மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?

இராமியா

Dec 14, 2019

தி லான்செட் (The Lancet) என்ற மருத்துவ வாரப் பத்திரிக்கை 1823ஆம் ஆண்டில் தாமஸ் வேக்லி (Thomas Wakely) என்ற ஆங்கிலேய மருத்துவரால் இலண்டனில் தொடங்கப்பட்டது. இன்று இது இலண்டன், நியூயார்க், பெய்ஜிங் ஆகிய நகரங்களில் இருந்து வெளிவந்து கொண்டு இருக்கிறது. இதில் மருத்துவ அறிவியல் பற்றிய ஆராய்ச்சிக் கட்டுரைகள் இடம் பெறுகின்றன. அண்மையில் உலக சுகாதார நிறுவனம் (WHO), பல்கலைக் கழகக் கல்லூரி, இலண்டன், (University College, London), திசுங்குவா பல்கலைக் கழகம், பெய்ஜிங் (Tsinghua University, Beijing) உட்பட உலகின் மிக உயர்ந்த 33 நிறுவனங்களைச் சேர்ந்த 120 நிபுணர்கள் ஆராய்ந்து எழுதிய கட்டுரை ஒன்று இதில் வெளியாகி உள்ளது. இது புது தில்லியில் 13.11.2019 அன்று பத்திரிக்கையாளர்களின் கவனத்திற்குக் கொண்டு வரப்பட்டது.

siragu edharkaaga1

இக்கட்டுரையில், புவி வெப்ப உயர்வு தெடர்ந்து உயர்ந்து கொண்டு இருக்கிறது என்றும், இதன் காரணமாக, உணவு தானிய உற்பத்தி 2% குறைந்து உள்ளது என்றும் குறிப்பிடப்பட்டு உள்ளது. மேலும் புவி வெப்ப உயர்வு, ஏழை நாடுகளில் உள்ள குழந்தைகளின் உடல் நலத்தை மட்டும் அல்ல, பணக்கார நாடுகளின் குழந்தைகளின் உடல் நலத்தையும் ஏற்கனவே பாதித்து உள்ளது என்றும், இது தொடர்ந்தால் எதிர்காலத்தில் உலகில் உள்ள குழந்தைகளின் உடல் நலம் வெகுவாகப் பாதிக்கப்படும் என்றும் அக்கட்டுரையில் தெரிவிக்கப்பட்டு உள்ளது.

இச்செய்தி மருத்துவர்களுக்கு வருத்தம் அளிக்கக் கூடியதாக இருக்கலாம். ஆனால் மருத்துவ வணிகர்கள் மகிழ்ச்சி அடைவார்கள் என்று பலர் எதிர்பார்க்கலாம். ஆனால் மருத்துவத் துறையின் ஆற்றலை விட, புவி வெப்ப உயர்வின் நோய்த் தாக்குதலின் ஆற்றல் விரைவில் வென்று விடும் என்ற அச்சத்தை இக்கட்டுரையில் உள்ள செய்திகள் ஏற்படுத்துகின்றன.

சரி! நாம் புவி வெப்ப உயர்வையும், அதன் விளைவுகளையும் கண்டு எவ்வளவு காலம் தான் அஞ்சிக் கிடக்கப் போகிறோம்?

siragu edharkaaga2

ஆண்டுக்கு ஒரு முறை ஒரு மணி நேரம் மின் விளக்குகளை அணைத்து விட்டு மெழுகுவர்த்திகளை ஏற்றுவது, ஆங்காங்கே மரக் கன்றுகளை நடுவது போன்ற “நடவடிக்கைகளை” முதலாளிகளும், முதலாளித்துவ அறிஞர்களும் செயல்படுத்திக் காட்டி, புவி வெப்ப உயர்வைப் புறம் கண்டு கொண்டு இருப்பதாக மக்களை நம்ப வைத்துக் கொண்டு இருக்கிறார்கள். இது ஒரு கொடூரமான அயோக்கியத்தனம் ஆகும். இப்படிச் செய்வதன் மூலம் அவர்கள் புவி வெப்ப உயர்வுக்கு எதிரான நடவடிக்கைகள் எடுக்கப்பட்டு விட்டன என்ற உணர்வை மக்களிடையே ஏற்படுத்தி அமைதிப்படுத்தி விடுகிறார்கள். ஆனால் புவி வெப்ப உயர்வும், அதன் கேடான விளைவுகளும் தொடர்ந்து கொண்டே இருக்கின்றன. அப்படி என்றால் இதற்குத் தீர்வு தான் என்ன? முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் அத்தீர்வை நோக்கி ஏன் செல்வது இல்லை?

இதற்கான தீர்வைப் புரிந்து கொள்வது கடினமே அல்ல. புவி வெப்ப உயர்வை அதிகரிக்கும் பண்டங்களின் உற்பத்தியை வெகுவாகக் குறைக்க வேண்டும். முடிந்தால் அடியோடு நிறுத்தி விடவும் வேண்டும். புவியைக் குளிர்விக்கும் பண்டங்களை மிக மிக … மிக அதிகமாக உற்பத்தி செய்ய வேண்டும்.

அதற்கென்ன செய்ய வேண்டியது தானே என்கிறீர்களா? அங்கு உள்ள பிரச்சினையைத்தான் புரிந்து கொள்ள வேண்டும். புவி வெப்ப உயர்வை அதிகரிக்கும் பண்டங்கள் அனைத்தும் சந்தையில் இலாபம் ஈட்டித் தருகின்றன. அவற்றை உற்பத்தி செய்ய வேண்டாம் என்றால் எந்த முதலாளியாவது ஒப்புக் கொள்வாரா? முதலாளிகளுக்குப் பிடிக்காத ஒன்றை ஒரு முதலாளித்துவ அரசு செய்யுமா?

அது கிடக்கட்டும்! புவியைக் குளிர்விக்கும் பண்டங்களை அதற்கெல்லாம் ஈடு கொடுக்கும்படி அதிக அளவில் உற்பத்தி செய்து விடலாம் என்று அப்பாவித்தனமாக நினைத்து விடாதீர்கள். அது இன்னும் கடினமானது, ஏன் தெரியுமா? காடு வளர்த்தல், மரம் வளர்த்தல், விவசாயம் போன்றவைதான் புவி வெப்பத்தைக் குறைக்கும். ஆனால் இவற்றில் எல்லாம் முதலீடு செய்தால் இழப்பு தான் ஏற்படும். பல சமயங்களில் போட்ட மூலதனம் அப்படியே காணாமலேயே போய் விடும். சில அதிமேதாவிகள் இது போன்றவற்றில் முதலாளிகளை எதிர்பார்க்காமல் அரசே மேற்கொள்ள வேண்டும் என்று அறிவுரை கூறுவார்கள். புவி வெப்பத்தைத் தேவையான அளவுக்குக் குறைக்க விவசாயம், மரம் வளர்த்தல், காடு வளர்த்தல் ஆகியவற்றில் முதலீடு செய்ய வேண்டும் என்றால் அரசின் மொத்த வருவாயே போதாது என்பது மட்டும் அல்ல, அரசின் மொத்த வருவாயைப் போல் ஆயிரம் மடங்கும் தேவைப்படலாம். அவ்வளவு வருவாய் வேண்டும் என்றால் அனைத்து முதலாளிகளின் உடைமைகளையும் பறிமுதல் செய்ய வேண்டி இருக்கும், முதலாளித்துவ அமைப்பில் இதைக் கற்பனை கூடச் செய்ய முடியாது.

அப்படி என்றால் என்ன தான் செய்ய வேண்டும்? சந்தைக்குத் தேவைப்படும் பண்டங்களை உற்பத்தி செய்யும் முதலாளித்துவ உற்பத்தி முறையை ஒழித்துக் கட்டி விட்டு மக்களின் தேவைகளைக் கணக்கிட்டு அவற்றை உற்பத்தி செய்யும் சோஷலிச உற்பத்தி முறையை ஏற்படுத்த வேண்டும். அவ்வாறு செய்தால் புவி வெப்ப உயர்வுக்குத் தீர்வு காணும் அதே சமயத்தில் அனைத்து மக்களுக்கும் வேலை வாய்ப்பு அளிப்பதன் மூலம் அனைத்து மக்களுக்கும் பொருளாதார விடுதலையும் கிடைக்கும்.

அது நல்லது தானே என்கிறீர்களா? ஆம். உழைக்கும் மக்கள் அனைவருக்கும் நல்லது தான். ஆனால் “பிறரை அடிமை கொள்ளாமல் வாழ முடியாது. பிறரை அடிமை கொள்ளாமல் வாழும் வாழ்க்கையை ஏற்பதை விட, இந்த உலகம் அழிந்தே போகட்டும்” என்று தான் முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் நினைக்கிறார்கள் / விரும்புகிறார்கள். ஆகவே அனைத்து வகுப்பு மக்கள் இணைந்து போராட வேண்டும் என்று காத்திருந்தால் அது கானல் நீரை நோக்கி ஓடுவதாகவே இருக்கும். முதலாளிகளையும், முதலாளித்துவ அறிஞர்களையும் தவிர்த்து மற்ற (உழைக்கும்) மக்கள் ஒன்றிணைந்து போராடுவது மட்டுமே சரியான வழியாகும்.

ஆனால் நாம் அதைச் செய்யாமல் எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “எதற்காகக் காத்துக் கொண்டு இருக்கிறோம்?”

அதிகம் படித்தது