மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

இன்றைய உலக அறம்

பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

Jun 3, 2017

இன்றைய உலக அறத்திற்கு மறுபெயர் ‘கார்ப்பரேட் அறம்’

Pointing at touchpad“போட்ட முதலைப் பலமடங்காக எப்படித் திரும்ப எடுக்கவேண்டும்” என்பதே கார்ப்பரேட் அறத்தின் அடிப்படை. இது தெரியாதவனுக்கு இந்த உலகில் வாழத் தகுதியில்லை. குழந்தையின் கல்விக்காக நீங்கள் ஐம்பது லட்ச ரூபாய் செலவுசெய்தாலும் அதுவும் முதலீடே ஆகும்.

கார்ப்பரேட் அறம் என்பதில்:

(அ) கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அறம், (ஆ) கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளுக்கான அறம், (இ) அரசாங்கத்தின் அறம், (ஈ) தனிமனிதனின் அறம் என்ற நான்கும் அடங்கும்.

அ. கார்ப்பரேட் முதலாளிகளுக்கான அறம்

Siragu corporate3

1. தொழிலாளர்களுக்குக் கூலியை எந்த அளவு முடியுமோ அந்த அளவு குறைத்துக் கொடுக்க வேண்டும். எதிர்த்தால் வீட்டுக்கு அனுப்பிவிடவேண்டும் என்பது அடிப்படை விதி.
அமெரிக்கா போன்ற நாடுகளில் வேண்டுமானால் உற்பத்திப் பொருள்களின் தரம், தொழிலாளர்களுக்குச் சரியான கூலியளவு, வேலைநேரம் போன்றவற்றைப் பற்றிக் கவலைப்படலாம். கீழை அல்லது ஏழை நாடுகளில் உள்ளவர்களுக்கு இவை பொருந்தாது. இவர்களைக் கசக்கிப்பிழியவேண்டும். ஒரு தொழிலாளி இறந்தால் என்ன? அதே கூலிக்கு ஆயிரம்பேர் போட்டி போட்டுக் கொண்டு வருவார்கள்.

2. கொலைசெய்ய அஞ்சக்கூடாது. தொழிற்சாலையின் முறைகேடுகளால் தானாக இறந்தாலும் சரி, முதலாளிகளை எதிர்த்தவர்களை அழிக்கும் செயல் முறையில் இறந்தாலும் சரி. எல்லாம் நல்லதே. இந்தியாவின் 130 கோடிப் பேரில் ஒருவனோ சிலபேரோ பலபேரோ செத்துப்போனால் மக்கள்தொகை குறையும். இதற்கு நல்ல உதாரணம் போபால் விஷவாயுக் கசிவு. ஏறத்தாழ ஐந்தாயிரம் பேர் இறந்தார்கள். ஆனால் இந்திய அரசாங்கமே கவலைப்படவும் இல்லை, தக்க இழப்பீடு வாங்கவும் வழங்கவும் இல்லை.

3. அரசாங்கத்திடமிருந்து எவ்வளவு வசதிகளை மானியமாகப் பிடுங்க முடியுமோ அவ்வளவு மானியங்களைப் பிடுங்கிக்கொள்ளவேண்டும். பிறகு அவற்றை ஏப்பம் விட வேண்டும். சிறு முதலீட்டாளர்களும் விவசாயிகளும் மானியம் வாங்கினால்தான் தவறு.
வரியற்ற சிறப்புப் பொருளாதார மண்டலங்களை உருவாக்க வேண்டும். அதற்கு விவசாயிகளின் நிலங்களைப் பிடுங்கித்தர அரசாங்கம் இருக்கவே இருக்கிறது.

4. அரசு வங்கிகளிடம் கடன் வாங்கவேண்டும். அதைத் திருப்பித் தரக்கூடாது. பிறகு அரசாங்கம் தானாகவே அவற்றை வாராக்கடன் என்று எழுதி, கணக்கிலிருந்து நீக்கிவிடும்.

5. வரி ஏய்ப்பு என்பது மிக முக்கியம். ஒழுங்காக வரி கட்டினால் ஒருகாலத்திலும் நீங்கள் கார்ப்பரேட் முதலாளி ஆகமுடியாது. அதானி போன்ற முதலாளிகளும் பெரிய அரசியல்வாதிகளுமே சில ஆயிரம் கோடிகள் வரி கட்டாமல் இருக்கும்போது நீங்கள் ஏன் அலட்டிக் கொள்கிறீர்கள்?

6. லாபம், மானியம், வங்கிக்கடன், வரிஏய்ப்பு போன்றவற்றிலிருந்து சம்பாதித்த தொகைகளை ஸ்விஸ் வங்கி அல்லது பிற வெளிநாட்டு வங்கிகளில் சேமித்து வைத்துக் கொள்ள வேண்டும். தக்கசமயத்தில் அவற்றை வெளிநாடுகளிலும் முதலீடு செய்யலாம். அப்போது உங்களை தேசபக்தர் என்று பாராட்டவும் செய்வார்கள்.

7. தனியாகவும் கூட்டாகவும் தனிமனிதர்களைக் கூடியவரை வதைக்க வேண்டும். நஞ்சு சேர்ந்த மருந்துப் பொருள்கள், மரபணுமாற்றக் காய்கறிகள் பழங்கள் போன்றவற்றை விற்று உள்நாட்டுமக்களின் உடல்நலத்தையும் விவசாயத்தையும் அழிக்க வேண்டும். இவற்றுக்கேற்ற சட்டங்களை நமது அரசாங்கம் இயற்றிக் கொடுக்கும்.

ஆ. கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகளுக்கான அறம்

Siragu corporate4

எழுத்தாளர்கள், பிற அறிவுஜீவிகள், பத்திரிகையாளர்கள், ஊடகக்காரர்கள், சாமியார்கள் போன்றவர்களைக் கார்ப்பரேட் முதலாளிகளின் கைக்கூலிகள் எனலாம்.

1. கைக்கூலிகளான உங்கள் முதல் கடமை, கார்ப்பரேட் முதலாளிகள், அவர்களால் பிழைக்கும் உள்நாட்டுத் தரகு முதலாளிகள் ஆகியோர் என்ன செய்தாலும் சரி என்று துதிபாடவேண்டும். முடிந்தவரை அவர்களுக்கு விளம்பரம் தரவேண்டும். இதற்குக் கைமேல் பலன் உடனே கிடைக்கும்.

2. இந்துத்துவக் கொள்கைகளையும், பாசிசத்தையும் ஆதரிக்கவேண்டும். யோகம், ஆயுர்வேதம் போன்றவற்றை நன்கு வியாபாரம் செய்யவேண்டும். இதற்கு பாபா ராம்தேவ், பதஞ்சலி போன்றவர்கள் நல்ல உதாரணங்கள்.

3. அரசியல்வாதிகளைக் கையில் போட்டுக் கொள்ளவேண்டும். அவர்களால் மிகுந்த லாபம் உண்டு. ஜக்கி வாசுதேவ் போல கோயமுத்தூரில் விவசாய நிலத்தை அழித்து சிவன் சிலையை வைக்க மோடியை அழைக்க வேண்டும்.

4. எழுத்தாளர்கள் கூடியவரை நேராகவோ மறைமுகமாகவோ இந்துத்துவப் பிரச்சாரம் அமையுமாறு நாவல் போன்றவற்றை எழுதவேண்டும். பத்திரிகையாளர்கள், கட்டுரையாளர்களாக இருப்பின் 365 நாட்களில் முதலாளியாவது எப்படி, 24 மணிநேரமும் உழைத்தும் சோர்வின்றி இருப்பது எப்படி போன்ற நூல்களை எழுத வேண்டும். நடுநிலைப் பத்திரிகையாளர்களாக இருந்தால் யார் யாரை ஏமாற்றினால், கொள்ளையடித்தால், இரத்தத்தை உறிஞ்சினால் நமக்கு என்ன என்ற தாராள மனப்பான்மையோடு கத்திரிக்காய் கொத்சு செய்வது எப்படி, காராபூந்திவடை செய்வது எப்படி போன்ற நடுநிலையான செய்திகளை வெளியிடலாம். காஞ்சிபுரேஸ்வரர் கும்பாபிஷேகம், கும்பகோணேசுவரர் ஆதிபூஜை போன்ற செய்திகளை வெளியிட்டால் இன்னும் நலம். இவற்றோடு திருச்சி மரக்கடை தர்கா விழா, ஜேம்ஸ் சுந்தரின் “முடவர் எழுந்து ஓடுகிறார்” போன்ற ஜெப ஊழியச் செய்திகளையும் வெளியிட்டால் உங்களை மதச் சார்பற்றவர் என்று போற்றுவார்கள்.

இ. அரசாங்கத்தின் அறம்

Siragu corporate5

“கூடியவரை தான் ஊழல் செய்தால் போதாது, பெருமுதலாளிகளின் ஊழலுக்கும் துணைசென்று அவர்களிடம் எல்லாவற்றிலும் குறைந்தது 50 சதவீதம் கமிஷன் கறந்து கொள்ளவேண்டும். பதிலாக எல்லா மானியங்களையும் வசதிகளையும் முதலாளிகளுக்கு அளிக்க வேண்டும்” என்பவை அரசாங்கத்துக்கான அடிப்படை விதிகள்.

உதாரணத்திற்கு நம் இந்திய அரசாங்கத்தின் சில செயல்களைக் காண்போம்.

குயின்ஸ்லாந்து மாநிலத்தில் உள்ள கலீலி பள்ளத்தாக்கில் அமைந்திருக்கும் உலகின் மிகப்பெரிய நிலக்கரிச் சுரங்களில் ஒன்றான சார்மிக்கேல் சுரங்கத்தைப் அதானிக்கு பேரம் பேசி முடித்துக் கொடுக்க அவரை அழைத்துக்கொண்டு ஆஸ்திரேலியாவுக்குச் சென்றுவந்தார் மோடி.

முன்னாள் ரிசர்வ் வங்கி ஆளுநர் ரகுராம் ராஜனின் சொற்களில், “மோடி டீ விற்றாரோ என்னவோ எனக்குத் தெரியாது. ஆனால் நம் நாட்டை அவர் விற்றுவிட்டார்”. கார்ப்பரேட் அறத்திற்கு மோடி நல்ல முன்னுதாரணம்

1. தனியார்மயம்–தாராளமயம்–உலகமயம் என்னும் மறுகாலனியாக்கக் கொள்கைகளை மோடியின் இந்திய அரசு தீவிரமாக்கியுள்ளது. தாராளமாகத் தரப்படும் எண்ணற்ற கடன்கள்; தேசிய நெடுஞ்சாலை–மேம்பாலங்கள் முதல் தங்கு தடையற்ற மின்சாரம் வரையிலான உள்கட்டுமான வசதிகள் ஆகியவற்றை நமது வரிப் பணத்தில் இருந்துதான் செய்து கொடுக்கிறது இந்திய அரசு.

2. 2007-2014 ஆண்டுகளில் 31 லட்சத்து 11 ஆயிரம் கோடிக்கு வரிச்சலுகைகளை அன்றைய காங்கிரஸ் அரசு முதலாளிகளுக்கு வழங்கியது. பத்தே முதலாளிகள் மட்டும் வாங்கியுள்ள கடன் தொகை 5.4 லட்சம் கோடி. எஞ்சிய முதலாளிகள் வாங்கியுள்ள கடன்களோ சொல்லி மாளாது. முதலாளிகள் இந்தக் கடன்களைத் திருப்பிக் கட்டாவிட்டால், அதனைத் தள்ளுபடி செய்து அவர்களை கவுரவிக்கிறது, 2014இன் முதல் மூன்று மாதங்களில் மட்டும் தள்ளுபடி செய்யப்பட்ட வாராக்கடன் ரூ. 14,549 கோடிகள். மோடி அரசு வந்தபிறகு இந்த நிலை இன்னும் தீவிரமாகியுள்ளது. ஆனால் விவசாயிகள் வாங்கிய நாற்பதாயிரம் ஐம்பதா யிரம் ரூபாய் கடன்களை அடித்துப் பிடுங்குகிறார்கள் வங்கி மேலாளர்கள்.

3. முதலாளிகளது தயாரிப்புகளை தங்கு தடை இல்லாமல் எடுத்துச் செல்வதற்காக தங்க நாற்கரசாலைகள் மற்றும் மேம்பாலங்கள் கட்டுவதற்காக ரூ.1,46,626 கோடிகளைச் செலவிட்டுள்ளது. முதலாளிகளுக்குச் சேவை செய்வதற்காக 2000-2016  ஆண்டுகளில் அரசு செலவிட்ட தொகையானது ரூ. 100 லட்சம் கோடிகளைத் தாண்டி விட்டது. இவை அனைத்தும் மக்களுடைய வரிப்பணம்தான்.

மத்திய அரசு கார்ப்பரேட் அறத்தைக் காப்பாற்றும் விதத்தை நோக்கினோம். தமிழக அரசு பற்றிச் சில தகவல்கள்.

Siragu corporate6

1. மாநில அரசில் ஊழல் செய்யாத அமைச்சர்களோ அதிகாரிகளோ இல்லை. ஒரு சிறு சான்று. திருப்பூரில் உள்ள மாசுக் கட்டுப்பாட்டுத்துறைக்கு வருகின்ற எந்த மேல் மட்ட அதிகாரிகளும் பத்து முதல் ஐம்பது லட்சம் வரைக்கும் அமைச்சருக்கு கப்பம் கட்டாமல் வேலை வாங்க முடிவதில்லை. அவர்கள், வந்தது முதல் போட்ட முதலீட்டை எடுப்பத்தில்தான் குறியாக இருக்கின்றார்கள். வேறு எவ்வேலையும் செய்வதில்லை.

2. அண்மையில் ஒரு தமிழ்நாட்டுப் பெண் அமைச்சர், “இன்னும் நான் இருக்கும் நான்காண்டுகளில் நாலாயிரம் கோடி ரூபாயேனும் நான் சம்பாதித்தாக வேண்டும், ஆகவே நீ லஞ்சம் கொடு” என்று ஒரு பெண் அதிகாரியை வதைத்த செய்தி தொலைக் காட்சிகளில் வெளியாயிற்று.

இவைதான் இந்நாளைய அரசியல்வாதிகளின் அறங்கள். நமது காவிரி மணலையே அள்ளி கர்நாடக மேகதாடுவில் காவிரிக்குக் குறுக்கே அணை கட்டத் தந்த தாராள மனமுடையவர்கள் அல்லவா நாம்? இவற்றை எல்லாம் கண்டு கொள்ளாமல் இருப்பதே நமது அறம். “பெரியவர்கள் செய்தால் பெருமாள் செய்தமாதிரி” என்று தெரியாமலா சொல்லியிருக்கிறார்கள்? ஆக, நாம் தனிமனிதன் அறத்திற்குள் வந்துவிட்டோம்.

ஈ. தனிமனிதனின் அறம்

Siragu hindhi3

1. எல்லாவற்றையும் அரசாங்கம் தனியார் மயமாக்கிவிட்டதால், இனிமேல் தனியார் கம்பெனிகளில்தான் வேலை. ஆகவே எப்போது வேண்டுமானாலும் நீக்கப்படலாம் என்ற பயபக்தியோடு குறைந்த கூலிக்கு நிறைந்த வேலையை அன்போடும் நேர்மையோடும் செய்யவேண்டும். அப்போதுதான் டென்ஷன் இருக்காது.

2. ஒருவேளை பல லட்ச ரூபாய் கொடுத்து அரசாங்க வேலை வாங்கிவிட்டால் அதைச் சில மடங்கேனும் அதிகமாக்கித் திரும்ப எடுப்பது எப்படி என்பதைக் கற்றுக் கொள்ளவேண்டும். இதுவே அரசாங்கப் பணியாளர்களின் தர்மம்.

3. கல்வியும் தனியார் மயமாகிவிட்டதால், எவ்வளவு கட்டணம் கேட்டாலும் மகிழ்ச்சியோடு அந்த நிறுவனங்களுக்குக் கொடுத்து உங்கள் குழந்தைகளை ஆங்கிலவழி, இந்திவழிக் கல்வியில் படிக்கவைக்கவேண்டும். தாய்மொழி கூடவே கூடாது. அவற்றில் படித்து அவர்கள் உங்களைவிட நல்ல அலுவலர்களாக வருவார்கள் என்று நம்புங்கள். ஒருவேளை அவர்கள் மருத்துவம் போன்ற துறைகளில் வந்துவிட்டால் அவர்களுக்கே போட்ட முதலை எடுப்பது எப்படி என்று நன்றாகத் தெரியும்.

4. “மனத்துக்கண் மாசிலன் ஆதல் அனைத்தறன்” (திருக்குறள்). மனத்தில் சற்றும் மாசில்லாமல், மற்றக் கம்பெனிகளை ஏமாற்றுவது எப்படி என்று பெரிய கம்பெனிகளுக்கு ஆலோசனை கூறிவிட்டு, எப்படி வருமான வரியில் ஏய்க்கலாம் என்று அறிவுரைகள் தந்துவிட்டு, வீட்டில் வந்தவுடன் பகவத்கீதையோ, கந்தர் சஷ்டி கவசமோ படிப்பது நல்ல அறம் ஆகும். “பற்றுக பற்றற்றான் பற்றினை”.

5. “அறத்தாறு இது எனவேண்டா, சிவிகை பொறுத்தானோடு ஊர்ந்தான் இடை” (திருக்குறள்). சிவிகையில் (பல்லக்கில்) செல்பவனைத் தூக்கிக்கொண்டு செல்வதே சிறந்த அறம் (முற்பிறவிப் பயன்) என்று வள்ளுவரே சொல்லி விட்டார். அதனால் உங்களுக்கு மேலே உள்ளவர்களைச் சுமப்பதே உங்கள் அறமாகும்.

6. சாக்கடை அள்ளும் தொழிலாக இருந்தாலும் சரி, ஐடி தொழிலாக இருந்தாலும் சரி, எல்லாத் தொழில்களையும் சமமாக பாவித்து, “பணியைச் செய்-பலனை எதிர்பாராதே” என்று இருப்பதே உங்கள் அறமாகும் (பகவத்கீதை). முடிந்தால் பகவான் கார்ப்பரேட் முதலாளிகளின் பாரம் அதிகமாகும்போது அவதாரம் எடுத்து உங்களைக் காப்பாற்றுவார்.

இந்த அறம் போதுமா, இன்னும் கொஞ்சம் வேண்டுமா?

திருக்குறள் உட்பட எல்லா நூல்களும் கூறும் அறங்கள் யாவும் கார்ப்பரேட் அறத்துக்கு உட்பட்டவையே. திருடாதே, பொய்சொல்லாதே, விபசாரம் செய்யாதே, புறங்கூறாதே போன்ற எல்லாவற்றிற்கும் ஒரு காலத்தில் இருந்த அர்த்தம் வேறு. இன்று அர்த்தம் வேறு (அல்லது அர்த்தம் இல்லை). பெரிய கார்ப்பரேட் கம்பெனிகளே கொள்ளையடிக்கும்போது அவற்றில் வேலை செய்யும் தொழிலாளியான உங்களுக்கு அதில் பங்கு இல்லையா என்ன? திருடாதே என்று சொன்னால் எப்படி? கூடியவரை பொய்கூறி இலாபத்தை அள்ளுவதே இன்று திறமை. நீங்கள் பணிபுரிகின்ற நிறுவனத்திற்குத் தக பொய் சொல்லியே ஆக வேண்டும் என்பது தொழில் தர்மம்.

கள்ளப்பணம், விபசாரம் என்ற இரண்டின் அடிப்படையில்தான் சினிமாத் தொழிலும், பெருமளவு தொலைக்காட்சி போன்ற ஊடகத் தொழில்களும் நடக்கின்றன. புறம் கூறுதல் இல்லையேல் கல்வி உள்பட எந்த வணிகமுமே இன்று இல்லை. “சரி சார், என்ன செய்வது இந்த நிலையில்” என்கிறீர்களா? எனக்குமட்டும் என்ன தெரியும்?
தீர்வு என்ன?

இந்தக் கார்ப்பரேட் அறம் பிடிக்காதவர்கள்/பிடிபடாதவர்கள் நம் நாட்டில் நிறையப் பேர் இருக்கிறார்கள். அவர்களுக்காக இந்த தீர்வுப்பகுதி.

Siragu corporate7

உழைப்பாளர்கள், தொழிலாளர்கள் ஒன்றுதிரண்டு போராடினால்தான் முதலாளித்துவத்தை எதிர்க்க முடியும், இந்த நிலைமை சீராகும் என்பார்கள் மார்க்சியவாதிகள். கொள்கைரீதியாக இது சரிதான். நடைமுறை என்று வரும்போது எல்லாமே பிரச்சினைதான். முதலில் யார் உழைப்பாளிகள் என்பதே பிரச்சினை. உலக முழுவதும் ஐடி தொழிலாளர்கள் உள்பட இருக்கும் உழைப்பாளர்கள் ஒன்று சேர்வார்களா என்பது தெரியாது. ஐடி தொழிலாளர் போன்றோர் தங்களை உழைப்பாளர்களாகக் கருதுவதில்லை. இவர்கள் வெள்ளைக் காலர்கள். இன்னும் நீலக் காலர்கள், காக்கிக் காலர்கள் என்றெல்லாம் பாகுபாடு இருக்கிறது. தொழிற்சங்கங்கள் பணக்கார நாடுகளில் வசதிகளைப் பெற்றுத் தந்தபின் உழைப்பாளர்கள் போராட்ட குணத்தை இழந்து விட்டார்கள் என்கிறார்கள் சமூகவியலார்.

நாம் செய்யக்கூடியதெல்லாம் “இப்படித்தானப்பா இருக்கிறது நமது நிலைமை” என்று நமது இளைஞர்களுக்குச் சொல்லித்தருவதுதான். (விழிப்புணர்வு அளித்தல்). ஆனால் அவர்களும் தங்கள் சினிமா மோகத்திலிருந்து விடுபடுவார்களா என்பது நமக்குத் தெரியாது. ஒருவேளை ரஜினி வந்து முதலமைச்சராகி நம்மை எல்லாச் சிக்கல்களிலிருந்தும் காப்பாற்றிவிடுவார் என்பது அவர்கள் எண்ணமாக இருக்கலாம்.

“அட்-ஹாக்” (ad hoc) போராட்டங்கள்

Siragu tasmac

ஒருசில நன்னிமித்தங்களும் தென்படவே செய்கின்றன. மெரீனா போராட்டம், நெடுவாசல் ஹைட்ரோகார்பன் எதிர்ப்புப் போராட்டம், விவசாயிகள் போராட்டம் எனத் தொடர்ச்சியாக இப்போது நிகழ்கின்றன. மெரீனா இளைஞர் போராட்டம் உலகத்தையே பிரமிக்க வைத்தது, உலகத்துக்கு ஒரு முன்னுதாரணமாகவும் அமைந்தது. வேறுவழியின்றி எட்டாம் நாள் அதை அடித்துக் கலைத்தது அரசாங்கம். இவை போன்றவற்றை அட்-ஹாக் போராட்டங்கள் எனலாம்.

டாஸ்மாக்குக்கு எதிராக முன்பெல்லாம் பெண்கள் களமிறங்கி இவ்வளவு தீவிரமாகப் போராடியதே கிடையாது. அவர்கள் மனம் வைத்தால் இன்னும் நாலைந்து மாதங்களில் தமிழகம் முழுவதும் உள்ள டாஸ்மாக் கடைகளை உடைத்து நொறுக்கிக் கொளுத்திவிடுவார்கள் போல் தோன்றுகிறது. சுமார் மூவாயிரம் கடைகள் இவ்விதம் மூடப்பட்டுள்ளன என்பது எவ்வளவு பெரிய சாதனை?

தில்லியில் விவசாயிகள் போராடியபோது திடீரெனச் சில இளைஞர்கள் அண்ணாசாலைப் பாலத்தைப் பூட்டுப்போட்டு வழியடைத்து விட்டார்கள்.

Siragu-farmers

இனிமேல் இத்தகைய போராட்ட வடிவங்கள்-சிறுசிறு எதிர்பாராத போராட்டங்கள்-இதுதான் செல்லுபடியாகும், அவ்வப்போது இளைஞர்கள் திரண்டு அந்தந்தப் பிரச்சினைகளுக்குத் தீர்வுகாணும் அட்-ஹாக் போராட்ட முறைதான் இனிமேல் பயன்தரும் என்று பின்னமைப்பியக் கொள்கைகளும் சொல் கின்றன. (சான்றாக டெல்யூஷ் காட்டரியின் கொள்கைகளைக் காண்க). பழையவகைப் போராட்டங்கள் மரவகையைச் சேர்ந்தவை. அவை வேர் பிடித்து வளர்ந்து பெரிதாகிப் பலன்தர பல ஆண்டுகளாகும். டெல்யூஷின் கொள்கைப்படி, கிழங்குத்தண்டுதான் போராட்டத்தின் சரியான குறியீடு. அது அதிக வேர்பிடிப்பதில்லை. பக்கவாட்டில் வளரும். உடனே பலன் தரும். மிகச் சிறிய வடிவம்.
மெரீனா, அண்ணாசாலை போராட்டங்கள் இத்தகைய வடிவங்களாகவே தோன்றுகின்றன.

இந்த  வடிவத்தில் குறைகள் பல உள்ளன. சரியான கொள்கை வழிகாட்டல், சரியான தலைமை இல்லை என்பது பெருங்குறை. இவையெல்லாம் போகப்போகச் சரியாகிவிடும் என்றாலும் சரியான வழிகாட்டல் தேவை. ஜல்லிக்கட்டுக்காகத் திரண்ட இளைஞர்கள் விவசாயிகளுக்காக, நெடுவாசலுக்காக, இவை போன்ற பிறவற்றிற்காக ஏன் திரளவில்லை என்ற கேள்விக்கு விடை தெரியவில்லை.

இப்போராட்டங்களுக்கு பத்திரிகைகள், தொலைக்காட்சி ஊடகங்களின் ஆதரவு குறைவு. உண்மையில் சமூக வலைத்தளங்களே (யூ ட்யூப், முகநூல், வாட்ஸப் போன்றவை) மிகப்பெரிய உந்துதல்களாக அமைந்தன. இவற்றைப் பாதுகாப்பது நமது கடமை. மேலும் உலகமுழுவதுமுள்ள தமிழர் அமைப்புகள் இவை பற்றிய செய்தியை நன்கு கொண்டு சென்றன.

இம்மாதிரி இளைஞர்களின் போராட்டங்களும், பெண்களின் போராட்டங்களும் தான் இன்று நமக்கு ஆறுதல் அளிப்பவையாக உள்ளன. இன்னும் தீவிரமாக, ஒவ்வொரு “கார்ப்பரேட் அறச்செயல்” நடக்கும் போதும் இத்தகைய போராட்டங்கள் எழுச்சி பெற்றால்போதும், இந்தியா பெருமளவு மாறும் என்ற நம்பிக்கை பிறக்கிறது.


பேராசிரியர். க.பூரணச்சந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “இன்றைய உலக அறம்”

அதிகம் படித்தது