மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கண்டிப்பட்டி அந்தோணியார் தேவாலயமும், மஞ்சுவிரட்டும்

த. மகேந்திரன்

Aug 27, 2022

siragu jallikkattu

ஜல்லிக்கட்டு அறிமும்

சங்க காலம் முதல் தமிழர்கள் பண்பாடும், கலாச்சாரமும் மிக்கவர்களாக வாழ்ந்து வந்துள்ளனர். இன்று வரை அவர்களின் பண்பாட்டு வாழ்க்கை தொடர்ந்து வருகிறது. குறிஞ்சி நிலத்தில் வேடர் வாழ்க்கை முறையையும், முல்லை நிலத்தில் காட்டு வாழ்க்கைமுறையையும், மருத நிலத்தில் விவசாயம் சார்ந்த வாழ்க்கை முறையையும், நெய்தல் நிலத்தில் கடல் சார்ந்த வாழ்க்கைமுறையையும், பாலை நிலத்தில் வெயில் சார்ந்த வாழ்க்கைமுறையையும் தமிழர்கள் வாழ்ந்து வந்துள்ளனர். இவற்றைக் காலத்திலும் அம்முறை பின்பற்றப்பட்டு வருகிறது. விவசாய வாழ்க்கை முறை உடையவர்கள் கடல் வாழ்க்கை முறைக்குச் செல்ல முடிவதில்லை. கடல் வாழ்க்கை முறைக்குப் பழக்கப்பட்டவர்கள் விவசாய வாழ்க்கை முறைக்கோ காட்டுவாழ்க்கை முறைக்கோ, மலை வாழ்க்கை முறைக்கோ செல்ல முடிவதில்லை. முல்லை நில மக்கள் ஏறுதழுவுதல் என்றும் வீர விளையாட்டு முறையைப் பின்பற்றினர். தற்காலத்தில் அது மஞ்சுவிரட்டு, காளை விளையாட்டு, ஜல்லிக்கட்டு என்ற பெயர்களில் வழங்கினாலும் தமிழன் தனது ஏறுதழுவும் பண்பாட்டை விட்டுவிடாமல் காத்துவருகிறான் என்பதை உணரமுடிகின்றது.

சங்க காலத்தில் முல்லை நில மக்கள் ஏறுதழுவுதல் என்னும் வீர விளையாட்டினை மேற்கொண்டமையை முல்லை நிலப் பாடல்கள் அனைத்தும் பதிவு செய்துள்ளன. குறிப்பாக கலித்தொகையில் முல்லைக்கலி என்பது ஏறுதழுவுதல் பற்றி பல செய்திகளைத் தருகின்றது. தற்காலம் வரை தொடரும் இந்த வீர விளையாட்டின் சிறப்புகளை, தொடர்ச்சியை, தற்காலப் போக்கினை அறிய வேண்டுவது தமிழர் பண்பாட்டைப் பதிவு செய்யும் முயற்சிகளில் ஒன்றாகும்.

ஏறு தழுவுதல் வரலாறு

பழந்தமிழ் இலக்கியங்களிலும் சிந்துவெளி நாகரிகத்திலும் ஏறுதழுவல் நிகழ்ந்ததற்கான சான்றுகள் உள்ளன. ஏறுதழுவுதல் (மஞ்சுவிரட்டுதல்) என்ற சொல் பழந்தமிழ் இலக்கியங்களில் காளையை அடக்கும் வீர விளையாட்டின் பெயராகப் பயின்று வருகிறது.

கொல்லக்கூடிய காளையைத் தழுவிப் போரிட்டு அடக்குவதால் கொல்லேறு தழுவுதல் என்றும் சிறப்பித்துக் கூறப்படுகிறது. புதுதில்லி தேசியக் கண்காட்சியகத்தில் பாதுகாக்கப்படுகின்ற சிந்துவெளி நாகரிகம் சார்ந்த முத்திரை வீரரை அக்காளை தூக்கி எறிவதும் உயிரோட்டமான விதத்தில் சித்தரிக்கப்பட்டுள்ளது. இதிலிருந்து கி.மு.2000 ஆண்டு அளவிலேயே ஏறுதழுவல் வழக்கத்தில் இருந்தது என்று ஐராவதம் மகாதேவன் போன்ற அறிஞர்கள் கருத்து தெரிவித்துள்ளனர்.

சங்க இலக்கியங்களில் ஏறுதழுவுதல்

சங்கஇலக்கியங்களுள் ஒன்றான “கலித்தொகையுள்
“கொல்லேற்றுக் கோடஞ்சுவானை மறுமையும்
புல்லாளே ஆய மகள்”
அஞ்சார் கொலை ஏறு கொள்பவர்
அல்லாத நெஞ்சிலார் தோய்ப்பதற்கு
அரிய-உயிர்துறந்து நைவாரா ஆய
மகள் தோள்” ”

என்றுரைக்கிறது. அதாவது “கூடிக் கொல்லுகின்ற ஏற்றினுடைய (காளையினுடைய கோட்டிற்கு (கொம்புக்கு) அஞ்சும் பொதுவளை மறுபிறப்பினும் ஆயர் மகள் தழுவாள்” என்று உரை தருகிறார் நச்சினார்க்கினியர். இதன்வழி ஏற்றை அடக்க அஞ்சுபவனை ஆயர் மகள் மணக்கமாட்டாள் என்பது தெரியவருகிறது. இப்பாடலின் இறுதியில் அடக்கப்பட்ட மற்றும் அடக்கப்படாத காளைகள் தொழுவத்தை கடந்து வயல்வெளிகளுக்கு ஓடிவிட்ட பின்னர் காளைகளும் ஆயர்குல மகளிரும் ஆட்டம் ஆடும்போது திருமாலையும் அரசனையும் வாழ்த்துகின்றனர்.

பண்டையக்காலத்தில் ஐந்திணை நிலங்களுள் ஒன்றாகிய முல்லை நிலத்தின் ஆயர் மக்களிடம் இவ்வாறு ஏறுதழுவுதல் நடைபெற்று வந்துள்ளது. நாகரீக மனிதன் தன்னுடைய இனக்குழுவிற்கு தேவையான உணவு மற்றும் உணவு உற்பத்திக்காகவும் முதன்முதலாக முல்லை நிலத்தில் (காடுகளில்) உள்ள காளையை அடக்க முற்பட்டதே ஏறு தழுவுதலின் ஆரம்பம் என்று கொள்ளலாம்.

முல்லையில் (காடு) உள்ள மாடுகளை பிடிக்க பண்டைய மக்கள், முதலில் அந்த கூட்டத்தில் உள்ள ஒரு காளையை அடக்கி அதனை உயிருடன் பிடித்து தங்களது இருப்பிடத்திற்கு கொண்டு வந்து அடைத்துவிடுவார்கள். பின்பு அந்த காளையை தேடி அதனை சார்ந்த பசுக்களும் அங்கு வரும் (பல பசுக்களும் ஒரு காளை மட்டுமே இருக்கும்) ஆக மொத்தமாக அதனை அடைத்து ஒரு தொழுவமாக மாற்றிவிடுவார்கள்.

இனத்திற் றீர்ந்த துளங்கிமி னல்லேறு
மலைத்தலை வந்த மரையான் கதழ்விடை
மாறா மைந்தின் ஊறுபடத்தாக்கிக்
கோவலர் குறவரோ டொருங்கியைந் தார்ப்ப
வள்ளிதழ்க் குளவியுங் குறிஞ்சியுங் குழைய
நல்லேறு பொரூஉம் கல்லென் கம்பலை
என்று மலைபடுகடாஅம் கொல்லேற்றுத் தழுவிய நிகழ்வைக் காட்டுகின்றது.
ஓஒ! இவள்,பொருபுகல் நல்ஏறு கொள்பவர் அல்லால்
திருமாமெய் தீண்டலர்

என்று கலித்தொகை மற்றொரு இடத்தில் ஏறுதழுவலைக் காட்டுகிறது.

சிலப்பதிகாரத்தின் ஆய்ச்சியர் குரவை:
காரி கதனஞ்சான் பாய்ந்தானைக் காமுறுமிவ்
வேரி மலர்க் கோதை யாள்”
என்று ஏறுதழுவல் நிகழ்ச்சியைப் பதிவு செய்துள்ளது.
இவ்வாறு பண்டைய இலக்கியங்களில் ஏறுதழுவுதல் பற்றிய பல குறிப்புகள் காணப்படுகின்றன. இதன்வழ ஏறுதழுவல் என்பது தமிழனின் வீரப் பண்பாட்டின் அடையாளம் என்பதை உணர்ந்து கொள்ளமுடிகின்றது.

இவ்வாறு தமிழரின் வீர விளையாட்டாக விளங்கும் ஏறு தழுவுதல் என்பது ஜல்லிக்கட்டு என்றும், மஞ்சுவிரட்டு என்றும் தற்போது பெயர் பெற்றுத் தமிழகக் கிராமங்களில் குறிப்பாக தென் மாவட்டங்களில் தைப்பொங்கலை ஒட்டி நடத்தப்பெற்று வருகிறது.

ஜல்லிக்கட்டு –பெயர்க்காரணம்

சல்லி என்பது விழாவின் போது மாட்டின் கழுத்தில் கட்டப்படுகிற வளையத்தினைக் குறிக்கும். புளியங் கம்பினால் வளையம் செய்து காளையின் கழுத்தில் அணியும் வழக்கம் தற்போதும் வழக்கத்தில் உள்ளது. அதோடு, 50 ஆண்டுகளுக்கு முன்பு புழக்கத்தில் இருந்த ‘சல்லிக் காசு’ என்னும் இந்திய நாணயங்களைத் துணியில் வைத்து மாட்டின் கொம்புகளில் கட்டிவிடும் பழக்கம் இருந்தது. மாட்டை அணையும் வீரருக்கு அந்தப் பணமுடிப்பு சொந்தமாகும். இந்தப் பழக்கம் பிற்காலத்தில் ‘சல்லிக்கட்டு’ என்று மாறியது. பேச்சுவழக்கில் அது திரிந்து ‘ஜல்லிக்கட்டு’ ஆனது என்றும் கூறப்படுகிறது.

மஞ்சுவிரட்டு – பெயர்க்காரணம்

மஞ்சு என்பது யானையின் முதுகு ஆகும். யானையின் முதுகில் பயணம் செய்வது என்பது அரசனால் மட்டுமே செய்ய இயலும். அதற்கு இணையான வீர விளையாட்டான காளை விளையாட்டுக்கு மஞ்சு விரட்டு என்று பெயர் என்று காரணம் உரைக்கப்பெறுகிறது.

வகைகள்

மஞ்சுவிரட்டு, அல்லது சல்லிக்கட்டு என்பது தமிழ்நாட்டில் ஒவ்வொரு பகுதியிலும ஒவ்வொரு விதமாக நடைபெறுகின்றது.
1. ஜல்லிக்கட்டு (அ) சல்லிக்கட்டு
2. வட்ட மஞ்சுவிரட்டு (அ) வடமஞ்சுவிரட்டு
3. மஞ்சுவிரட்டு
4. வேலி மஞ்சுவிரட்டு (அ) எருதுகட்டு
இவ்வாறு நான்கு வகைகளில் தமிழகத்தில் இவ்வீரவிளையாட்டு நடத்தப்படுகின்றது.

ஜல்லிக்கட்டு – நடைமுறைகள்

ஜல்லிக் கட்டு பெரும்பாலும் தமிழகத்தின் தென்மாவட்டங்களில் நடத்தப்படுகுpறது. தென் தமிழகத்தின் ஊர்களில் கோயில் காளைகள் வளர்க்கப்படுவது மரபு. இக்காளைகள் விவாசய வளர்ச்சிக்கு உதவி வருகின்றன. பசு இனம் பெருக இவை காரணங்களாகின்றன.

இத்தகைய கோயில் மாடுகள் தெய்வங்களாகப் போற்றப்படுகின்றன. இவற்றைச் சில ஊர்களில் ஊர் மாடு என்ற நோக்கில் ஜல்லிக்கட்டுக்கு அழைத்துப் போவது உண்டு.

இன்னும் சில ஊர்களில் ஜல்லிக்கட்டுக்கு என்று மாடுகள் வளர்க்கப்படுகின்றன.

காளைகளின் வகைகளும் வளர்ப்பு முறைகளும்

ஜல்லிக்கட்டில் பயன்படுத்தப்படுவதற்கென தனித்த வகை காளைகள் உள்ளன. தமிழ்நாட்டில் நாட்டு இனக் காளைகள் பல இருந்தாலும், இந்த வீர விளையாட்டிற்கு ஒரு சில வகையான காளைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன.
அவை
• காகேயம் காளைகள்
• உம்பலச்சேரி காளைகள்
• கிடைமாடுகள் என்று கூறப்படும் புலிக்குளம் காளைகள்
• நாடுமாடு என்று கூறப்படும் நாட்டு காளைகள்
என்பனவாகும். மஞ்சுவிரட்டு வைக்கும் போதே நடுமாடு மஞ்சுவிரட்டு, சிறுமாடு மஞ்சுவிரட்டு என்று மாட்டின் அளவுகளுக்கேற்ப மஞ்சுவிரட்டு வைக்கப்படுவதும் உண்டு.

மேற்கண்ட 4 வகை காளைகளும் இந்த விளையாட்டில் பயன்படுத்தினாலும் அதிகபடியாக புலிக்குளம் காளைகளே ஜல்லிக்கட்டிற்குப் பயன்படுத்தபடுகின்றன.

காளைகளுக்கான உணவு மற்றும் பயிற்சி முறை

ஜல்லிகட்டு காளைகளுக்கு பொதுவாக நான்கு யிற்சிகள் அளிக்கப்பட்டுவருகின்றன. அவை
• நீச்சல் பயிற்சி-
• நடைப் பயிற்சி
• மண்ணைக் குத்தும் பயிற்சி
• தாண்டும் பயிற்சி
ஆகிய நான்கு பயிற்சிகள் மாடுகளுக்குத் தரப்பெறுகின்றன.

நீச்சல் பயிற்சி

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு நீச்சல் பயிற்சி கட்டாயம் வழங்கப்படுகிற்து. நீர் நிறைந்த குளத்தில் காளையை அவிழ்த்துவிட்டு அதனை நீச்சலடிக்கச் சொல்லிப் பழக்குவர். வாரத்திற்கு இரண்டு அல்லது மூன்று முறை பத்து நிமிடங்கள் என்ற அளவில் நீச்சல் பயிற்சி தரப்படும்.

நடைபயிற்சி-

காளைகளுக்கு நடக்கும் பயிற்சி அளிப்பதும் சிறப்பினைத் த்ரும. இது காளைகளின் கால் வேகத்திற்காக மேற்கொள்ளப்பட வேண்டும். இப்பயிற்சி. சுமார் மூன்று அல்லது நான்கு கிலோமீட்டர்கள் வரை நடத்தப்படும்.
மண் குளியல் அல்லது மண் குத்துதல் பயிற்சி

காளையின் கழுத்து மற்றும் கொம்பு உறுதியாவதற்கான பயிற்சி மண்முகட்டைக் குத்தும் பயிற்சியாகும். இதுவும் வாரந்தோறும் இரண்டு அல்லது மூன்றுமுறை செய்விக்கப்படும்.

தாண்டும் பயிற்சி-

ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அளிக்கப்படும் பயிற்சிகளில் இதுவும் ஒன்றாகும். இப்பயிற்சி ஒரு குறிப்பிட்ட உயரம் வரை குறுக்கு கட்டைகளை அமைத்துக் காளைகளைத் தாண்டவிடும் பயிற்சியாகும்.
மேற்கண்ட நான்கு பயிற்சிகளும் ஜல்லிக்கட்டு காளைகளுக்கு அளிக்கப்படுகின்றது.

ஜல்லிக்கட்டு காளைகளுக்கும் மற்றும் மற்ற காளைகளுக்கும் அளிக்கப்படும் உணவு முறைகளில் பெரிது வித்தியாசம் இல்லை. என்றாலும் இக்காளைகளுக்கு உணவில் தனிக்கவனம் செலுத்த வேண்டியுள்ளது.
• பருத்தி விதை,
• சோளம்,
• கேள்வரகு,
• கம்பு,
• கொண்டை கடலை
போன்றவை ஊர வைத்து அரைத்து நீரில் கலந்து இக்காளைகளுக்கு கொடுக்கப்படுகின்றன. மேலும்

• அடர் தீவனமாக சோளம்
• பசும்புல்,
• வைக்கோல்
போன்றனவும் இக்காளைகளுக்கு உரிய அளவில் கொடுத்து வர இக்காளைகள் வலிமை பெறும்.

ஜல்லிக் கட்டு துவக்கம்

ஆண்டுதோறும் குறிப்பிட்ட நாள்களில் குறிப்பிட்ட மஞ்சுவிரட்டுகள் நடத்தப்படுவது வழக்கம். அவ்வ நாள் வரும்பொழுது வெற்றிலை பாக்கு வைத்தல் என்ற நிலையில் காளைகளுக்கு ஜல்லிக்கட்டுக்கு வரச்சொல்லி அழைப்பு வைக்கப்படும். இதன் வழியாக குறிப்பிட்ட நாளில் வண்டிகள் வழியாக ஜல்லிக்கட்டு மாடுகள் வந்து சேருகின்றன.

தற்போது விலங்குகள் வதைச் சட்டம் வலிமையாக இருப்பதால் உரிய மருத்துவப் பரிசோதனைகளுக்குக் காளைகள் உட்படுத்தப்படுகின்றன. மேலும் உரிய அனுமதியும் மாவட்ட நிர்வாகத்திடம் பெறப்பட வேண்டியுள்ளது. தக்க மருத்துவக் குழுக்கள் இந்நாள்களில் அங்கு வந்து சேரவேண்டியுள்ளது.

இவ்வாறு வந்த காளைகள் தொழு எனப்படும் இடத்தில் கூடுகின்றன. இவற்றை ஒவ்வொன்றாக அழைக்கும் நிலையில்அவை தொழுவில் இருந்து வாடிவாசல் வழியாக வெளிவருகின்றன. அப்போது மாடுபிடி வீரர்கள் காளைகளைப் பிடிக்கின்றனர்.

வீரர்களுக்கான பயிற்சி

மாடுபிடி வீரர்களும் தனித்த உணவு முறை உண்பவர்களாக, பல பயிற்சிகள் பெறுபவர்களாக விளங்கவேண்டும். இல்லையென்றால் இவ்விளையாட்டில் உடற்குறை, உயிர்க்கு இறுதி ஏற்பட்டு விடும்.
• வீரர்களுக்கு பொதுவான பயிற்சியாக
• கபடி (அ) சடுகுடு விளையாடுவது
• சிறிய கன்றுகளுடன் விளையாடுவது
• உடற்பயிற்சி
• ஓட்டம்
போன்ற பயிற்சிகள் மேற்கொள்வது நலம். இவற்றோடு மனதைரியம் மிகத் தேவை. அதோடு காளைகளிடம் இருந்துத் தப்பிக்கும் முறைமையும் தெரிந்திருக்கவேண்டும். இவர்களுக்கும் மருத்துவ பரிசோதனைகள் உண்டு. இவற்றைக் கடந்து இவர்கள் ஜல்லிக்கட்டுக் களத்தில் நுழைந்துக் காளைகளை அடக்கிப் பரிசுகளைப் பெறவேண்டும்.

வாடிவாசலின் அமைப்பு

வாடி வாசல் என்பது மாடுகள் வெளிப்படும் வாசலை உடைய அதோடு சுவர்கள் பலவற்றை உடைய பகுதியாகும். மாடுகளின் வலிமையை அடக்கி இவ்விடத்தில் இச்சுவற்றுக்குள் மாடுகள் கட்டுப்படுத்தப்படும் அளவிற்கு இது வலிமையாக இருக்கவேண்டும்.

வாடிவாசல் என்பது 10-18 என்ற அடிப்படையில் சுவர்கள் எழுப்பப்பட்டு மாடுகள் அடைக்கப்பட வசதியாகக் கட்டப்பெற்றிருக்கும். இதன் முகப்பில் வாழைமரங்கள் கட்டப்பபெற்றிருக்கும். மேலும் தென்னை ஓலையால் செய்யப்பெற்ற கூந்தல் என்னும் அலங்காரத் தோரணம் உடையதாகவும் இருக்கும். இதன் பின்புறம் கதவு அமைத்து கட்டப்பட்டிருக்கும்.

பின்புறமாக காளைகள் உள்ளே அனுப்பட்டு முன்புற வாடிவாசல் வழியாக காளைகளின் முறைவரும்பொழுது அவிழ்த்து விடப்படும். அவிழ்த்துவிடப்பெற்றுச் சீறிவரும் காளைகளை வீரர்கள் அடக்க முயல்வர். இந்த விளையாட்டில் வெற்றி பெற்ற காளைகளுககும் அதாவது பிடிபடாத காளைகளுக்கும், மாடுகளைப் பிடித்த வீரர்களுக்கும் பரிசுகள் தரப்படும். தற்போது பெரிய பெரிய ஜல்லிக்கட்டுகள் நேரலை வழியாகக் காண்பிக்கப்படும் நிலையில் ஜல்லிக்கட்டு தற்போது உயர் நிலையில் இருப்பதை அறிந்து கொள்ள இயலும். பரிசுகளாக மகிழ்வுந்துகள், இருசக்கர வாகனங்கள், தங்கக்காசுகள், வெள்ளிக்காசுகள், வெற்றிக் கோப்பைகள், வீட்டு உபயோகப் பொருட்கள், அண்டாக்கள் வழங்கப்படுவதில் இருந்து ஜல்லிக்கட்டின் மதிப்பு உயர்ந்திருப்பதை உணரமுடிகின்றது.

ஜல்லிக்கட்டின் விதிமுறைகள்

ஜல்லிக்கட்டுக்கென சில வரையறைகள் உண்டு. அதனை காளைகளுக்கு உரியவர்களும், காளைகளைப் பிடிக்க முன்வருவோர்களும் கடைபிடித்தாக வேண்டும்.

காளைகளுக்கான விதிமுறைகள்

• இந்த விளையாட்டில் கலந்து கொள்ளும் காளைகள் 4அடிக்கு மேல் உயரம் இருக்க வேண்டும் இல்லையெனில் காளை உள்ளே அனுமதிக்கப்படாது.
• காளையின் வயது 3முதல் 4க்கு மேலான இருந்தால் மட்டுமே பங்கேற்க முடியும்.
• காளைகளுக்கு அதாவது கொம்பு முனை அதிகமாக இருத்தல் கூடாது.
• காளை உடல்நலம் சரியாக உள்ளதா என்பதற்கான மருத்துவர் சான்று கட்டாயம் இருக்கவேண்டும்.
• முக்கியமான நாட்டு இனக் காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும். (திமில்) உள்ள காளைகள் மட்டுமே அனுமதிக்கப்படும்.
• காளையின் கால் குளம்புகளில் லாடம் அடிக்கப்பட்டிருந்தால் அனுமதிக்கப்படமாட்டாது.
• காளையின் அலங்கார பொருளாக காற்சலங்கை, மணி போன்ற வீரர்களை காயப்படுத்தும் எந்த உலோகப் பொருள்களும் காளைகளுக்கு அணிவித்து அவிழ்தல்கூடாது.
• மாட்டிற்கு அனுமதி சீட்டு இருந்தால் மட்டுமே உள்ளே அனுமதிக்கப்படும்.

வீரர்களுக்கான விதிமுறைகள்

• வீரர்கள் மது அருந்தியிருத்தல் கூடாது
• சரியான சீருடை அணிந்திருக்கவேண்டும்.
• ஒருகாளையை ஒருவர் மட்டுமே தழுவ வேண்டும். இருவர் சேர்ந்து தழுவுதல் கூடாது.
• காளையின் திமிலை தழுவி குறிப்பிட்ட எல்லை வரை சென்றால் மட்டுமே வீரர்களுக்கு வெற்றி பரிசு அளிக்கப்படும்
என்ற நிலையில் மாடுபிடி வீரர்களுக்கும் விதிமுறைகள் உண்டு. இந்த விதிமுறைகளுக்கு கட்டுப்படாத வீரர்கள் உடனடியாக களத்தை விட்டு வெளியேற்றப்படுவர்.
இவ்வாறு ஜல்லிக்கட்டு என்பது தென்மாவட்டங்களில் நடத்தப்படுகிறது.

வடமாடு மஞ்சுவிரட்டின் நடைமுறைகள்

வடம் என்றால் தமிழில் கயிறு என்று பொருள்படும். ஒரு நீளமாக கயிற்றின் முனையில் காளையை கட்டி வைக்கப்பட அதனை குறிப்பிட்ட நேரத்திற்குள் கட்டுப்படுத்த வேண்டும் என்ற முறைப்படி வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்படுகிறது.
அதாவது 15 மீட்டர் நீளமுள்ள கயிற்றில் காளையை கட்டி அந்த வட்டத்திற்குள் 9 நபர்கள் கொண்ட குழுவினர்கள் 25 நிமிடங்கள் என்ற நிலையில் இருந்து அந்தக் காளையை அடக்க வேண்டும் என்பது இவ்விளையாட்டின் விதியாகும். இதுவே வட மஞ்சுவிரட்டு ஆகும்.

வடமாடு மஞ்சுவிரட்டு களம் அமைப்பு

வடமாடு மஞ்சுவிரட்டு நடத்தப்பட பரந்த் மைதானம் தேவை. அவ்வாறு கிடைத்த மைதானம் சரிசமமாக ஆக்கப்பட வேண்டும். இருபது மீட்டர் சுற்றளவின் மையத்தில் ஒரு மீட்டர் அளவில் அமைத்து அதனுள் நெல் குத்தும் உரல் ஒன்றில் பதினைந்து மீட்டர் வடம் எனப்படும் கயிறை கட்டி புதைத்துவிடுவர்.

இருபது மீட்டர் சுற்றளவில் பாதுகாப்பு வளையங்கள் வேலிகள் அமைக்கப்பட்டிருக்கும். ஒரே ஒரு நுழைவு வாயில் மட்டும் அமைக்கப்பட்டிருக்கும் அந்த வட்டத்திற்குள் காளை மற்றும் 9 வீரர்களுக்கு மட்டுமே இடம் அளிக்கப்படும். இவ்வரையறைகளுக்குள் நின்று மாட்டின் திமிலைப் பிடித்து அடக்கவேண்டும் என்பதே வரையறையாகும்.

இதில் கலந்து கொண்டு வரையறைகளைப் பின்பற்றி வெல்வோர்க்கும் வெற்றி பெற்ற காளைகளுக்கும் ரொக்க பணம் மற்றும் குத்துவிளக்கு, சில்வர் அண்டா, வேட்டி, துண்டு, மாலை போன்றவை அளிக்கப்படும்.

வடமாடு மஞ்சுவிரட்டிற்காகப் பெரிதும் புலிக்குளம் காளைகள் மட்டுமே பயன்படுத்தப்படுகின்றன. குறைந்த அளவில் தேனி மலை மாடுகள் மற்றும் நாட்டு மாடுகள் பயன்படுத்தப்படுகின்றன. இந்த மஞ்சு விரட்டில் மேற்கண்ட காளைகளில் அனைத்து காளைகளையும் பயன்படுத்த முடியாது என்பது குறிப்பிடத்தக்கது. இனக்காளைகளில் 100 இல் 10 காளைகள் மட்டுமே இந்த மஞ்சுவிரட்டிற்கு தேர்வு செய்யப்படுகின்றது. அவ்வாறு தேர்வு செய்யப்படும் 10 காளைகளில் 1 அல்லது 2 காளைகள் மட்டுமே வெற்றி பெறும் என்பதும் குறிப்பிடத்தக்கது.

வடமஞ்சுவிரட்டின்போது

• காளைகளின் வெறிப்பு தன்மை,
• பாய்ச்சல் தன்மை,
• உதைவிடும் தன்மை,
• வால் அமைப்பு
• கொம்பு அமைப்பு,
• கால் அமைப்பு
போன்ற அனைத்தையும் சோதித்த பின்பே வடமாடு மஞ்சுவிரட்டிற்கான காளையை தேர்வு செய்து வளப்பார்கள்

பாய்ச்சல் குணம், மற்றும் போர்தன்மை குறிவாக உள்ள காளைகள் தேர்தெடுக்கப்படாது. இருபத்தைந்து நிமிடங்கள் வீரர்களை நேர்க்கு நேர் சந்திக்கும் குணம் உள்ள காளைகள் மட்டுமே இப்போட்டிக்குத் தேர்வு செய்யப்படும்.
வடமாடு மஞ்சுவிரட்டிற்கான காளைகளுக்குரிய பயிற்சி முறைகள்

 ஜல்லிக்கட்டு காளைகளை போல் ஒரு சில பயிற்சிகள் வடமாடுமஞ்சுவிரட்டில் கலந்துகொள்ளும் காளைகளுக்கு அளிக்கப்பட்டாலும், வட மஞ்சுவிரட்டு காளைகளுக்கு பயிற்சிகள் கூடுதல் அளவில் வழங்கப்படுகின்றன.
 நீச்சல் பயிற்சி வாரம் 3 முறை அதிகபட்சமாக 45 நிமிடங்கள் குறைந்த பட்சமாக 25 நிமிடங்கள் கட்டாயம் பயிற்சி அளிக்கப்படும்
 வட மாடு மஞ்சுவிரட்டு மாடுகளுக்கான மிக முக்கியமான பயிற்சி உழவுப் பணியாகும். காளைகளை புழுதி உடைப்பு மற்றும் தொழிஉழவு போன்ற விவசாய பணிகளில் விட்டுத் தயார் படுத்தப்படும்.
 இந்த பயிற்சி காளைகளின் உடல் அமைப்பை பொறுத்து 1 மணிநேரம் அதற்கு மேல் பயிற்சி அளிக்கப்படும். இந்த பயிற்சியின் போது கால்கள் உறுதியாகும்.
 நடைபயிற்சியும் கால்களுக்கான வலுவை அளிப்பதாக விளங்குகிறது. சுமார் 3இல் இருந்து 4 கிலோமீட்டர் வரை நடைபயிற்சி இக்காளைகளுக்கு அவசியம்.
 மண் குளியல், மண்குத்துதல் என்னும் கொம்பு மற்றும் தோள், கழுத்து பகுதிகள் திடமாக்குவதற்கான பயிற்சியும் இக்காளைகளுக்கு அதிக அளவில் வழங்கப்படுகிறது.
 நீச்சல் பயிற்சி என்பது காளைகளுக்குத் திகைப்பை கட்டுப்படுத்த அளிக்கப்படும் பயிற்சியாகும்.
 இந்த பயிற்சிகளை தவிர்த்து திமில் கட்டு கழட்டுதல் போன்ற பயிற்சிகளும் அளிக்கப்படும். அது மட்டுமின்றி பயிற்சிகளுக்கு ஏற்றார் போல் உணவு மற்றும் பல வகையான மூலிகைகள் வடமாடு மஞ்சுவிரட்டு காளைகளுக்கு அளிக்கப்படுகின்றது.

வடமாடு மஞ்சுவிரட்டில் கலந்துகொள்ளும் வீரர்களுக்கான பயிற்சி

 சுறுசுறுப்பு மற்றும் வேகம் அதிகமாக உள்ள வீரர்கள் மட்டுமே வடமாடு மஞ்சுவிரட்டு விளையாட்டில் பங்கேற்க தகுதி உடையவர்களாக கருதப்படுகின்றது.
 கபடி, ஓடுதல் போன்ற விளையாட்டுகளில் கைதேர்ந்தவர்களாகவும் பயம்(அச்சம்) அறியதவராகவும் மாடு பிடி வீரர்கள் இருத்தல் வேண்டும்.
 பழக்கு வடங்களில் சிறிய காளைகளை எதிர்கொண்டு இந்த விளையாட்டில் நெளிவு சுழிவுகளைக் கற்றுகொள்ளல் வேண்டும்.
இவ்வாறு கடுமையான பயிற்சி பெற்றவர்களால் மட்டுமே வெற்றிக்கனியை எட்ட இயலும்.

இந்த வட மஞ்சுவிரட்டு வடமாடு நலச்சங்கம் விதிமுறைகளுக்கு உட்பட்டு நடத்தப்படுகின்றது. நடத்தப்படும் கிராமங்களில் இருந்து முக்கிய புள்ளிகளாக கருதப்படும் கிராமினி மற்றும் பெரியவர்கள் அனைவரும் சேர்ந்து 1 மாதத்திற்கு முன் காளைகளுக்கு அழைப்பிதல் விடுக்கப்படவேண்டும்

முன்னர் கோவில் திருவிழாவிற்கு மட்டுமே நடத்தபட்டு வந்த மஞ்சுவிரட்டு தற்போது பெருந்தலைவர்கள் பிறந்த நாளை முன்னிட்டும் நடத்தப்பட்டு வருகின்றது. அதற்கான காரணம், இந்த விளையாட்டின் மீது பார்வையாளர்களுக்கு ஆர்வமும், அவர்கள் பாதுகாப்பும் அதிகமாக உள்ளதால் வட மஞ்சுவிரட்டு மக்கள் அதிகமாக விரும்புகின்றனர்.
வடமஞ்சுவிரட்டு விதிமுறைகள்
காளைகளுக்கான விதிமுறைகள்

வடமாடு மஞ்சுவிரட்டில் கலந்து கொள்ளும் காளை 25 நிமிடம் கட்டாயம் விளையாடவேண்டும்.
களத்தினுள் மாட்டின் உரிமையாளர்கள் 3முதல் 5 நபர் மட்டுமே அனுமதிக்கப்படுவர்
வீரர்கள் 9 பேர் மற்றும் துணைவீரர்கள் 3 பேர் மொத்தம் 11 பேர் மட்டுமே களத்தினுள் அனுமதிக்கப்படுவர்.
காளை அவிழ்க்கப்பட்டு 15 நிமிடங்கள் வரை காளையின் காலில் முட்டுதல் (கால் கட்டுதல்) கூடாது.
15 நிமிடங்களுக்கு மேல் கடைசி 10 நிமிடம் வரை காலில் முட்டி பிடிக்கலாம்.

வீரர்களுக்கான விதிமுறைகள்

 காளையைப் பிடித்து 10 வினாடிகள் ஒரு நிலையில் நிறுத்தவேண்டும்
 வீரர்கள் மது அருந்திபிட்டு காளைகளை பிடித்தல் கூடாது.
 9 வீரர்களில் ஒருவர் காயப்பட்டாலோ அவரால் விளையாட முடியவில்லை என்றாலோ அவருக்கு பதிலாக வேறு ஒருவர் அனுமதிக்கப்படமாட்டார்.
 காளையின் கொம்பில் கட்டப்பட்டிருக்கும் தோம்பு, எலுமிச்சைபழம் போன்றவற்றை வீரர்கள் அவிழ்க்க கூடாது.
 கட்டித் தழுவிய காளையை நடுவர் விடுவிக்க கூறிய உடனே காளையினை விடுவிக்கவேண்டும்.
 மாட்டின் உரிமையாளர்கள் காளையின் வால் பகுதியில் என்னை போன்ற திரவ பொருள்கள் தேய்தல் கூடாது

வடமாடு மஞ்சுவிரட்டின் தனிச்சிறப்புகள்

ஜல்லிக்கட்டில் காளைகள் மற்றும் வீரர்களின் வெற்றி தோல்வியை 5 முதல் 10 வினாடிகளில் நிர்ணயத்துவிடலாம். ஆனால் வடமஞ்சுவிரட்டு முற்றிலும் மாறுபட்டது. இந்த வடமஞ்சுவிரட்டு போர்களத்திற்கு நிகரான ஒன்று. வீரர்களும் காளைகளும் கத்தி முனையில் நின்று போர்புரிவர். வெற்றி என்பது அவ்வளவு எளிதில் அடைந்தவிடத்தக்கதாக இருக்காது.

வெற்றி பெற்ற வீரர்களும் சரி, காளைகளும் சரி அவர்களது வெற்றியை ஊரே சேர்ந்து கொண்டாடும். இந்த வடமாடு மஞ்சுவிரட்டில் காளையை பிடித்தவர்களை விட அவர்கள் ஊர் பெயரை கூறியே கொண்டாடுவது முறைமையாக உள்ளது. .

மஞ்சுவிரட்டு

மஞ்சுவிரட்டு என்பது தமிழகத்தில் குறிப்பாக சிவகங்கை மாவட்டத்தை சுற்றியுள்ள மாவட்டங்களில் உள்ள கிராமங்களில் கொண்டாடப்படும் விளையாட்டு “மஞ்சி” என்பது காளை வகை கற்றாலை நார் கொண்டு திரித்து தயாரிக்கப்படும் ஒரு வகை கயிறு ஆகும்.

மஞ்சி கயிற்றால் மாடுகளின் கொம்புகளில் கட்டப்படும் தங்க நாணயங்கள், பணமுடிப்பு, புத்தாடைகள், சலங்கை வீரர்கள் மாடுகளை விரட்டி சென்று பிடிக்கும். விளையாட்டு மஞ்சிவிரட்டு விளையாட்டு ஆகும்.

பிற்காலத்தில் “மஞ்சி” என்ற சொல் மருவி “மஞ்சுவிரட்டு” ஆனது. இதற்கு வெளிவிரட்டு என்று மற்றொரு பெயரும் உண்டு.

மஞ்சுவிரட்டு விளையாட்டு பொதுவாக அறுவடை காலம் முடியும் போது நீர் வற்றிய கண்மாய் உட்புறத்தில் “மஞ்சுவிரட்டு தொழு” அமைக்கப்பட்டு அந்தத் தொழுவில் இருந்து காளைகள் கண்மாய் பகுதியில் திறந்து விடப்படும்.

எருது கட்டு

தமிழகத்தின் கர்நாடக எல்லை சார்ந்த தருமபுரி, கிருஷ்ணகிரி, வேலூர் சார்ந்த பகுதிகளில் எருதுகட்டு என்ற முறைமை வழக்கில் உள்ளது. இதனை எருது விடும் விழா என்றும் குறிப்பர். மொத்தமாக காளைகளை அவிழ்த்துவிட அதனை இளைஞர்கள் பலரும் சென்று பிடிக்க முயலல் என்ற முறையில் இந்த எருதுகட்டு விழா நடத்தப்படுகிறது.

இராமநாதபுரம், மதுரைப் பகுதிகளில் இவ்விளையாட்டு வேறுமுறையில் உள்ளது. இது ஏறக்குறைய மறையும் தருவாயில் உள்ளது. வைக்கோலால் திரிக்கப்பட்ட ஒரு கயிற்றைக் காளையின் கழுத்தில் கட்டி ஒரு குறிப்பிட்ட தூரம் வரை அந்தக் காளையை ஊர் இளைஞர்கள் இழுத்துச் செல்வார்கள். அதனை வீரர்கள் பிடிக்க முயற்சி செய்வார்கள். இந்த விளையாட்டில் மாடு கடந்து செல்லும் தூரத்தை வைத்து அரைவட்டம், கால்வட்டம் என்பதாகக் கணக்கிட்டு பரிசுகள் வழங்கப்பெறும்.

இவ்வாறு தமிழகத்தில் தொன்றுதொட்டு மாடு பிடித்தல் என்ற வீர விளையாட்டு தொடர்ந்து நடந்து வருகிறது.


த. மகேந்திரன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கண்டிப்பட்டி அந்தோணியார் தேவாலயமும், மஞ்சுவிரட்டும்”

அதிகம் படித்தது