மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

உலக ஊடக உரிமை நாள்

சுசிலா

May 6, 2017

3may_2010_eng

உலக ஊடக உரிமை நாள் (World Press Freedom Day) என்பது ஒவ்வொரு ஆண்டும் மே மாதம் 3 தேதி கொண்டாடப்படுகிறது. இதன் நோக்கம், பத்திரிக்கை சுதந்திரத்தைப் பரப்புவதற்கும், பேச்சுரிமை சுதந்திரத்தை நினைவூட்டவும் ஏற்படுத்தப்பட்டதாகும். இதன் சிறப்பு என்னவென்றால், ஐ.நா.வின் ‘மனித உரிமை சாசனம்’ பகுதி 19-ல் இடம் பெற்றிருக்கிறது . 1993 ஆம் ஆண்டிலிருந்து, ஐக்கிய நாடுகள் பொதுச்சபைக் கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட தீர்மானத்தின் படி, கடைபிடித்து வருகிறார்கள்.

இதற்கு முன்னதாகவே, 1991- ஆம் ஆண்டிலேயே ஆப்பிரிக்க நாட்டு கூட்டுப் பத்திரிகைகளால், “பத்திரிகை சுதந்திர சாசனம்” என்ற கோரிக்கையை, பத்திரிக்கைகளின் சுதந்திரத்தையும், பாதுகாப்பையும் உறுதி செய்யும் விதமாக முன் வைக்கப்பட்டது. அதன் தொடர்ச்சிதான் இந்தத் தீர்மானம் ஏற்றுக்கொள்ளப்பட்டதாகும். யுனெஸ்கோ நிறுவனத்தினர், இதற்கென பங்களிப்புச் செய்பவர்களில், ஒருவரைத் தேர்ந்தெடுத்து, விருதும் வழங்கி வருகிறார்கள்.

கொலம்பியா நாட்டைச் சேர்ந்த பத்திரிகையாளர், “கிளர் மோ கானோ இசசா” என்பவரின் நினைவாகக் கொடுக்கப்படுகிறது. இவர் 1986 ஆம் ஆண்டு டிசம்பர் மாதம் 17-ந் தேதி, அவரின் அலுவலகம் முன்பே படுகொலை செய்யப்பட்டார். இதன் விளைவாகத்தான் இந்த எண்ணமே அவர்களின் மனதில் தோன்றி, ‘பத்திரிக்கை சுதந்திர சாசனம்’ என்ற தீர்மானத்தைப் போட்டார்கள். இதற்காகப் போராடும் பத்திரிகையாளர் ஒருவருக்கு 25,000 டாலரில் பரிசு வழங்கப்படுகிறது.

Siragu World Press Freedom Day2

இக்கட்டுரையின் நோக்கம் என்னவென்றால், இந்தப் பத்திரிக்கை சுதந்திரம் என்பது எல்லா நாடுகளிலும் முறையாக நடத்தப்படுகிறதா என்றால், இல்லை என்று தான் பதிலாக இருக்க முடியும். அளவுக்கு மீறிப் போவதை மற்ற நாடுகள் கட்டுப்படுத்துகின்றன. ஆனால் 2014 -க்குப் பிறகு மோடி தலைமையிலான பா.ச.க அரசு இதனை, முழுவதும் கடைப்பிடிக்கவில்லை என்பது தான் நிதர்சனமான உண்மை.

உலகிலேயே மிகப்பெரிய சனநாயக நாடான இந்தியாவில், ஊடகச்சுதந்திரம் என்பது இப்போது கேலிக்குரிய ஒன்றாகத்தான் மாறியிருக்கிறது. இந்தியாவில் உள்ள பல இந்தி செய்தி நிறுவனங்கள், இந்த இந்துத்துவவாதிகளின் பிடியில் சிக்கித் தவிக்கின்றன. இன்னும் சில, இவர்களின் நிதியில் செயல்படுவதால், இவர்கள் சொல்லும் செய்திகள்தான் பரப்பப்படுகின்றன. இதில் பல உண்மைகள் மறைக்கப்பட்டு, பொய்யான செய்திகள் மக்களுக்கு போய்ச்சேரும் வகையில் பல ஊடகங்கள் இயங்குகின்றன.

சனநாயகத்தின் நான்காவது தூண் என்று சொல்லப்படும், ஊடகம் தன்னிச்சையாக செயல்படா நிலையில்தான் தற்போது இந்திய ஊடகங்கள் இருக்கின்றன. அதனை மெய்ப்பிக்கும் ஒரு சான்று தான், 179 நாடுகளின் பட்டியலில், இந்தியாவிற்கு கிடைத்திருக்கும் 136 வது இடம் என்பதாகும்.

Siragu World Press Freedom Day4

கடந்த ஆண்டு நவம்பர் மாதம் என்டிடிவி-க்கு ஒருநாள் தடை விதிக்கப்பட்டது. காரணம் என்னவென்றால், பதான்கோட் தாக்குதலைத் தவறாக காட்டிவிட்டது என்று அரசு சார்பில் சொல்லப்பட்டது.

மேலும் பீகார் தேர்தலில், பா.ச.க தோல்விக்கு இந்த ஊடகங்கள் பல விழிப்புணர்வு செய்திகளை வெளியிட்டதாகவும் கூறப்பட்டது. இப்போது 2017 உத்திரப்பிரதேசத் தேர்தலிலும், அச்சுறுத்தப்பட்டு தங்கள் வழிக்கு அவர்களைக் கொண்டுவந்து, ஆட்சியிலும் அமர்ந்து விட்டது மத்திய பா.ச.க அரசு. மேலும் அம்மாநிலத்தில் பல அட்டூழியங்கள் தினமும் நடந்த வண்ணம் இருக்கின்றன. ஆனால் ஊடகங்கள் முழு செய்திகளை வெளியிடுவதில்லை. பா.ச.க ஆளும் அத்தனை மாநிலங்களிலும், அவர்களுக்கு சாதகமாகவே செய்திகள் பரப்பப்படுகின்றன.

Siragu World Press Freedom Day3

ஏற்கனவே ஊடகத்துறையில் ஆதிக்கச்சாதியினரின் ராச்சியம்தான் கோலோச்சுகிறது. இதில் அவர்களின் ஆட்சியும் வந்து விட்டதால் சொல்லவே வேண்டாம். எந்த உண்மை செய்திகளும் மக்களுக்கு போய்ச் சேர்வதில்லை. அனைத்தும் மறைக்கப்பட்டு பொய்யான செய்திகள் சொல்லப்படுகின்றன.

குறிப்பாக வடநாட்டில், பெரு முதலாளிகளும், மேல்தட்டு வர்க்கத்தினரும், ஆட்டிவிக்கும் கைப்பாவைகளாகவே ஊடகங்கள் இருக்கின்றன. சமூகநீதிக்காக, கொள்கைக்காக, மூடநம்பிக்கைக்கு எதிராகப் போராடும் ஊடகங்கள், இவர்களுடன் போட்டிபோட்டு, உண்மைத் தகவல்களைத் தருவதற்கு முயன்றாலும், அரசும் இவர்களுக்கு எதிராக செயல்படுகிறது என்பது தான் வேதனை படக்கூடிய ஒன்றாகவே இருக்கிறது.!

உண்மைகளைப் பறைசாற்றும் ஊடகங்களுக்கு தேவையான, ஊடகச் சுதந்திரத்தையும், அதன் பாதுகாப்பையும் மக்களுக்குக் கொண்டு செல்லும் கேடயமாக நாம் இருப்போம்.!


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “உலக ஊடக உரிமை நாள்”

அதிகம் படித்தது