இரயில் சிநேகிதம்
பிரத்யுக்ஷா பிரஜோத்Oct 28, 2016
பயணம் திட்டமிட்டதாயிருந்தாலும் சரி, எதிர்பாராததாயிருந்தாலும் சரி நமக்குள் மூழ்கி யோசிக்கும் வாய்ப்பைத் தரும். தனியே செல்லும்போது இதற்கான கால அவகாசம் அதிகம். உடன் பயணிக்கும் உறவினர்கள் / நண்பர்களுடன் உரையாடினாலும் அமைதியாகச் சிந்திக்கும் சந்தர்ப்பத்தை நாமே உருவாக்கிக் கொள்கிறோம்.
நாம் நெருக்கமானவர்களுடனும் அறிமுகமானவர்களுடனும் மட்டும் பயணம் செய்வதில்லை. முன் பின் அறிமுகமில்லா முகங்கள் பலவற்றைக் கடந்து வருகிறோம். இரயில் சிநேகிதம் என்று பொதுவில்குறிப்பிட்டாலும் பயணங்கள் ஏற்படுத்தும் நட்பையே இங்கே குறிப்பிடுகிறேன்.
புகை ஊதி கரி படிந்தப் பெட்டிகளில் பயணம் செய்ததைக் குறித்து பாட்டி சொல்லும் கதைகள் மிக சுவாரசியமானவை. பயணத்திற்கென்று தனி உடை, பழைய உடை. புதிய ஆடை கரியினால் வீணாகி விடுமாம்.
அருகில் அமர்பவர்களிடம் இயல்பாகப் பேசி சுலபமாய் நட்பாகி, சிலர் பயணம் முடிந்த பின்னும் கடிதங்கள் மூலம் தொடர்பில் இருப்பதும் உண்டு.
நட்பு மட்டுமல்லாது ஒருபடி மேலே போய் ரயில் பயணங்களின்போது திருமணங்கள் கூட நிச்சயிக்கப்பட்டன.
பிறரைப் பார்க்க வைத்து சாப்பிடுவது அநாகரிகமாகக் கருதப்பட்டது. சங்கடத்தைக் கொடுத்தது. உணவு பகிர்ந்தளிக்கப்பட்டது.
விருப்பமில்லாவிடினும் தெரியாத இடத்திற்குச் செல்லும்போது வழி விசாரிக்கவேண்டி பேசிப் பழக நேரிடும்.
பேசவே யோசிக்கும் காலத்தில் நாம் இருக்கிறோம். அடுத்தவர் கொடுக்கும் உணவை அறவே தொடமாட்டோம். சிரித்து ஓடியாடி விளையாடும் பிள்ளைகள் தொல்லைகளாகத் தெரிகிறார்கள். அடுத்து வரும் தலைமுறைகள் தெரியாதவர்களிடம் பேசுவதையே விரும்பாமல் போகலாம்.
இதன் ஒரு பக்கத்தை மட்டும் பார்த்தால் மனிதாபிமானம் குறைந்துவிட்டதாகப்படும். மனிதர்கள் மாறுவதற்கு அவர்கள் வாழும் சமுதாயக் கட்டமைப்புகளும் காரணம்.
பயணிகளிடமிருந்து பொருள், நகை, பணம் திருட்டுப் போவது ஆதி காலம் தொட்டே நடந்து வருகிறது. உணவுப் பொருட்களில் மயக்க மருந்து கலந்து கொடுத்த நிகழ்வுகள் அதிகரித்தன. முன்பு வாய் வார்த்தையாகப் பரவியதால் பலர் அறியும் வாய்ப்பு குறைவு. தற்போதுள்ள பத்திரிக்கைகள் மற்றும் ஊடகங்கள் வாயிலாக உடனுக்குடன் நாம் அறிந்து கொள்ளும் செய்திகள் அச்சத்தைக் கொடுக்கின்றன.
அருகில் அமர்ந்து தானே முன் வந்து அறிமுகம் செய்து கொண்டு நன்கு பேசிப் பழகி ஒருவரைக் குறித்து அனைத்தையும் கேட்டறிந்து கொள்ளும் சிலர் அவர் சொல்லும் தகவல்களை வைத்து மோசடி செய்யும் சம்பவங்கள் பல.
சிலர் சகப் பயணியிடம் பேச்சுக் கொடுத்து விபரமறிந்து அவரால் தன் காரியம் நிறைவேறும் பொருட்டு விடாமல் தொல்லை தரும்போது அவரிடம் பேசுவதைத் தவிர்க்கத் தோன்றுகிறது. அதுவே இனி யாரிடமும் பேசக்கூடாது என்று எண்ண வைக்கிறது.
பெண்கள் பொது வெளியில் தெரியாத ஒருவருடன் பேசுவது குறிப்பாக ஆண்களிடம் பேசுவது, அவர்களைக் குறித்த தவறான கருத்தை உருவாக்குகிறது. அவர்கள் பேசும் நோக்கமோ, விதமோ சிலருக்கு முக்கியமாகப்படுவதில்லை. தேவையற்ற விமர்சனங்களைத் தவிர்ப்பதற்காகப் பெண்கள் பெண்களிடம் பேசுவதையே கூட விரும்புவதில்லை.
முன் பின் அறிமுகமில்லாதவரிடம் பேசுவதும் அவர்களிடத்து நட்புப் பாராட்டுவதும் எல்லோராலும் முடியாத காரியம். அப்படிப்பட்ட நட்பு சமூகத்தில் நிகழும், நாம் கேள்வியுறும் வன்கொடுமைகள் மனதில் விதைக்கும் பாதுகாப்பற்ற உணர்வால் குறைந்து வருகிறது. காலப்போக்கில் மறைந்தும் போகலாம்.
பிரத்யுக்ஷா பிரஜோத்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இரயில் சிநேகிதம்”