்றி 30, 31-ஆம் பாடல்களின் பொருளைப் புரிந்து கொள்ளமுடியாது.)

மூவாயிரம் நான்காயிரம் ஆண்டுகளுக்கு முன்பு அன்று வாழ்ந்த மக்களால் அஸ்வமேத யாகம் தர்மமாக, புனிதமாக ஏற்றுக் கொள்ளப்பட்ட ஒன்று. இன்றைய சமூக அமைப்பில் இது நெருடலாகத் தெரிகிறது.

இதுபோன்றே, இன்றைய புனிதம் நாளைய நெருடலாக மாறும். அவற்றை, இன்றே நெருடலாய் பார்ப்பவர்களை மாலன் போன்ற எழுத்தாளர்கள் தங்கள் கட்டுரையில் நாட்டுப் பற்று அற்றவர்கள் என்று தூற்றும் நிலை ஏற்பட்டிருக்கிறது.

புனிதம் – அன்றும் இன்றும்:

மேற்படி நாம் கண்டதில் ஹிந்துமத நூல்களே பசு மட்டுமின்றி மற்ற விலங்குகளைப் பலியிடுவதையும், அவற்றின் இறைச்சியை யாகம் நடத்தும் புரோகிதர்களே உண்பதையும் (ஒரு துளியாயினும் அது உண்ணப்படுவதே!) பற்றி விளக்குகின்றன. மேலும், நீலகேசியில் கூறப்பட்டுள்ளபடி மதுவும் சிற்றின்பமும் புனிதப்படுத்தப்பட்டுள்ளன. இந்து மதத்தின் புனிதநூலில் வரும் யாகம் நடத்தும் முறையின் சிலவரிகளை இன்றைய நாகரீக சூழ்நிலையில் அச்சிடப்பட முடியாதவையாக அமெரிக்கப் பல்கலைக்கழகம் நீக்கியுள்ளது. இந்து மதத்தின் இன்றைய புனிதமும் அன்றைய புனிதமும் முரண்படுவது கண்கூடு. இதே முரண்பாடுகள் மற்ற மதங்களிலும் இருக்கக்கூடும்.

இந்து மத நம்பிக்கையின்படி “பசு புனிதம், பசுவதை பாவம்” என்றால் யாகத்தில் பசு பலியிடப்படுவதேன் என்ற கேள்விக்கு காஞ்சிப் பெரியவர் தெய்வத்தின் குரலில் இப்படிச் சொல்கிறார்:

லோகத்தில் பல பேருக்குப் பெரிய க்ஷேமத்தை தேவர்கள் செய்யவேண்டுமென்ற உசந்த நோக்கத்தில் அவர்களுக்கு பசு ஹோமம் பண்ணுவதிலும் தப்பேயில்லை”.

யாகத்தில் தேவர்களுக்காக என்றாலும் ஒரு மனிதனின் பசிக்காக என்றாலும் செய்யும் செயல் பசுக்கொலை! யாகத்திற்காக என்றால் பசுக்கொலை புனிதம், பசிக்காக என்றால் பாவம் என்பது சரியா என்ற கேள்விக்கு விடையில்லை!

அமீர் கான்:

avi sorindhu11ஒரே செயல் வெவ்வேறு காரணங்களுக்குப் பாவமென்றும் புனிதமென்றும் வகைப்படுத்தப்படுவது, என்ன காரணத்திற்காகப் பிற மதத்தினர் கொல்லப்படுவர் என்ற நிலையற்ற தன்மை, இந்து மதத்தவரே ஆயினும் பகுத்தறிவுக் கேள்விகள் கேட்போரின் உயிருக்குக் கேடு எந்நேரமும் ஏற்படலாம் என்ற நிலை  போன்றவைதான் ஆமிர் கானின் “நாட்டில் சகிப்புத் தன்மை குறைந்துவிட்டது” என்ற ஆதங்கத்தின் காரணம். மக்களால் மிகவும் பாராட்டப்பட்ட “சத்யமேவ ஜெயதே” என்னும் தொலைகாட்சி நிகழ்ச்சியில் இது போன்று பல சமூக நெருடல்களை அவர் வெளிக்கொண்டு வந்திருக்கிறார்.

அந்த மனிதனின் ஆதங்கத்தை இன்று மாலன் கேலி செய்கிறார். அதுவும் மறைமுகமாக மதம் சார்ந்த தாக்குதல் மூலம். மாலன் கோடிட்டுக் காட்டும் நாடுகளில் இஸ்லாமிய நாடுகளே முதலில் கோடிட்டுக் காட்டப்படுகின்றன. ஏன்? அமீர்கான் ஒரு முஸ்லீம் என்பதாலா? நாட்டு மக்களை மதங்களாகவும் சாதிகளாகவும் பிரித்துப் பார்க்காமல், மனிதனாக மட்டுமே பார்க்கப் வேண்டும் என்ற உணர்வு அற்றுப் போய்விட்டதா? அல்லது பிற மதத்தின் தீவிரவாதிகள் செய்யும் தவறைக் கொண்டு, தங்கள் தவறை நியாயப்படுத்தும் உணர்வா?

திருப்பி அனுப்பப்பட்ட சாகித்ய அகடாமி விருதுகள்:

avi sorindhu3இந்துத்வ வன்முறையாளர்களால் கொல்லப்பட்ட எழுத்தாளர் குல்பர்கி இந்துமத அடிப்படைவாதிகளுக்கும், மூட நம்பிக்கைகளுக்கும், சாதிக் கட்டமைப்புக்கும் எதிராக குரல் கொடுத்து வந்தவர். லிங்காயத சமய நெறியைப் பின்பற்றி, அதைத் தொடர்ந்து ஆய்வு செய்தவர். லிங்காயத மதமும் இந்து மதமும் ஒன்றல்ல என்பதை வலியுறுத்தியவர். இதனால், இந்து மத அமைப்புகளின் எதிர்ப்பை எதிர்கொண்டவர்.

அவர் கொல்லப்பட்டதைப் பற்றி சாகித்ய அகாதமி எந்தக் கருத்தையும் தெரிவிக்காததால், சாகித்ய அகாதமியின் விருது பெற்ற பெரும் எழுத்தாளர்கள் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்யத் தங்கள் விருதினைத் திருப்பி அனுப்பினர். அதன் பின்னரே சாகித்ய அகாதமியின் மௌனம் கலைந்தது.

லிங்காயத மதம் பற்றி வலியுறுத்திய ஒரு எழுத்தாளன் கொல்லப்பட்டது ஒரு வன்முறைச் செயல். அதற்காக, அந்தத் துறை சார்ந்தோர் தங்கள் எதிர்ப்பைப் பதிவு செய்வது அவர்கள் கடமை. எழுத்தாளர்களின் படைப்புகளை ஆராய்ந்து அவற்றின் தனித்துவத்திற்காக விருதுகள் அளிக்கும் அமைப்புகளின் கடமை கூட. இந்த அடிப்படையில் தங்கள் எதிர்ப்பைத் தெரிவித்த எழுத்தாளர்களின் செயலைத்தான் இன்று மாலன், தானே ஒரு எழுத்தாளராக இருந்தும், “ஃபாஷன் ஸ்டேட்மெண்ட்” என்று சாடியிருக்கிறார்.

வேதமதமா இந்து மதமா?:

லிங்காயத மதம் பற்றி எழுத்தாளர் குல்பர்கி ஏன் வலியுறுத்தி இருக்கவேண்டும் என்றும் ஆராய வேண்டும்.

வேதங்களில் இன்றைய இந்துக்கள் வணங்கும் சிவன் முழுமுதற் கடவுளாக ஒப்புக்கொள்ளப்படவில்லை. இன்று இந்துக்களால் வணங்கப்படும் விநாயகரைப் பற்றியும் வேதங்கள் குறிப்பிடவில்லை. கணபதி (கண = குழு, பதி= தலைவன்) என்னும் சொல் பிரகஸ்பதி என்பதன் அடைமொழியாக மட்டும் ரிக் வேதத்தில் இருமுறை வருகிறது. காளி உட்பட எந்தப் பெண் தெய்வங்களும்  வேதங்களில் குறிப்பிடப்படவில்லை.

வேதங்களுக்குப் பின்னர் எழுதப்பட்டவைதான் புராணங்கள். புராணங்களுக்கு அறிவியல் ஆதாரங்கள்  ஏதுமில்லை. இவற்றை மதம் சார்ந்த கதைகள் என்று வேண்டுமானால் எடுத்துக் கொள்ளலாம். இந்தக் கதைகளில்தான் இன்றைய இந்துத் தெய்வங்கள் வருகின்றன. இந்தக் கதைகளில் வரும் நிகழ்வுகளைத்தான் ஆழ்வார்களும் நாயன்மார்களும் தமிழ்ச் சுவைச் சொட்டச்சொட்டப் பாடியுள்ளனர். இன்றும் சைவத்திற்கும் வைணவத்திற்கும் முழுமுதற் கடவுள்கள் வேறுவேறுதான்.

இந்துமதத்தினர் அனைவரும் வேதம் படித்தவர்கள் அல்லர். அவர்கள் அனைவருக்கும் வேதங்களே முதன்மையானவையும் அல்ல. பல்வேறு வழிபாட்டுமுறைகள், பல்வேறு தெய்வங்கள், சாதீய உயர்வு தாழ்வு, தெய்வங்களில் ஏற்றத்தாழ்வு எனப் பலவும் அடங்கியதே இன்று இந்து மதம் என்றழைக்கப்படுகிறது.

இந்து மதத்தின் தூண்களாகக் கருதப்படும் மடங்களிலும் உயர்வு தாழ்வுகள் உள்ளன. ஆதி சங்கரரால் நான்கு வேதங்களின் அடிப்படையில் நிறுவப்பட்ட நான்கு மடங்களே (கோவர்த்தனம், சிருங்கேரி, துவாரகை, ஜோஷி) உண்மையானவை என்ற அடிப்படையில் அந்த மடங்கள் காஞ்சி மடத்தை ஆதி சங்கரரால் நிறுவப்பட்டதாக ஏற்றுக் கொள்வதில்லை. தங்கள் மடம் இரண்டாயிரம் ஆண்டுகள் பழமையானது என்பது காஞ்சி மதத்தினரின் கருத்து. ஆதி சங்கரரின் காலம் 1300 ஆண்டுகளுக்கு மட்டுமே முற்பட்டது என்பது வரலாற்று ஆய்வாளர்களின் கருத்து மட்டுமில்லாமல், அதையே மற்ற நான்கு மடங்களும் கூறுகின்றன.

எனவே, இந்து மதம் என்று குறிக்கப்படுவது வேதமதமா அல்லது பல மதங்களின் கூட்டுச் சேர்க்கையா என்ற கேள்வி எழுவது இயற்கை. இந்தப் புரிதலில்தான் எழுத்தாளர் குல்பர்கி லிங்காயத மதமும் இந்து மதமும் வேறுவேறு என்றார். ஏன், மதுரைவீரனும், எல்லைச்சாமியும், மாரியம்மனும் கூட வேத மதத்திலிருந்து வேறுபட்டவையாகவும் இருக்கலாம்! இன்று எல்லாக் கடவுளையும் இந்துக் கடவுள்கள் என்று மக்கள் வணங்குகின்றனர். இன்னும் ஒருபடி மேலாக, தமிழக மக்கள் தர்கா சென்று பாடம் போட்டுக் கொள்வதும், அன்னை வேளாங்கண்ணியை வணங்குவதும் இன்றும் கூட நடக்கிறது.

எழுத்தாளர் கடமை:

அமீர் கானின் ஆதங்கமும், எழுத்தாளர்களால் சாகித்ய அகாதமியின் விருதுகள் திருப்பியளிக்கப்பட்டதும் சமூகத்தில் நடைபெறும் நெருடல்களுக்கு எதிரானாவை. அவை சமூகத்திற்கு எதிரானவையோ அல்லது நாட்டிற்கு எதிரானவையோ அல்ல. மாலன் அவரின் கட்டுரையில் சொல்லியிருக்கும் கதையில் சிறுவன் எறியும் கல் போன்றதே இந்த நிகழ்வுகள். அந்தச் சிறுவனுக்குத் தேவைப்பட்டவை மாங்கனிகள். இதே போன்ற “மாங்கனிகளுக்கு” எறியப்பட்ட கற்களே அமீர் கானின் ஆதங்கமும், எழுத்தாளர்களின் எதிர்ப்பும் என்பது மாலனுக்குத் தெரியாததா?

மாலன் ஒரு எழுத்தாளர். எழுத்தாளரின் கடமை பற்றி பாவேந்தரின் இந்த வரிகள் அவருக்குத் தெரிந்திருக்கும்:

கருத்தூற்று மலையூற்றாய்ப் பெருக்கெடுக்க வேண்டும்

கண்டதைமேற் கொண்டெழுதிக் கட்டுரையாக் குங்கால்

தெருத்தூற்றும்; ஊர்தூற்றும்; தம்முளமே தம்மேற்

சிரிப்பள்ளித் தூற்றும்; நலம் செந்தமிழ்க்கும் என்னாம்?

தரத்தம்மால் முடிந்தமட்டும் தரவேண்டும் பின்னால்

சரசரெனக் கருத்தூறும் மனப்பழக்கத் தாலே!

இருக்கும் நிலை மாற்றஒரு புரட்சிமனப் பான்மை            

ஏற்படுத்தல், பிறர்க்குழைக்கும் எழுத்தாளர் கடனாம்.

பிறர்க்கு உழைக்க வேண்டாம்; புரட்சி மனப்பான்மை ஏற்படுத்த வேண்டாம். குறைந்தது பிறரின் புரட்சிகரச் செயலைக் கேலி செய்து, நோவடித்து, அவர்களின் நோக்கத்தை நீர்த்துப் போகச் செய்யும் அரசியல்வாதிகளின் பாதச் சுவட்டைப் பின்பற்றாமல் இருப்பதே அவர் தன் நாட்டு மக்களுக்குச் செய்யும் சிறந்த தொண்டாகும்!

References:

1) மாலன்,  தரையில் வீழ்ந்த நட்சத்திரம்!, 28 November 2015 <http://www.dinamani.com/editorial_articles/2015/11/28/தரையில்-வீழ்ந்த-நட்சத்திரம/article3150822.ece>

2) ஐஞ்சிறுங்காப்பியங்களில் ஒன்றான நீலகேசியில் வேதமதம் பற்றி, <http://www.jainworld.com/JWTamil/jainworld/neelakesi/urai.asp?num=9>

3) ஸ்ரீ சந்திரசேகர சுவாமிகள் (மஹா பெரியவா) எழுதிய “தெய்வத்தின் குரல் – இரண்டாம் பாகம், பகுதி 39” <http://www.kamakoti.org/tamil/Kural39.htm>

4) மணிமேகலை – ஆபுத்திரன் திறம் அறிவித்த காதை, <http://www.tamilvu.org/slet/l3200/l3200son.jsp?subid=3655>

5) வால்மீகி ராமாயணம் – அயோத்தியா காண்டம், பாடல் 2-52-89, <http://www.valmikiramayan.net/ayodhya/sarga52/ayodhya_52_frame.htm>

6) வால்மீகி ராமாயணம் – அயோத்தியா காண்டம், பகுதி 2-92 (முதல் இரண்டு பாடல்கள்), <http://www.valmikiramayan.net/ayodhya/sarga96/ayodhya_96_frame.htm>

7) அனில் அகர்வால், Forensic and Medico-legal Aspects of Sexual Crimes and Unusual Sexual Practices, <https://books.google.com/books?id=uNkNhPZQprcC&pg=PA259&lpg=PA259&dq=The+chief+queen+then+has+to+mimic+copulation+with+the+dead+horse&source=bl&ots=GCBWGrA752&sig=8bKhd1nec7hmx1myfbxcYJbLBIA&hl=en&sa=X&ved=0ahUKEwik84mTkbfJAhVSO4gKHdxSB8oQ6AEINzAF#v=onepage&q=The%20chief%20queen%20then%20has%20to%20mimic%20copulation%20with%20the%20dead%20horse&f=false>

8)  ஹார்வர்ட் பல்கலைக்கழகத்தின் ஆங்கிலத்தில் மொழிபெயர்க்கப்பட்டுள்ள அதர்வண வேத நூல், The Text of White Yajur Veda, <https://ia801404.us.archive.org/34/items/textswhiteyajur00grifgoog/textswhiteyajur00grifgoog.pdf>


உதயபாஸ்கர் நாச்சிமுத்து

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “அவி சொரிந்து ஆயிரம் வேட்டல்!”

அதிகம் படித்தது