மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கக்கூஸ் ஆவணப்படத்தின் மதிப்பாய்வு

இராமியா

Sep 2, 2017

Siragu kakoos1

துப்புரவுத் தொழிலாளர்களை அரசாங்கமும், நீதித்துறையும் படுத்தும் கொடுமைகளையும், அவர்கள் இந்த நச்சுச்சூழலில் சிக்கி வெளியே வரமுடியாமல் இருக்கும் சமூகச்சூழலையும் விளக்கி, தோழர் திவ்யாபாரதி “கக்கூஸ்” என்ற ஆவணப்படத்தை வெளியிட்டு இருக்கிறார்.

இப்படம் துப்புரவுத் தொழிலாளர்களின் அவலங்களை மிகத் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. அதுமட்டுமல்ல, அரசாங்கத்தின், நீதித்துறையின் மனிதாபிமானம் அற்ற போக்கையும் தெளிவாக எடுத்துக்காட்டுகிறது. துப்புரவுத் தொழிலாளர்கள் இத்தொழில் வேண்டாம் என்று வேறு தொழில்களுக்குப் போய்விடலாம் என்று கடுமையாக முயன்றாலும், அவர்களால் வெளியே வரமுடியாதபடி, இச்சமூகம் அவர்களை வலுக்கட்டாயமாக அழுத்திவைத்து இருப்பதும் இதில் காட்டப்பட்டு உள்ளது.

“இப்பொழுதெல்லாம் யார் சாதியைப் பார்க்கிறார்கள்?, அப்படியே இருந்தாலும் கிராமப்புறங்களில் ஓரளவு இருக்கலாமே ஒழிய நகர்ப்புறங்களில் இல்லவே இல்லை” என்று அதிமேதாவித்தனமாகப் பேசும் அறிவுஜீவிகளை இப்படம் நார்நாராகக் கிழித்துத் தொங்கப்போட்டு இருக்கிறது.

நகர்ப்புறங்களில் சாதிக்கொடுமையில் இருந்து எழமுடியாமல், மலக்குழியிலேயே வெந்துசாகும் துப்புரவுத் தொழிலாளர்களையும், தங்கள் குழந்தைகளை இத்தொழிலில் இருந்து தப்பவைத்துவிடவேண்டும் என்று கடுமையாக முயன்று, பல தியாகங்களைச் செய்து, படிக்க வைத்தபிறகு, அப்படிப் படித்தவர்களும் துப்புரவுத் தொழிலையே செய்ய வற்புறுத்தும் இச்சமூகத்தின் கொடூரத்தன்மையை ஆணித்தரத்துடன் இப்படம் எடுத்துக்காட்டுகிறது.

Siragu kakoos2

இக்கொடுமைகளை நீக்கவேண்டும் என்று “வீராவேசமாகச்” சட்டங்களை இயற்றினாலும், எந்த அடிப்படை மாற்றமும் ஏற்பட்டுவிடக்கூடாது என்று முன்னெச்சரிக்கையாக வேண்டிய எதிர்மறைக் கூறுகளையும் அச்சட்டங்களில் திணித்து இருப்பதை இப்படம் தெளிவாகச் சுட்டிக்காட்டுகிறது.

ஒழுங்கான முறையில் சட்டங்களை இயற்றினாலேயே, அவை நடைமுறைப்படுத்த முடியாதபடியான வழிமுறைகளைக் கண்டுபிடிக்கும் நமது அதிகாரவர்க்கம், சட்டம் ஏற்படுத்திக் கொடுத்து இருக்கும் வழிகளைப் பயன்படுத்தத் தவறுமா?

“இப்பிரச்சினையில் அரசியல்வாதிகள், அதிகாரவர்க்கம், நீதித்துறை ஆகியவை மட்டுமா மனிதத்தன்மை இல்லாமல் நடந்துகொள்கின்றன?” என்று கேட்கும் இப்பட இயக்குநர் தோழர் திவ்யாபாரதி, முற்போக்கு பற்றிப்பேசும் இடதுசாரி அரசியல் கட்சிகளும் இதைப்பற்றி மவுனம் சாதித்தது/சாதிப்பது குறித்து வியப்பு தெரிவிக்கிறார். அதுமட்டும் அல்ல, இம்மக்களின் அவலங்களைக் களையவேண்டிய பொறுப்பு உள்ள, தாழ்த்தப்பட்ட வகுப்புத்தலைவர்களும் இவர்களைச் சுரண்டுவதை மிகவும் வேதனையுடன் சுட்டிக்காட்டுகிறார்.

துப்புரவுத் தொழிலாளர்களை மலக்குழியிலேயே வீழ்த்தி வைத்திருக்கும் சமூகத்தின் ஒவ்வொரு உறுப்பினரையும் குற்றஉணர்வு கொள்ளவைப்பதே தன் முதல் நோக்கம் என்று தோழர் திவ்யா கூறி இருக்கிறார்.

மேலும் அதன் அடிப்படையில் மக்களைத் திரட்டி இந்த இழிவான முறைக்கு எதிராகப் போராடி ஒழிக்க வேண்டும் என்றும் அவர் கூறியுள்ளார்.

தோழர் திவ்யா கூறுவது மிகவும் சரி! துப்புரவுத் தொழிலாளர்களை இந்நிலையில் வைத்திருக்கும் நம் ஒவ்வொருவரையும் கொலைக்குற்றத்தைவிட மிக மோசமான குற்ற உணர்வு உறுத்தத்தான் வேண்டும்.

ஆனால் இப்படத்தைக் காணவே மறுக்கும் பலர் இருக்கவே செய்கின்றனர். [இந்நிலையில் அமெரிக்காவில் சான்பிரான்சிஸ்கோ நகரில் அம்பேத்கர் வாசகர்கள் வட்டம் (Ambedkar King Study Circle) எனும் அமைப்பும், பிறஅமைப்புகளும் சேர்ந்து 13.8.2017 அன்று இப்படத்தைத் திரையிட்டு இருப்பதும், மேலும் பல ஊர்களில் திரையிடத் திட்டமிட்டு இருப்பதும் ஒரு உற்சாகத்தைத் தருகிறது]பார்த்தவர்களில் பலரைக் குற்றஉணர்வு உறுத்தவே செய்கிறது.

ஆனால் இவ்வளவு தெளிவான ஆவணப்படத்தைப் பார்த்தபிறகும், குற்றஉணர்வு உறுத்தாமல் இருப்பவர்களும் இருக்கவே செய்கின்றனர். இது முற்போக்கு உள்ளம் கொண்டவர்களின் பணிச்சுமையைக் கடுமையாக அதிகரிக்கிறது.

சரி! இப்பிரச்சினைக்குத் தீர்வு என்ன?  அத்தீர்வைச் செயல்படுத்த முனைந்தால் அதை எதிர்க்கும் சக்திகள் யாவை? அவற்றை எப்படி எதிர்கொள்ள வேண்டும்?

தொழில்நுட்பம் மிகவும் வளர்ந்துள்ள இக்காலத்தில் இதற்குத் தீர்வு காண்பது மிகமிக..மிக எளிது. தொழில்நுட்பம் இன்றைய நிலையை விடப் பாதியளவுகூட வளராத காலத்திலேயே, பணக்கார நாடுகள் மட்டுமல்லாமல் ஏழைநாடுகளேகூட (சொல்லப்போனால் இந்தியாவை விட ஏழை நாடுகளேகூட) மனிதக்கழிவுகளை மனிதர்களே கையால் அள்ளும் பிரச்சினை இல்லாதபடி திட்டமிட முடிந்திருக்கிறது. ஆகவே இதற்குத் தொழில்நுட்பத்தீர்வு காண்பது மிகமிக…. மிகஎளிது. அப்படி என்றால் தடையாக இருப்பது எது?

இன்று நம் நகரங்களில் கழிவுநீர் எடுத்துச் செல்லும் குழாய்களின் கொள்திறனைவிட அதிக அளவில் கழிவுநீர் உற்பத்தி ஆகிறது.  ஆங்கிலேயர்கள் போட்ட கால்வாய்க் குழாய்களின் அளவை மக்கள்தொகைப் பெருக்கத்திற்கு ஏற்ப அதிகரிக்கவில்லை என்பது மட்டுமல்ல, புதிதாக அமைக்கும் குழாய்களின் அளவேகூட ஒரு ஆண்டிற்குள்ளேயே போதாமல் போகும்படியாகத்தான் வடிவமைக்கப்படுகிறது. ஏன் இப்படி நடக்கிறது? ஏனெனில் துப்புரவுத் தொழிலாளர்களின் துயரமும் வலியும் என்னவென்றே புரிந்துகொள்ள முடியாதவர்கள் தான் திட்டமிடும் வேலையில் அமர்ந்து இருக்கிறார்கள். சரி! இந்நிலையை மாற்ற என்ன செய்யவேண்டும்?

இன்றைய கழிவுநீர் வடிகால் குழாயின் அளவு போதுமானதாக இல்லை.  இந்த வடிகுழாய்களை மற்ற நாடுகளின் தரத்திற்கு ஈடாக வடிவமைக்க வேண்டும்.

Siragu kakoos3

அதாவது கழிவுநீர் எந்தஒரு சூழ்நிலையிலும் தடைஇல்லாமல் இறுதிவரை பயணம் செய்யத் தேவைப்படும் அதிகபட்ச அளவைவிட குறைந்தபட்சம் மூன்று மடங்கு அதிகமாக இருக்கவேண்டும்.

இப்படிப்பட்ட கழிவு நீர்ப்பாதையை அமைக்க மிகப்பெரும் நிதியை ஒதுக்கவேண்டி இருக்கும். இதை விவாதிக்கும்போது பெரும்பாலான மக்களுக்குப் பிரச்சினை இருப்பதாகத் தோன்றாது. ஆனால் நடைமுறைப்படுத்த முனைந்தால் மிகப்பெரும் அரசியல் பிரச்சினை எழும்.

இவ்வளவு பெரிய நிதியை இத்திட்டத்திற்குத் திருப்பிவிடவேண்டும் என்றால், இப்பொழுது செயல்பட்டுக் கொண்டிருக்கும் எந்தத் திட்டங்களுக்கு வெட்டுவிழ வேண்டும் என்று முடிவெடுக்க வேண்டியிருக்கும்.

ஆதிக்க சக்திகளாக இருப்பவர்கள் தங்கள் நலன்களுக்கான திட்டங்களின் நிதியில் ஏதோ சிறிதளவு விட்டுக்கொடுத்துவிட்டு, உழைக்கும் மக்களின் நலன்களுக்கான திட்டங்களைப் பெரும் அளவில் வெட்டிவிடத்தான் முயல்வார்கள்.

அம்மாதிரி முயற்சிகள் ஒடுக்கப்பட்ட மக்களிடையே உள்ள முரண்பாடுகளை மேலும் கூர்மையாக்குவதில்தான் முடியும். அதுமட்டும்அல்ல, ஒடுக்கபட்ட வகுப்புமக்களின் நலன்களுக்கான நிதியில் 100% ஐத் திருப்பி விட்டாலும் இத்திட்டத்திற்குப் போதுமானதாக இருக்காது. ஆகவே ஒடுக்கப்பட்ட வகுப்பு மக்களிடையே கலவரத்தை மூட்டிவிட்டு இறுதியில் பழைய நிலையே தொடரும்நிலை ஏற்படும்.

ஆதிக்கசக்திகளின் அயோக்கியத்தனமான நலன்களுக்காக ஒதுக்கப்படும் நிதியை முழுமையாக வெட்டுவதுதான் இத்திட்டத்தைச் செயல்படுத்துவதற்கான ஒரே வழியாகும்.

இந்நிலையில் முற்போற்குச் சக்திகள் என்ன செய்யவேண்டும்? இந்தியஅரசு ஆதிக்கசாதியினரின், பெரு முதலாளிகளின் (கூடாத) நலன்களுக்காக நெஞ்சு பொறுக்காத அளவைவிட மிகக்கொடூரமான அளவு நிதியை ஒதுக்கி வீணடிக்கிறது.

எடுத்துக்காட்டாக, வெளிநாட்டுவாழ் இந்தியர்களின் பிள்ளைகளில், அந்நாட்டில் உயர்கல்விக்குத் தகுதிபெற முடியாதவர்களுக்கு,  இந்தியாவில் உள்ள உயர்கல்வி நிலையங்களில் இடம்அளிப்பது மட்டுமல்லாமல், அவர்களுடைய கல்விச்செலவு முழுவதையும் இந்தியஅரசே ஏற்றுக்கொள்கிறது. இத்திட்டத்தில் 90%க்கும் மேல் பயன்பெறுவது பார்ப்பனர்களே.
இது முழுமையாகத் தவிர்க்கப்பட்டே தீர வேண்டிய செலவினம். இது ஒரு புறம் இருக்கட்டும்.

காஷ்மீர்ப் பார்ப்பனர்களை அகதிகள் என்று பெயரிட்டு, மனம் பதைபதைக்கும் அளவைவிட மிக அதிகமான அளவு சலுகைகளை அள்ளித்தருகிறது இந்தியஅரசு.

உண்மை என்னவென்றால் அவர்கள் அகதிகளே அல்லர். அவர்கள் காஷ்மீருக்குச் சென்று வாழ்வதற்கு இம்மி அளவும் தடை இல்லை. ஆனால் அவர்கள் தங்கள் மேலாண்மைக்கு மற்றவர்கள் கட்டுப்பட்டு இருக்கவேண்டும் என்ற வர்ணாசிரம அதர்மநினைப்பும், காஷ்மீர் மக்கள் அதை ஏற்றுக்கொள்ள மறுப்பதும்தான் இந்தியஅரசுக்குப் பிரச்சினையாக இருக்கிறது.

வர்ணாசிரம அதர்ம எண்ணத்தைக் கைவிட்டுவிட்டால் பண்டிட்டுகளுக்காக ஒதுக்கப்படும் மிகப்பெரும் நிதி முழுவதையும் இத்திட்டத்திற்குத் திருப்பிவிட முடியும்.

இதுபோல் தகுதி இல்லாத சுகத்தைப் பார்ப்பனர்கள் மட்டுமே அனுபவிப்பதற்காக எண்ணற்ற திட்டங்களை நம் கண்களுக்குப் புலப்படாமலேயே அரசு வைத்துக்கொண்டு உள்ளது.  அவற்றை எல்லாம் முழுமைமயாக வெட்டிவிட்டால் இத்திட்டத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டிவிடலாம்.

அதுமட்டும் அல்லாமல் பெரு முதலாளியக் குழுமங்களுக்காக வீணாக்கும் நிதியை முழுமையாக வெட்டிவிட்டால் இத்திட்டத்தைச் செயலாக்கம் செய்வதற்கு மட்டுமல்ல, மேற்படி துப்புரவுத் தொழிலாளர்களின் மறுவாழ்வுக்குத் தேவையான நிதியும் எளிதில் கிடைத்துவிடும்.

நாம் போராட்டத்தை எங்கிருந்து தொடங்கப்போகிறோம்?


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கக்கூஸ் ஆவணப்படத்தின் மதிப்பாய்வு”

அதிகம் படித்தது