மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

ஓடி விளையாடாதே பாப்பா, நீ ஓய்ந்தே நோய் பெறு பாப்பா

சித்திர சேனன்

Nov 8, 2014

vilayaadaadhe paappaa1இன்று பள்ளிக்குச் செல்லும் மாணவர்களுக்கு தமிழ், ஆங்கிலம், இந்தி, கணக்கு, அறிவியல், சமூக அறிவியல், புவியியல், உயிரியல், கணக்குப் பதிவியல், கணினியியல் எனக் கூறிக்கொண்டே போகும் அளவிற்கு அட்டவணை தயாரிக்கப்பட்டு தனியார் பள்ளிகளால் தரப்படுகிறது. அதில் உப்புக்குச் சப்பாக உடற்கல்வி என்ற பாடவேளையும் இடம் பெற்றிருக்கும்.

எனக்குத் தெரிந்து தற்போது தமிழகத்தில் செயல்பட்டு வரும் பெரும்பாலான தனியார் பள்ளிகளில் உடற்பயிற்சி பாட வேளையானது அட்டவணைக் குறிப்பில் மட்டுமே இருக்கிறதே தவிர, அதை மாணவர்களுக்கு செயல்படுத்துவதில் எப்பள்ளியும் முனைப்பு காட்டுவதில்லை. அப்படியே கூட பள்ளிகளில் மாணவர்களை விளையாட அனுமதித்தாலும் மற்ற பாடம் எடுக்கும் ஆசிரியர்கள்,அந்த உடற்கல்வி ஆசிரியரிடம் சென்று “நான் இன்னும் எனது பாடத்தினை முடிக்கவில்லை, வரும் பருவத்தேர்வுக்குள் இந்தப் பாடத்தினை நான் முடிக்க வேண்டும். ஆதலால் இந்த உடற்பயிற்சி பாடவேளையை நான் எனது வகுப்பை எடுத்துக்கொள்கிறேன்” என அனுமதி பெற்று நடத்த ஆரம்பித்து விடுகின்றனர்.

இந்த செயல்பாட்டினை எந்தப் பள்ளி நிர்வாகமும் தவறு எனக் கூறுவதில்லை. மாறாக கண்டும் காணாமலே விட்டு விடுகின்றன. இது ஆசிரியர், பள்ளி நிர்வாகத்தினரைப் பொறுத்தவரை சரியானதென்றால் இந்த நிலைக்கு ஆளாக்கப்படும் பள்ளி மாணவர்களின் உடல்,மனநிலையை என்றாவது இந்த மேதாவிகள் யோசித்துப் பார்த்ததுண்டா?.

vilayaadaadhe paappaa5ஒரு நாளில் 8 மணி நேரமும் சதா நாற்புறச்சுவற்றுக்குள்ளேயே அமர்ந்து இந்த ஆசிரியர்களால்,பள்ளி நிர்வாகிகளால் படிக்க முடியுமா? முடியாது. படித்து பக்குவப்பட்ட பெரியோர்களுக்கே இந்த நிலை என்றால் மாணவர்களின் மனநிலை எப்படி இருக்கும்?. ஆதலால் தான் பள்ளிக்கு வரும்போது பெரும்பாலான மாணவர்கள் இறுக்கத்துடன் வருகின்றனர். பள்ளியின் இறுதி மணி ஒலித்ததும் அன்று இழந்த மொத்த மகிழ்ச்சியையும் அந்த கடைசி மணி ஒலிக்கும் போது அவர்கள் முகத்தில் காண முடியும்.

உளவியல் ரீதியாக நமது மனம், அறிவானது 1 மணி நேரத்தில் 25 நிமிடத்திற்கு மேல் எந்த செய்தியையும் உள்வாங்காமல் சோர்ந்து விடும் என்கின்றனர் உளவியலாளர்கள். அப்படி இருக்க 8 மணி நேரம் மாணவர்களுக்கு புத்தகம், நோட்டு, எழுத்து, பரீட்சை, படிப்பு என்று இருந்தால் இவர்களின் உடலையும் மனதையும் மீள்திறன் ஆக்குவது உடற்பயிற்சி மட்டுமே.

1 மணி நேர உடற்பயிற்சிக்குப் பின் வகுப்பில் வந்து அமர்ந்து பாடத்தைக் கவனிக்கும் மாணவர்களின் ஆற்றல் அதிகரிக்கிறது. அவர்களின் சிந்தனை,கவனம்,ஞாபகம் எல்லாம் பன்மடங்கு அதிகரித்து இன்னும் பாடத்தை சிறப்புடன் உள்வாங்க உடற்பயிற்சி உதவுகிறது. இதில் மதிய உணவு இடைவேளைக்குப் பிறகு நன்கு தூக்கம் வரும், உடல் மதமதப்பாகும் வேளையில் பாடத்தைத் தொடங்கும் போது பெரும்பாலான மாணவர்கள் மயக்க நிலையில் பாடத்தைக் கவனிக்கும் நிலைக்குத் தள்ளப்படுகின்றனர். இதற்கு ஒரு மாற்று வடிவத்தை இதுவரை எந்த தமிழகப் பள்ளியிலும் முன்னெடுக்கவில்லை. மாணவர்கள் எப்படி இருந்தால் நமக்கென்ன, நமது பணி பாடம் நடத்தி முடிப்பது என்பதைக் கருத்தில் கொண்டு செயல்படும் அலட்சிய ஆசிரியர்கள் இங்கே அதிகம்.

vilayaadaadhe paappaa8காலை உணவு அருந்திவிட்டு வந்து அமர்ந்தே பாடத்தை கவனிப்பது, மதிய உணவு அருந்திவிட்டு வந்து மாலை வரை அமர்ந்தே பாடத்தை கவனிப்பது, பரீட்சை எழுதுவது என்று தொடர் அமர்தல் நிலைக்குத் தள்ளப்பட்ட தனியார் பள்ளி மாணவர்களுக்கு இன்று செரிமானமின்மை, ரத்த அழுத்தம், இதயம் சம்பந்தப்பட்ட நோய்கள் என்று வளர ஆரம்பித்திருக்கிறது.

உலக அளவில் பள்ளிப் பருத்தினர் நான்கு சதவீதம் பேருக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை உள்ளது. 1994-ஆம் ஆண்டில் இந்தியாவில் 4 சதவீதம் குழந்தைகளுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை இருந்தது. ஆனால் தற்போது 8.4 சதவீதமாக உயர்ந்துள்ளது.

vilayaadaadhe paappaa9சமீபத்தில் புதுச்சேரியில் உள்ள பள்ளி மாணவ-மாணவிகளில் 9.6 சதவீதம் நபர்களுக்கு உயர் ரத்த அழுத்தப் பிரச்சனை இருப்பதாக புதுச்சேரி இந்திராகாந்தி அரசு மருத்துவக் கல்லூரி பேராசிரியர் மருத்துவர் கவிதா அவர்கள் தெரிவித்துள்ளார். இதில் மேலும் 10.7 சதவீத மாணவ-மாணவிகள் உயர் ரத்த அழுத்தத்திற்கு முந்தைய நிலையில் இருப்பதாகவும் தெரிவித்துள்ளார். இந்த உயர் ரத்த அழுத்த பிரச்சனையானது ஆரம்ப நிலையில் வெளியே தெரியாது. குறிப்பிட்ட அளவைத் தாண்டும் போது தளர்ச்சி, படபடப்பு, மயக்கம், தலைவலி போன்ற அறிகுறிகள் தெரியலாம். ஆரம்பத்திலேயே இதைக்கண்டு சிகிச்சை எடுக்காவிட்டால் இன்றைய பள்ளி மாணவ-மாணவிகளுக்கு மாரடைப்பு, பக்கவாதம், சிறுநீரக செயலிழப்பு, சிறுநீரகப் பாதிப்பு, கண் தொடர்பான பிரச்சனைகள் ஏற்படலாம் என எச்சரிக்கிறார் இம்மருத்துவர்.

இன்று படிப்பு விசயத்தில் கறார் காட்டும் பேர்வழிகளாக பெற்றோர்களும் ஆசிரியர்களும் இருக்கிறார்களே தவிர, இவர்களின் உடல் நிலை, மன நிலை ஆரோக்கியம் பெற என்ன வழி என்று யோசிக்கத் தவறி விடுகின்றனர். இன்று பெரும்பாலான மாணவர்களை ஆசிரியர்கள் பள்ளியில் விளையாட விடுவதில்லை, பெற்றோர்கள் வீட்டில் விளையாட விடுவதில்லை. இப்படி இருந்தால் மாணவர்கள் கல்வி பெற்ற நோயாளிகளாக மாறிவிடுவர்.

விளையாட்டின் பயன்கள்:

vilayaadaadhe paappaa6பள்ளியிலோ, வீட்டிலோ குழந்தைகள் தினமும் குறைந்தபட்சம் 1 மணி நேரம் விளையாடினால்தான் அவர்களின் புத்திக் கூர்மை அதிகரிக்கிறது என அண்மை ஆய்வு ஒன்று தெரிவிக்கிறது. அதிலும் குழந்தைகள் தங்கள் வயதை ஒத்த குழந்தைகளுடன் விளையாட வேண்டும் என்பதில்தான் குழந்தைகளின் புத்திக்கூர்மை அதிகரிக்கிறது என்கின்றனர் இல்லினாய்ஸ் (Illinois) பல்கலைக்கழக குழந்தைகள் நல ஆய்வாளர்கள்.

Pediatrics – என்ற மருத்துவ இதழில் குழந்தைகள் நலம் பற்றிக் கூறுவதாவது, 2,3,4 –ஆம் வகுப்பு படிக்கும் 221 குழந்தைகளை ஆய்வு செய்ததில், இந்த குழந்தைகள் 9 மாதங்கள் தினமும் பள்ளி வகுப்புகள் தொடங்குவதற்கு முன்பு 1 மணி நேரம் மெகா ஓடு வகையில் உடற்பயிற்சியை கட்டாயமாகச் செய்தார்கள். இதற்கு Fit Kids Programme என்று பெயர்.

இந்த ஆய்வை தொடங்குவதற்கு முன்பும், பின்பும் இவர்களின் மூளைச் செயல்பாடுகள் அறிவியல் ரீதியாக ஆராயப்பட்டன. இதில் தொடர்ந்து 9 மாதங்கள் செய்த உடற்பயிற்சிக்குப் பிறகு பாடங்களைப் புரிந்து கொள்ளும் திறன், பொது அறிவு என எந்த பாடத்தையும் கிரகிக்கும் தன்மையில் முன்னேற்றம் ஏற்பட்டு இருந்ததாக இந்த ஆய்வில் உறுதி செய்யப்பட்டுள்ளனர்.

இந்த ஆய்வில் குழந்தைகளிடம் கவனித்த விடயமாவது, தினமும் 1 மணி நேரம் உடற்பயிற்சி செய்த குழந்தைகள், தங்களைச் சுற்றி நடக்கும் தேவையில்லாத பல விசயங்களில் கவனத்தை சிதறவிடுவதில்லை. தங்களின் அன்றாட விசயங்களில் மட்டும் கவனமாக இருந்தார்கள்.

மற்றவர்களுடன் கலந்து பழகும் தன்மை, இயல்பிலேயே குழந்தைகளிடம் உண்டு. தங்கள் வயதையொத்த குழந்தைகளுடன் சேர்ந்து விளையாடும் போது, அவர்களின் தன்னம்பிக்கை, விட்டுக்கொடுக்கும் தன்மை, உதவி செய்தல் என்று பல நல்ல பண்புகளும் கூடவே வளர்கின்றன என்கிறார் இல்லினாய்ஸ் பல்கலைக் கழக பேராசிரியர் மருத்துவர் சார்லஸ் ஹில்மேன்.

வகுப்புகள் காலையில் ஆரம்பமாகும் முன்பே ஒரு மணி நேரம் குழந்தைகள் சுறுசுறுப்பாக உடற்பயிற்சி செய்தால் அன்று முழுவதும் அதே உற்சாகத்துடன் இருப்பது அறிவியல் பூர்வமாக உறுதியானதைத் தொடர்ந்து, All Party Commission on Physical activity என்ற பிரிட்டிஷ் அமைப்பு 7 வயதிற்கு உட்பட்ட அனைத்து குழந்தைகளுக்கும் உடற்பயிற்சியை கட்டாயமாக்க இங்கிலாந்தில் உள்ள அனைத்து பள்ளிகளும் பரிந்துரை செய்துள்ளது.

சரி,பிற நாட்டுப் பள்ளிகள் இந்த உடற்பயிற்சி விசயத்தின் மேன்மையை புரிந்துகொண்டு செயல்படும் போது நம் தமிழகப் பள்ளிகளில் மட்டும் இதற்கு எதிர்மறையான செயலில் ஈடுபட்டு வருவது நாளைய இளம் தலைமுறையினை உடலளவிலும் மனதளவிலும் முடமாக்கும் செயல் என்றே தோன்றுகிறது.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “ஓடி விளையாடாதே பாப்பா, நீ ஓய்ந்தே நோய் பெறு பாப்பா”

அதிகம் படித்தது