மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கடற்காலமானி: நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வு

தேமொழி

Jul 9, 2022

இன்று அடுத்த ஊரில் நமக்கு அறிமுகம் இல்லாத ஒரு புதிய முகவரியைத் தேடிக் கண்டுபிடித்துச் செல்ல, நம் கைப்பேசித்திரையில் உலக வரைபடத்தைத் திறந்து, விண்ணில் நிறுத்திய செயற்கைக்கோள் தரும் ‘புவியிடக்குறிப்புச் செய்தி’ (GPS-Global Positioning System) உதவியுடன் இடம் தெரிந்து சென்று விடுகிறோம். ஆனால், கடந்த காலங்களில், அதாவது சற்றொப்ப ஒரு நான்காயிரம் ஐயாயிரம் ஆண்டுகளுக்கு முன்னர், அறிந்திராத புதிய இடங்களுக்குச் செல்லும் பயணம் இது போன்று நம் முன்னோர்களுக்கு எளிதாக இருந்திருக்கவில்லை. நாம் வாழும் உலகம் கோளவடிவம் கொண்டது, அது சூரியனைச் சுற்றிவரும் கோள் என்ற அறிவியல் அடிப்படை அறிந்திராத முற்காலம் அது. ஆனால், அவர்கள் நாள்தோறும் பார்த்து வந்தது சூரியனையும், நிலவையும், விண்மீன்களையும்தான். எனவே அவற்றை ஆழ்ந்து நோக்கி பருவ நிலையையும் காலத்தையும் கணித்தார்கள். வாழ்க்கையில் எதிர்கொள்ளும் வாய்ப்பான காலமாறுதலைப் பயன் கொள்ளவோ, அழிவு தரக்கூடியவற்றைத் தவிர்க்கவோ இந்தக் கற்றல் முறை அவர்களுக்கு உதவியது.

siragu 1- Earthmap-wikiஅவ்வாறே, நிலத்தில் இருக்கும் மலை, கடல், ஆறு போன்ற அமைப்புகளை இடக் குறிப்பாகக் கொண்டு பயணங்களை மேற்கொண்டனர். பல ஊர்களின் பெயர்களும் அவ்வாறே இடத்தின் பண்பையொட்டி பெயரிட்டிருப்பதையும் காணலாம். முதன் முதலில் உலகத்தளத்தின் மேல் சில கற்பனைக் கோடுகளைக் குறுக்கு நெடுக்காக வரைந்து கொண்டு (imaginary geographic coordinate system), விண்ணின் இருக்கும் விண்மீன்கள் இருக்கும் அமைப்பை அவற்றுடன் ஒப்பிட்டுக் கணக்கிட்டுக்கொண்டால் பயணம் செய்யும் திசையில்செல்லவேண்டிய தொலைவு, தேவைப்படும் காலம் போன்றவற்றைக் கணக்கிடலாம் என்ற எண்ணம் பண்டைய கிரேக்க அறிஞர்களின் எண்ணமாக இருந்தது (அன்றைய பூகோளப் பாடநூல்களில் அட்ச ரேகை/Latitude, தீர்க்க ரேகை/Longitude, பூமத்தியரேகை/equator என்று குறிப்பிடப்பட்டவற்றை நினைவுகூரலாம்).

 siragu 2-Primemeridian-wiki

வடக்கில் நிலையாக உள்ள துருவ விண்மீன்(Pole star), கிழக்கில் தோன்றி மேற்கில் மறையும் சூரியனும் நிலவும் தவிர்த்து வேறெந்த அடிப்படை உதவியும் இல்லாத நிலையில், நிலத்தின் கற்பனைக் குறுக்குக்கோடுகளும், வடக்கில் உள்ள துருவ விண்மீனும், நிலத்தில் ஒருவர் நிற்கும் இடத்திலிருந்து விண்மீன் இருக்கும் கோணத்தைக் கணக்கிட உதவியது. ஆனால், தரையில் செய்யும் பயணம் போலக் கடலில் செய்யும் கப்பல் பயணம் இவ்வாறு எளிதாக அமையவில்லை. நிலநடுக்கோடு (Equator) இருக்கும் இடத்தைக் கணக்கிட்டுக் கொண்டு எளிதாகவே புவியின் வடபகுதியில் கப்பல் செல்கிறதா, அல்லது தென் பகுதியில் இருக்கிறோமா என்று, வடக்கு தெற்காக தங்கள் இருப்பிடத்தைக் கணக்கிட்டுக் கொண்டார்கள் அக்கால கடலோடிகள்.

ஆனால், கப்பல் கடலுள் தொலைதூரம் சென்றதும், கரை கண்ணைவிட்டு மறைந்ததும், சுற்றிலும் இருக்கும் நீர்ப்பரப்பில் எந்த ஒரு குறிப்பும் இல்லாத பொழுது கடலோடிகளால் எவ்வளவு தொலைவு இதுவரைப் பயணம் செய்துள்ளோம், தொடங்கிய இடத்திலிருந்து கிழக்கிலோ அல்லது மேற்கிலோ எவ்வளவு தொலைவு சென்றுள்ளோம், இன்னமும் எவ்வளவு தொலைவில் நிலம் இருக்கலாம் என்று குத்து மதிப்பாகக் கூட கணக்கிட முடியாத ஓர் இடர்பாட்டை எதிர்கொண்டனர். அதற்கு முக்கியமான காரணம், வடதுருவ விண்மீன் போல விண்ணில் ஒரு நிலையான விண்மீன் குறிப்பு, கிழக்கு மேற்காக வழிகாட்ட இல்லாமல் போன நிலைதான். பார்க்கக்கூடிய விண்மீன் மண்டலங்கள் புவியின் சுழற்சிக்கு ஏற்ப மாறும் தன்மையில் இருந்தன.

siragu 3-nautical mile calculationஇச்சிக்கலைத்தீர்க்க அவர்கள் கையாண்ட வழி, ஒரு நீளமான கயிற்றின் நுனியில் ஒரு மரப்பலகை ஒன்றை இணைத்து, அப்பலகையைக் கட்டியிருக்கும் கயிற்றில் குறிப்பிட்ட இடைவெளிவிட்டு வரிசையாகப் பல முடிச்சுகள் செய்து கடலில் வீசி விடுவார்கள். கயிறு தடையின்றி கடலில் இறங்கும். மணல் கடிகாரம் போன்ற காலத்தை அளவிடும் கருவி ஒன்றின் மூலம் குறிப்பிட்ட நேரத்தில் எத்தனை முடிச்சுகள் கடலில் சென்றது என்பதை வைத்து கப்பல் பயணிக்கும் வேகத்தை முதலில் கணக்கிட்டனர். ஒரு மணி நேரத்தில் இத்தனை மைல் வேகத்தில் பயணம் செய்தால், குறிப்பிட்ட கால அளவில் கப்பல் கரையை விட்டு இவ்வளவு தொலைவு வந்திருக்கிறது என்று கணித்துக் கொண்டார்கள். பிறகு இத்திசையில் இவ்வளவு தொலைவு சென்றுள்ளதாக அறிந்து கொண்டார்கள். இது ‘நாட்டிகல்மைல்’ (nautical mile) எனப்பட்டது. இந்த நாட்டிகல்மைல் அளவு வழக்கத்தில் உள்ள மைல்அளவைவிடச் சற்று அதிகமானது. மாலுமிகள் இவ்வாறு தங்கள் கப்பலின் வேகத்தை அளப்பது “பொது பதிவு” (common log) எனப்படும். இருந்தும் இது கடலில் எந்த இடத்தில் கப்பல் இருக்கிறது, கரையை அடைய இன்னும் எவ்வளவு தொலைவு செல்ல வேண்டும் என்று சரியாகக் கணக்கிட முடியாத நிலையாகவே இருந்தது.

புவியின் குறுக்குக் கோடுகள் பயணத்திற்குச் சரியான தகவல் தந்து உதவுவது போல நெடுங்கோடுகள் உதவாத நிலையை நெடுங்கோட்டுச் சிக்கல் (The longitude problem) என்றே பல காலமாகக் கடற்பயணம் செய்வோர் குறிப்பிட்டு வந்தனர். இதற்கு அறிவியல் வழியில் தீர்வு கிடைக்காமலே பல நூறாண்டுகள் கடலோடிகள் துன்புற்றனர். செல்லும் இடம் தெரியாத சூழல், மூடுபனி கொண்ட வானிலை, மேகமூட்டமான காலங்களில் விண்மீன் கண்டு குறிப்பு கொள்ள இயலாத சூழ்நிலை ஆகியவற்றால் பலமுறை கப்பல்கள் விபத்திற்குள்ளாகிப் பல உயிர் இழப்புகளில் முடிந்தது. 15 ஆம் நூற்றாண்டின் தொடக்கம் முதல் ஐரோப்பிய நாடுகளில் வணிக முறையிலும், போர் காரணமாகவும் நிறையக் கடற்பயணங்களை மேற்கொள்ளத் தொடங்கினார். இருப்பிடம் தெளிவாக அறிய இயலா நிலையில் கடற்பயணங்களில் அவ்வப்போது பொருளிழப்பும், உயிரிழப்பும் தொடர்ந்தது. பல நாடுகள் பல வழிகளில் நெடுங்கோட்டுச் சிக்கல் தீர்வு காண முயன்று வந்தன. சுமார் 300 ஆண்டுகளுக்கு முன்னர், இங்கிலாந்து இதற்காக 1714ஆம் ஆண்டு ஜூலை மாதத்தில் ‘நெடுங்கோட்டுச் சட்டம்’ (The Longitude Act 1714) ஒன்றை இயற்றியது.

siragu 4-The original Longitude Act 1714-wiki

நெடுங்கோட்டுச் சிக்கலுக்குத் தீர்வாக உருவாக்கப்படும் கருவிக்கு, எளிய முறையிலும், நடைமுறையில் பயன்படுத்தும் வகையில் அமையக்கூடியதுமான கண்டுபிடிப்புக்கு, அன்றைய தொகையில் £20,000 பெறுமதியான பரிசையும் பிரித்தானிய நாடாளுமன்றம் அறிவித்தது. அது இன்றைய மதிப்பிற்கு சுமார் 4 மில்லியன் அமெரிக்கடாலர்கள் என்ற அளவில் மிகப் பெருந்தொகை. இந்த அளவில் பரிசு அறிவித்தால் விரைவில் தீர்வு கண்டுபிடிக்கப்படலாம் என்பது பிரித்தானிய அரசின் நம்பிக்கை. 18ஆம்நூற்றாண்டின் மிகப் பெரிய அறிவியல் சவால் (the Greatest Scientific Problem) என்று இது கருதப்படுகிறது. இந்த முன்னெடுப்பிற்கு மற்றொரு காரணமும் உண்டு. இங்கிலாந்தின் கடற்படை கப்பல்களுக்கு ஏற்பட்ட விபத்தே இதற்குத் தூண்டுதலாக இருந்ததாக வரலாறு கூறுகிறது.

 siragu 5-HMS_Association_(1697)-wiki

பிரான்ஸ் மற்றும் ஸ்பெயின் நாடுகளுடன்1707ஆம் ஆண்டு இங்கிலாந்து போரில் ஈடுபட்டிருந்தது. கப்பற்படை நாடு திரும்புகையில் தொடர்ந்த பனிமூட்டத்தை எதிர் கொண்டது. கப்பல்கள் பாதையை விட்டு விலகி சில்லித்தீவுகளை நெருங்கியதை அவர்கள் உணரவில்லை. இங்கிலாந்தை நெருங்கும் பொழுது, அக்டோபர் 22, 1707 அன்று, தங்கள் இருப்பிடம் புரியாத நிலையால், பாதை விலகிய பிழையை அறிந்து அதைச் சீர்திருத்தும் முன்னர் சில்லி தீவுகள் அருகில் உள்ள பாறைகளில் மோதி நான்கு கடற்படைக்n கப்பல்கள் சிதைந்து உடைந்து கடலுள் மூழ்கின (Scilly naval disaster of 1707). அவற்றில் பயணித்த 1500க்கும் மேற்பட்ட கடற்படை வீரர்களும் உயிரிழந்தனர். இதற்குக் காரணம் அவர்கள் கரையிலிருந்து கப்பல் இருக்கும் தொலைவைக் கணக்கிட முடியாத இடர்பாடான நிலை என்பது தெரிய வந்தது. நாட்டை உலுக்கிய இந்த விபத்தைத் தொடர்ந்து கடலோடிகளும், கடல் வணிகர்களும் தீர்வு காண முயலுமாறு அரசிடம் கோரிக்கை வைத்தார்கள். அரசி ஆன் தன் ஆட்சிக் காலம் முடியும் தறுவாயில் நெடுங்கோட்டுச் சட்டத்தை இயற்றினார். நெடுங்கோட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காணும் கண்டுபிடிப்புகளை ஆராய்வதற்குக் குழு ஒன்றும் அமைக்கப்பட்டது.

இது போன்ற நெடுங்கோட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காணும் முன்னெடுப்புகளை பிரான்ஸ், ஸ்பெயின், ஹாலந்து போன்று கடல் பயணத்தில் அதிகம் ஈடுபட்டிருந்த பிற ஐரோப்பிய நாடுகளும் 16ஆம் நூற்றாண்டு முதலே முன்னெடுத்திருந்தன. சர் ஐசக் நியூட்டன் போன்ற அறிவியல் மேதைகளும் கூட இந்த சிக்கலுக்குத் தீர்வு கிடைக்காது என்று ஐயம் கொண்டிருந்தனர் என்பது குறிப்பிடத்தக்கது. பெரும்பாலோர் வானியல் முறையிலேயே விண்மீன்கள் கொண்டு கணக்கிட பல பல வரைபடங்களை உருவாக்கிக் கொண்டிருந்தனர். பற்பல அறிவியல் ஆய்வாளர்களும், வானியல் வல்லுநர்களும் முதற்கொண்டு, வெகு சாதாரண மக்களும் பரிசுத் தொகையால் ஊக்கம் பெற்றுப் பங்கேற்றார்கள். இங்கிலாந்தைச் சேர்ந்த தச்சரும், கடிகாரம் செய்வதைத் தொழிலாகக் கொண்டிருந்த ஜான் ஹாரிசன்(John Harrison) என்பவரும் அவர்களில் ஒருவர்.

siragu 6-John_Harrison-wiki

ஜான் ஹாரிசன் வானியல் வல்லுநர்கள் மேற்கொண்ட முயற்சியிலிருந்து மாறுபட்டு, மிக எளிய ‘கடற்காலமானி’ ஒன்றை உருவாக்குவதன் மூலம் சிக்கலுக்குத் தீர்வு காண முயன்றார். 1553 ஆம் ஆண்டில் ஜெம்மா ஃப்ரிசியஸ் (Gemma Frisius, 1540-1545) எவ்வாறு துல்லியமான கடிகாரம் ஒன்றின் மூலம் நெடுங்கோட்டைக் கணக்கிடமுடியும் என்று விளக்கியிருந்தார். அதை ஜான்ஹாரிசன் தன் முயற்சிக்கான அடிப்படையாக எடுத்துக் கொண்டார். அதாவது, புவியின் நெடுங்கோடுகள் காலத்துடன் தொடர்பு கொண்டது என்பதே அவர் கண்டுபிடிப்பிற்கான அடிப்படை ஆகும். உலகம் 360 பாகைகளைக் கொண்டது, புவியின் ஒரு முழுச்சுற்றுக்கு 24 மணி நேரம் ஆகிறது. எனவே, 15 பாகை நெடுங்கோட்டை சூரியன் கடக்க ஒரு மணி நேரம் தேவை.

 siragu 7-chronometerபயணம் தொடங்கும் நாட்டில் உள்ள காலநேரத்தை நிலையாக வைத்துக் கொண்டு, கப்பல் பயணம் செய்யும் இடத்தின் கால நேரத்தைக் கப்பலின் கடிகாரம் காட்டும் நேரத்துடன் ஒப்பிட்டால், கப்பல் இருக்கும் நெடுங்கோடு எது என்பதைக் கணக்கிட்டுக் கொள்ளலாம் என்பதே அவர் கையாண்ட வழிமுறை. கடற்பயணம் செய்வோர், சூரியன் உச்சி வேளையில் வரும் பொழுது, நிழலின் அளவு குறைவாக இருக்கும் நேரத்தைப் பகல் மணி 12 என்று தாங்கள் இருக்கும் இடத்திற்கு ஏற்ப நேரத்தை (local time) கப்பலில் கடிகாரத்தில் மாற்றிக்கொள்வர்.

இவ்வாறுதான் இன்றும் நாம் கால நேரத்தைக் கணக்கிடுகிறோம். 1884ஆம்ஆண்டில் அமெரிக்காவின் வாசிங்டன்டி. சி. நகரில் நடந்த பன்னாட்டு நெடுங்கோடு மாநாட்டில், 22 நாடுகள் இங்கிலாந்தின் கிரீன்விச்சில் உள்ள வானியல் சார் முதன்மை நெடுங்கோட்டையே, அனைவரின் முதன்மை நெடுங்கோடாக (Prime meridian) ஏற்று வாக்களித்தன. எனவே உலக நாடுகள் ஏற்றுக் கொண்ட முதன்மை நெடுங்கோடாக, கிரீன்விச் வானியல் நிலையம் உள்ள கோட்டை 0 பாகையாகக் கணக்கில் கொள்கிறோம். கிரீன்விச் முதன்மை நெடுங்கோட்டின் கிழக்குப் பகுதியைப் புவியின் கிழக்குப் பகுதியாகவும், மேற்கில் இருப்பதை மேற்குப் பகுதியாகவும் வகுத்துக் கொள்கிறோம். கிரீன்விச் முதன்மை நெடுங்கோட்டில் இருந்து கிழக்கு நோக்கிச் செல்கையில் இங்கிலாந்திற்கும் இந்தியாவிற்கும் இடையே உள்ள வேறுபாடு நெடுங்கோட்டில் 80 பாகைகள். எனவே 80 பாகைகள் கடக்க ஐந்தரை மணி நேரம்; 80÷15 = 5½; என்ற கணக்கிடலில் இந்தியா-இங்கிலாந்து நேரம் வேறுபடும்.

லிங்கன்ஷயர் (Lincolnshire) என்ற சிற்றூர் ஒன்றில் ஒரு தச்சரின் மகனாக வளர்ந்த ஜான் ஹாரிசன், 1713ஆம் ஆண்டில் தனது 20 ஆவது வயதிலேயே தச்சு வேலைகள் செய்வதையும், பொழுது போக்காகக் கடிகாரங்களை உருவாக்குவதிலும், கடிகாரங்களைச் செப்பனிடும் பணியிலும் ஈடுபட்டிருந்தார். 1713, 1715, 1717ஆம் ஆண்டுகளில் அவர் உருவாக்கிய 3 ஊசல் (pendulum) கடிகாரங்கள் இன்றும் மிகத்துல்லியமாகக் காலங்காட்டி வருகின்றன. முதல் இரண்டும் அரசு அருங்காட்சியகங்களில் காட்சிப்படுத்தப்பட்டுள்ளன. இங்கிலாந்தின் அரசு வானியல் மையத்தில் (Royal Observatory) உள்ள ஜான்ஹாரிசன் உருவாக்கிய ஊசல் வகை கடிகாரம், மிகவும் துல்லியமாகக் காலத்தைக் காட்டும் கடிகாரம் என்று பாராட்டப்பட்டு, ஜனவரி 6, 2015 அன்று கின்னஸ் விருது வழங்கி சிறப்பிக்கப்பட்டது.

siragu 8-Harrison clock-bbc

மிகத்துல்லியமாகக் காலத்தைக் கணக்கிடும் கடிகாரங்கள் செய்வதில் புகழ் பெற்ற ஜான்ஹாரிசனுக்கு, நெடுங்கோட்டுச் சிக்கலுக்கு முடிவு காண, ஒரு நாளில் 3 நொடிகளுக்கு மேல் மாறுபடாது துல்லியமாகக் காலம் காட்டக்கூடிய, கையடக்க வடிவில் கப்பலில் எடுத்துச் செல்லக்கூடிய காலம் காட்டுவதற்கான ‘கடற்காலமானி’ (marine chronometer) கருவி ஒன்றை உருவாக்குவது குறிக்கோளாக இருந்தது. இந்த அளவு துல்லியமான காலம் காட்டும் கருவி என்பது அக்காலத்தில் பெருஞ்சாதனைக்கு உரியது. அத்துடன் காற்றின் வேகத்தால் ஆட்டம் நிறைந்த கடற்பயணத்திற்கு ஊசல் உள்ள கடிகாரங்கள் பயன்படாது. கடிகாரத்தின் உலோகப் பாகங்களும் கடல் உப்புக் காற்று பட்டு அரித்துப்போய்விடும். கடிகாரத்தின் பல் சக்கரபாகங்களில் உராய்வைத் (friction) தவிர்க்க எண்ணெய் ‘உயவிடல்’ (lubrication, கருவி ஒன்று செயல்படக்கூடிய வாழ்வை நீட்டிக்கும் முறை; ‘உய்ய’ என்ற சொல்லில் இருந்து பிறந்தது இச்சொல்) பசைபோல மாறி கடிகாரமே செயலற்றுப் போய்விடும் நிலையும் ஏற்படும். அத்துடன், கடும் குளிர் வெப்பம் போன்ற தட்பவெப்ப நிலை மாறுதல்களைத் தாக்குப்பிடிக்கும், பழுதாகாத துல்லியமான காலம் காட்டும் காலமானி ஒன்றுதான் கடற்பயணத்திற்குத் தேவை.

நெடுங்கோட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காணும் முறையில் 1735ஆம் ஆண்டு தனது முதல் கடிகாரத்தைச் சமர்ப்பித்தார் ஜான் ஹாரிசன். லண்டனுக்குக் குடிபெயர்ந்து தொடர்ந்து 40 ஆண்டுகள் விடாமுயற்சியுடன் கடிகாரத்தை மேம்படுத்தும் முயற்சியிலும் ஈடுபட்டார். தன் வாழ்நாள் முழுவதையும் கடற்காலமானியை வடிவமைப்பதிலும் மேம்படுத்துவதிலும் செலவிட்டார் என்று சொல்லுவதே பொருத்தமாக இருக்கும். கடுங்குளிர், வெப்பம் ஆகியவற்றால் உலோகம் விரிந்து சுருங்குவதால் காலக்கணக்கிடலில் துல்லியம் குறையும் என்று இரு வேறு உலோகங்களை அடுத்தடுத்து வரிசையான சட்டகமாக அமைத்து உலோகக்கம்பிச் சட்டக ஊசல் (gridiron pendulum) முறையை அறிமுகப்படுத்தினார். தொங்கும் ஊசல் முறையை மாற்றி கடிகாரத்தின் இருபுறமும் அசைந்தாடும் மாற்று வகை ஊசல் போன்ற அமைப்பை உருவாக்கினார். பாகங்களின் உராய்வைக் குறைக்க (frictionless), பசைபோல மாறக்கூடிய உயவிடல் தேவையின்றி தென்னமெரிக்க நாட்டின் எண்ணைப் பசை கொண்ட ‘லிக்னம் விட்டே’ (Lignum vitae or “wood of life”) என்ற மரம் கொண்டு உருவாக்கிய பல் சக்கரங்கள் கொண்ட பாகங்களைப் பயன்படுத்தினார். இவ்வாறாகப் பல நுட்பங்களைப் புகுத்திக் கொண்டே இருந்தார். தனது காலமானிகளை துல்லியம் மிகுந்ததாகவும், அளவில் சிறியதாகவும் மேம்படுத்திக் கொண்டே வந்தார். இவை முறையே H1, H2, H3, H4 என்று குறிப்பிடப்படுகின்றன.

siragu 9-John_Harrison chronometers_1-4_wikiதனது 67ஆம் வயதை எட்டி விட்டிருந்த ஜான் ஹாரிசன், மேசையில் வைக்கும் அளவிலிருந்த காலமானி கடிகாரத்தின் அளவை குறைத்துக் கொண்டே வந்து இறுதியில் கையடக்க வடிவமான இன்றைய கைக்கடிகாரம் (அல்லது பைக்கடிகாரம்) வடிவில் 4ஆவது கடற்காலமானியை பரிசோதனைக்காகச் சமர்ப்பித்தார். இது இப்பொழுது H4 என்று குறிப்பிடப்படுகிறது. இந்தக் காலமானி ஆறுமாதம் தொடர்ந்து இயங்கியும் வெறும் 5 நொடிகளே வேறுபட்டிருந்த அளவிற்குத் துல்லியமாக இயங்கியது.

நான்காவதாக அவர் சமர்ப்பித்த கையடக்க வடிவ சிறிய H4 கடற்காலமானியை தனது இரண்டாவது பயணத்திலும் மூன்றாவது பயணத்திலும் எடுத்துச் சென்று சோதனை செய்தார் புகழ் பெற்ற கடலோடியான ஜேம்ஸ்குக்(Captain James Cook,1728-1779). ஜான்ஹாரிசன் உருவாக்கிய கடற்காலமானி எந்த மாற்றம் கொண்ட சூழ்நிலையிலும், தட்பவெப்ப வேறுபாடுகளிலும் நம்பிக்கைக்குரிய வழிகாட்டியாகச் செயல்பட்டது, எக்காலத்திலும் கைவிடாத தோழன் அது என்ற பாராட்டுரையை அவர் வழங்கினார்.

siragu 10-Cooks three voyages

siragu 11-Harrison's_Chronometer_H5_ in the Science Museum_ London-wiki

நெடுங்கோட்டுச் சிக்கலுக்கு கடற்காலமானி மூலம் வெற்றிகரமாக ஜான்ஹாரிசன் முடிவு கண்டுவிட்டாலும், இங்கிலாந்து பாராளுமன்றம் அமைத்த நெடுங்கோட்டுச் சிக்கலுக்குத் தீர்வு காணும் குழு அவர் கண்டுபிடிப்பை மதிக்கவில்லை. இந்த நிலையில் தொடர்ந்து போராடிய ஜான் ஹாரிசனுக்கும் வயது 79 ஆனது. தனது தந்தையின் வருத்தத்தைக் கண்ட ஜான்ஹாரிசனின் மகன் அரசர் மூன்றாம் ஜார்ஜ் அவர்களிடம் சென்று முறையிட்டார். பின்னர் மூன்றாம் ஜார்ஜ் மன்னர் இடையிட்டதால் ஜான் ஹாரிசனுக்கு அவருக்குக் கொடுக்கப்பட வேண்டிய பரிசு கொடுக்கப்பட்டது. அதன் பிறகு மூன்று ஆண்டுகளில் ஜான் ஹாரிசன் மறைந்துவிட்டார். அமெரிக்க விண்வெளிப் பயணர் நீல்ஆம்ஸ்டிராங்க், ஜான் ஹாரிசனின் கடற்காலமானியை வரலாற்றில் குறிப்பிடத்தக்க சிறப்பு வாய்ந்த கடிகாரம் என்று பாராட்டியுள்ளார்.

 siragu 12-HarrisonBP-wiki

புகழ் பெற்றவர்கள் வாழ்ந்த வீட்டைக் குறிப்பிடும் வகையில், இங்கிலாந்து அரசால் அவர்கள் வாழ்ந்த வீட்டின் சுவரில் நீல நிறப்பலகையில் அவர்கள் வாழ்ந்த காலத்தைக் குறிப்பிடும் பட்டயத்தைப் பதிப்பிப்பது வழக்கத்தில் உள்ளது. ஜான் ஹாரிசன் வாழ்ந்த வீடும் அந்தப் பெருமையைப் பெற்றுள்ளது. மாற்றுக்கருத்துகள் கொண்ட அறிவியல் ஆய்வார்கள் கருத்து மாறுதல்களால் மோதிக்கொள்ளும்பொழுது அறிவியல் உலகில் நடக்கும் அரசியலை வரலாற்றுக் கண்ணோட்டத்துடன் அணுக நெடுங்கோட்டுச் சட்டம் உருவாக்கிய குழுவின் நடவடிக்கைகளை கேம்பிரிட்ஜ் பல்கலைக்கழக ஆய்வாளர்கள் ஆராய்ந்து வருகிறார்கள். ஜான்ஹாரிசன் உருவாக்கிய கடற்காலமானி கடற்பயணங்களுக்கு மிகவும் உதவிய வகையில் உலக அறிவியல் கண்டுபிடிப்புகளில் ஒரு திருப்புமுனை கருவி என்ற வரலாற்று உண்மை மறுக்கப்பட முடியாதது.

தகவல் பெற்ற தளங்கள்:
▸Open Innovation in the Eighteenth Century, The Longitude Problem. Robin W. Spencer. Research-Technology Management, in press.
- http://scaledinnovation.com/innovation/publications/2012-06-longitude.pdf

▸John Harrison: Timekeeper to Nostell and the world!
- https://www.bbc.co.uk/bradford/content/articles/2009/04/06/nostell_john_harrison_feature.shtml

▸John Harrison
- https://en.wikipedia.org/wiki/John_Harrison

▸Longitude: The True Story of a Lone Genius Who Solved the Greatest Scientific Problem of His Time, Dava Sobel. 1995 (book)
- https://en.wikipedia.org/wiki/Longitude_(book)
Longitude FULL MOVİE 2000 UK
- https://youtu.be/LHvt48S9l4w

▸A Detailed Study of H4 – John Harrison’s Longitude Timekeeper Reconstruction
- https://youtu.be/UeEBa55S7MI

▸The Longitude Problem
- https://youtu.be/t61ZJuKPUoI

▸Determine Longitude
- https://youtu.be/b7yoXhbOQ3Y

▸Amazingly accurate clock finally recognised after 300 years – Guinness World Records
- https://youtu.be/sQAY-zFkVyQ


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கடற்காலமானி: நெடுங்கோட்டுச் சிக்கலுக்கான தீர்வு”

அதிகம் படித்தது