மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கட்டு, பயன் படுத்திக் கொள், திருப்பிக் கொடு. Build; Operate; Transfer. (B.O.T.)

இராமியா

May 7, 2022

siragu build-operate-transferமுதலாளித்துவப் பொருளாதார உற்பத்தி முறையில் பொருளாதார நெருக்கடி என்பது, முதலாளிகள் தங்கள் மூலதனத்தை ஈடுபடுத்த அதிகமான இலாபம் தரும் வழி தெரியாமல் திணறிக் கொண்டு இருப்பதைத் தான் குறிக்கிறதே ஒழிய, மற்றபடி மக்களுக்குத் தேவையான பொருட்களை உற்பத்தி செய்வதற்கு வேண்டிய மூலப் பொருட்கள் கிடைக்காமல் போய் விட்டன என்றோ, தொழிலாளர்கள் கிடைக்காமல் போய் விட்டனர் என்றோ, அப்படி உற்பத்தி செய்யப்பட்டால் அவற்றை வாங்க மக்கள் இல்லை என்ற சூழ்நிலை உருவாகி விட்டது என்றோ பொருள் அல்ல. தங்கள் மூலதனத்தை அதிக இலாபம் கிடைக்கும் படியாக ஈடுபடுத்தும் வழி தெரியாத காரணத்தால் மொத்த உற்பத்தியையும் நிலைகுலைய வைப்பது முதலாளிகளின் பழக்கம்.

அப்படி முதலாளிகள் நாட்டை நிலைகுலைய வைக்கும் போது, முதலாளித்துவ அறிஞர்கள் ஒரு புதிய சுரண்டல் முறையை வடிவமைத்துக் கொடுப்பார்கள். அப்படி வடிவமைக்கப் பட்ட ஒரு திட்டம் தான், கட்டு, பயன்படுத்திக் கொள், திருப்பிக் கொடு. (Build; Operate; Transfer.  (B.O.T.)) எனும் வழிமுறை.

சுமார் முப்பது ஆண்டுகளுக்கு முன் மக்களுக்குத் தேவையான உள்கட்டமைப்பு வசதிகளை அளிக்கும் “சுமை”யில் இருந்து அரசாங்கங்களைக் “காப்பாற்ற” வேண்டும் என்ற ஒரு “உயர்ந்த” எண்ணம் முதலாளித்துவ அறிஞர்களின் மூளையில் உதித்தது. அதன்படி அரசாங்கங்களின் கடமைகளான சாலை அமைத்தல், குடிநீர், வடிகால் குழாய்களை அமைத்தல் இன்னும் இது போன்ற வேலைகளைத் தனியார்களிடம் ஒப்படைக்க வேண்டும். தனியார் முதலாளிகள் தங்கள் கைகளில் உள்ள மூலதனத்தை ஈடுபடுத்தி உள்கட்டமைப்பு வசதிகளைக் கட்டுவார்கள். எடுத்துக்காட்டாக நெடுஞ்சாலைகளை அமைப்பார்கள். அதன் பின் அந்தச் சாலைகளைப் பயன்படுத்தும் வாகன உரிமையாளர்களிடம் சுங்கக் கட்டணங்களை ஒரு குறிப்பிட்ட காலம் வரை வசூலிப்பார்கள். தாங்கள் ஈடுபடுத்திய மூதனத்தையும் அதற்கு உரிய இலாபத்தையும் பெற்றுக் கொண்டு குறிப்பிட்ட காலம் முடிந்த உடன் உருவாக்கப்பட்ட சாலையை அரசாங்கத்திடம் ஒப்படைத்து விடுவார்கள்.

இந்தக் குறிப்பிட்ட காலம் என்பது ஐந்து முதல் பத்து ஆண்டுகளாக இருக்கும் என்று தொடக்கத்தில் கூறினார்கள்.

இவ்வாறு சாலைகளைத் தனியார் வசம் விடும் போது அரசாங்கத்துக்கு உரிமையான நிலத்தை அவர்கள் பயன்படுத்துவதையும், அதற்கான வரி எதுவும் செலுத்தாததால் அரசுக்கு வருவாய் இழப்பு ஏற்படுகிறது என்றும் அரசு தரப்பில் இருந்து சிலர் சுட்டிக் காட்டினார்கள். உடனே முதலாளித்துவ அறிஞர்கள் கட்டு, உரிமை கொள், பயன்படுத்திக் கொள், திருப்பிக் கொடு (Build, Own, Operate, Transfer (B.O.O.T)) என்று ஒரு திருத்திய வடிவமைப்பை முன் வைத்தார்கள். இதன்படி தனியார் முதலாளிகள் தாங்கள் பயன்படுத்தும் அரசு நிலத்திற்கான வரியைச் செலுத்துவார்கள். ஆனால் உருவாக்கப்பட்ட உள் கட்டமைப்பு வசதியைத் திருப்பி அளிக்கும் காலம் பத்து முதல் பதினைந்து ஆண்டுகள் ஆகும்  என்று கால அளவை நீட்டித்து விட்டார்கள்.

சரி! இந்த முறைகளில் உருவாக்கப்பட்ட சாலைகள் குறித்த காலக் கெடு முடிந்த உடன் அரசுக்குத் திருப்பி அளிக்கப்பட்டனவா என்று ஆராய்ந்தால் அப்படித் திருப்பி அளிக்கப்பட்டதாக ஒரு செய்தியும் தெரியவில்லை.  இந்த முறை அறிமுகப்படுத்தப்பட்ட போது சுங்கக் கட்டண உயர்வு பற்றிய பேச்சே எழவில்லை. ஆனால் நடைமுறையில் அவ்வப்போது சுங்கக் கட்டணங்கள் உயர்த்தப்பட்டன.

சரி! எதுவும் எக்கேடு கெட்டும் போகட்டும். ஐந்து அல்லது பத்து அல்லது  பதினைந்து ஆண்டுகள் போன பிறகு அந்தச் சாலைகளை அரசாங்கத்திடம் அளித்து இருக்க வேண்டும் அல்லவா? அதைப் பற்றி யாரும் மூச்சே விட மறுக்கிறார்கள். மிகுந்த சிரமம் எடுத்து விசாரித்ததில் காலக் கெடு முப்பது ஆண்டுகளாக நீட்டித்து இருப்பது தெரிய வந்தது. அது மட்டும் அல்ல, அவ்வப்போது சாலைகளைப் பழுது பார்த்த போது, அந்த செலவை ஈடு செய்வதற்காகக் காலக் கெடு நீட்டித்ததாகவும் தெரிய வந்தது. இந்தப் புதுமையான திட்டம் அறிமுகமான போது சாலைகளைப் பழுது பார்ப்பது பற்றிய பேச்சு எழுப்பப்படவே இல்லை. வயிற்றுக்குள் நுழைந்த பின் காலை நீட்டுவது போல இப்பொழுது அதைப் பற்றி எல்லாம் பேசுகிறார்கள்.

இந்த விவரங்கள் எல்லாம் தெரிகிறதோ இல்லையோ இந்த முறையில் முதலாளிகள் பெரும் கொள்ளை அடிப்பதை மக்கள் உணரத் தொடங்கி இருக்கிறார்கள். ஆங்காங்கே சுங்கக் கட்டணங்களுக்கு  எதிராகப் போர்க் கொடி தூக்கத் தொடங்கி இருக்கிறார்கள். அண்மையில் 26.4.2022 அன்று மதுரை, திருமங்கலம் அருகே வாடகை வாகன உரிமையாளர்கள் நெடுஞ்சாலைகளில் சுங்கக் கட்டணத்தை நீக்க வேண்டும் என்று கோரி மறியல் செய்தனர். இவர்களிடம் இத்திட்டம் தோற்றுவிக்கப்பட்ட போது என்ன சொல்லப்பட்டது என்பதையும், பின்னர் அதைப் பற்றி மறக்கடித்து விட்டு முதலாளிகள் தங்கள் கொள்ளை அடிப்பதையே நோக்கமாகக் கொண்டு உள்ளனர் என்பதையும், முதலாளிகளின் ஏவலாளான  அரசும் மக்களுக்குச் சேர வேண்டிய உரிமைகளைப் பற்றி அக்கறை கொள்ளாமல் முதலாளிகளின் சார்பில் நின்று கொண்டு அமைதியாக இருப்பதையும் எடுத்துக் கூற வேண்டும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கட்டு, பயன் படுத்திக் கொள், திருப்பிக் கொடு. Build; Operate; Transfer. (B.O.T.)”

அதிகம் படித்தது