இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் அவர்களின் நேர்காணல்
தியாகராஜன்Aug 8, 2015
வணக்கம், இன்று நாம் நேர்காணல் எடுக்கவிருப்பது இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் மேன்மைதங்கிய மாண்புமிகு திரு.விக்னேஷ்வரன் ஐயா அவர்கள்.
கேள்வி: இலங்கையிலே போருக்குப் பின்னால் இலங்கை மக்கள் முள்வேலியில் அடைபட்டு இருக்கிறார்கள் மற்றும் இலங்கை இராணுவம் நம்முடைய வீதிகளில் உலா வந்துகொண்டிருக்கிறது. ஆனால் இலங்கை அரசாங்கமோ நேர்மாறாக கருத்துக்களை தெரிவித்துக் கொண்டிருக்கிறது, மக்கள் சுதந்திரமாக நடமாடுகிறார்கள் என்று. நீங்கள் அங்கிருந்து வருகிறீர்கள் உண்மையான நிலவரம் என்ன என்பதை விளக்கிக் கூறுங்கள்?
பதில்: வடமாகாண மக்களுக்கு, இயல்பு வாழ்க்கைக்கு இடமளிக்கப்பட்டுள்ளது என்பதுதான் உண்மை. ஆனால் ஒரு இலட்சத்து ஐம்பதாயிரம் இராணுவ வீரர்கள் முகாம்களில் தங்கவைக்கப்பட்டு உள்ளார்கள். இரு சக்கர வண்டிகளிலே அதிகாலையிலும் மாலையிலும் ஏழு ஏழு பேர்கள் வீதி வலம் வருவார்கள். அதாவது தகவல் சேர்ப்பதற்காக அது நடக்கின்றது, என்று நாங்கள் நம்புகின்றோம். இராணுவத்தைக் குறைத்துள்ளதாக தமிழர்கள் கூறுவதும், நாங்கள் ஒரு போர் வீரரைக் கூட திருப்பி அழைக்கவில்லை என்று சிங்கள மக்கள் கூறுவதும், அரசாங்கத்தின் தேர்தலுக்கு முன்னதான தேவாரமாக மாறிவிட்டது. குறைக்கவில்லை என்பதுதான் உண்மை. சில முகாம்களை மூடிவிட்டு படைவீரர்களை பெரிய முகாம்களினுள் முன்னேற்றியுள்ளதுதான் உண்மையென்று எங்களுக்குத் தெரியவருகிறது. ஆகவே ராணுவத்தைக் குறைத்து தெற்குக்கு அனுப்பியதாகத் தெரியவில்லை. எப்போதாவது மக்கள் காணாமல் போவது நடைபெற்றுக்கொண்டுதான் இருக்கிறது. நேரடியாக இராணுவத்தினருடன் இவற்றை சம்பந்தப்படுத்தக்கூடியவாறு ஆதாரங்கள் எதுவும் இல்லை. சில தந்திரோபாய தளங்களில் மட்டும் போர்வீரர்கள் சிலரை தங்கவைத்து பின் இராணுவத்தை முட்டுமுழுதுமாக திரும்ப அழைத்தால்தான் வடகிழக்கு மாகாண மக்கள் உண்மையான இயல்பு வாழ்க்கைக்குத் திரும்பலாம் என்பது என்னுடைய கருத்து.
கேள்வி: போருக்குப் பின்னர் ஈழத்திலே ஈழ மக்களில் ஒரு சாரார் அடிப்படை உரிமைகளையும், அரசியல் உரிமைகளையும் மீட்டுத் தரவேண்டும் என்று குரல் எழுப்புகிறார்கள். நம்முடைய வாழ்க்கைத் தரத்தை மேம்படுத்த நாம் முயற்சிகளில் ஈடுபடவேண்டும் என்று ஒரு தரப்பு கூறுகிறது. இதில் உங்களுடைய கருத்து என்ன?, அங்கே என்ன நடக்கிறது?, மக்கள் எவ்வாறான செயல்களில் ஈடுபட்டுக் கொண்டிருக்கிறார்கள்? நீங்கள் அதை எவ்வாறு பார்க்கிறீர்கள்?
பதில்: அரசாங்கத்துடன் கூட்டு சேர்ந்தவர்கள்தான் அரசியல் போராட்டத்தைக் கைவிடுவோம், அரசிடம் கைநீட்டிப் பெற்று அன்றாட வாழ்வாதாரங்களை அபிவிருத்தி செய்வோம் என்றெல்லாம் கூறிவருகிறார்கள். அதாவது அரசாங்கம் சொல்லி அதை அவர்கள் செய்கின்றார்கள். உடனடித் தேவைகள் என்று பல இருக்கின்றன. போரினால் பாதிக்கப்பட்டவர்களுக்கு வாழ்வாதார உதவிகள் தேவை. ஆனால் விவசாயம், மீன்பிடி, வியாபாரம், சுற்றுலா என்று பலவற்றில் இராணுவம் ஈடுபட்டு வருகின்றது. அவற்றை கைவிட்டால்தான் மக்கள் தமது இயல்பு வாழ்க்கைக்குத் திரும்ப முடியும். காணிகளை சுவீகரித்துள்ளார்கள் இராணுவத்தினர். அவற்றைத் திரும்பப் பெற்று, அகதிகளாக வாழ்க்கை வாழும் அவற்றின் சொந்தக்காரர்களுக்கு அதிசீக்கிரத்தில் அவற்றை கையளிக்க வேண்டும். வேலையில்லா திண்டாட்டம் பட்டம் பெற்றவர்களையும், பெறாதவர்களையும் வருத்தி வருகின்றது. அதற்கான ஏற்பாடுகள் செய்யப்பட வேண்டும். இவ்வாறு கல்வி, கலாச்சாரம், சுகாதாரம், விவசாயம், சுற்றுச்சூழல், மீன்பிடி, கைத்தொழில்கள், வீதிகள் அமைத்தல் என பல துறைகளில் குறைகளை நிவர்த்தி செய்ய வேண்டியிருக்கிறது.
என்னைக் கேட்டீர்களானால் இவையாவற்றுக்கும் போரில் வெற்றி பெற்ற இராணுவம் தொடர்ந்து ஆறு வருடங்களுக்கு மேலாக வடகிழக்கு முகாம்களில் இருப்பதுதான் இதற்கு மூலகாரணம் என்று நினைக்கின்றேன். அதாவது இந்தப் பிரச்சனைகளைத் தீர்க்க முடியாமைக்குக் காரணமே அதுதான். மக்கள் இராணுவத்தை வெளியேற்றவும், இயல்பு வாழ்க்கையைத் திரும்ப வரவேற்கவுமே கங்கணம் கட்டிக்கொண்டிருக்கிறார்கள். இளைஞர்களின் துடிப்பைத் துண்டித்து விடுவதற்காக, போதைப்பொருட்களை யாரோ திட்டமிட்டு மாணவர் சமுதாயத்தின் மத்தியில் வலம் வர வழியமைத்துக் கொடுத்திருந்தார்கள். அது மிகவும் சிக்கலான ஒரு விடயம். இவ்வாறான சிக்கல்களிலிருந்து மக்களைக் காப்பாற்றவே எங்களுடைய மக்கள் முக்கியத்துவம் கொடுத்து வருகிறார்களே ஒழிய, அபிவிருத்தி என்று கூறிக்கொண்டு வேறெதிலுமே தங்களுக்கு நாட்டமும் இல்லை என்று கூறுவதை ஏற்க முடியாது.
கேள்வி: இலங்கையிலே போருக்குப் பின்னால் நீங்கள் முதல்வரான பிறகு மக்களிடையே பெரும் எதிர்பார்ப்பு இருந்தது. நீங்கள் முதல்வர் வேட்பாளராக அறிவிக்கப்படும் பொழுது பல்வேறு திட்டங்களை அறிவித்துள்ளீர்கள். போர் முடிந்து நீங்கள் முதல்வரான பிறகு அந்தத் திட்டங்கள் எவ்வாறு நிறைவேற்றப்;படுகின்றன. இலங்கை அரசாங்கம் அதற்கு முட்டுக்கட்டையாக உள்ளதா அல்லது ஆதரவாக உள்ளதா என்பதைத் தெரிவிக்கவும்?
பதில்: பதிமூன்றாவது திருத்தச் சட்டம் தேவையான உரிமைகளை, அதிகாரங்களை எங்களுக்கு வழங்கவில்லை என்று தெரிந்துகொண்டுதான் நான் பதவியேற்றேன். முந்தைய அரசாங்கம் அதற்கு குறைந்த அதிகாரங்களை அளித்து மேலதிகமாக பலவித சிக்கல்களையும், தடங்கலையும், தாமதங்களையும் அளித்து என்னை செயல்படமுடியாதவாறு செய்ய தலைப்பட்டார்கள். தற்போதைய அரசாங்கம் அவ்வாறான சிக்கல்களை நீக்கியுள்ளது. ஆனால் அடிப்படையில் மாகாணம் தனித்து இயங்குவதை மத்தி மறுத்து வருகிறது. திட்டங்களை செயல்படுத்த நிதி வேண்டும், மிகச் சொற்ப நிதிதான் எங்களுக்கு அளிக்கப்படுகிறது. வெளியிலிருந்து வரும் பணம் நேரடியாக கிடைக்க வழிமுறைகள் இன்று வரையில் இன்னும் செய்துதரப்படவில்லை. உத்தியோகப்பூர்வ வடமாகாண முதலமைச்சர் நிதியம் ஒன்றினை நிறுவ தனக்கு ஆட்சேபணை இல்லை என்று அண்மையில் ஜனாதிபதி எனக்குக் கூறியிருந்தார். அதனை செயல்படுத்த நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு வருகின்றன. நிதியம் நிலைபெற்றால் நிரந்தர திட்டங்களுக்கு அடிகோலாய் அமையும். இதுவரையில் நினைத்தது நடைபெறத் தேவையான சூழல் அமையவில்லை என்பதுதான் உண்மை என்று கூற முடியும். மாற்றங்களை ஏற்படுத்தலாம் என்பது எனது எதிர்பார்ப்பு. அதாவது இங்கே புதிய சூழலிலே மாற்றங்கள் ஏற்படுத்தலாம் என்பது என்னுடைய எதிர்பார்ப்பு ஆனால் பாராளுமன்றத் தேர்தல் நடந்து முடிந்தால்தான் அதற்கான சந்தர்ப்பம் நமக்குக் கிடைக்கக்கூடும்.
கேள்வி: இந்திய அரசியல் தலைவர்கள் குறிப்பாக தமிழக அரசியல் தலைவர்கள் அனைவரும் இன்று பல்வேறு விதமான பேச்சுக்களை வைக்கிறார்கள். என்னுடைய முயற்சியால்தான் இது நடந்தது ஈழத்திலே, என்னுடைய முயற்சியால்தான் பல வெற்றிகள் நடந்தது போன்றதொரு கற்பனையான பிரச்சாரங்களை செய்து வருகிறார்கள். உண்மையில் இவர்களுடைய செயல்கள் ஆக்கப்பூர்வ செயல்களை ஊக்குவிக்கின்றனவா என்பதைக் கூறவும்?
பதில்: இது ஒரு சிக்கலான கேள்வி. மரத்திலிருந்து பழம் விழுவதற்கு அதன் பக்குவம் காரணமாக இருக்கலாம் அல்லது காகம் வந்து உட்கார்ந்ததாலே ஏற்பட்டிருக்கலாம். உண்மையைக் கண்டறிய ஆராய்ச்சிதான் மேற்கொள்ளப்பட வேண்டும். அதாவது இங்கே நடப்பதற்கு அங்கே நடப்பதுதான் காரணமா? இல்லையா? என்பதைக் கண்டறிய ஆராய்ச்சிதான் செய்ய வேண்டும். எமது உறவுகளின் உதவிகள் உள்ளுரில் நமக்குக் கிடைக்கவேண்டுமானால் எமது தேவைகள் என்னவென்று கண்டறியப்பட வேண்டும், அதுதான் முக்கியமானது. அதற்கு எம்மிடையே புரிந்துணர்வு ஏற்பட வேண்டும். நான் தமிழ்நாட்டின் முதலமைச்சராக இருந்திருந்தால் அதைத்தான் நான் செய்திருப்பேன். அதாவது எங்களுக்குத் தேவை என்ன என்பதைப் பார்த்து, அதன் சம்பந்தமாகப் பேசி என்னுடையத் தேவைகளைத் தெரிந்தெடுத்துக் கொடுப்பதற்கு உதவிகள் செய்திருக்கலாம் என்பது என் கருத்து.
கேள்வி: இப்போது உலகமயமாக்கல் பரவலாகப் பேசப்படக்கூடிய பேச்சு. அதிலும் குறிப்பாக மலிவு உற்பத்தி, அதாவது பொருட்களை மலிவு விலை கொடுத்து குறிப்பாக, சைனா போன்ற நாடுகளிலெல்லாம் மலிவு விலை உற்பத்தி அதிகமாக செய்யப்படுகிறது. உலகமயமாக்கல் இப்போது இந்தியாவையும் வந்து ஆட்டிப்படைக்கிறது. அதனால் சில பேர் பாதகம் இருக்கிறது, சாதகம் இருக்கிறது என்கின்றனர். இது இலங்கையிலே போருக்குப் பின்னால் நடக்கக்கூடிய நிகழ்வுகளைப் பார்த்து உலகமயமாக்கல் எந்த அளவிற்கு சாத்தியம் என்பதைக்கூறவும், மக்களின் கல்வித் தரமும் எவ்வாறு உயரவேண்டும் என்று நினைக்கிறீர்கள்?
பதில்: உலகமயமாக்கலின் வாய்ப்புக்களைப் பெற எங்களால் எந்த நடவடிக்கையையும் தனித்துவமாக செய்யமுடியாது. மத்தியுடன் கலந்து ஆலோசித்துத்தான் நடவடிக்கை எடுக்க வேண்டும். இது வரைகாலம் சீரான சூழல் இருக்கவில்லை ஆனால் சீரான சூழல் சென்ற சனவரி மாதம் 8ந்தேதிக்குப் பின் கிடைத்திருப்பதாகத்தான் நாங்கள் நம்புகின்றோம். ஆனால் அதே நேரத்தில் பாராளுமன்றத் தேர்தலை எதிர்நோக்கியிருக்கும் நிலையிலே, தற்போது சகலமும் தாமதமடைந்துதான் நிற்கிறது. பாரதத்தில் கிடைக்கும் கல்வி வாய்ப்புக்களை தவறாது ஏற்றுக் கொள்ள பல விதத்திலும் முயற்சித்து வருகிறோம். பலருடனும் இதுபற்றி பேசிக்கொண்டு வருகின்றோம். எங்கெங்கு எந்தெந்த சர்வகலா சாலைகள் அல்லது பல்கலைக்கழகங்களுக்கு எங்களுடைய மாணவர்கள் சென்று அவர்களுக்கு உரியவாறு கல்வி பெற எண்ணியிருந்தார்களோ, அது சம்பந்தமாகப் பேசி அவர்களுக்கு வாய்ப்பளிக்க நடவடிக்கை எடுத்து வருகிறோம்.
கேள்வி: இப்பொழுது மீனவர் பிரச்சனை என்பது தமிழகத்தில் மிகப்பெரிய பூதாகரமான விடயமாகப் பார்க்கப்படுகிறது. இதுவரை சுமாராக 600க்கும் மேற்பட்ட மீனவர்கள் இலங்கை இராணுவத்தால் சுட்டுக்கொல்லப்பட்டிருக்கிறார்கள். இப்பொழுது இந்திய மீனவர்கள் குறிப்பாக தமிழக மீனவர்கள் இலங்கைக்கு வந்து மீன் பிடித்து செல்வது, இலங்கை ஈழத்தமிழர்கள் பாதிப்பை உருவாக்குகிறதா? அல்லது அதை எவ்வாறு பார்க்கிறீர்கள் ஐயா.
பதில்: ஆழ் இழுவைப் படகுகளை பாவிப்பதால் தான் கடலினுடைய வளங்களை அவர்கள் சூறையாட இடமளிக்கின்றோம். அவ்வாறான செயல்களால் பாரதத்தின் கரையோரக் கடல் வளங்கள் எல்லாம் ஏற்கனவே காணாமல் போய்விட்டன. அவற்றை அழித்துவிட்டார்கள். ஆழ் இழுவைப் படகுகள் இப்போது எங்கள் பக்கத்தில் இது நடைபெற்று வருகின்றன. இதற்கான தீர்வு இழுவைப் படகுகளின் பிரசன்னம் இருநாடுகளுக்கு மத்தியிலும் இல்லாமல் செய்ய சட்டம், இரு நாடுகளாலேயும் உருவாக்கப்பட வேண்டும். அதாவது இந்த படகுகள் (Trawlers), இந்தத் பாக் நீரணையில் பாதிக்காமல் இருப்பதற்கு சட்டம் தடுக்க வேண்டும். பிறகு இப்பொழுது இருக்கிற அந்த இழுவைப் படகுகளுக்கு மாற்றம் செய்து அவற்றை அந்த ஆழ இழுவைப் படகுகளை வங்காள விரிகுடாவிற்கும், அரேபிய கடலுக்கும் சென்று மீன் பிடிக்க அனுசரணைகள் வழங்க வேண்டும்.
அதாவது இதுவரைகாலம் செய்து வந்தவர்கள் உண்மையான ஆழ்கடல் இருக்கின்ற வங்காள விரிகுடா, அரபிக் கடல் இந்த இடங்களிலே போய் அவர்கள் அதை செய்யலாம். இருநாட்டுக்கும் இடையே இருக்கும் பாக் நீரணையிலும் கரையோரப் பகுதிகளிலும் பாரம்பரிய மீன்பிடித் துறையை அனுமதிக்கலாம். அதாவது காலாதிகாலமாக எத்தனையோ நூற்றாண்டுகாலமாக தங்களுடைய மீன்பிடித் தொழிலை செய்துவருகிறார்கள். இழுவைப் படகுகள் வெறும் மீனவர்களுக்குச் சொந்தமானது அல்ல. அவை மிகவும் வெகுமதி வாய்ந்தவை. அவற்றை நடத்துபவர்கள் வேறு, அவர்களுக்காக மீனவர்கள் அங்கிருந்து வேலைகளைச் செய்கின்றார்கள். ஆகவே நாங்கள் என்ன செய்கிறோம் என்றால், பாக் நீரணையில் அப்பேற்பட்ட இழுவைப் படகுகள் மீன்பிடித் தொழிலில் ஈடுபடுவதை நாங்கள் தடை செய்கிறோம், இருநாட்டு அரசாங்கமும் தடை செய்கிறது. இருநாட்டு கடல் மேற்பார்வையில் விஞ்ஞான ரீதியாக இருநாட்டு குடியியல் அதிகாரிகள் கவனித்துக் கொள்ள வேண்டும். இதில் கடற்படையினர் தடைபோடக்கூடாது. குடியியல் அதிகாரிகள்தான் அந்தப் பணியினை செய்யவேண்டும். சுங்கத்துறை போல ஒரு துறை செயல்படலாம். கடற்படை அதில் தலையிடக்கூடாது.
கேள்வி: வெளிநாடுகளில் உள்ள தமிழர்கள் குறிப்பாகத் தாயகத் தமிழர்கள், ஈழத்தமிழர்கள், உலகெங்கிலும் இருக்கக்கூடிய மலேசியத் தமிழர்கள் அனைவரும் எந்த விதத்தில் எந்த மாதிரியான உதவிகளை ஈழத் தமிழர்களுக்கு செய்ய வேண்டும் என்று நீங்கள் நினைக்கிறீர்கள்?
பதில்:எங்களுக்கும் பலவிதமான உதவிகள் தேவைப்படுகின்றன. உதாரணமாக வாழ்வாதாரம். அதாவது படித்த இளைஞர்களைப் பார்த்தீர்களானால் அவர்கள் பட்டம் பெற்றுவிட்டு ஐந்தாறு வருடங்கள் வேலை இல்லாமல் இருக்கிறார்கள். சிலர் கல்லூரி வாழ்க்கையை முடித்துக் கொண்டு உயர்தர கல்விக்கு மேல் அவர்கள் வெளியில் வந்து எந்த விதமான வேலையும் இல்லாமல் இருக்கிறார்கள். ஆகவே அவர்களுக்கு தொழில் கல்வியை ஏற்படுத்திக் கொடுத்தால் நல்லது. எந்த விதத்திலேயாவது, அவர்கள் ஏதாவது ஒரு தொழில் வாய்ப்பைப் பெற்றுக் கொள்வதற்கு, ஏதுவாக அவர்களுக்கு பலவிதத்திலும் கல்வி ரீதியாக நீங்கள் நடவடிக்கை எடுக்கலாம். இரண்டாவது கைத்தொழில்கள் சம்பந்தமாக எங்களுடைய மக்களுக்கு போதுமான அறிவு இல்லை, தகைமை இல்லை, தேர்ச்சி இல்லை, திறன் இல்லை. இது சம்பந்தமாக நீங்கள் நடவடிக்கைகள் எடுத்து அவர்களுக்கு போதிய தேர்ச்சிகளை அதாவது அவர்களுக்கு சொல்லிக் கொடுப்பவர்களை ஆசிரியர்களை அழைத்து, அவர்களுக்கு பயிற்சி அளித்து அவர்கள் இங்கு வந்து இங்கே இவர்களுக்கு சொல்லிக்கொடுத்து இவர்களுடைய அந்த ஆற்றலை விருத்தி செய்வதற்கும் நடவடிக்கை எடுக்கலாம். இதே போன்று பலவிதமான படிப்புகள், புலமைப் பரிசுகள் கொடுத்து மேற்படிப்பு செய்வதற்கு அவர்களை ஊக்குவிக்கலாம். இவ்வாறு எங்களுடைய மாணவர் சமுதாயம் முக்கியமாக வெளிநாடுகளிலிருந்து பல உதவிகளைப் பெறவேண்டிய ஒரு அவசியத்தில் இருக்கிறது.
எங்களது அலுவலர்கள் கூட பல தேர்ச்சிகளைப் பெறவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறார்கள். காரணம் என்னவென்றால் முப்பது வருடம் போர் இருந்ததன் காரணத்தினாலே, எங்களுடைய அலுவலர்கள், உத்தியோகத்தர்கள் யாராவது பதவியில் உள்ளவர்கள் அல்லது வன்முறையாளர்கள் அவர்களுக்குச் சொல்வதை மட்டும் கிளிப்பிள்ளைப்போன்று செய்து கொண்டிருக்கிறார்களே ஒழிய தாங்களாகவே நினைத்து, சிந்தித்து நடவடிக்கைகள் எடுக்கக்கூடிய அளவிற்கு அனுபவம் பெறவில்லை. ஆகவே அவர்களுக்கு உரியவாறு அனுபவம் பெற நடவடிக்கைகள் எடுக்கலாம். இவ்வாறு பல ஓரங்களில் இருந்து பார்த்தால் எங்களுக்கு இப்பொழுது மனரீதியாக பாதிக்கப்பட்ட மக்கள் பலபேர் இருக்கின்றார்கள். அவர்களுக்கு psychiatrist இல்லை, Counselors இல்லை. பலருடைய குடும்பங்களிலே ஏதோ விதத்தில் மனோரீதியாக பாதிக்கப்பட்டிருக்கிறார்கள். அதாவது போரினுடைய பாதிப்பு அவர்களுக்கு இன்னமும் இருந்துகொண்டிருக்கிறது. அப்பேற்பட்டவர்களுக்கு அறிவுரை வழங்கக்கூடிய வல்லுநர்களை வேண்டுமென்றால் இந்தியாவிலிருந்து வரவழைக்கலாம். இந்தியாவிலிருந்து வரவழைக்க என்ன அவசியம் என்று நினைக்கிறீர்கள் என்றால் தெற்கிலிருந்து வருபவர்களுக்கு சிங்களம் மட்டும் தெரியும், தமிழ் தெரியாது. தமிழ் தெரிந்தால்தான் அவர்களுக்கு பேசி கதைத்து ஒரு நல்லவிதமான மாற்றத்தை ஏற்படுத்தலாம். இப்படி எத்தனையோ விதங்களிலே எங்களுக்கு நன்மை தரக்கூடியவாறு வெளிநாட்டிலுள்ள சகோதர சமூகம் உரிய நன்மைகளைப் பெற்றுக் கொடுப்பதற்கு வாய்ப்புகள் இருக்கின்றன. நீங்கள் அந்த வாய்ப்புக்களை ஏற்று எங்களுக்குத் தந்தால்தான் நன்று. சிறகு சிறக்க என்னுடைய வாழ்த்துக்கள்.
இதுவரையிலும் எங்களுடைய அனைத்து கேள்விகளுக்கு பொறுமையாகவும் தெளிவாகவும் பதில் அளித்ததற்கு மிக்க நன்றி.
தியாகராஜன்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “இலங்கையின் வடக்கு மாகாண முதல்வர் விக்னேஷ்வரன் அவர்களின் நேர்காணல்”