மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஆங்கிலம் இந்தியாவின் பொதுமொழியாக இருக்க வேண்டும்: பண்டிதர் அயோத்திதாசர்

தேமொழி

Oct 16, 2021

siragu Pandit_iyothee_thass

இந்தியாவின் மாபெரும் அறிஞர்களுள் ஒருவரும் தமிழ் பௌத்த மறுமலர்ச்சி இயக்கத்தைத் தோற்றுவித்தவருமான பண்டிதர் அயோத்திதாசர் (1845-1914), சமத்துவம், சமநீதி, பெண்ணியம், பகுத்தறிவு ஆகிய கருத்துக்களை முன்வைத்த முற்போக்குச் சிந்தனையாளர். தமிழக அளவில் பெரியாருக்கும் இந்திய அளவில் அம்பேத்கருக்கும் முன்னோடியாகக் குறிப்பிடப்படுகிறார். அவரால் நடத்தப்பட்ட ‘தமிழன்’ என்னும் வார இதழில், 1907 முதல் 1914 வரையிலான இடைப்பட்ட ஏழாண்டு காலகட்டத்தில், அயோத்திதாசர் சமுதாய முன்னேற்றத்திற்கான தமது ஆழ்ந்த சிந்தனைகளின் வெளிப்பாட்டை ஆவணப்படுத்தி இருந்தார். இவையாவும் அரசியல், சமூகம், சமயம், இலக்கியம் என்ற பிரிவுகளின் கீழ் சமூகவியல் மற்றும் வரலாற்றுத் துறை ஆய்வாளர் ஞான. அலாய்சியஸ் அவர்களால் தொகுக்கப்பட்டு ‘அயோத்திதாசர் சிந்தனைகள்’ என்ற தலைப்பில் நூல்களாக வெளியாகியுள்ளன. பண்டிதர் அயோத்திதாசர் அவர்களின் சிந்தனைகள் பொதுமக்களைச் சேரவேண்டும் என்ற நோக்கில் அவரது நூல்கள் தமிழக அரசால் நாட்டுடைமையாக்கப்பட்டுள்ளன. இன்றும் நாம் போராடிக் கொண்டிருக்கும் பல சமூகச் சிக்கல்களுக்கு ஆங்கிலேயர் ஆட்சிக் காலத்திலேயே அவை குறித்து அவர் ஆழமாகச் சித்துள்ளமையும், அவரது சிந்தனையின் முற்போக்கும் வீச்சும் நம்மை வியக்க வைக்கின்றது.

இந்திய நாட்டிற்குப் பொது மொழியாக இருக்கவேண்டியவை எவை என்பது குறித்து அயோத்திதாசர் என்ன எண்ணியுள்ளார்? பார்ப்போம். ‘இந்திய தேசத்திற்குப் பொது பாஷையா யிருக்கவேண்டியவை ஆங்கில பாஷையாம்’ என்ற தலைப்பில் நூறாண்டுகளுக்கு முன்னரே (பிப்ரவரி 22, 1911) தனது முடிவைத் தெரிவித்துவிட்டார் பண்டிதர் அயோத்திதாசர். ஆனால் மொழிப் பிரச்சனையால் எண்ணற்ற உயிர்ப்பலிகளுக்குப் பிறகும், இன்றும் கூட மாநிலங்களில், நெடுஞ்சாலைகளில், அஞ்சல் அலுவலகத்தில், அறிவிப்புப் பலகைகளில், இந்தியைத் தாய்மொழியாகக் கொள்ளாத பாராளுமன்ற உறுப்பினர்களுக்கு அனுப்பும் அஞ்சல்களில், பொதுமக்களுக்கான அரசு விளம்பரங்களில், அறிவிப்புகளில் என்று எங்கும் எதிலும் இந்தியின் ஊடுருவல் நிற்கவில்லை.

இந்தியாவில் புழக்கத்தில் இருக்கும் ஆங்கிலமொழி தவிர்த்து, இந்திய மொழிகள் அனைத்திலும் சாதிபேதம் திணிக்கும் கட்டுக்கதைகள் மிகுதியாகவும், நீதி நெறியின்றி அறமற்ற முறையில் அவையாவும் சீரழிவுக்கு உள்ளானதால் எந்த ஒரு இந்திய மொழியையுமே பொதுமொழியாக ஏற்றுக் கொள்வது வீண் என்கிறார் பண்டிதர். மொழி முக்கியமா அல்லது அம்மொழி பேசும் மக்களின் ஒழுக்கம் முக்கியமா என ஆராயவேண்டியதே முக்கியம். இதைக் கருத்தில் கொள்ளாமல் இந்தி மொழி கற்க வேண்டும் என்றும் சமஸ்கிருதம் கற்க வேண்டும் என்றும் விவாதிப்பது பொருளற்றது என்பது அயோத்திதாசரின் சிந்தனைப் போக்கு.

ஆங்கில மொழி உலகெங்கிலும் பரவியுள்ளது, அத்துடன் அதன் நிலை அனைத்து நாட்டினரும் மதிக்கும்வகையில் உள்ளது, மக்கள் எளிதில் கற்கும் மொழியாகவும் உள்ளது, அம்மொழியில் சாதி பேதம் பற்றிய கருத்துக்கள் இன்றி எங்கு சென்றாலும் மக்களை மக்களாக மதிக்கும் முறையிலும் அறிவாளிகளும் திறமைசாலிகளும் நிறைந்த மொழியாகவும் உள்ளது. எனவே, இந்தியா முழுவதும் ஆங்கிலத்தைப் பொதுமொழியாகக் கொண்டால் இந்திய மக்களும் அறிவார்ந்தவர்களாக பேதமற்றவர்களாக மாற வழியுண்டு.

சாதி பேதம், சமயச் சச்சரவுகள் ஒழிந்து மனிதர்களை மனிதர்களாக மதிக்கும் மனப்பான்மை மக்களிடையே வளரும். அதைவிடுத்து பேதங்கள் கூறும் மொழிகளைக் கற்றால், மக்கள் பேதம் கூறும் இழி சிந்தனைகளைக் கைவிடாது நாட்டில் பிரிவினைகள்தான் தொடரும். அதையும் விட, இந்திக் கற்றவர்களால் நாடு எந்த வகையில் அறிவார்ந்த மக்களைக் கொண்டவர்களாக மாறியுள்ளது? நாட்டு மக்களின் நிலை எவ்வாறு முன்னேறியுள்ளது? இந்தி கற்பதால் மக்களிடம் சாதி பேதம் இல்லாமல் போய்விடுமா? மற்றவர் மாற்று இனத்தவர் என்ற கசப்புணர்வு மனதிலிருந்து அகன்றுவிடுமா? என்று கேள்விகளை அடுக்குகிறார் அயோத்திதாசர்.

ஆங்கிலம் பொது மொழியானால் மக்களிடையே பேதங்கள் குறைந்து ஒற்றுமையும் அன்பும் அறிவும் மேலோங்கும் என்று நம்புகிறார். சச்சரவுகள் குறையும், உலகில் உள்ள ஆங்கிலம் அறிந்த எந்த மொழி மக்களுடன் எளிதில் உறவாடலாம். இந்தியைக் கற்பது காசிக்குப் போய் வருவதற்கு மட்டும் பயன்படலாம். ஆனால், ஆங்கிலம் பொதுமொழியானால் உலகெங்குமே தொடர்பு கொள்ளலாம் என்ற நிலையே சிறப்பு என்பதால் இந்திய மக்கள் ஒவ்வொருவரும் ஆங்கிலம் கற்கவேண்டும் என்று வேண்டுகோள் விடுக்கிறார் பண்டிதர் அயோத்திதாசர்.

தமிழர்கள் ஆங்கிலம் கற்கவேண்டும் என்ற பெரியார் ஈ.வெ.ரா.வுக்கும்; தங்கள் தாய்மொழி தமிழும், பொதுமொழி ஆங்கிலமும் தமிழர் கற்கவேண்டிய மொழிகள் என இருமொழிக் கொள்கையை முன்வைத்த அறிஞர் சி. என். அண்ணாதுரைக்கும் முன்னோடியாக விளங்குகிறார் பண்டிதர் அயோத்திதாசர்.

உதவிய நூல்:

க.அயோத்திதாசப் பண்டிதர் சிந்தனைகள் – அரசியல், சமூகம்

192. இந்திய தேசத்திற்குப் பொது பாஷையா யிருக்கவேண்டியவை ஆங்கிலபாஷையாம் (பிப்ரவரி 22, 1911), பக்கம்:326


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஆங்கிலம் இந்தியாவின் பொதுமொழியாக இருக்க வேண்டும்: பண்டிதர் அயோத்திதாசர்”

அதிகம் படித்தது