மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள்

தேமொழி

Aug 18, 2018

Siragu ulagalaaviya1
நூலும் நூலாசிரியரும்:

இந்திய அளவில் உலகளாவிய கடல்வணிகத்தில் முன்னோடிகளாக விளங்கியவர்கள் பண்டைத்தமிழர் என்ற தனது ஆய்வின் முடிவை “The World of the Tamil Merchant: Pioneers of International Trade” என்ற நூலாக வெளியிட்டுள்ளார் இந்திய வரலாற்று ஆய்வாளர்களில் ஒருவரான முனைவர் கனகலதா முகுந்த். குர்சரண் தாஸ் வழங்கிய அணிந்துரையுடன் பெங்குவின் பதிப்பகத்தாரால் இந்த நூல் 2015 ஆம் ஆண்டு வெளியிடப்பட்டது. இந்த நூலுக்குத் தமிழில் “பழந்தமிழ் வணிகர்கள், சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்” எனத் தலைப்பிட்டு, எஸ். கிருஷ்ணன் அவர்களின் மொழிபெயர்ப்பில், டிசம்பர் 2016 இல் கிழக்குப் பதிப்பகம் வெளியிட்டுள்ளது.

இந்த நூலின் ஆசிரியரான முனைவர் கனகலதா முகுந்த் பொருளாதாரத்தில் முனைவர் பட்டம் பெற்றவர். மும்பை, போபால் பல்கலைக்கழகங்களிலும், ஐதராபாத் பொருளாதார – சமூக ஆய்வு மையத்திலும் பணியாற்றியவர். தென்னிந்திய வணிக வரலாறு குறித்தும்,  வரலாற்றில் பெண்களின் உரிமைகள் மற்றும் பணிகள் குறித்தும் ஆய்வு செய்தவர். பழந்தமிழ் வணிகம், கோவில்கள், ஆங்கிலேய வர்த்தகர்களின் துவக்ககாலத் தமிழகம் ஆகியவற்றைக் குறித்தும் மேலும் சில ஆய்வு நூல்களை எழுதியுள்ளார் இவர்.

சங்ககாலம் முதற்கொண்டு சோழப்பேரரசு முடிவுக்கு வரும்வரை இருந்த நீண்ட காலகட்டத்தில் தமிழிலக்கியச் சான்றுகள், தொல்லியல் சான்றுகள், கல்வெட்டுச் சான்றுகள் ஆகியவற்றின் மூலம் தமிழகவணிகர்கள் உலகளாவிய கடல் வணிகத்தில் பங்கேற்றதற்கும், உள்நாட்டு வணிகத்தை வளர்த்தமைக்கும், அவர்களது வணிகக்குழுக்கள் பலவற்றைக் குறித்தும் சான்றுகளுடன் நிறுவியுள்ளார் கனகலதா முகுந்த். தமிழக வணிகக் குழுவினர், குறிப்பாக வளமிக்க செல்வந்தர்களான வணிகர்கள், உற்பத்தியாளர்களுக்கும், நெசவாளர்களுக்கும், ஆங்கிலேயர்களுக்கும் என அவர்களின்  தேவையறிந்து பணம் கடன் வழங்கியும், ஒப்பந்த அடிப்படையில் உதவியும்,  வாணிபத்தின் மூலம் பொருளாதாரம் வளர்வதில் முக்கியப் பங்கு வகித்தவர்கள் என்று தனது ஆய்வுகளின் மூலம் எடுத்துக் காட்டியுள்ளார்.

பண்டைத் தமிழகத்தின்  வணிகம்:

கிழக்கிலும் மேற்கிலும் வங்கக்கடலையும் அரபிக்கடலையும் எல்லைகளாகக் கொண்ட ஒரு நில அமைவிடம், பண்டைத் தமிழகம் கடல்கடந்த வாணிகத்தில் ஈடுபட உதவியிருக்கிறது. கீழ்த்திசையில் சீனா மற்றும் தெற்காசிய நாட்டின் வணிகர்கள் நடுவில் இருந்த இந்தியாவைத் தாண்டி மேற்கில் அதிகம் செல்லவில்லை, அவ்வாறே பண்டையத் தமிழர்கள் ‘யவனர்கள்’ என்று பொதுவாகக் குறிப்பிட்ட மேற்குலக பண்டைய  அராபியர்கள், கிரேக்கர்கள், ரோமர்கள், எகிப்தியர்களும் இந்தியாவைக் கடந்து சென்று  கீழ்த்திசை நாடுகளுடன் கடல்வணிகம் செய்வதில் அதிக அக்கறை செலுத்தவில்லை. மேற்கே அக்காலத்தில் அறியப்பட்டிருந்த மேலைநாடுகளின் மத்திய தரைக்கடல் முதல் கிழக்கே சீனாவின் தென்சீனக் கடலுக்கும் இடைப்பட்ட கடல்வழி வணிகவழியில்,  கிழக்கிலும் மேற்கிலும் என இருதிசையிலும் உள்ள நாடுகளுடன் கடல்வணிகம் செய்வதற்கு வாய்ப்பாக அமைந்தது தமிழகத்தின் இருப்பிட அமைப்பு.

கடல்வணிகத்தில் ஈடுபட்டிருக்கும் நாடுகள் மிகுந்த வெற்றியைப் பெற்றிருக்கும் என்பதற்கும் ஒரு எடுத்துக்காட்டாக அமைந்தது பண்டையத் தமிழகத்தின் நிலை. பருவகாலங்களில் மாறிவரும் காற்றின் திசைக்கேற்ப பயணங்களை மேற்கொள்வதைப் பழந்தமிழர் வழக்கமாகக் கொண்டிருந்தனர். அதனால் எந்தநாட்டு வணிகராக இருந்தாலும் நாடு திரும்ப ஏற்ற காற்றின் திசைக்காக அயல்நாடுகளில் குடியிருப்புகளை அமைத்துக்கொண்டு அங்கு பலகாலம் வாழும் நிலையும் அன்று இருந்தது. தனியே குழுக்களாக வணிகர்கள் தங்கள் குடியிருப்புகளில் வாழ்ந்தாலும் அவர்களால் பண்பாட்டு, சமயத் தாக்கங்களும் ஏற்படுவதும் நிகழ்ந்தது. அயல்நாடுகளில் தங்கள் வழிபாட்டு இடங்களையும் கட்டுவித்துக் கொண்டனர். அயல்நாட்டு அரசுகளும் அதற்கு உதவிகள் செய்துள்ளன.

ஏற்றுமதியில் விலையுர்ந்த கற்களையும், முத்துக்களையும், பட்டாடைகளையும், மஸ்லீன் துணிகளையும், ஆபரணங்களையும், வாசனைப் பொருட்களையும் ஏற்றுமதி செய்த தமிழகம், இறக்குமதியில் விலை குறைந்த பொருட்களை கொள்முதல் செய்ததால் பண்டமாற்று வணிகத்தையும் மீறி வெள்ளி தங்க நாணயங்களைக் கொடுத்து ஈடுகட்ட வேண்டிய நிலைக்கு ரோம் போன்ற நாடுகள் உள்ளாயின. இதனால் அந்த நாட்டு மக்களின் ஆடம்பர வாழ்க்கையும் அரசளவில் கண்டனம் செய்யப்பட்டு தங்கம் அதிக அளவில் தமிழகம் வருவதைக் கட்டுப்படுத்த ரோம் மன்னர் வெஸ்பாசியன் சட்டங்களும் இயற்ற நேரிட்டது. பிளினி (பொ.ஆ. 77) தனது ‘நேச்சுரலிஸ் ஹிஸ்டோரியா(Naturalis Historia/The Natural History)’ நூல் குறிப்பில் இந்தியாவைத் தங்கம் வெள்ளி போன்ற ‘அரிய உலோகங்களின் தொட்டி’ என்று குறிப்பிட்டுள்ளார். வரலாறு முழுவதும் இருந்த இந்தநிலை இங்கிலாந்தில் நிகழ்ந்த தொழிற்புரட்சிக்குப் பிறகே மாறியது.

தமிழக மன்னர்களுக்குள் தொடர்ந்து பல போர்கள் நடைபெற்றாலும் அவர்கள் வணிகர்களின் வணிகத்தைக் கட்டுப்படுத்தும் நிலையை மேற்கொள்ளவில்லை என்பதால் எந்த அரசு தோன்றினாலும் வீழ்ந்தாலும் வர்த்தகம் மட்டும் இடையூறின்றியே தொடர்ந்துள்ளது. இரண்டாம் நரசிம்ம பல்லவன் (பொ. ஆ. 720), ராஜராஜ சோழன்  (பொ. ஆ. 1015) , ராஜேந்திர சோழன்  (பொ. ஆ. 1030), குலோத்துங்க சோழன்  (பொ. ஆ. 1070) போன்ற வேந்தர்களும் சீன அரசவைக்குத் தூதுவர்களை அனுப்பி வணிக உறவை மேம்படுத்த நடவடிக்கையும் எடுத்துள்ளார்கள். இவையணைத்துக்கும் தமிழகத்தில் கிடைக்கும்  தடயங்கள் உதவியுடனும், அயல்நாட்டவர் எழுதியிருக்கும் குறிப்புகளை ஒப்பிட்டுப் பார்க்கும் பொழுது  சங்க இலக்கியங்களில்  புலவர்கள் எழுதிய பாடல்களில் கிடைக்கும் குறிப்புகள் ஏற்றுக் கொள்ளத் தக்கவையாகவே இருப்பதாக கனகலதா முகுந்த் முடிவுக்கு வருகிறார்.

தென்னிந்திய அரசியல், பொருளாதார, சமுதாய வளர்ச்சியில் தமிழக வணிகர்கள் ஆற்றிய பங்களிப்பு நூல் முழுவதும் ஐந்து அத்தியாயங்களில் விரிவாக விளக்கப்படுகிறது.  தமிழக வரலாற்றைத் தமிழகத்தின் ஆட்சியாளர்களின் காலம் என்ற பார்வையில் பார்ப்பதை விடுத்தது வணிகர்கள் கோணத்தில் விவரிக்கிறது இந்தநூல். இது தமிழர்கள் அனைவரும் தாங்கள் அறிந்த தமிழக வரலாற்றை மற்றொரு கோணத்தில் காண உதவுகிறது என்றும் கூறலாம்.

நவீன காலத்துக்கு முந்தைய வணிகர்களும் வணிகமும்: பிரச்சனைகள் மற்றும் உள்விவரங்கள்

பழங்காலத்தில் வணிகர்களும் வர்த்தகமும் எப்படி இருந்தன?

 - பிளினி, பெரிப்ளஸ் ஆஃப் தி எரித்ரேயன் ஸீ, தாலமி, சீனப் பயணியரின் பயணநூல் குறிப்புக்கள், இலங்கையின் மகாவம்சம் நூலின் குறிப்புக்கள் என அயல்நாட்டு எழுத்தாளர்களின் குறிப்புக்களையும்;
- நீலகண்ட சாஸ்திரி, ராகவ ஐயங்கார், கனகசபை ஆகியோரின் வரலாற்று நூல்கள்;  மகாதேவனின் தொல்லியல் நூல்;
- பத்துப்பாட்டு எட்டுத்தொகை நூல்களில் இருந்தும் குறிப்பாக மதுரைக்காஞ்சி, பட்டினப்பாலை, சிறுபாணாற்றுப்படை, பெரும்பாணாற்றுப்படை, பொருநராற்றுப்படை, மலைபடுகடாம், அகநானூறு, புறநானூற்றுப் பாடல்களில் இருந்தும், சிலப்பதிகாரம், மணிமேகலை போன்ற காப்பியங்கள் தரும் குறிப்புகள்;
- தென்னிந்தியக்  கல்வெட்டுகள் (South Indian Inscriptions) தொல்லியல் நூல்கள் பலவற்றில் இருந்து பற்பல மேற்கோள்கள் என இலக்கியம், தொல்லியல், கல்வெட்டுக்கள் முதலிய சான்றுகளின் அடிப்படையில் பழந்தமிழ் வணிகர்கள் குறித்தும், அவர்கள் ஏற்படுத்திய பொருளாதார தாக்கம், வணிகப் பொருட்கள், பழந்தமிழகத்தின் துறைமுகங்கள் எனப் பல செய்திகளையும் தொகுத்து  தனது ஆய்வின் முடிவை எழுதியுள்ளார் கனகலதா முகுந்த்.

பண்டைத் தமிழகத்தில் வர்த்தகமும் வணிகர்களும்

பண்டைத் தமிழ் மன்னர்கள் வணிகத்துக்கு எந்தெந்தவகையில் உதவினர்?

மொழியின் அடிப்படையில் ஓரிடமாகவும் ஓரினமாகவும் அறியப்படும் தமிழகப் பகுதி  பண்டைக்காலம் முதற்கொண்டு தொடர்ந்து இடைவிடாது மூவேந்தர்களுக்குள்ளும், குறுநில வேளிர் மன்னர்களுக்கு இடையிலும் ஏற்பட்ட பல போர்களைத் தொடர்ந்து சந்தித்து வந்தாலும், நிலையான பேரரசு ஒன்று என்ற தன்மையற்று இருந்தாலும்கூட  தமிழகத்தின் வணிகம் அதனால் பாதிக்கப்படவில்லை. எனவே கடல்வழி வணிகமும் உள்நாட்டு  வணிகமும் செழித்து வளர்ந்திருந்த நிலைக்கு வலிமையான நிலையான ஒரு அரசு தேவையில்லை என்பது தெரிகிறது. கடுமையான வரிகளும், கட்டுப்பாடுகளும், பிறவழிகளில் அரசுகளின் குறுக்கீடுகளும் இல்லாத நிலையே பழந்தமிழகத்தில் கடல்வழி வணிகம் சிறந்திருக்கக் காரணமாக இருந்துள்ளது என்பது கனகலதா முகுந்த் அவர்களின் முடிவு.

மதுரை, உறையூர், வஞ்சி, காஞ்சி போன்ற தலைநகர்ப் பகுதிகளின் வணிக நடவடிக்கைகள்:    பூம்புகார், கொற்கை, முசிறி, தொண்டி,  மாமல்லை, நாகை, அரிக்கமேடு, ஆலங்குளம், இன்றைய மரக்காணம் என வணிக மையங்களாக விளங்கிய துறைமுக நகர்கள் குறித்த இலக்கியம் மற்றும் தொல்லியல் அகழாய்வுச் சான்றுகள், இந்த நகர்களின் அமைப்பு, வெளிநாட்டு வணிகர்களின் தனியான குடியிருப்புகள், இங்கு விற்பனைக்கு உள்நாட்டின் பல்வேறிடங்களில் இருந்தும், கங்கைக்கரை முதற்கொண்டு கொண்டுவரப்பட்ட பல்வகை விற்பனைப் பொருட்கள், துறைமுகங்களில் இறக்குமதியான அயல்நாட்டுச் சரக்குகளின் வகைகள், அவை எந்த நாடுகளில் இருந்து வந்தன,  அவை எவ்வாறு கிடங்குகளில் பாதுகாத்து வைக்கப்பட்டன என விரிவானத் தகவல்களைத் தருகிறார். வணிகர்கள் குழுவினராக இயங்கினர் என்றும், சிறந்த வணிகர்கள் ‘எட்டி’ என்ற விருதும், தங்கமலர் பரிசும் கொடுக்கப்பட்டு அரசால் சிறப்பிக்கப்பட்டார்கள் எனவும், வணிகர்களில் சிலர் இலக்கியவாதிகளாகவும், ஒரு சிலர் மாட மாளிகைகளில் வசிக்கும் செல்வந்தர்களாகவும், சமய நிறுவனங்களுக்கு அறக்கொடை அளிக்கும் வள்ளல்தன்மை கொண்டவர்களாக சிலரும், செல்வத்தின் அளவின் அடிப்படையில் இப்பார், கவிப்பர், பெருங்குடி வணிகர்கள் என்ற தகுதிகளுடன்  வாழ்ந்தார்கள்  என்பதும் நூலாசிரியர்  தொகுத்துத் தரும் செய்திகள்.

தமிழ்ப்பேரரசர்களின் கீழ் அரசு, அரசியல், மற்றும் வெளிநாட்டு உறவுகள்

அயல் நாட்டு வணிகம் அவர்களுடைய ஆட்சியில் எப்படி இருந்தது?

வைதிக சமய மறுமலர்ச்சிக் காலமாக மகேந்திர பல்லவனையும் கூன்பாண்டியனையும் சைவத்திற்கு மாற்றிய பிறகு களப்பிரர்கள் காலத்திற்குப் பிற்பட்ட பல்லவ பாண்டிய அரசுகள், தொடர்ந்து வந்த சோழர்கள் பேரரசாக வளர்ந்த இடைக்காலத் தமிழகம் கொண்ட வளர்ச்சி இருவிதம். ஒன்று உள்ளூர் வளங்களை நிர்வகிக்கும்  நிர்வாகக் குழுக்கள் ஏற்பட்ட நிலை; மற்றொன்று சமூக நிறுவனங்களாக மாறிய கோவில்கள் என்ற நிறுவன அமைப்புகள் உருவாகிய ஒரு நிலை. இந்த நிறுவன அமைப்புகள் வணிகம், வணிகக் குழுவினர், வணிக நிறுவனங்கள் வளர்ச்சியில் நல்ல தாக்கங்களும் ஏற்படுத்தின. அரசர்களும் அயல்நாடுகளுடன் தொடர்பு கொண்டு வணிக உறவுகள் சிறக்க உதவியுள்ளனர் என்கிறார்  கனகலதா முகுந்த்.

ஆட்சியை விரிவு செய்வதற்காக புதிய பகுதிகளை தங்கள் அரசுடன் இணைப்பது, வருவாய்க்கான விளைநிலங்களையும், அவற்றுக்காக நில நீர் ஆதாரங்களை வரி வசூலித்து நிர்வகிப்பது, வணிக  ஆதாரங்களைப் பெருக்குவது, அதன் பகுதியாக தரைவழி வணிக, கடல்வணிகக் குழுக்களுக்கு உதவுவது, அவர்களுக்குப் பாதுகாப்பு கொடுப்பது ஆகியவற்றைத் தங்கள் பொருளாதார வளர்ச்சித் திட்டங்களாக தமிழக அரசர்கள் கொண்டிருந்தனர். கடலோரமாகப் பயன்படுத்தப்பட்ட நாட்டுப் படகுகள், மரத்துண்டுகளால் கட்டப்பட்ட சங்கரா என்ற பெரிய கப்பல்கள், கொலண்டியா என்ற பெருங்கப்பல்கள் கொண்டு கடல் வழி வணிகங்கள் நடந்துள்ளன.

இரண்டாம் நரசிம்மவர்மன் (‘ஷா-லி-ந-லோ-செங்-கிய-ப-தொ-ப-ம’, ஸ்ரீ நரசிம்ம போத்தவர்மன் என்று சீன மொழியிலும்), முதலாம் ராஜராஜர் (‘லோ-ட்ஸா-லோ- ட்ஸா’  என்று சீன மொழியிலும்), முதலாம் ராஜேந்திரர் (‘ஷி – லோ- லோ – சயின் – டோ – லோ – சூலோ’ என்று சீன மொழியிலும்), முதலாம் குலோத்துங்கர் (‘தி – ஹூ வா -கியா-லோ’ என்று சீன மொழியிலும்) அழைக்கப்பட்டனர் எனவும், அந்த மன்னர்களின் தூதர்கள் சீன அரசிற்குச் சென்றபொழுது எழுதிவைக்கப்பட்ட சீன நூல்களில் காணப்படும் குறிப்புகள், மற்றும் அங்குள்ள மடாலயங்களுக்குச் சோழ மன்னர்கள் நன்கொடை வழங்கியது குறித்து அந்நாட்டின் கல்வெட்டுச் செய்திகள் சிலவும் தமிழக மன்னர்கள் கடல்வணிகம் வளர அயல்நாட்டுடன் கொண்ட உறவுகள் பற்றி அறியத் தருகின்றன.

அவ்வாறே ராஜராஜ சோழனும் தெற்காசியாவின் சைலேந்திர பேரரசின் வேண்டுகோளுக்கு இணங்க நாகப்பட்டினத்தில் பவுத்த சூடாமணி விகாரம் அமைக்கப்பட்டுச் சிறப்பாக அது நிர்வகிக்கப்பட ஏற்பாடு செய்தார் என்பதையும் அறிகிறோம். மாறாக அயல்நாடுகளால் கடல் வணிகம் கட்டுப்படுத்தப்பட்ட பொழுது ராஜேந்திர சோழன் கடாரத்தின் மீது  படையெடுத்துச் சென்று  நிலையைச் சீர் செய்தார் என்பதும் வரலாற்று ஆசிரியர்கள் கூறும் கருத்து.

கோவில், நகரம், வணிகர்கள்: ஒத்திசைவைப் பற்றிய ஒரு பார்வை

கோவில் கலாச்சாரம் வணிகத்துக்கு எப்படி உதவியாக இருந்தது?

பொருளாதாரம், சமூகம், அரசியல் ஆகிய களங்களில் தமிழகக் கோவில்கள் பெரும்பங்கு வகித்தன, பண்பாட்டு மையங்களாகப் பங்களித்தன. சமயத்தலைமை, சமூகக்கட்டுப்பாடு,  பொருளாதார அதிகாரம் மூன்றும் இணைந்த அறம்சார் அமைப்பாகக் கோவில்கள் செயல்பட்டன. கோவில்களுக்கு அளிக்கப்பட்ட நன்கொடைகள் அசையும் சொத்து அசையா சொத்து என ஆடுகளும் மாடுகளும், நில புலன்களும், அணிகலன்களும், தானியங்களும், தங்கம், பணம் போன்றவை கருவூலத்தில் சேகரிக்கப்பட்டு அப்பகுதி பொருளாதார வளர்ச்சிக்காக (இக்கால வங்கிகள் செய்வது போல), சுழற்சி முறையில் பணம் தேவையானவருக்கு வட்டிக்கு கடனாகக் கொடுக்கப்பட்டு அந்த வருவாயின் மூலம் கோவில் திருப்பணிகளும், நிர்வாக செலவுகளும், விழாக்களும் நடத்தப்பட்டன.  கொடைகள் வழங்குவதிலும், கோவில் நிர்வாகத்தில் பங்கேற்பதும் என வணிகர்கள் ஈடுபட்டு மக்களிடையே தங்கள் மதிப்பைத் தக்க வைத்து, அவர்களது வணிகத்திற்கு மக்களின் அங்கீகாரத்தையும் பெற்று சமூகத்தில் மதிப்புடன் வாழ்ந்துள்ளனர். நிலையான வலுவான அரசு இல்லாமை வணிக வளர்ச்சியைப் பாதிக்காவிட்டாலும், நிலையான சமூக நிர்வாக நிறுவனங்கள் வணிக வளர்ச்சிக்கு உதவியுள்ளன என்று கனகலதா முகுந்த்  கருதுகிறார்.

உள்ளூர் அங்காடிகளில் அல்லது சந்தைகளின் வணிகம் செய்யும் வணிகர்கள் ‘செட்டி’ (சாதிப்பெயர் என்று 17 ஆம் நூற்றாண்டிற்குப் பிறகே மாறியதாகும்) அல்லது ‘மயிலாட்டி’ என்று அழைக்கப்பட்டனர். காம்போஜம் (கம்போடியா), சம்பா (வியட்நாம்), சாவகம் (ஜாவா), சுவர்ணதீபம் (சுமத்ரா),   ஸ்ரீவிஜயம் (சுமத்ராவின் பாலேம்பங்), சைலேந்திர அரசின் கடாரம் அல்லது கெடா (மலேசியா), இலங்கை அல்லது ஈழம் (ஸ்ரீலங்கா), சீனா, பர்மா (மயன்மார்) ஆகிய நாடுகளுடன் கொண்டிருந்த வணிகத் தொடர்பு, அங்குக் கிடைக்கப்பெற்ற கல்வெட்டுகள் வழி அறிய முடிகிறது. நிகமம், மணிக்கிராமம், திசை ஆயிரத்து ஐந்நூற்றுவர், நானாதேசிகள், வலஞ்சியர், சித்திரமேலி பெரியநாடு, அஞ்சு வண்ணம் (அஞ்சு வண்ணம் என்பார் வணிகம் செய்ய வந்த அயல்நாட்டினர்) போன்ற வணிக குழுக்கள் குறித்தும் நாம் அறிய முடிகிறது. அயல்நாட்டுப் பொதுப்பணிகளில்  தமிழக வணிகர்கள் பங்கேற்றது பற்றிய செய்திகள், குழுவினர்களின் வணிகப் பங்களிப்புகள், அவர்கள் தங்கள் பாதுகாப்பிற்காக தங்களுடன் படைவீர்களைக் கொண்டிருந்தமை, தமிழக மன்னர்கள் போலவே அவர்களும் அயல்நாட்டு சமயநிறுவனங்களுக்கு கொடைகள் கொடுத்தமை எனக் கடலோடிய தமிழக வணிகர்களின் செயல்பாடுகள் குறித்து அயல்நாட்டில் கல்வெட்டுச் சான்றுகள் கிடைத்துள்ளதை   கனகலதா முகுந்த் சுட்டுகிறார்.

வணிகர்கள் கிடைத்த லாபத்தை வணிகத்தில் முதலீடு செய்யாமல் கோவில்களுக்குக் கொடைகள் வழங்கிய நோக்கம், புண்ணியம் என்பதைத் தவிர்த்து, சமூகத்தில் தங்கள் மதிப்பை உயர்த்திக்கொள்ளவும், மக்களின் நன்மதிப்பைப் பெறும் நோக்கமாகவும் இருக்கலாம் எனவும்  அதுவே வணிக வளர்ச்சிக்கு ஒரு வழியாகவும் இருக்கலாம் என்பது நூலாசிரியரின் கணிப்பு.

காலத்தைக் கடந்து நிற்கும் தமிழக வணிகர்கள் – ஓர் மீள்பார்வை

சங்க காலத்தில் ஆரம்பித்து தமிழ் வணிகம் காலப்போக்கில் என்னென்ன மாற்றங்களை அடைந்துள்ளது?

சங்க காலத்தில் இருந்து சோழப்பேரரசின் வீழ்ச்சி காலம் வரை சுமார் ஒரு ஆயிரம் ஆண்டுகளுக்குத் தமிழகத்தில் வணிகர்களுக்குப் பொற்காலமாக இருந்தது என்பது நூலாசிரியர் கருத்து. மேலும், தமிழக பொருளாதாரமும் அதிகமாக அயல்நாட்டு வணிகத்தைச் சார்ந்திராது நடந்துள்ளது. உற்பத்தி, போக்குவரத்து, தகவல் தொடர்பு போன்றவற்றில் இன்றைய முன்னேற்றம் இல்லாத பண்டையக்கால இந்தியாவிலும் வணிகம் செழித்து வளர்ந்திருக்கிறது. வணிகர்கள் தமிழ்ச் சமூகத்தில் நன்கு மதிக்கப்பட்டனர். இருப்பினும் கடல்வழி வணிகத்தில் ஈடுபட்டிருந்த பழந்தமிழக வணிகர்கள் தாங்களே சொந்தமாகக் கப்பல்கள் வைத்திருந்தார்களா? வணிகக் குழுக்களிடையே வணிகப் பரிமாற்றம் எவ்வாறு நிகழ்ந்தது, உள்ளநாட்டு மற்றும் வெளிநாட்டு வணிகர்கள் இடையேயான தொடர்புகள், பெருவணிகர்கள் சிறுவணிகர்கள் செயல்பட்ட முறைகள்  போன்றப் பல செய்திகள் நாம் இன்னமும் அறிய முடியாத நிலையே உள்ளது. எனினும் நவீன காலத்திற்கு முற்பட்ட காலத்தில் எவ்வாறு இதுபோன்ற வணிக நிறுவனங்கள் தோன்றின, தொடர்ந்து செயல்பட்டன என்பது வியக்க வைக்கிறது  என்கிறார் கனகலதா முகுந்த்.

நூல் குறித்த சில கருத்துகள்:

பொதுயுகம், பொதுயுகத்திற்கு முன் என்று நூல்முழுவதும் குறிப்பிடுவதற்குப் பதில் தமிழில் பொது ஆண்டு, பொது ஆண்டுக்கு முன் என்று குறிப்பிட்டிருக்கலாம். இதற்குப் பதில் கிமு, கிபி என்றே குறிப்பிட்டிருந்தாலும் கூட ஏற்றுக்கொள்ளக்கூடியதாகத்தான் இருக்கும். சாலிவாகன ஆண்டு அல்லது சக ஆண்டு என்பதை, சாக (பக்கம் 27), சாகா (பக்கம் 24) போன்று வகை வகையாகக் குறிப்பிடுவது போன்ற குறைகளை மொழிபெயர்ப்பாளர் தவிர்த்திருக்கலாம். நூலின் சிறப்பு; அசோகரின் கல்வெட்டுகள் துவங்கி, பொது ஆண்டுக்கு முற்பட்ட காலத்திலிருந்து தமிழக வரலாற்றின் நிகழ்வுகளைப் காலக்கோட்டில் பட்டியலிடும் வரலாற்றுக் குறிப்புகளாக, சுருக்கமாக நூல் துவங்கும் முன் கனகலதா முகுந்த் கொடுத்திருக்கும் முறை. இது தமிழகம் குறித்து அதிக வரலாற்றுப் பின்னணி அறியாது நூலைப் படிப்பவர்களுக்கு உதவும்.

கடல் பிறக்கோட்டிய செங்குட்டுவன் அல்லது கடலோட்டிய வேல்கெழு குட்டுவன் என அழைக்கப்பட்ட சேரன் கொள்ளையர்களாகிய கடம்பர்களை வென்று கடல் வணிகத்தில் மேலைக்கடலில் சேரர் ஆதிக்கத்தை வளர்த்தான் என்பதைப் பதிற்றுப்பத்து (ஐந்தாம் பத்து), புறநானூறு (புறம். 126) குறிப்பிடும். முதலாம் குலோத்துங்கன் சுங்கவரியை நீக்கி வணிகம் வளர உதவியதால்  “சுங்கம் தவிர்த்த சோழன்” என்ற சிறப்புப் பெயருடையவன் ஆவான். வணிகச்சாத்து குறித்தும், மேலைக்கடற்கரையில் இருந்து கீழைக் கடற்கரை வரை இணைத்த ‘இராஜகேசரி பெருவழி’ போன்றப் பல வணிகப் பெருவழிகள் தமிழகத்தின் குறுக்கும் நெடுக்கும் பல பெரிய நகர்களை இணைத்தது குறித்தும் கல்வெட்டு, இலக்கியத் தகவல்கள் உண்டு. அரசனைப் பாதுகாக்க பயன்படுத்தப்பெற்ற ‘நிழற்படை’ அரசனைமட்டும் பாதுகாக்கவில்லை. பெருவழியைக் கண்காணிக்கவும் செய்தது. மக்களோடு மக்களாக வீரர் என்று தெரியாவண்ணம் மறைந்து நின்று நிழற்படை வீரர்கள் பெருவழியைக் கண்காணித்தனர். இது போன்ற தமிழக வணிகம் வளர அரசர்கள் உதவியதாகப் பெருவாரியாக அறியப்பட்ட சிற்சில செய்திகளை இந்த நூலில் காண இயலவில்லை என்பது கொஞ்சம் ஏமாற்றம் தருவது.

தமிழக வரலாற்றை கடல்வணிகத்தில் முன்னோடியாக விளங்கிய தமிழக வணிகர்கள் கோணத்தில் கூறியிருப்பது இந்நூலின் சிறப்பு.
“நளியிரு முந்நீர் நாவாய் ஓட்டி,
வளிதொழில் ஆண்ட உரவோன் மருக!
களி இயல் யானைக் கரிகால் வளவ!”
என்று வெண்ணிக் குயத்தியார் (எழுதிய புறநானூறு 66) குறிப்பிட்டதற்கு  மேல் பழந்தமிழர் கடற்பயணங்களைப் பற்றி அறிந்திராத தமிழருக்கு; இலக்கியம், தொல்லியல், கல்வெட்டுகள் வழியாகப் பழந்தமிழர் வணிகர்கள் குறித்தும், வணிகம் குறித்தும், அவர்களது கடற்பயணங்கள், அவர்கள் சென்ற நாடுகள், விற்பனை செய்த பொருட்கள், கப்பல்கள் ஆகிய வரலாற்றுச் செய்திகளாக  நாம் அறிந்துகொள்ள எவ்வளவோ உள்ளன எனச் சான்றுகள் அடிப்படையில் விளக்கும் நல்லதொரு ஆய்வுநூலை வழங்கிய கனகலதா முகுந்த் பாராட்டிற்குரியவர்.

________________________________________________________________________________

நூல் குறித்த தகவல்:-
தலைப்பு: பழந்தமிழ் வணிகர்கள், சர்வதேச வர்த்தகத்தின் முன்னோடிகள்
ஆசிரியர்:  கனகலதா முகுந்த்
தமிழில் மொழிபெயர்ப்பு:  எஸ். கிருஷ்ணன்
அணிந்துரை: குர்சரண் தாஸ்
பக்கங்கள்: 160
விலை: ₹150

Pazhanthamizh Vanigargal: Sarvadesa Varthagaththin Munnodigal (Tamil Edition)
Kizhakku Pathippagam. (2016). ISBN: 978-81-8493-658-2
The World of the Tamil Merchant: Pioneers of International Trade (English Edition)
Penguin Books Limited. (2015). ISBN 978-81-8475-612-8.

________________________________________________________________________________


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலகளாவிய வணிகத்தில் முன்னோடிகளாய் விளங்கிய பழந்தமிழ் வணிகர்கள்”

அதிகம் படித்தது