மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கலை, ஆட்டம், பாட்டம் அயராத அயர்லாந்து

வெங்கட் நடராஜன்

Jul 28, 2018

siragu DUBLIN CITY

அழகிய அயர்லாத்தைக் காணும் ஆர்வத்தில் இலண்டனில் இருந்து விமானம் மூலம் குடும்பத்துடன் டப்ளின் வந்தடைந்தோம். விமான நிலையத்தின் தகவல்கள் அனைத்தும் அயர்லாந்து மொழியிலும் அதைத் தொடர்ந்து ஆங்கிலத்திலும் இடம்பெற்றிருந்தன. அங்கிருந்து டாக்சி பிடித்து தங்கும் விடுதி கிளம்பினோம்.

முன் பின் தெரியாத ஊராக இருந்தாலும், டாக்சி ஓட்டுநர் எங்களுடன் சகஜமாக பழகினார். அயர்லாந்து மக்கள் அன்புடன் பழகுபவர்கள் என்றும், அவர்கள் சுற்றலாப் பயணிகளை என்றும் வரவேற்பவர்கள் என்றும் அவர் கூறிய வார்த்தைகள் எங்களுக்குப் புத்துணர்வை அளித்தது.

அயர்லாந்து மொழிப் பற்றி அவரிடம் வினவிய போது, அது GAELIC எனப்படும் தாய்மொழி என்றும், அது அவர்களது சகோதர நாடான வட அயர்லாந்து மற்றும் ஸ்காட்லாந்தில் பேசக்கூடிய மொழிகளுக்கு நெருங்கிய தொடர்பு கொண்டது என்றும் தெரிவித்தார். ஆங்கிலேய ஆதிக்கத்தின்போது அது நசுக்கப்பட்டது என்று ஆதங்கப்பட்டார்.

எனினும் 1920-ல் அயர்லாந்து சுதந்திரம் அடைந்த பிறகு, அரசு கெய்லிக் மொழியை முதல் அலுவல் மொழியாகவும் ஆங்கிலத்தை இரண்டாவது மொழியாகவும் அறிவித்தது. 2005-ல் ஐரோப்பிய சங்கத்தின் அலுவல் மொழிகளுள் ஒன்றாககூட சேர்க்கப்பட்டது. தனது வீட்டில் அவர் தாய்மொழியில் பேசுவதாகவும்,ஆரம்பப் பள்ளிகளில் கூட கற்பிக்கப்படுவதாகவும் பெருமையுடன் கூறினார். இவ்வளவு முயற்சிகள் இருந்தும் கூட 1 சதவீத மக்களே இதை அன்றாடம் பயன்படுத்துகிறார்கள்.

நாம் கூட நம் தமிழ் மொழியை அன்றாட வாழ்வில் பயன்படுத்தாவிடில், இந்தி அல்லது ஆங்கிலத்தின் பிடி ஓங்கிவிடும் என்ற எச்சரிக்கை என் மனதில் ஒலித்தது.

தொழில் மற்றும் விவசாயம்

உள்ளூர் மக்களுடன் அயர்லாந்தின் தொழில் பற்றி உரையாடியபோது, அரசு பான்னாட்டு நிறுவன முதலீடுகளை ஈர்க்கும் வகையில் பல வரி சலுகைத் திட்டங்களை செயல்படுத்தி இருப்பதாகவும், இதனால்,  FACEBOOK, GOOGLE, MICROSOFT போன்ற முன்னணி நிறுவங்கள் கூட தங்கள் கிளைகளை இங்கு தொடங்கி இருப்பதாகவும் தெரிந்தது.

இதனால் டப்ளின் நகர் அபரிதமான வளர்ச்சி கண்டுள்ளது. தொழில் நுட்பத்தில் குறிப்பாக மென்பொருள் துறையில் இந்தியர் பலர் பணி புரிவதாகவும், இந்திய உணவகங்கள் கூட நிறைய இருப்பதாகவும் உள்ளூர் வாசி ஒருவர் தெரிவித்தார்.

இது தவிர நாட்டுப் புறப்பகுதிகளில் பெரும்பாலும் விவசாயம் நடை பெறுவதாகவும் குறிப்பாக கால்நடைப் பண்ணைகள் அதிகமாக இருப்பதாவதும் தெரிந்தது.

டப்ளின் நகர் உலா:

அடுத்த நாள் HOP ON HOP OFF எனப்படும் நகர் உலா பேருந்து எடுத்து DUBLIN சுற்றுலா ஆரம்பித்தோம். இது நகரில் உள்ள அனைத்து சுற்றுலா தலங்களுக்கும் செல்லும். நாம் ஒரு நாள் முழுதும் எங்கு வேண்டுமானாலும் ஏறி/இறங்கி கொள்ளலாம்.

siragu DUBLIN CITY2

அருங்காட்சியங்கள், கிறித்துவ சர்ச்கள், நகர மண்டபம், பாராளுமன்றம் எனத் தொடங்கிசிறைச்சாலை, போர் வீரரின் நினைவிடங்கள்,கட்டமைப்பு மிக்க பாலங்கள் மற்றும் கட்டிடங்கள் எனத் தொடர்ந்தது எங்கள் திறந்த வெளி பேருந்து பயணம். நகர மையத்தில் சுமார் 400 அடி கொண்ட துருப்பிடிக்காத எஃகினால் நிறுவப்பட்ட நினைவுத்தூண் ஒன்று உள்ளது. 2003-ல் அமைக்கப்பட்ட இந்த ஐரிஷ் சின்னம் மேற்கு ஐரோப்பாவின் உயர்ந்த கட்டமைப்புகளில் ஒன்றாகக் கருதப்படுகிறது.

அயர்லாந்து என்றாலே அனைவர் மனதிலும் தோன்றுவது மது தான். பிரபல மது வடிக்கும் நிறுவனமான GUINNES தொழிற்சாலை இங்கு அமைந்துள்ளது.

கெல்ஸ்  நூலகம்ட்ரினிட்டி கல்லூரி:

siragu TRINITY COLLEGE

புகழ்பெற்ற டிரினிட்டி கல்லூரி நிறுத்தத்தில் இறங்கினோம். சிறப்பாக அமைந்துள்ள இக்கல்லூரியின் வளாகத்தில், BOOK OF KELLS எனப்படும் கெல்ஸ் அருங்காட்சியம் சென்றோம்.

ஒன்பதாம் நூற்றாண்டில் வாழ்ந்த கெல்ஸ் மடாதிபதிகள் இந்த கெல்ஸ் நூலை உருவாக்கி இருக்கிறர்கள். இது ஐரோப்பாவின் பழமையான நூல்களுள் ஒன்றாகக் கருதப்படுகிறது.

siragu BOOK OF KELLS

சுமார் 1000 வருடங்களுக்கு முன்னரே பசுங்கன்றின் தோலை பயன்படுத்தி இந்த புத்தகத்தை உருவாக்கி இருக்கிறார்கள் என்பது ஆச்சர்யம். தோலை மெலிதாக நெய்து சுண்ணாம்பு தடவி உலர்த்தி காகிதம் போல் செய்திருக்கிறார்கள். அதில் நீண்ட இறகுகளைக் கொண்டு இயற்கை மை பயன்படுத்தி எழுதியிருக்கிறார்கள்.

இயற்கையில் கிடைக்கும் கனிமங்களைக் கொண்டு அதில் தாவர சாறு கலந்து மஞ்சள், ஆரஞ்சு, நீலம், பச்சை போன்ற நிற மைகளை தயாரித்திருக்கிறார்கள். மேலும் INDIGO எனப்படும் கருநீலப் பூக்களை இந்தியா அல்லது தெற்காசியாவில் இருந்து கொண்டு வந்து கூட மை தயாரிப்பில் பயன்படுத்தி இருக்கலாம் என்று கருதப்படுகிறது.

கிறித்துவ மதம் பற்றிய இப்புத்தகம், லத்தீன் மொழியில் எழுதப்பட்டிருக்கிறது.

siragu BOOK OF KELLS2

மேலும் இயற்கையில் கிடைக்கும் வண்ணப் பொடிகள் கொண்டு சித்திரங்கள் வரைந்திருக்கிறார்கள். ஒரு படம் ஆயிரம் வார்த்தைக்கு சமம் என்பது போல, இவர்களது கலாச்சாரம் ஓவியங்களாக வரையப்பட்டிருக்கிறது. அது மட்டுமல்லாமல் உலோகத்தினால் செய்யப்பட்ட வார்ப்புகள் கொண்டும் பல வண்ண சித்திரங்களை அச்சு செய்திருக்கிறர்கள் என்பது இன்னும் வியப்பு.

இரண்டாவது தளத்தில் உள்ள நீள் மண்டபத்தில், பழமை வாய்ந்த நூலகம் அமைந்துள்ளது. இதில் சுமார் 200ஆயிரத்திற்கும் மேற்பட்ட வரலாறு, தத்துவம், கலை, அறிவியல், நாகரிகம் மற்றும் கலாச்சாரம் தொடர்பான புத்தகங்கள் வரிசைப்படுத்தப் பட்டுள்ளது. இதன் விளிம்பில் பளிங்கினால் செய்யப்பட்ட சாக்கரடீஸ், அரிஸ்டாட்டில், பிளாட்டோ, ஷேக்ஸ்பியர்  போன்ற தத்துவ ஞானிகள் மற்றும் எழுத்தாளர்களின் சிலைகள் வைக்கப்பட்டுள்ளது.

siragu BOOK OF KELLS5

இதன் நுழை வாயிலில் அயர்லாந்து சுதந்தர பிரகடன அறிக்கை நகல் வைக்கப்பட்டுள்ளது. அதைத் தொடர்ந்து 1800-களில் உபயோகப்படுத்திய கால்பந்து தொப்பிகள் இரண்டும், 14 – ஆம் நூற்றாண்டில் உருவான HARP எனும் யாழ்போன்ற இசைக் கருவியும் வைக்கப்பட்டுள்ளது. முக்கோண வடிவிலான இக்கருவியில் பித்தளையால் இழைக்கப்பட்ட 29இசைக்கம்பிகள் பொருத்தப்பட்டுள்ளது.

ஐரிஷ் மக்கள் அக்காலத்தில் இருந்தே கலை மற்றும் இலக்கியத்தில் அதிக ஆர்வம் கொண்டவர்களாக விளங்கியிருக்கிறார்கள்.

கெல்டிக் நடனம்

siragu CELTIC NIGHTS

மாலைப் பொழுதானவுடன் எங்கும் வண்ண மின் விளக்குகள் மிளிர மது பார்கள் கலைக் கட்டியது. நாங்கள் CELTIC NIGHTS  எனப்படும் அயர்லாந்தின் புகழ்ப் பெற்ற கலைஞர்கள் கொண்டு நடத்தப்படும் பாரம்பரிய நடன விருந்து ஒன்றில் கலந்து கொண்டோம். இரவு 8:30 மணி முதல் 10:30 மணி வரை நடைப்பெற்ற இந்த கேளிக்கை நிகழ்வு ஆட்டம், பாட்டம் மற்றும் ஐரிஷ் விருந்து என அமர்க்களமானது.

இசைக்கு மொழி ஏது, கெய்லிக் மொழிப் பாடலுடன் எங்களை வரவேற்றார் அக்குழுவின் தலைவர். அமெரிக்கா, இங்கிலாந்து, ஆஸ்திரேலியா தவிர மற்ற ஐரோப்பிய நாடுகளில் இருந்தும் பலர் வந்திருந்தினர். இந்தியா? என்று கேட்டவுடன், நாங்கள் கைத்தட்டி ஆரவாரம் செய்தோம்.

siragu CELTIC NIGHTS3

அயர்லாந்தின் மொழி, கலாச்சாரம், குடும்ப வாழ்வு பற்றி கேளிக்கையாகவும் குட்டிக் கதைகள் மூலமாகவும் இசைத்து வழங்கினார். அயர்லாந்தில் 1996 -ல் தான் விவாகரத்து சட்ட பூர்வமானது என்றும்,  அதுவரை குடும்ப பிரச்சினைக்கு என்ன செய்தார்கள் என்பது உட்பட பல நிகழ்வுகளை வேடிக்கையாகப் பாடி விருந்தினரை கலகலக்க வைத்தார்.

பாடலுக்கு இடையிடையே மின்னலாக தோன்றிய வண்ண மங்கைகள் கெல்டிக் நடனமாடி மறைந்தனர். இசை பாடல் எதுவுமின்றி வெறும் காலணி ஓசை மட்டுமே கொண்டு ஆண்களும் பெண்களும் ஆடிய ஒரு போட்டி நடனத்தில் அரங்கம் அதிர்ந்தது. நிகழ்ச்சியின் இறுதியில் இவர்கள் ஆடிய தூரிகை ஆட்டம் பலத்த கரவொலியுடன் முடிந்தது. பிறகு என்னைக் கூட மேடையேற்றி கெல்டிக் நடனமாட கற்று கொடுத்தார்கள்.

இரண்டு மணி நேரம் போனதே தெரியவில்லை. இந்த கெல்டிக் நடனம் அயர்லாந்தின் சிறந்த கேளிக்கை நிகழ்வாக அமைந்தது.

இதேபோல், நம் ஊரில் கூட பாரம்பரிய கலைகளான கரகாட்டம், மயிலாட்டம், ஒயிலாட்டம், காவடியாட்டம், கூத்து போன்ற நடனங்களுடன் செட்டிநாடு, காரைக்குடி, நீலகிரி போன்ற சமையல்களையும் சேர்த்து வழங்கினால் தமிழகம் அயர்லாந்தை முந்திவிடும்.வெளிநாட்டுப் பயணிகள் நிச்சயம் தமிழ்நாட்டிற்குப் படையெடுப்பார்கள் என்பதில் ஐயமில்லை.


வெங்கட் நடராஜன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கலை, ஆட்டம், பாட்டம் அயராத அயர்லாந்து”

அதிகம் படித்தது