இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள்
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழிApr 8, 2017
இந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச் சேர்க்கையாளர்கள் மிகப் பெரிய ஒடுக்குதலுக்கு உண்டாகின்றனர். உலகில் தென் ஆப்பிரிக்காதான் 1994 ஆம் ஆண்டு, ஓரினச் சேர்க்கையாளர்கள் (gays , lesbians) இவர்களின் உரிமைகளுக்குச் சட்டம் மூலமாக பாதுகாப்பு வழங்கியது. அதனைத் தொடர்ந்து கனடா, பிரான்ஸ், லூஸேம்போர்க், ஹொலண்ட், ஸ்லோவேனியா, ஸ்பெயின், நோர்வே, டென்மார்க், ஸ்வீடன் மற்றும் நியூஸிலண்ட் அதே போன்று சட்டங்கள் இயற்றின. இந்தியாவைப் பொறுத்தவரை ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு எந்தவிதச் சட்டப் பாதுகாப்பும் இல்லை.
யு.கே போன்ற நாடுகள் தங்கள் சட்டங்களில் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு சற்று தளர்வு தந்து, சமூகத்திலும் அவர்களைப் பற்றிய புரிதலை ஏற்படுத்தியிருக்கின்றது. ஸ்பெயின், பெல்ஜியம், கனடா, நெதர்லாண்ட் போன்ற நாடுகள் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணங்களுக்கு ஒப்புதல் வழங்கி இருக்கின்றன. ஆனால் உலகின் பல நாடுகளில் இன்றும் ஓரினச்சேர்க்கையாளர்களின் திருமணம் தண்டனைக்குரிய குற்றம். இந்தியாவில் பலர் ஓரினச்சேர்க்கை என்பது தங்கள் மத நம்பிக்கைக்கு எதிராக இருப்பதாகவும், அடுத்த தலைமுறையினர் உருவாக வாய்ப்பு இல்லை என்பதற்காகவும் மறுக்கின்றனர்.
இந்தியாவைப் பொறுத்தவரை இபிகோ 377 1870 இன் படி, ஓரினச்சேர்க்கை தண்டனைக்குரிய குற்றமாகும். அந்த வகையில் 2009 ஆம் ஆண்டு நஸ் என்ற அறக்கட்டளை ஓரினச்சேர்க்கையாளர்கள் உரிமைகள் பற்றி ஒரு வழக்குத் தொடர்ந்தது. அதில் உச்சநீதிமன்றம் ஓரினச்சேர்க்கை, சட்டத்திற்கு புறம்பானது என்றும் அதை மீறுபவர்கள் கடுமையான தண்டனைக்கு உட்படுத்தப்படுவார்கள் என்றும் தீர்ப்பு வழங்கியது. அதனை எதிர்த்து, 200 ஓரினச்சேர்க்கையாளர்கள் (LGBT) கறுப்பு உடை அணிந்து போராட்டம் நடத்தினர். “எங்கள் பாலினம், எங்கள் உரிமை!! எங்களுக்கு நீதி வேண்டும், எங்கள் காதலை நீங்கள் தடுக்க முடியாது” என முழக்கங்கள் எழுப்பினர்.
இந்த தீர்ப்பு நீதிபதிகளின் தனிப்பட்டக் குரலாக பார்க்கமுடியுமே தவிர்த்து சிறந்த நீதி அன்று என ஓரினச்சேர்க்கையாளர்கள் எதிர்ப்பு தெரிவித்தனர். மதப் பற்றாளர்கள் இதை மிகப் பெரிய பண்பாட்டின் வெற்றியாகப் பார்த்தனர். இன்றைக்கும் LGBT festivals – ஓரினச்சேர்கையாளர்களின் திருவிழா நாடு முழுவதும் கொண்டாடப்படுகின்றது. மும்பை, டெல்லி மட்டுமல்லாது பாண்டிச்சேரி, வதோதரா, விசாகப்பட்டினம் போன்ற ஊர்களிலும் கொண்டாடப்படுகின்றது.
உயிர்க்கொல்லி எய்ட்ஸ் நோய்க்கு எதிராக விழிப்புணர்வு ஏற்படுத்திடும் இயக்கம் பெருமளவு இவர்களின் உரிமைகளுக்காக இந்திய முழுவதும் குரல் கொடுத்து வருகின்றனர்.
இபிகோ 377 இன் படி, இனப்பெருக்கத்திற்கு உதவாத அனைத்து உடலுறவும் குற்றம். ஆனால் உடலுறுவு என்பது வெறும் இனப்பெருக்கத்திற்கானது என்ற குறுகிய பார்வையை ஓரினச்சேர்க்கையாளர்களுக்காக வாதாடும், போராடும் செயற்பாட்டாளர்கள் கூறுகின்றனர்.
அண்மையில் இந்தியா ருசியாவிற்கு ஆதரவாக, ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகளுக்கு எதிராக ஐ.நா-வில், வாக்களித்தது. ஆனால் அதனை எதிர்த்து 80 நாடுகள் ஓரினச்சேர்க்கையாளர்களுக்கு ஆதரவாக வாக்களித்தக் காரணத்தினால் அந்தத் தீர்மானம் தோற்கடிக்கப்பட்டது. 2016 இல் சசி தரூர் (காங்கிரசு உறுப்பினர்) மக்களவையில் ஓரினச்சேர்க்கை குற்றம் என்பதை தடுக்கும் வகையில் வரைவு ஒன்றை தந்தார். ஆனால் அந்த வரைவு முதல் கட்டத்திலேயே நிராகரிக்கப்பட்டுவிட்டது.
ஓரினச்சேர்க்கையாளர்களைப் பொறுத்தவரையில் அவர்கள் உணர்வுகளை எதிர்த்து வாழ முடியாமல் பலர் மன உளைச்சலுக்கு ஆளாகி தற்கொலையும் செய்து கொண்டுள்ளனர். எனவே அவர்களும் மனிதர்கள் தான், அவர்கள் உணர்வின் படி வாழ அனைத்து உரிமைகளும் அவர்களுக்கு உண்டு என்பதை புரிந்து கொண்டு இந்தியா தன் நிலைப்பாட்டினை மாற்றிக்கொண்டு அவர்களுக்கான சட்டப் பாதுகாப்பையும், உரிமையையும் உறுதி செய்யட்டும், அதை நோக்கி நம்முடைய போராட்டங்கள் இருக்கட்டும்.
வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவில் ஓரினச்சேர்க்கையாளர்களின் உரிமைகள்”