மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கறிவேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்

சித்திர சேனன்

Dec 12, 2015

kariveppilai3வளர்ந்து வரும் நவ நாகரீகச் சூழலில் தமிழ்ச்சமூகத்தின் உணவு, உடை, மொழி, உறைவிடம், கலாச்சாரம், பண்பாடுகள் கொஞ்சம் கொஞ்சமாய் செல் அரித்துக் கொண்டும், மாற்றம் பெற்றும் வருகிறது. மாற்றங்கள் வளர்ச்சியின் அறிகுறிதான் என்றாலும் ஆரோக்கியத்தில் நமது பாரம்பரிய உணவை மறந்து உடலுக்கு தீமை செய்யக்கூடிய, நமது சீதோஷ்ண நிலைக்கும், உடலுக்கும் ஒத்துவராத உணவுகளை உட்கொண்டு வருவதால் நோய்களின் இருப்பிடமாக தமிழர்கள் மாறிக்கொண்டு வருகின்றனர்.

ஒரு வீட்டில் வாழுகிறவர்கள், இன்று மருத்துவச் செலவிற்கும் சேர்த்து கணக்கு போட்டு வாழும் சூழலுக்கு நடைமுறை வாழ்க்கை அவர்களை நகர்த்தியுள்ளது. வருமுன் காப்போம், நோயற்ற வாழ்வே குறைவற்ற செல்வம், நொறுங்கத் தின்றால் நூறு வயது என்று உடல் நலத்தில் தமிழரின் தாரகமந்திரம் தவிர்க்கப்பட்டு வருகிறது.

நம் ஊரில் இயற்கையாக விளையக்கூடிய காய்கறிகளில் எத்தனை வகையான ஊட்டச் சத்துக்கள் உள்ளன என்பதை அறியாததன் விளைவே நோயாளிகளாய் வாழும் சூழலில் உள்ளோம். இக்கட்டுரையில் நாம் அன்றாடம் உணவில் பயன்படுத்தும் கறிவேப்பிலையைப் பற்றிக் காணப்போகிறோம்.

என்னது கறிவேப்பிலையா? அதில் என்ன சத்து உள்ளது, குழம்பில் வெறும் வாசனைக்காக மட்டுமே பயன்படுத்தும் இந்தக் கறிவேப்பிலையில் அப்படி என்ன சத்து உள்ளது. அப்படியே குழம்பில், சட்டினியில் பயன்படுத்தினாலும் தட்டிற்கு வந்தால் தூக்கி தூர வைத்து விட்டே சாப்பிடுகிறோமே… அப்படி என்ன இதில் சத்து? என நீங்கள் கேட்கக்கூடும். இதோ அதற்கான பதில்.

கறிவேப்பிலையில் வைட்டமின் ஏ, வைட்டமின் பி, வைட்டமின் பி2, வைட்டமின் சி, கால்சியம் மற்றும் இரும்புச்சத்து போன்றவை ஏராளமாக நிறைந்துள்ள அற்புத மூலிகையே கறிவேப்பிலை.

kariveppilai4கறிவேப்பிலை தலை முடியின் வளர்ச்சிக்கு நல்லது என பலர் கூறக் கேட்டிருப்போம். ஆனால் இதனைப் பச்சையாக தினமும் காலையில் சாப்பிடுவதால் கிடைக்கும் நன்மைகள் பற்றி பலருக்கும் தெரிந்திருக்க வாய்ப்பில்லை. கறிவேப்பிலையை தொடர்ந்து 120 நாட்கள் சாப்பிட்டு வந்தால் உடலில் நடைபெறும் மாற்றங்கள் என்ன தெரியுமா?

படியுங்கள் தொடர்ந்து…

கொழுப்புகள் கரையும்:

காலை வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலை இலையை உட்கொண்டு வந்தால் வயிற்றைச் சுற்றியுள்ள அதிகப்படியான கொழுப்புகள் கரைந்து, அழகான மற்றும் எடுப்பான இடையைப் பெறலாம்.

ரத்தசோகை:

ரத்தசோகை உள்ளவர்கள் காலையில் ஒரு பேரிச்சம்பழத்துடன் சிறிது கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், உடலில் ரத்த சிவப்பணுக்களின் அளவு அதிகரித்து ரத்தசோகை நீங்கும்.

நீரிழிவு நோய்:

நீரிழிவு நோயினால் பாதிக்கப்பட்டவர்கள், தினமும் காலையில் கறிவேப்பிலையை பச்சையாக உட்கொண்டு வந்தால் ரத்தத்தில் உள்ள சர்க்கரையின் அளவு சீராக இருக்கும்.

kariveppilai1இதயநோய்:

கறிவேப்பிலை உடலில் தேங்கியுள்ள கெட்ட கொழுப்புகளை கரைப்பதோடு, நல்ல கொழுப்புகளை அதிகரித்து, இதயநோய் மற்றும் பெருந்தமனி தடிப்பு போன்ற பிரச்சனைகளில் இருந்து நல்ல பாதுகாப்பு தரும்.

செரிமானம்:

நீண்ட நாட்கள் செரிமான பிரச்சனையை சந்திப்பவர்கள் அதிகாலையில் வெறும் வயிற்றில் 15 கறிவேப்பிலையை மென்று சாப்பிட்டால் செரிமானப் பிரச்சனைகள் தீரும்.

முடிவளர்ச்சி:

கறிவேப்பிலையை தினமும் சிறிது உட்கொண்டு வந்தால் முடியின் வளர்ச்சியில் நல்ல மாற்றத்தைக் காண்பதோடு, முடி நன்கு கருமையாகவும் இருப்பதை உணர்வீர்கள்.

சளித் தேக்கம்:

சளித் தேக்கத்தில் இருந்து நிவாரணம் பெற, ஒரு தேக்கரண்டி கறிவேப்பிலைப் பொடியை தேன் கலந்து தினமும் இரண்டு வேளை உட்கொண்டு வந்தால், உடலில் தேங்கியிருந்த சளி முறிந்து வெளியேறும்.

கல்லீரல் பாதிப்பு:

கறிவேப்பிலையை உட்கொண்டு வந்தால், கல்லீரலில் தங்கியுள்ள தீங்கு விளைவிக்கக்கூடிய நச்சுக்கள் வெளியேறிவிடும். மேலும் கறிவேப்பிலையில் உள்ள வைட்டமின் ஏ மற்றும் சி கல்லீரலைப் பாதுகாப்பதோடு சீராக செயல்படவும் தூண்டும்.

கறிவேப்பிலையில் 63 சதவிகிதம் நீரும், 6.1 சதவிகிதம் புரதமும், ஒரு சதவிகிதம் கொழுப்பும், 4 சதவிகிதம் தாது உப்புகளும், 6.4 சதவிகிதம் நார்ச்சத்தும், 18.1 சதவிகிதம் மாவுச்சத்தும் இருக்கின்றன. இந்தக் கீரை 108 கலோரி சக்தியைக் கொடுக்கிறது. சுண்ணாம்புச் சத்து, மக்னீசியம், மணிச்சத்து, இரும்புச்சத்து, தாமிரச்சத்து, கந்தகச் சத்து மற்றும் குளோரின், ஆக்சாலிக் ஆசிட் முதலான சத்தும் இந்த தழையில் உண்டு.

இது உடலுக்கு பலம் தரக்கூடியது, பசியைத் தூண்டும் சக்தி வாய்ந்தது, பித்தத்தைத் தணித்து, உடல் சூட்டைத் தணிக்கும். குமட்டல், சீதபேதியால் வரும் வயிற்றுப் பிரச்சனை, நாட்பட்ட காய்ச்சலை நீக்கும். இக்கறிவேப்பிலையால் பித்த மிகுதியால் வந்த பைத்திய நோய்களும் விலகுவதாக “சித்தர் வாசுட நூலில்” உள்ளன.

kariveppilai5உணவுடன் சேர்க்கப்படும் கறிவேப்பிலை இலையை உணவுக்கு மணம் ஊட்டிய பின் நீக்கிவிட வேண்டும் என்று தேவையில்லை. உணவோடு இதனை சேர்த்து உண்பதே சிறந்தது. இவ்வாறு உணவுடன் செல்லும் இந்த கறிவேப்பிலையை மலத்தின் திரவச்சத்தை வற்றச் செய்யவல்லது. வயிற்றிலுள்ள வாயுவைப் பிரித்து மலவாயுக்கட்டு ஏற்படாமல் பாதுகாக்கும். நல்ல பசி, ருசி, செரிமான சக்தி தரும்.

கறிவேப்பிலையோ வேப்பிலை

காய்கறிக் கெல்லாம் தாய்ப்பிள்ளை

–என நம் முன்னோர்கள் கூறிய பழமொழியில் எவ்வளவு பொருள் பொதிந்துள்ளன என்பது இப்போது தெரிகிறதா.

கறிவேப்பிலை, கற்றாழை, மருதாணி போன்றவைகளைச் சேர்த்து எண்ணெய் காய்ச்சி தலையில் தேய்த்தால் முடி உதிர்வது தடுக்கப்படும். கறிவேப்பிலையை எலுமிச்சை சாறில் அரைத்து ½ மணி நேரம் கழித்து குளித்தால் பேன், பொடுகு, ஈறு தொல்லை நீங்கும். கறிவேப்பிலையை சிறிதளவு அரைத்து வெறும் வயிற்றில் சுடுநீரை பயன்படுத்தி விழுங்கி வந்தால் உடலில் இருக்கும் கொழுப்பு குறையும்.

இந்திய கவுன்சில் ஆப் மெடிக்கல் தினமும் 170 கிராம் காய்கறிகளையும், 75-125 கிராம் கீரைகளையும், முக்கியமான 10 காய்கறிகளையும் சாப்பிட பரிந்துரைக்கிறது. இதில் ஒன்று கறிவேப்பிலை என்பது குறிப்பிடத்தக்கது.

நமது வருங்கால தலைமுறையினருக்கு நாம் சொல்லிக்கொடுத்து பழக்கப்படுத்துவது நம் தலையாய கடமைகளில் ஒன்று என்பதை மனதால் உணருங்கள். மனித உடலின் நண்பன் கறிவேப்பிலை. இதை தூக்கி எறிந்து உதாசீனம் செய்யாதீர்கள்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கறிவேப்பிலை இலையின் மருத்துவ இரகசியங்கள்”

அதிகம் படித்தது