மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்

பிரத்யுக்ஷா பிரஜோத்

Jul 2, 2016

Siragu gavaththai eerkkum sol3

சொற்களைக் கோர்த்து சொற்றொடராக்குவது ஒரு கலை. பேசி முடிக்கும் வரை கேட்போர் அனைவரின் கவனத்தையும் தன் பக்கம் தக்க வைத்துக்கொள்வது ஒரு தனிக் கலை. பேச்சாற்றலால் சிலர் இதை சாதிக்கும்போது விருப்பத்தின் அடிப்படையில் / அனிச்சையாகச் சிலர் இதை சாத்தியமாக்குகிறார்கள்.

உரையாற்றும்போது அவையில் உள்ளோர் சிந்திக்கத் தேவையான சமயத்தைக் கொடுப்பதற்காக ஒரு சொல்லை சொல்லி நிறுத்துவதற்கு ஆங்கிலத்தில் filler என்று பெயர். இந்த filler வார்த்தைகளைத் தேவையான இடத்தில் சரியான சமயத்தில் பயன்படுத்துவது மற்றவர்களை சிந்திக்க வைக்கும், ஆவலைத் தூண்டும். அதே வார்த்தைகளைத் தேவைக்கதிகமாகவும், அநாவசியமான இடங்களிலும் உபயோகிப்பது சலிப்பைத் தரும்.

கவிதையில் ஒரு சொல் மீண்டும் மீண்டும் சொல்லப்படும்போது அதன் இனிமை கூடும், அழகு கூடும், சொல்ல நினைக்கும் கருப்பொருளை வலியுறுத்த இந்த உத்தி உதவும்.

entrance exam3மாணவர்களுக்குத் தெளிவாகப் புரிய வைக்கும்படி பாடம் நடத்தும் பொறுப்பு ஆசிரியர்களுக்கு உண்டு. ஒவ்வொரு வாக்கியத்தின் துவக்கத்திலோ, முடிவிலோ ஒரு வார்த்தையை மீண்டும் மீண்டும் ஆசிரியர் சொல்லும்போது மாணவர்களின் கவனம் பாடத்தில் இல்லாமல் அவ்வார்த்தையைப் பின் தொடர்வதில் செல்லும். அவர் எத்தனை முறை ஒரு வார்த்தையைச் சொன்னார் என்று கணக்கெடுக்கத் துவங்குவர். தன் தோழன் / தோழியிடம் தான் ஊகிக்கும் சமயத்தில் சரியாக ஆசிரியர் ஒரு வார்த்தையைச் சொல்வார் என்று பந்தயம் கட்டி விளையாடுவது சுவாரசியமான பொழுதுபோக்காக மாறிவிடும்.

ஒருவர் விரும்பும் வேலை கிடைப்பது பெரும்பாலும் நேர்காணல்களின் போது கேட்கப்படும் கேள்விகளுக்கு அவர் அளிக்கும் பதிலாலும், அதைச் சொல்லும் முறையாலும் நிர்ணயிக்கப்படுகிறது. கேள்வி கேட்பவர் விண்ணப்பதாரரின் திறமையை அளவிட முயல்கிறார். அவருக்குத் தெரிந்தவற்றையும், எவ்வளவு தெரிந்து வைத்திருக்கிறார் என்பதையும் ஆராய முற்படுகிறார். இம்மாதிரி சமயங்களில் பதிலளிப்பவர் ஒரே சொல்லை அடிக்கடி உபயோகிப்பது அவரின் மதிப்பைக் குறைக்கும்.

Businessmen

வருமானத்திற்கு வழி பிறரிடம் கை கட்டி நிற்பது மட்டுமல்ல. சுயமாகத் தொழில் செய்தும் பணம் ஈட்டலாம். தொழிலுக்கான முதலை வங்கியிலோ தனி நபரிடமோ பேசி கடனாகப் பெரும் சந்தர்ப்பம் அமையும்போது பேச்சின் அநேக பாகத்தை அடைத்து நிற்கும் ஒரு சொல் கடன் கொடுப்பவருக்குக் கடன் வாங்குபவரின் மீதான சந்தேகத்தைக் கொடுக்கும். தனக்குக் கீழே ஆட்களை வைத்து வேலை வாங்கும் நிலையில் இருக்கும் ஒருவரின் இம்மாதிரியான பேச்சு ஊழியர்கள் மத்தியில் அவநம்பிக்கையை ஏற்படுத்தும். ஏளனப் பார்வைப் பார்க்க வைக்கும்.

மேற்கூறியவை உதாரணங்களாக இருந்தாலும் எல்லாத் துறைகளிலும் பேச்சுக்கான முக்கியத்துவம் இருக்கவே செய்கிறது.

பலர் புதுமையாகப் பேசுவதற்காகத் தமிழில் ஆங்கிலக் கலப்பு செய்கிறார்கள். பேச்சின் ஊடே ஓர் ஆங்கிலச் சொல்லை அதிகம் பயன்படுத்துவது தனக்கு அதிகம் தெரியும் என்று காட்டிக்கொள்ள உதவும் என்று எண்ணுகிறார்கள்.

அந்நிய மொழியைக் கற்றுக் கொள்ளும்போது ஆரம்பத்தில் அதிக வார்த்தைகள் தெரியாததால் பேசத் தடுமாற்றம் இருக்கும். நாம் சொல்ல நினைக்கும் சொல்லை அம்மொழியில் யோசிக்க நாம் எடுத்துக்கொள்ளும் நேரத்தில் நன்கு அறிந்த ஓரிரு சொற்களைப் பேசி சமாளிக்கிறோம். சில நேரங்களில் புதிய சொற்களை நாமாகக் கண்டுபிடித்துப் பேசுவதும் உண்டு. சரியான வார்த்தைகளை பயன்படுத்தினால் கேட்பவருக்கு நமது மொழி ஆளுமையை சற்றே அதிகப்படுத்திக் காட்டலாம்.

குறிப்பிட்ட வார்த்தையை அடிக்கடி உபயோகிப்பது பேசும் விசயத்தைக் குறித்துத் தெளிவில்லாததை உணர்த்தும். பேசுபவரின் தன்னம்பிக்கையை அளவிடும் அளவுகோலாக பயன்படும்.

உரைக்கும் விசயத்தைப் பற்றி முழுத் தெளிவு இருந்தாலும் பொதுவெளியில் பலர் முன்னிலையில் பேசும்போது சிலருக்குத் தயக்கம் ஏற்படுகிறது. உள்ளுக்குள் இருக்கும் அச்சத்தை மறைத்துத் தொடர்ந்து பேசும்போது அவர்களறியாமல் சில வார்த்தைகளை அடிக்கடிப்பிரயோகிக்கத் துவங்குவர்.

Siragu gavaththai eerkkum sol4

விளையாட்டாக, வீம்புக்கென்று அல்லது அறியாமல் சில சொற்களைத் தங்கள் பேச்சில் சேர்த்துக்கொள்பவர்களுக்கு நாளடைவில் அதுவே பழக்கமாகிவிட அதை மாற்றிக்கொள்வதில் சிரமம் உண்டாகும்.

வந்து, அப்பறம், என்ன, சோ, லைக் போன்றவை அதிகமாக பேசப்படும் வார்த்தைகள். இம்மாதிரியான சொற்களால் கேட்பவரின் கவனம் பேச்சிலிருந்தும், சொல்பவர் கருத்திலிருந்தும், சொல்ல வரும் விசயத்திலிருந்தும் திரும்பி அந்த ஒரு சொல்லையே சுற்றி வரும்.

முதலில் ஒரு சொல்லை அடிக்கடி சொல்வதை பேசுபவர் உணர வேண்டும். பேசும்போது தேவையான இடங்களில் பேச்சின் வேகத்தை மட்டுப்படுத்த வேண்டும். அவசியம் ஏற்பட்டால் பேச்சை நிறுத்தி இடைவெளி விட வேண்டும். அதற்கு பயிற்சி தேவை. சமயம் கிடைக்கும்போது அல்லது பேசுவதற்கு முன் சொல்லிப் பார்த்தல் அவசியம்.

ஒற்றை எழுத்தை ஒரு சொல்லாக, ஒற்றை எழுத்தே பல பொருள் தரும் சொல்லாகக் கொண்ட மொழி நம் தமிழ் மொழி. சிறந்த சொல்லைத் தேர்ந்தெடுத்து இடம், பொருள், ஏவல் அறிந்து பயன்படுத்தி ஆற்றும் உரை பிறர் கவனத்தை ஈர்க்கும்.


பிரத்யுக்ஷா பிரஜோத்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கவனத்தை ஈர்க்கும் ஒரு சொல்”

அதிகம் படித்தது