மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஒரு பாமரனின் பார்வையில் இலவசங்கள்

இராமியா

Aug 27, 2022

siragu-ilavasam3இந்தியப் பிரதமர் இலவசங்கள் நாட்டின் பொருளாதாரத்தைச் சீரழிக்கின்றன என்று ஒரு கருத்தை வெளியிட்டார். வழக்கம் போல் “ஊருக்குத் தான் உபதேசம்; நமக்கு இல்லை” என்பது போல் இலவசத் திட்டங்களை அறிவித்த அவருடைய பா.ஜ.க. ஆட்சி செய்யும் உத்திரப் பிரதேசத்தில் இதைக் கூறினார். நமது ஊடகங்களும் பிரதமரின் “ஊருக்குத் தான் உபதேசம்” என்ற அவருடைய பாசாங்குத்தனத்தை வெளிப்படுத்த முனையாமல் தமிழ் நாடு நிதி அமைச்சரிடம் அதைப் பற்றிக் கருத்து கேட்டு உள்ளன. நிதி அமைச்சரோ யாரும் எதிர்பாரா வகையில் “இலவசங்களும் பொருளாதார வளர்ச்சியும்” என்ற தலைப்பில் இந்தியர்கள் அனைவருக்கும் ஒரு பாடத்தை எடுத்து விட்டார். கதி கலங்கிப் போன சங்கிகளும் சங்கி ஊடகங்களும் அவரை எப்படி “கட்டுப்படுத்துவது” என்று தெரியாமல் உச்சநீதிமன்றத்தை அணுகி அவர் சார்ந்து இருக்கும் கட்சியை விமர்சித்து ஒரு கருத்தை வெளியிட வைத்து இருக்கின்றனர். நாம் அவர்களுடன் எல்லாம் போட்டி போடாமல் ஒரு பாமரன் சிந்திக்க முடிகின்ற அளவில் மட்டுமே யோசித்து இலவசங்களால் என்ன விளைகிறது என்று பார்ப்போம்.

எனக்குத் தெரிந்த ஒரு ஏழைப் பெண் – எனக்கு ஒரு விதத்தில் தூரத்து உறவும் கூட – சென்னை வியாசர்பாடி நெசவாளர் குடியிருப்புப் பகுதியில் வசிக்கிறார். அவர் வீடு வீடாகச் சென்று ஊது பத்தி விற்பவர். நாங்கள் சில பொருட்களைக் கடைகளில் வாங்காமல் இவர் போன்றவர்களிடம் வாங்குவது வழக்கம். அவர் அடிக்கடி பேருந்துக்கு ஆகும் செலவைப் பற்றிப் புலம்புவார். சில சமயங்களில் இந்த வியாபாரத்தில் வரும் வருமானம் பேருந்துக் கடட்டணத்துக்கே சரியாகப் போய் விடுகிறது என்று கூறுவார். சில சமயங்களில் பேருந்துக் கட்டண அளவில் கூட வருமானம் வராத போது வியாபாரத்துக்குப் புறப்படும் துணிவே வருவது இல்லை என்று மிகவும் வருத்தப்படுவார்.

2021இல் தமிழ் நாடு அரசு பெண்களுக்குப் பேருந்துப் பயணத்தை இலவசம் ஆக்கிய பிறகு, சில மாதங்கள் கழித்து அவரை அலைப் பேசியில் தொடர்பு கொண்டு பேசிய பொழுது எங்கள் வீட்டுப் பக்கம் வராதது குறித்துக் கோபம் கொள்ள வேணடாம் என்றும், இப்பொழுது பேருந்து இலவசம் என்று ஆகி விட்டதால் தொலை தூரப் பகுதிகளுக்கும் சென்று வியாபாரம் செய்ய முடிகிறது என்றும், “வியாபாரம் ஆகாவிட்டால் பேருந்து செலவு நஷ்டம் ஆகுமே” என்ற கவலை இல்லை என்றும் கூறினார். மேலும் நஷ்டம் ஆகாது என்ற உணர்வே தனக்கு ஒரு மன வலிமை தருவதாகவும், அது தன் வியாபாரத் திறனை அதிகமாக்குவதாகவும் கூறினார்.

siragu free

நடுத்தர வர்க்கத்தைச் சேர்ந்த எனக்கு முதலில் பெண்களுக்குப் பேருந்துக் கட்டணம் இல்லை என்ற அறிவிப்பு வந்த போது “இதுவெல்லாம் மலிவான விளம்பரம்” என்று தான் தோன்றியது. ஆனால் அந்தப் பெண் தன் வியாபாரத் திறனை வளர்த்துக் கொள்வதற்கு அது ஒரு காரணியாகி இருக்கிறது என்று அறிந்த போது என்னுடைய படிப்பறிவை விட நம் முதல்வரின் அனுபவ அறிவு எவ்வளவு மேலாக இருக்கிறது என்பதை உணர்ந்தேன்.

இதே போல கிராமத்தில் உள்ள பெண்களுக்கு, சைக்கிள் வண்டி இலவசமாக அளித்த போது இது தேவையா என்று தான் நினைத்தேன். ஆனால் சில ஆண்டுகளில் கிராமத்தில் உள்ள கல்வி பெற்ற பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து இருக்கிறது என்பதை அறியும் போது அந்த இலவசமும் சரியானது மட்டும் அல்ல, தவிர்க்கக் கூடாதது என்று தோன்றியது.

தமிழ் நாடு அளவில் மட்டுமே அல்ல, உலக அளவில் இலவசம் ஒரு பெரிய அளவில் நன்மை புரிந்து இருப்பதையும் இங்கு சுட்டிக் காட்ட விரும்புகிறேன். ஹாசெல்ட் (Hasselt) என்பது பெல்ஜியம் நாட்டின் ஒரு நகரம். இந்நகரத்தில் பேருந்து போன்ற பொதுப் போக்குவரத்து முறையை அவ்வளவாகப் பயன்படுத்தாமல் மக்கள் தனி வாகனங்களையே பயன்படுத்திக் கொண்டு இருந்தனர். இதனால் வாகனப்புகை அதிகமாக உமிழப்பட்டு நகரம் முழுவதும் காற்று மாசினால் பாதிக்கப்பட்டு மக்கள் வாழத்தகுதி இல்லாத நகரமாக மாறிக் கொண்டு இருந்தது. இதற்குத் தீர்வு என்ன என்று யோசித்த அரசு 1997 ஜூலை முதல் பேருந்துப் பயணம் அனைவருக்கும் இலவசம் என அறிவித்தது. அது மட்டும் அல்ல, தனி வாகனங்களில் பயணம் செய்தால் குறிப்பிட்ட நேரத்தில் செல்ல வேண்டிய இடங்களுக்குச் சேர முடியாதபடி போக்குவரத்து விதிகளைக் கடுமையாக மாற்றியது.

இதன் விளைவாக ஒரே ஆண்டில் காற்றில் இருந்த மாசு குறையத் தொடங்கியது. பின் பத்து ஆண்டு காலத்தில் ஹாசெல்ட் நகரம் மாசு முற்றிலும் நீங்கி ஒரு தூய்மையான நகரமாக ஆகி விட்டது. அதன் பின்னும் சில காலம் இந்த அனைவருக்கும் இலவசம் திட்டம் ஏப்ரல் 2013 வரை தொடர்ந்தது. ஏப்ரல் 2013ககுப் பின் இருபது வயதுக்கு மேல் உள்ளோருக்கு இலவசம் ரத்து செய்யப்பட்டது. இப்போதும் மக்கள் பெரும் அளவில் பேருந்துகளை பயன்படுத்துகின்றனர். சிலர் தனி வாகனங்கனளையும் பயன்படுத்துகின்றனர். நகரம் தூய்மையாகவே இருக்கிறது.

நமது முதலமைச்சர் பெண்களுக்கு இலவசப் பேருந்துத் திட்டத்தை அறிவிக்காமல் மட்டும் இருந்திருந்தால், சென்னை, வியாசர்பாடி, நெசவாளர் குடியிருப்பில் வாழும் அந்த ஏழைப் பெண் போல் உள்ள பலர் பொருளாதார தற்சார்பு நிலையைப் பெற்று இருக்க முடியாது.

தமிழ் நாடு அரசு கிராமப்புறப் பெண்களுக்கு இலவச சைக்கிள்களை அளிக்காமல் மட்டும் இருந்திருந்தால், கிராமப்புறத்தில் படிப்பறிவு பெற்ற பெண்களின் எண்ணிக்கை உயர்ந்து இருக்காது.

ஹாசெல்ட் நகர நிர்வாகம் இந்த இலவசப் பேருந்துத் திட்டத்தை மட்டும் செயல்படுத்தாமல் இருந்திருந்தால் அந்நகரத்தை விட்டு மக்கள் வெளியேறி நகரமே வெறிச்சோடிப் போய் பெல்ஜியம் நாட்டின் பொருளாதாரமே கேள்விக்கு உள்ளாகி இருக்கும்.

மேற்கண்ட நிகழ்வுகளில் இருந்து நாம் பெற வேண்டிய படிப்பினைகள் என்ன? ஹாசெல்ட் நகரத்தில் மாசு கட்டுப்பாட்டில் வந்த உடன் பெரும் அளவில் இலவசம் ரத்து செய்யப்பட்டு விட்டது.

அதே போல் பொருளாதாரத்தில் நலிவுற்ற பெண்கள் பெரும் அளவில் தற்சார்பு அடையும்போது பெண்களுக்கான இலவசப் பேருந்துத் திட்டமும் ரத்து செய்யப்படலாம்.

அனைவரும் கல்வி அறிவு பெறும் நிலையில் இலவச சைக்கிள் திட்டமும் ரத்து ஆகலாம்.

“சரி! பாமரன் என்ற போர்வையில் ஒளிந்து கொண்டு இலவசங்களை நியாயப்படுத்தக் கூடாது. கடைத் தேங்காயை எடுத்து வழிப் பிள்ளையாருக்கு உடைப்பது போல் யாரோ வரி செலுத்த அந்த வரிப் பணத்தை எடுத்து யாருக்கோ கொடுப்பது என்ன நியாயம்?” என்று சிலர் மெல்லிய குரலில் (அதுவும் தமிழ் நாடு நிதி அமைச்சர் அருகில் இல்லை என்பதை உறுதி செய்து கொண்டு) முனகுவது கேட்கிறது.

இந்த இலவசத் திட்டங்களில் யாரோ சிலருடைய வரிப்பணத்தில் இருந்து அவர்களுக்கு எடுத்துத் தரப்படவில்லை. இத்திட்டங்களினால் பயன் அடைவோர் வாங்கும் பொருட்களில் அவர்கள் விற்பனை வரி செலுத்துகிறார்கள். அது மட்டும் அல்ல. ஒரு பொருள் உற்பத்தி ஆகும் இடங்களில் விதிக்கப்படும் அனைத்து வரிகளும் அப்பொருளின் விலையில் உட்பட்டே உள்ளன. அந்த வரிகளை எல்லாம் அவர்கள் தான் செலுத்துகின்றனர். எதையும் அப்பொருட்களை உற்பத்தி செய்யும் முதலாளி தன் பொறுப்பில் ஏற்றுக் கொள்வது இல்லை. ஆகவே இந்த வாதம் அபத்தமானது.

மக்கள் செலுத்திய வரிப்பணத்தையும், இலவசத் திட்டங்களுக்காகச் செய்யப்படும் பணத்தையும் ஒப்பிட்டுப் பார்த்தால் இலவசத் திட்டங்களுக்காக ஒதுக்கப்படும் தொகை மிகவும் சொற்பமே.

ஆகவே “நியாயவான்களே”! ஏழை மக்களின் நலன்களுக்காகச் செயல்படுத்தப்படும் நலத்திட்டங்களை இலவசத் திட்டங்கள் என்று எள்ளி நகையாட வேண்டாம். அப்படி எள்ளி நகையாட வேண்டும் என்ற தீராத ஆசை இருந்தால் பெருமுதலாளிகளுக்குத் தள்ளுபடி செய்யப்படும் கடன் தொகைகளை எள்ளி நகையாடுங்கள்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஒரு பாமரனின் பார்வையில் இலவசங்கள்”

அதிகம் படித்தது