மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஒடுக்கப்பட்ட வகுப்புச் சங்கிகளே!

இராமியா

Feb 4, 2023

siragu piravikkadal1

இந்தியாவில் பெரும் அரசியல் கட்சிகளாக இருப்பவை காங்கிரஸ், கம்யூனிஸ்ட், பா.ஜ.க. ஆகியவையே. இவை மூன்றுமே பார்ப்பன ஆதிக்கத்தைத் தூக்கிப் பிடிப்பவையே.

இவற்றில் காங்கிரஸ் கட்சி விடுதலைப் போராட்டத்தில் ஈடுபட்டு இருந்த காலம் தொட்டு அனைத்து வகுப்பு மக்களையும் ஈர்த்து அரவணைத்துச் செல்ல வேண்டிய அவசியமும், அனைத்து வகுப்பு மக்களுடைய நலன்களை ஓரளவுக்காவது, குறைந்த பட்சம் போலியாகவாவது முன்னெடுக்க வேண்டிய அவசியமும் இருந்தது. ஆகவே அக்கட்சியினர் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் போராட்டக் குரல் எழுப்பும் போது அதற்கு விடை அளிக்க வேண்டும் என்ற பொறுப்பு உணர்வும், பார்ப்பன ஆதிக்கத்தை நிலைநிறுத்துவதில் அளவுக்கு மீறிய வேகம் காட்டி விடக் கூடாது என்ற எச்சரிக்கை உணர்வும் கொண்டு இருந்தார்கள்.

கம்யூனிஸ்ட் கட்சியைப் பொறுத்த மட்டில், அது அனைத்து விதச் சுரண்டலையும் எதிர்ப்பது தான் அதன் கொள்கை. ஆகவே பார்ப்பன ஆதிக்கச் சுரண்டலையும் போலியாகவாவது எதிர்க்க வேண்டிய கட்டாயத்தில் இருந்தது. காவி உடை அணிந்து கொண்டு இருக்கும் ஒரு போலி சந்நியாசி மனதிற்குள் என்ன தான் ஆசை இருந்தாலும் தெருக்களில் நடக்கும் ஆபாச நடனங்ளை நின்று பார்க்க முடியாது என்பது போல் பார்ப்பன ஆதிக்கத்தை வெளிப்படையாகத் தூக்கிப் பிடிக்க முடியாமல் இருந்தது. பல சமயங்களில் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்குச் சார்பாக நடந்து கொள்ள வேண்டியும் இருந்தது.

பா.ஜ.க.வோ இது போன்ற எந்த விதமான கட்டுப்பாடும் இல்லாமல் பார்ப்பன ஆதிக்கத்தை அதாவது வர்ணாசிரம அதர்மத்தைத் தூக்கிப் பிடிக்க வேண்டும் என்ற கொள்கையை வெளிப்படையாகவே அறிவித்து இயங்குகிறது. அக்கட்சியில் இந்து மத உணர்வு என்ற பெயரில் வர்ணாசிரம அதர்மக் கருத்தியலுக்கு அடிமைப்பட ஆயத்தமாக இருப்பவர்களை மட்டுமே சேர்த்துக் கொள்கிறார்கள். ஆகவே முறையாகக் கேட்கப்படும் எந்த ஒரு வினாவிற்கும் அக்கட்சியினர் விடை அளிப்பது இல்லை. அவர்களுடைய நடவடிக்கைகளால் மக்கள் எவ்வளவு துன்பம் பட்டாலும் அதைப் பற்றி அவர்கள் பொருட்படுத்துவதே இல்லை. வர்ணாசிரம அதர்மத்தை வெளிப்படையான நடைமுறையாகக் கொண்டு வரும் வேலைகளை உச்சபட்ச வேகத்தில் செய்து கொண்டு இருக்கிறார்கள். இதில் அவர்கள் வெற்றி பெறுவார்களானால் ஏமாற்றம் அடையப் போவது அவர்களுக்காக இப்பொழுது கூவிக் கொண்டு இருக்கும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கிகள் தான்.

மூன்று அல்லது நான்கு தலைமுறைகளுக்கு முன் இந்திய சமூகம் எப்படி இருந்தது என்று யோசித்துப் பாருங்கள். ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் முறையான கல்வி பெறாமல் உடல் உழைப்பை மட்டுமே செய்து கொண்டு இருந்தார்கள். அரசு அதிகார வேலை என்பதை அவர்களால் கற்பனை கூட செய்து பார்க்க முடியாமல் இருந்தது. பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் தோன்றிய பிறகு அவர்கள் முன்னெடுத்த போராட்டங்களின் விளைவாக ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் உயர் கல்வியையும், அரசு அதிகார வேலைகளையும் பெற்றனர். இந்த மாற்றங்கள் பார்ப்பனர் அல்லாதார் இயக்கங்கள் வலுவாக இருந்த தமிழ் நாட்டில் தான் சிறப்பாக நடந்தேறி உள்ளதே ஒழிய மற்ற மாநிலங்களில் போதுமான அளவு நடைபெறவில்லை. ஆகவே தமிழ் நாட்டில் மட்டும் தான் அனைத்து இடங்களிலும் அனைத்து வகுப்பு மக்களும் பங்கு கொள்ள முடிகிறது. மற்ற மாநிலங்களில் பார்ப்பனர்களும், மற்ற உயர் சாதியினருமே சமூக இயக்க உயர் நிலை நடவடிக்கைகளில் பங்கு பெற முடிகிறதே ஒழிய ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களுக்கு வாய்ப்பு கிடைப்பது இல்லை.

அனைத்து வகுப்பு மக்களிலும் உள்ள திறமைசாலிகள் சமூக இயக்க உயர் நிலை நடவடிக்கைகளில் பங்கு பெறும் தமிழ் நாடு அனைத்துத் துறைகளிலும் நன்றாக வளர்ச்சி பெற்று இந்தியாவிலேயே சிறந்த மாநிலமாக விளங்குகிறது. பார்ப்பனர்களும் உயர் சாதியினரே பங்கு பெறும் வட மாநிலங்கள் வளர்ச்சியில் படு பிற்போக்கு நிலையில் உள்ளன. இந்நிகழ்வைக் காணும் யாருமே “அனைத்து வகுப்பு மக்களும் அனைத்து நிலை வேலைகளிலும் பங்கு பெறும் முறையே சரியானது” என்று முடிவு எடுத்து, தமிழ் நாட்டைப் போல் இட ஒதுக்கீடு முறையைப் பின்பற்றி இருக்க வேண்டும். ஆனால் பார்ப்பன ஆதிக்க வர்க்கம் “நாட்டின் ஒட்டு மொத்த வளர்ச்சி முக்கியம் அல்ல; மக்கள் நலன் முக்கியம் அல்ல; திறமை இருக்கிறதோ இல்லையோ பார்ப்பனர்களுக்கு உயர்நிலை வேலைகளை அளிக்க வேண்டும்; திறமை இருந்தாலும் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்கள் அடுத்த நிலை வேலைகளையே செய்ய வேண்டும்.” என்ற வர்ணாசிரம அதர்மக் கோட்பாட்டையே நடைமுறைப்படுத்த வேண்டும் முடிவு எடுத்து அதன் வழியே சென்று கொண்டு இருக்கறது.

காங்கிரஸ் கட்சி ஆட்சி செய்த வரை எதிராளிகளின் வினாக்களுக்கு விடை அளிக்க வேண்டுமே என்ற அச்சத்தில் வர்ணாசிரம அதர்ம நடவடிக்கைகளை முன்னெடுப்பதில் சுணக்கம் காட்டி வந்தனர். ஆனால் பா.ஜ.க. ஆட்சிக்கு வந்ததில் இருந்து எந்த விதமான அறத்திற்கும் கட்டுப்படாமல் ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களின் உரிமைகளைப் பறிப்பதிலும், பார்ப்பனர்களைத் தகுதிக்கு மீறி உயர்நிலைகளுக்குக் கொண்டு செல்வதிலும் படுவேகமாகப் பயணித்துக் கொண்டு இருக்கின்றனர்.

இது நாட்டின் ஒட்டு மொத்த முன்னேற்றத்தைக் கடுமையாக பாதிக்கும். இன்று தமிழ் நாட்டில் நாம் துய்த்துக் கொண்டு இருக்கும் பல வசதிகள் நம் எதிர்காலத் தலைமுறையினர் துய்க்க முடியாமல் போகும். அது மட்டும் அல்ல; ஒடுக்கப்பட்ட வகுப்பில் உள்ள திறமை மிக்கவர்களும் அடுத்த நிலை வேலைகளையே செய்யும் படி வற்புறுத்தப்படுவார்கள்.

இன்று மத மயக்கத்தில் ஆழ்ந்து பா.ஜ.க.வுக்கு அதரவாகக் கூப்பாடு போடும் ஒடுக்கப்பட்ட வகுப்பைச் சேர்ந்த சங்கிகளே! பா.ஜ.க. ஆட்சி தொடர்ந்தால் உங்கள் எதிர்காலத் தலைமுறையினருக்கு அதிகாரக் கல்வியும், அரசு அதிகார வேலைகளும் மறுக்கப்படும் என்பதை அறிந்து கொள்ளுங்கள். அவர்களுக்கு உடல் உழைப்புக் கல்வியும், தொண்டுக் கல்வியுமே அளிக்கப்படும். மூன்று தலைமுறைகளுக்கு முன் நம் முன்னோர்கள் உடல் உழைப்பு செய்து கொண்டும், அரசு அதிகாரத்தில் இம்மி அளவும் பங்கு பெறாமலும், “வெந்ததைத் தின்று, விதி வந்தால் சாவோம்” என்று வாழ்ந்து கொண்டு இருந்தார்களே? அந்த நிலைமையில் தான் நம் எதிர்காலத் தலைமுறையினரும் வாழ வேண்டி இருக்கும். அவ்வாறு நேராமல் மதிப்பு மிக்க மனிதர்களாகவே அவர்கள் வாழ வேண்டும் என நீங்கள் நினைத்தால் பார்ப்பன ஆதிக்கத்தை வகை தொகை தெரியாமல் கொடூரமாகத் தூக்கிப் பிடிக்கும் பா.ஜ.க., ஆர்.எஸ்.எஸ். கும்பலை விட்டு வெளியே வாருங்கள் தலைசிறந்த தேச பக்தரும், இந்து மதத்தின் அரிய நூலான சிவஞான போதத்திற்கு விரிவுரை எழுதிய இந்து மதத் தத்துவ ஞானியுமான வ.உ.சிதம்பரனாரின் வழிகாட்டுதலின் படி இந்து மதத்தைக் கவ்வி இருக்கும் களங்கத்தைத் துடைத்து எறியுங்கள்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒடுக்கப்பட்ட வகுப்புச் சங்கிகளே!”

அதிகம் படித்தது