மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இணையத்தில் சந்தைப்படுத்தல் (Digital Marketing) என்றால் என்ன?

சிறகு நிருபர்

May 9, 2015

digitalmarketing2இன்றைய உலகம் இணைய மயமாகிவிட்டது. மக்கள் அனைவரும் மின்னணு சாதனங்கள் வாயிலாக இணையத்துடன் இணைக்கப்பட்டிருக்கின்றனர். புறவுலகின் பல்வேறு விளம்பர சாதனங்களை இணைய உலகம் கொண்டுள்ளது. எந்தவொரு விடயத்தையும் தேடவேண்டுமெனில் இருந்த இடத்தில் இருந்தபடியே இணையத்தில் தேடுவதை முதன்மைச் செயலாக மக்கள் செய்கின்றனர். தனி நபர்களில் இருந்து நிறுவனங்கள் வரை இணைய அடையாளம் என்பது தவிர்க்க முடியாத ஒன்றாகி விட்டது. மின்னஞ்சல் கணக்குகள் தொடங்கி சமூக வலைதள இருப்பு, இணையதளங்கள் என்று பல்வேறு வழிகளின் வாயிலாக நமக்கு இணைய அடையாளங்கள் ஏற்படுகின்றன. தகவல் பரிமாற்றம் மற்றும் செய்தித் தொடர்பு என்ற அளவில் துவங்கிய இணைய உலகமானது இன்று மிகப்பெரிய அளவில் வணிகமயமாகியிருக்கிறது. இணையவழி வியாபாரம் மூலைமுடுக்குளில் கூட பிரபலமாகி செயல்பட்டு வருகிறது. இந்தியா போன்ற நெருக்கடி மிகுந்த நாடுகளில் போக்குவரத்துத் தொல்லைகள் காரணமாக மக்கள் தாங்கள் இருக்கும் இடங்களிலிருந்தே இணையம் மூலமாக பொருட்களை வாங்குதல், சேவைகளைப் பெறுதல் போன்ற வேலைகளை செய்ய விரும்புகின்றனர். இத்தகைய சூழ்நிலையில் வியாபார நிறுவனங்கள் இணையத்தில் தங்களுடைய அடையாளங்களை ஏற்படுத்தி சந்தைப்படுத்துதலை நிர்மானித்தல் மிகவும் அவசியமான ஒன்றாகிவிடுகிறது. சந்தைப்படுத்துவது எப்படி, என்னென்ன வழிமுறைகள் உள்ளன என்று காண்போம்.

இணையத்தில் சந்தைப்படுத்துவதற்கு இணையதளம் இருப்பது இன்றியமையாததாகும். ஒரு நிறுவனம் தனது பொருட்களையும் சேவைகளையும் சிறப்பான முறையில் இணையப்பக்கங்களில் இட்டு தேவையான படங்களை இணைத்து தொடர்பு எண்களை குறிப்பிட்டு காண்போர் கண்ணைக் கவரும் விதத்தில் இணையதளத்தை நிறுவி இருந்தால் சந்தைப்படுத்துதல் மிகவும் எளிதாகும். எனவே இணையதளத்தை உருவாக்கி பராமரித்து வருதல் மிகமிக முக்கியமான செயலாகும். அடுத்ததாக இணையத்தில் சந்தைப்படுத்துதலை இருவகையாகப் பிரிக்கலாம். வலிந்து ஒரு நபரிடம் நமது சேவைகளை தெரியப்படுத்துவது ஒருவகை, மற்றொன்று கூகுள் தேடுபொறியில் தேடுபவர்களை நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு(Blog) வரவழைப்பது. இவ்விரண்டு வகையிலும் சந்தைப்படுத்துவதற்கு உள்ள சில வழிமுறைகளைக் கீழே காண்போம்.

  • digitalmarketing6இணையம் தொடங்கிய காலத்தில் ஆரம்பித்து இன்று வரையிலும், தொடக்கத்தில் இருந்துவரும் மின்னஞ்சல் பரிமாற்றம் மிக முக்கியமான ஒரு சந்தைப்படுத்தும் சாதனமாகும். இணையத்தில் உலவும் அனைத்து நபர்களும் தவறாமல் மின்னஞ்சல் கணக்குகளை வைத்திருப்பார்கள். அந்தக் கணக்கிற்கு வரும் மின்னஞ்சல்களை பெரும்பாலானோர் தினசரி பார்வையிடுவார்கள். ஒரு நபரின் கையில் நேரடியாக கொடுக்கப்படும் தபாலுக்கு இணையானது மின்னஞ்சல் சேவை. அவ்வாறு உள்ள மின்னஞ்சல் முகவரிகளை ஆயிரக்கணக்கில் திரட்டி அவற்றுக்கு வியாபார நிறுவனங்களின் பொருட்களையோ, சேவைகளையோ தெளிவான படங்கள் மற்றும் சொற்கள் வாயிலாக விவரித்து மின்னஞ்சல்களை உருவாக்கி அனுப்பினால் ஏராளமான மக்களை நேரடியாக சென்றடைய முடியும். மின்னஞ்சல் மூலம் சந்தைப்படுத்துவதற்கு உதவி செய்ய பல மென்பொருட்கள் கிடைக்கின்றன. அவற்றைப் பயன்படுத்தி மிக எளிமையாக இச்செயலை செய்யலாம். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வலிந்து தெரியப்படுத்தும் வகையாகும்.(Push Technique)
  • digitalmarketing3கூகுள் தேடுபொறி (Google Search) இயந்திரத்தை பயன்படுத்தாத மக்களே இல்லை என்று சொல்லும் அளவிற்கு இந்த சாதனம் பிரபலமானதாகும். ஒருவர் இந்த இயந்திரத்தில் தேடும் பொழுது அவருக்கு நமது தகவல்கள் சென்று சேரவேண்டுமாயின் S.E.Oஎன்னும் செயலை நுணுக்கமாகவும், நுட்பமாகவும் செய்யவேண்டியது முக்கியம். தேடும் பொழுது முதல் பக்கத்தில் வரும் விடைகளையே மக்கள் பார்க்கின்றனர். எனவே நமது இணையதளத்தை கூகுள் தேடுபொறியின் முதல் பக்கத்தில் கொண்டு வரும் காரியத்தை செவ்வனே செய்து முடிக்கவேண்டும். நிறைய நேரமும் பொறுமையும் தேவைப்படும் இதற்கு நல்ல நிபுணர்கள் தேவை. அவ்வாறு செய்துவிட்டால் இணையத்தில் தேடும் வாடிக்கைளார்களிடையே எந்தவொரு நிறுவனமும் தமது சேவைகளையும் பொருட்களையும் எளிதில் கொண்டு சேர்க்கலாம். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வரவழைக்கும் வகையாகும்.
  • digitalmarketing7சமூக வலைதளங்கள் எனப்படும் சாதனங்கள் இன்றைய நாளில் பெரிதும் பயன்படுத்தப்படுகின்றன. அவற்றின் மூலமாக நண்பர்களிடையே தொடர்பு கொள்வதும், செய்திகளை பரிமாறிக்கொள்வதும் வெகு எளிதாக இன்று நடைபெறுகிறது. இத்தகைய சமூக வலைதள இணையதளங்கள் தமது வருமானத்திற்காக நிறுவனங்களை குறிவைத்து விளம்பர சேவைகளை தொடங்கியுள்ளனர். இந்தத் தளங்களில் நிறுவனங்கள் கணக்குகளைத் தொடங்கி தங்களைப் பற்றிய செய்திகள், படங்கள், காணொளிகள் போன்றவற்றைத் தொடர்ந்து ஏற்றிவந்தால் காண்போருக்கு நல்ல ஒரு தாக்கத்தையும், விழிப்புணர்வையும் ஏற்படுத்தலாம். மேலும் பணம் கொடுத்து விளம்பரங்கள் செய்வதன் வாயிலாகவும் ஏராளமான மக்களை சென்றடையலாம். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வரவழைக்கும் வகையாகும்.
  • digitalmarketing4இணையதளங்கள் இருந்தபோதும்கூட பதிவுகள்(Blog) எனப்படும் சாதனங்கள் சந்தைப்படுத்துதலில் மிக முக்கியமானவையாகும். தினசரி செய்திகளை வெளியிட்டு பரிமாறிக்கொள்வதற்கு உகந்ததாக இருக்கக்கூடிய பதிவுகள் நிறுவனங்களுக்கு மிகவும் பயனுள்ளதாக அமைகின்றன. இத்தகைய பதிவுகளைத் தொடர்ந்து வெளியிட்டு மக்களிடையே நமது பொருட்களைக் குறித்த விழிப்புணர்வை நாம் ஏற்படுத்த முடியும். இது நமது பதிவுத்தளத்திற்கு வரவழைக்கும் வகையாகும்.(Push Technique)
  • இணையத்தில் பல்வேறு சமூகக் குழுக்கள் வெவ்வேறு நிறுவனங்களில் இணையதளங்களுக்கு உள்ளாக செயல்படுகின்றன, இத்தகைய குழுக்களில் பல்வேறு நபர்கள் உறுப்பினர்களாக இணைந்துள்ளனர். இவற்றின் சிறப்பு யாதெனில் வெளியிடப்படும் செய்திகள் உறுப்பினராக உள்ள அனைவருக்கும் சென்று சேருவதற்கு வாய்ப்புகள் அதிகம். ஒரு நிறுவனத்தின் தயாரிப்புகளுக்குத் தொடர்பான குழுக்களில் செய்திகளையும் விளம்பரங்களையும் தொடர்ந்து வெளியிட்டால் மக்களுக்குக் கொண்டு சேர்ப்பதற்கான பலன் கிட்டும். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வரவழைக்கும் வகையாகும்.(Groups Marketing)
  • digitalmarketing8இணைய உலகில் பல்வேறு நிறுவனங்கள் வரிவிளம்பரங்களுக்காகவே தளங்களை நடத்துகின்றனர். அவற்றில் பெரும்பாலானவை இலவச சேவைகளை அளிக்கின்றன. இத்தகைய இணையதளங்களில் நமது தயாரிப்புகளை சுருக்கமாக வெளியிட்டு அதனைப் பார்க்கும் மக்களிடையே நாம் சென்று சேரலாம். இது நமது இணையதளம் அல்லது பதிவுத்தளத்திற்கு வலிந்து தெரியப்படுத்தும் வகையாகும்.

இவையன்றியும் இன்னும் ஏராளமான வழிகள் சந்தைப்படுத்த உள்ளன. அவற்றை வரும் காலத்தில் நாம் அலசுவோம்.


சிறகு நிருபர்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இணையத்தில் சந்தைப்படுத்தல் (Digital Marketing) என்றால் என்ன?”

அதிகம் படித்தது