மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஏப்ரல்- 18 – 2019

கி.ஆறுமுகம்

Apr 13, 2019

 Siragu-By-election

வருகின்ற ஏப்ரல் 18 நம் நாட்டுக்கு முக்கியமான தினம். அது என்னவென்று நம் அனைவருக்கும் தெரியும். இந்தத் தேர்தலிலாவது நாம் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும். குறிப்பாக பணம் பெற்றுக்கொண்டு ஓட்டு போடும் நபர்களை நமக்கு தெரிந்தால், ஓட்டின் உரிமை, அதன் மதிப்பை எடுத்து சொல்லி ஓட்டுக்கு பணம் பெறுவதைத் தடுக்க வேண்டும். நமக்குத் தேவையான நல்ல தலைவரை தேர்ந்தெடுக்கும் நல்ல நேரம் இது. இந்தியாவில் தமிழ்நாட்டில் மட்டும் தான் அதிகப்படியான இலவசம், ஓட்டுக்கு பணம் என்று உள்ளது.

அரசியலுக்கு வருகிறவர்கள் அனைவரும் இந்த சினிமா துறையை சார்ந்தவர்களாக உள்ளனர். அவர்களுக்கு நடிக்க தெரியும், ஆனால் நாட்டை ஆளும் திறமை உள்ளதா என்று நாம் சிந்திக்க வேண்டும்.

வெற்றிடம் உள்ளது, அதை நிரப்புவதற்காகத்தான் நான் அரசியலுக்கு வருகிறேன் என்று நடிகர்கள் சொல்லுகிறார்கள். இந்த தலைமுறையில் உள்ள இளைஞர்கள் சிலருக்கு அவர் கூறுகின்றதன் அர்த்தம் புரிகிறதா என்று தெரியவில்லை. எதிரியே இல்லாத வெற்றிடத்தில் இருந்து ஒருவர் நான் சிறந்த தலைவனாக இருக்க முடியும் என்று சொன்னால் அது எப்படி முடியும். நம் முன்னோர்கள் போர்களத்தில் எதிரியை எதிர்த்து மார்பில் புண்பட்டு வீரமரணம் அடைந்த ஒரு படை வீரனுக்கும் நடுகல் என்று ஒன்றை வைத்து வழிபட்ட இனம் நம் தமிழ் இனம். உலகில் வேறு எந்த நாட்டிலும் இதுபோன்ற ஒரு முறை இல்லை, அப்படிப்பட்ட வீரம் மிக்க இனத்துக்கு தலைவன்எப்படி இருக்க வேண்டும் என்று சிந்திக்க வேண்டும்.

மற்றொரு நடிகர் கட்சி ஆரம்பித்து என் கட்சியில் பட்டம் பெற்றவர் சமுதாய சிந்தனை உள்ளவர்களுக்கு இளைஞர்களுக்கு முதலிடம் என்று இன்று செல்லுகிறார். இத்தனை ஆண்டுகள் என்ன செய்து கொண்டிருந்தார் என்று மக்களாகிய நீங்கள் சற்று சிந்தித்துப் பாருங்கள். ஓட்டு போடும்போது சற்று சிந்தித்து ஓட்டு போடுங்கள், ஒரு அரசாங்கம் என்பது எது அதனிடம் என்ன இருக்க வேண்டும், எப்படி செயல்பட வேண்டும், தனியாரிடம் என்ன இருக்க வேண்டும், இன்று அரசாங்கத்திடம் இருக்க வேண்டிய கல்வி, மருத்துவமனை வசதிகள் அதிகமாக யாரிடம் உள்ளது.

அரசாங்கத்திடம் என்ன உள்ளது, தெருவுக்குத் தெரு சாராயக்கடை திறந்து மக்களை குடிகாரர்களாக ஆக்கியதுதான் நாம் தேர்ந்தெடுத்த அரசாங்கம். மக்களை நல்ல குடிமக்களாக வழிநடத்தும் என்று தேர்ந்தெடுத்த அரசு மக்களை நல்ல குடி மக்களாக மாற்றியள்ளது, இந்த நிலை மாற வேண்டும் எனில், நாம் அனைவரும் ஓட்டுப்போட வேண்டும், அந்த ஓட்டு யாருக்கு என்று சிந்திக்க வேண்டும். நம் குழந்தைகளையும் வாக்குசாவடிக்கு அழைத்து செல்லுங்கள், வரிசையில் நின்று ஓட்டு போடுங்கள், அவர்களும் பின்னாளில் கட்டாயம் ஓட்டு போடுவார்கள். பிள்ளைகளுக்கு தன் தாய் தந்தையிடம் இருந்துதான் முதலில் சிலவற்றை கற்றுக் கொள்கின்றனர். அவர்களுக்கு அரசாங்கம் என்பது என்ன, அரசியலமைப்பு என்பது என்ன, சட்டம் என்பது என்ன என்று கற்றுக் கொடுங்கள். குறிப்பாக ஓட்டுக்கு பணம் வாங்கக்கூடாது என்று சொல்லிக் கொடுத்து வளருங்கள்.

ஒரு நாட்டின் மக்களின் நலன் என்பது அவர்கள் செய்யும் செயலை பொருத்து அமையும். நல்ல தலைவனை தேர்ந்தெடுத்தால் மக்கள் நலன் இல்லை என்றால், அம்மக்கள் துன்பத்தைத்தான் அனுபவிக்க வேண்டும். தலைவர் செய்யும் தவறு அவனை சேராது, அவனை தேர்ந்தெடுத்த மக்களுக்கே வந்து சேரும். அது எப்படி என்று, நான் படித்த ஒரு குட்டி கதை மூலம் சொல்லுகிறேன்.

ஒரு நாட்டின் அரசன், அந்தனர் ஒருவருக்கு பாலை தானமாக கொடுத்தான் அப்போது, அவ்வழியாக வானத்தில் கழுகு ஒன்று அதற்கு உணவாக ஒரு பாம்பை எடுத்து சென்றது. அந்த பாம்பின் பல்லில் இருந்து ஒரு துளி விசம் அந்தப் பாலில் விழுந்தது, அதை அறியாத அரசன் பாலை தானமாக அந்தனருக்குக் கொடுக்க, அதை உண்ட அந்தனர் இறந்து போனார். அந்தனர் இறந்ததை யார் பாவக்கணக்கில் எழுத வேண்டும். பாம்பின் மீதா, கழுகின் மீதா, அரசன் மீதா என்று சித்திர குப்தர் எமதருமனிடம் கேட்க, எமன் சற்று நேரத்தில் உனக்கு விடை தெரியும், பொறுமையாக இரு என்றார். அந்தனர் இறந்த செய்தி ஊர் முழுவதும் தெரிந்தது. மற்றொரு நாள் வேறொரு அந்தனர் அந்த அரசனைக் காண வேண்டும் எப்படி செல்லுவது என்று ஊர் மக்களிடம் வழி கேட்க, வழி கூறியவர்கள், அந்த அரசனையா காண செல்லுகிறீர்கள், அவர் அந்தனருக்கு விசம் வைத்து கொள்கிறவர் என்றனர். அப்போது எமன் சொன்னார், அந்த பாவக் கணக்கை அந்த மக்கள் மீது எழுது. கழுகு தன் உணவாக பாம்பை எடுத்து சென்றது. பாம்பு வலியால் விசம் கக்கியது. விசம் பாலில் கலந்திருந்தது அரசனுக்குத் தெரியாது. அந்தனர் தெரியாமல் அருந்தி இறந்தார். என்ன நடந்தது என்று முழுவதும் தெரியாமல் இருந்து புரம் பேசுபவகள், புரம் பேசுபவர்களின் வார்த்தையை நம்புபவர்கள், அதை பேசுபவர்களுக்கு அதிகமான பாவம் வந்து சேரும் என்று எமன் எடுத்துரைத்தார்.

இந்த கதை வைத்துப் பார்த்தால் இன்றைய அரசியல்வாதி அனைவரும் மேடைக்கு மேடை ஒருவரை ஒருவர் குறை சொல்லுகின்றனர். அதனை கேட்டு நாம் வாக்களிக்கிறோம். எது சரியான கருத்து என்று சிந்திக்கிறோமா என்றால், இல்லை அப்படி தேர்ந்தெடுத்த தலைவர் செய்யும் செயல் மக்களையே சேரும்.

நல்ல ஆட்சி அமைய நாம் அனைவரும் சிந்தித்து வாக்களிக்க வேண்டும். அனைவருக்கும் நாட்டில் உள்ள அனைத்துப் பிரச்சினைகளும் தெரியும். மீண்டும் மீண்டும் மேடைக்கு மேடை அதை மட்டும் கூறுபவர்கள் சிறந்த தலைவரா? அல்லது பிரச்சினைக்கு நல்ல தீர்வு கூறுகிறவர்கள் நல்ல தலைவரா? என்று சிந்தித்து, வரும் ஏப்ரல் 18-ல் நாம் அனைவரும் வாக்களிப்போம், நல்ல தலைவனை தோந்தெடுப்போம்.


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏப்ரல்- 18 – 2019”

அதிகம் படித்தது