மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இந்தியாவில் மணவிலக்குச் சட்டங்கள் – ஒரு பார்வை

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Apr 30, 2016

Divorce Act1

இந்தியாவைப் பொருத்தவரை ஒவ்வொரு மதத்திற்கும் மணவிலக்குச் சட்டங்கள் தனியே உண்டு. அதேபோன்று சாதி மற்றும் மதத்தை மறுத்து திருமணம் செய்தவர்களுக்கு சிறப்பு திருமணச் சட்டம்(Special Marriage Act ), 1954 உண்டு.

இந்து என்று அழைக்கப்படும் மக்கள் அனைவரும் இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act )1955 மூலம் மணவிலக்குப் பெற முடியும். சீக்கிய மதம்,  ஜெயினமதம்,  புத்த மதம் ஆகிய மதங்களும், இந்து மதத்தின் கிளை மதங்களாகவே இந்திய அரசமைப்புச் சட்டம் கூறுகின்ற காரணத்தால் அவர்களுக்கும் இந்து திருமணச்சட்டம் பொருந்தும்.

இசுலாமியர்களைப் பொருத்தவரையில் இசுலாமிய திருமண ரத்துச் சட்டம் (Dissolution of Muslim Marriages Act, 1939)மூலம் மணவிலக்குப் பெறலாம். அதே போன்று கிறித்துவர்கள் இந்திய மணவிலக்குச் சட்டம் (Indian Divorce Act, 1869)மூலம் மணவிலக்குப் பெறலாம். பார்சி மதத்தினர் பார்சி திருமண மற்றும் மணவிலக்குச் சட்டம் (The Parsi Marriage and Divorce Act, 1936) மூலம் மணவிலக்குப் பெறலாம்.

அதேபோன்று மணவிலக்குப் பெற விரும்பும் சாதி மற்றும் மத மறுப்பு திருமணம் செய்தவர்கள் சிறப்புச் சட்டம் (Special Marriage Act, 1954)மூலம் மணவிலக்குப் பெறலாம்.

இந்து திருமணச் சட்டத்தில் மணவிலக்கு  பெறும் வழிமுறைகள் :

Divorce Act4இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act, 1955)மூலம் மணவிலக்குப்பெற கீழ்கண்டவற்றில் உள்ள ஒன்று அல்லது ஒன்றுக்கும் மேற்பட்ட நிலையினை நிரூபிக்க வேண்டும்.

எதிர் மனுதாரர் கூடாஒழுக்கம் (Adultery) கொண்டவராக இருத்தல், கைவிடுதல் (Desertion), கொடுமைப்படுத்துதல் (Cruelty), இனப்பெருக்கத்திறனற்ற நிலை அல்லது ஆண்மையின்மை (Impotency) கொண்டவராக இருத்தல், நாள்பட்ட நோய் கொண்டு இருத்தல் (Chronic Disease).

கொடுமைப்படுத்துதல் (Cruelty) என்று வரும்போது,  தொடர்ந்து இரண்டு வருடங்கள் மனுதாரரைப் பிரிந்து வாழ்ந்தால் அது கொடுமைப்படுத்துதல் என்ற விளக்கத்திற்குள் வரும். அதேபோல் இந்து மதத்தைத் துறந்து வேறு மதம் மாறியிருந்தாலும் அதுவும் கொடுமைப்படுத்துதல் என்ற விளக்கத்திற்குள் வரும்.

இந்து திருமணச் சட்டம் (Hindu Marriage Act )1955 மூலம் இருதரப்பும் மனமுவந்து மணவிலக்குப் பெறுவதும் சாத்தியமே. இதன் மூலம் ஆறு மாதங்களில் மணவிலக்கிற்கான விசாரணை முடிவுற்று பணமும்-நேரமும் வீணாக்கப்படுவதைத் தடுக்க முடியும். இந்து திருமணச் சட்டத்தின் படி 13-B மூலம் மணவிலக்கு பெறலாம். இதன்படி விருப்பப்பட்டு கணவனும்,  மனைவியும் மணவிலக்குப் பெற குறைந்தபட்சம் ஒருஆண்டு தனியாகப் பிரிந்து வாழ்ந்திருக்க வேண்டும். இருவரும் மனமுவந்து பிரியும் நிலையில் மாவட்ட நீதிமன்றத்தில் மனு போட வேண்டும். எழுத்துத்  தரவுகளை உள்ளடக்கிய உறுதிமொழியும் உடன் இணைக்கப்பட வேண்டும் (affidavit). முதல் மனு (First Motion Petition) போட்டு ஆறு மாதங்கள் கழித்து இரண்டாவது மனு (Second Motion Petition) போட வேண்டும் என்பது விதிமுறை.

நீதிபதி இரண்டு தரப்பு வாதங்களையும் கேட்டப்பின்னர், இருவரும் சேர்ந்து வாழ வழியில்லை என்று உறுதி செய்த பின்னர் மணவிலக்கு உறுதி செய்யப்படும். இதன் கீழ் குழந்தை யாருடன் இருப்பது?, மனைவிக்கு வாழ்வாதார நிதி, திருமணத்தின்போது தரப்பட்ட சீதனத்தைத் திருப்பிக் கொடுத்தல், வழக்குச் செலவு  என்று அனைத்தும் எழுதி மணவிலக்கினைப் பெற்றுக் கொள்ளலாம்.

சுயமரியாதை திருமணம் குறித்து உயர்நீதி மன்றம் 

Divorce-Act5தமிழ்நாட்டில் சடங்குகள், புரோகிதர், தாலி,  அக்னி, சப்தபதி இல்லாத சுயமரியாதை திருமணங்கள் செல்லும் என்று அறிஞர் அண்ணா முதல்வராக இருந்தபோது 1967 இல்சட்ட வரைவு கொண்டுவந்து, பின் 1968 இல் அதனை சட்டமாக்கினார். அண்மையில் வழக்கறிஞர் அஸ்வத்தாமன் பொதுநல வழக்கின் மூலம் சுயமரியாதை திருமணங்கள் செல்லாது என்று அறிவிக்குமாறு தொடர்ந்த வழக்கில்,  தலைமை நீதியரசர் திரு.சஞ்சய் கிஷன் கவுல் மற்றும் நீதியரசர் சிவஞானம் இந்து மதம் பல வேறுபாடுகளை தன்னகத்தே கொண்டுள்ளது. எனவே சடங்குகள் இல்லாத சுயமரியாதை திருமணங்கள் சட்டப்படி செல்லும் என்று தீர்ப்பளித்தனர்.

கிறித்துவமதத்தைப் பொருத்தவரை அவர்களின் வேதம், கடவுளால் இணைக்கப்பட்டவர்களை மனிதர்கள் பிரிக்கக் கூடாது என்று கூறி வந்தமையால், பல்வேறு சட்டச்  சிக்கல்கள் அவர்கள் மணவிலக்கு பெறுவதில் இருந்து வந்தது. உயர்நீதிமன்றம் மாவட்ட நீதிமன்றம் வழங்கும் மணவிலக்கை உறுதி செய்தால் மட்டுமே மணவிலக்குச் செல்லும் என்ற நிலை இருந்தது. ஆனால் இந்திய மணவிலக்குச் சட்டம் (திருத்தம்) 2001 இன் படிமாவட்ட நீதிமன்றங்கள் வழங்கும் மணவிலக்கை உயர்நீதிமன்றம் உறுதி செய்யத்தேவை இல்லை என்று திருத்தியது.

இசுலாமிய மணவிலக்கு முறை:

இசுலாமிய  திருமணம் என்பது  ஒப்பந்தம். நிக்காஹ் எனப்படுவது இரண்டு பேரை இணைக்கின்றது.

கணவன் நீதிமன்றம் செல்லாமலேயே மனைவியை மணவிலக்கு செய்யலாம். அதற்கு எந்தக்காரணமும் தேவையில்லை. தலாக் என்ற சொல்லை கணவன் மூன்று முறை கூறி விட்டால் (முத்தலாக்கு) அந்தத் திருமணம் ரத்து செய்யப்படும். தலாக் என்றால் திருமண ஒப்பந்தத்திலிருந்து மனைவி விடுவிக்கப்படுகிறாள் என்று பொருள்.

தலாக் சொல்லப்படும் முறைகள்

அஹ்சான் ஒரு முறை தலாக் சொல்வது. இந்தக் காலத்தில் மாற்றிக் கொள்ளலாம்.

ஹஸ்ஸான் 3 முறை கால இடைவெளி கொடுத்து சொல்வது. 3வது முறை சொல்வது இறுதியானது.

தலாக் – ஏ- பித்தத் – ஒரே நேரத்தில் 3 முறை தலாக் சொல்வது.

தலாக்- ஏ-தஃப் வீத் – கணவன் தன் சார்பாக தலாக் சொல்ல வேறு ஒருவருக்கு அதிகாரமளிப்பது.

முபாரா – கணவன் – மனைவி இருவரும் ஒப்புக் கொண்டு மணவிலக்கு செய்தல்.

குலா – மனைவி மணவிலக்கு  கோருதல். குலா முறைப்படி மணவிலக்கு பெற்றால் மனைவி மெஹர் தொகையை இழக்க நேரிடும்.

மும்முறை தலாக் கூறும் நிலை பங்களாதேஷ், எகிப்து,  சூடான்,  ஜோர்டான்,  துனிசியா,  மொரோக்கோ, பாகிஸ்தான் போன்ற இசுலாமிய நாடுகள் தடை செய்துள்ள நிலையில் இந்தியாவில் அது இன்னும் சாத்தியப்படவில்லை.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இந்தியாவில் மணவிலக்குச் சட்டங்கள் – ஒரு பார்வை”

அதிகம் படித்தது