ஏழைகளின் ஊட்டி ஏலகிரி
நிகில்Feb 20, 2016
வேலூர் மாவட்டத்தின் திருப்பத்தூர் அருகே அமைந்துள்ள ஏலகிரி மலை சென்னையிலிருந்து ஐந்து மணி நேர பயணத் தொலைவில் அமைந்துள்ளது. ஏழைகளின் ஊட்டி என்று வர்ணிக்கப்படுகிற மலை மேல் அமைந்துள்ள இந்தப்பகுதி, தரைமட்டத்திலிருந்து ஆயிரம் அடி உயரத்திற்கு மேல் அமைந்துள்ள இந்தப் பகுதி, துளியும் மாசு இல்லாத இடம். முற்றிலும் யூகலிப்டஸ் மரங்கள், பழத்தோட்டம், மலர்த்தோட்டம், புள்வெளிகள் என மனதை கவரும் விடயங்கள் ஏராளம் உள்ளன. இந்த மலையில் மட்டுமே 15 குக்கிராமங்கள் உள்ளன.
பூங்கனூர் ஏரி படகு சவாரி, இயற்கையாக உருவாக்கப்பட்ட பூங்கா, நடனமாடும் நீர் ஊற்று, மலை சவாரி என குதூகலமூட்டுகிறது. விடுமுறை தினமாக சனி, ஞாயிறு என்றாலே சென்னை, பெங்களூர் என பல இடங்களில் இருந்தும் சுற்றுலாப் பயணிகள் கூட்டம் குவிகிறது.
இங்கு எந்த வித மருந்துகளும் சேர்க்கப்படாத பல வித பழ வகைகள் விற்பனை செய்யப்படுகின்றன. பன்னீர் கொய்யா(கொய்யா போன்ற வடிவமைப்பில் உள்ளே கொட்டை உள்ளது. மிதமான தித்திப்புடன் சாப்பிடுவதற்கு அத்தனை ருசியாக உள்ளது).
ரிச்சி ப்ரூட்(கோலிக்காய் வடிவில் தோல் மிகவும் கடினமாக உள்ளது. அதனை உடைத்து சாப்பிட்டால் நெல்லிக்காய் போன்ற வடிவமைப்பில் பல விதமான சுவைகள் அடங்கியுள்ளது).
சுற்றுலாத்தளம் என்றால் எல்லா பொருட்களின் விலை அதிகமாக இருக்கும். ஆனால் இங்கு நாம் அன்றாடம் என்ன விலை கொடுத்து வாங்குகிறோமோ அதே விலை தான். ஒவ்வொரு வீடுகளுமே ஓட்டல்களாக மாறியுள்ளன. நமக்கு என்ன தேவை என்பதைக் கேட்டு உடனே தயார் செய்து தருகிறார்கள்.
மலையேற்றம் என்பது வித்தியாசமான அனுபவமாக உள்ளது. 10.கி.மீ தூரம் காட்டில்தான் நடக்க வேண்டும், ஒற்றையடிப் பாதை. வனவிலங்குகள் எப்போது வேண்டுமானாலும் வரலாம். இங்குள்ள மலையில் சிவன் கோவில் உள்ளது. இந்த மலை கடல் மட்டத்திலிருந்து 5 ஆயிரம் உயரத்தில் உள்ளது. இந்த ஏலகிரி மலையில் சுற்றுலா தான் பிரதானம். குக்கிராமங்களில் மிகக் குறைந்த அளவில் மக்கள் வசிக்கிறார்கள். அவர்கள் வாழ்க்கை விவசாயத்தை நம்பித்தான் இருக்கிறது.
தேன் எடுப்பது, தோட்ட வேலை, மலையிலுள்ள மூலிகைகளால் மருந்து தயாரிப்பது என இயற்கையை நம்பித்தான் வாழ்கிறார்கள். இவர்களின் வாழ்க்கை முறை மிகவும் வித்தியாசமாக உள்ளது. மற்ற இனத்தவர்களை இவர்கள் சேர்ப்பதில்லை. இந்த மலையின் அருகே அமைந்துள்ளது திருவண்ணாமலை மலை. அங்குள்ள மக்களும் இவர்களும்தான் திருமணம் செய்து கொள்கிறார்கள். பண்டமாற்று முறையில் திருமணம் நடக்கிறது. சமுதாயம் எவ்வளவோ மாறிவிட்டாலும், இவர்களும் பழமை மாறாமல் தங்களது வாழ்க்கையை அப்படியே நகர்த்துகிறார்கள். அவர்களில் சிலரிடம் பேசினோம்.
இந்த மலைதான் எங்களுக்கு சாமி. இயற்கையை நம்பித்தான் எங்கள் வாழ்க்கை. அதனால் நாங்கள் செருப்பு கூட அணிவதில்லை. மனிதர்களை நம்புவதில்லை. இன்றும் எங்களிடையே பண்டமாற்று முறையில்தான் பொருட்களை மாற்றிக்கொண்டு வாழ்கிறோம்.
திருமணம் என்பது பெண்ணுக்கும் ஆணுக்கும் பிடித்தால் தான் நடைபெறும் என்ற வகையில் அமைந்துள்ளது. சாதிப்பிரிவும் கட்டுப்பாடும் எங்களிடம் கிடையாது. பண்டமாற்று முறையாக ஒரு பொருளை பெற இன்னொரு பொருளைத் தரும் முறை இன்னமும் வழக்கத்தில் உள்ளது. விலைக்குக் கேட்டாலும் கொடுப்பதில்லை.
திருமணச் சடங்குகள் எங்கள் மக்களுக்குள்ளேயே நிகழும். புரோகிதர்களை வைத்து திருமணம் செய்யும் வழக்கம் எங்களிடையே இல்லை. எங்களது திருமணமும் வித்தியாசமான முறையில்தான் நடக்கும். வேறு இனத்தில் உள்ளவர்களை மணம் முடிப்பதில்லை, ஏன் எங்களோடு வசிக்கவும் அனுமதிப்பதில்லை. மலையில் வசிக்கும் நாங்கள் எங்களைப் போன்ற மலையில் வசிக்கும் மக்களைத்தான் மணம் முடிப்போம். அதிகாலையில் சூரிய உதயத்திற்கு முன்தான் திருமணம் நடக்கும். மணமகன் மேல் சட்டை அணியாக்கூடாது. மணமகளும் ரவிக்கை அணியக்கூடாது. அங்கே இருக்கும் கனியையும், மலையையும்தான் தெய்வமாக நினைத்து தாலிக்கட்டிக் கொள்வோம். எங்கள் குல பெண்களுக்கு பிரசவம் பார்க்க மருத்துவமனைக்கு செல்வதில்லை. நாங்களே பார்த்துக்கொள்வோம். இன்றும் பழமை மாறாமல் வாழ்கிறோம். ஆனால் எங்கள் குழந்தைகளை படிக்க வைக்கச்சொல்லி அரசாங்க அதிகாரிகள் வற்புறுத்துகிறார்கள். இப்போது குழந்தைகளை பள்ளிக்கு அனுப்புகிறோம். வருங்காலத்தில் இவர்களால் மாற்றம் வந்தால் என்ன செய்வது என்று தெரியவில்லை என்கிறார்கள்.
ஊட்டி போன்ற தட்ப வெட்ப நிலை இங்கு நிலவுகிறது. மற்ற கோடை சுற்றுலாத் தலங்களோடு ஒப்பிடுகையில் இயற்கைச் சூழலிலும் தட்பவெட்ப நிலையிலும் ஓரளவுக்கு மாறுபட்டு இருக்கிறது. கோடைகாலத்தில் அதிகபட்ச வெப்பநிலை 38 டிகிரியாகவும், குளிர்காலத்தில் குறைந்தபட்ச வெட்பநிலை 5 டிகிரியாகவும் உள்ளது. கோடைகாலத்தில் வெப்பம் அதிகமானாலும் குளிர்ந்த காற்று வீசுவதை நம்மால் உணர முடியும்.
நிகில்
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஏழைகளின் ஊட்டி ஏலகிரி”