மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காப்புரிமை

இராமியா

Jan 15, 2022

siragu-kaappurimai1

“ஓர் அறிவியல் அறிஞர் ஒரு பொருளை அல்லது ஒரு புதிய அறிவியல் தத்துவத்தைக் கண்டு பிடித்தால் அல்லது வடிவமைத்தால் அந்த அறிஞர் தகுந்த முறையில் சிறப்பு செய்யப்பட வேண்டும். அப்படிச் செய்தால் தான் மற்ற அறிஞர்களுக்கும் அத்தகைய ஊக்கம் உண்டாகும். ஆகவே தான் காப்புரிமை {patent right) என்பது தேவைப்படுகிறது.” என்பது சாதாரணமாக அனைவரும் ஒப்புக் கொள்ளும் வாதமே. ஆனால் நடைமுறை எவ்வாறு உள்ளது?

குரங்கில் இருந்து மனிதனாக மாறிய காலகட்டத்தில் எண்ணற்ற கண்டு பிடிப்புகள், வடிவமைப்புகள் நடந்து இருக்கும். ஒரு மரத்தில் ஏறி காய் கனிகளைப் பறித்துக் கொண்டு இருந்த குரங்கு மனிதன் கல்லை எறிந்து அதைக் கீழே விழ வைக்கலாம் என்று கண்டு பிடித்தது ஒரு மிகப் பெரிய அறிவியல் கண்டு பிடிப்பு. அதற்காக அந்தக் குரங்கு மனிதன் தன் சக குரங்கு மனிதர்களால் மிகவும் பாராட்டப்பட்டு இருப்பான்

குரங்கு மனிதர்கள் முழு மனிதர்கள் ஆகி, புராதன பொதுவுடைமைச் சமூகமாக வாழ்ந்து கொண்டு இருந்த போது மரங்களை வெட்டத் தேவைப்படும் நேரம் குறைவதற்கும், குறைவான அளவு பலத்தைக் கொண்டு மிருகங்களைப் பிடிப்பதற்கும், கொல்வதற்கும் கற்களைக் கூர்மை ஆக்கினால் முடியும் என முதன் முதலில் கண்டுபிடித்த மனிதனும் ஒரு மிகப் பெரிய அறிவியல் அறிஞனே. அவனும் தன் சக மனிதர்களால் மிகவும் பாராட்டப்பட்டு இருப்பான்.

ஆனால் அப்படிப்பட்ட அறிவியல் அறிஞர்கள் யாருமே தான் கண்டு பிடித்த வித்தையைத் தன் அனுமதி பெற்றுத் தான் மற்றவர்கள் பயன்படுத்த வேண்டும் என்று சொல்லி இருக்க மாட்டார்கள். அப்படிப் பயன்படுத்தக் கூலியும் கேட்டு இருக்க மாட்டார்கள். அப்படிப்பட்ட ஒரு கற்பனையே தோன்றி இருக்காது. அதாவது தன் கண்டுபிடிப்புக்குக் காப்புரிமை கோரி இருக்கவே மாட்டார்கள். ஆனால் அந்த அறிவியல் அறிஞர்கள் சக மனிதர்களால் பெற்ற பாராட்டுகளே மற்றவர்களை மேலும் மேலும் அறிவியல் கண்டுபிடிப்புகளுக்கு இட்டுச் செல்லும் உந்து விசையாக இருந்து இருக்கும்.

மனித சமூகம் வர்க்கங்களாகப் பிளவுபட்ட பின்னர், அறிவியலாளர்கள் தங்கள் கண்டுபிடிப்புகளுக்காகப் பாராட்டுகள் மட்டும் அல்லாது மற்ற பரிசுகளையும் பெற்று இருக்கலாம். ஆனால் காப்புரிமைத் தத்துவம், அதாவது கண்டு பிடிப்பாளரின் அனுமதி பெற்றுத் தான் அந்த வித்தையைப் பயன்படுத்த வேண்டும் என்ற நிலை இருந்திருக்காது. ஏனெனில் பண்டங்களை அதிகமாகவும் விரைவாகவும் உற்பத்தி செய்வது தான் ஆளும் / சுரண்டும் வர்க்கத்திற்கு வசதியாக இருக்கும். ஆகவே அறிவியல் அறிஞரின் அனுமதி பெற வேண்டும் என்ற கருத்தியல் அவர்களுக்கு உவப்பானதாய் இருக்காது.

ஆனால் முதலாளித்துவச் சமூகம் ஒரு விசித்திரமான அமைப்பு. இதில் மக்களுக்குத் தேவையான பண்டங்கள் அதிகமாக உற்பத்தியானால் பண்டங்களின் விலை குறைந்து மக்களுக்கு மகிழ்சியைத் தரும்;  ஆனால் முதலாளிக்கு இலாப விகிதம் குறைந்து மகிழ்ச்சியைக் குறைக்கும். ஆகவே முதலாளிகள் தங்கள் நலன்களைக் காத்துக் கொள்வதற்காக அனைத்து முயற்சிகளையும் எடுப்பார்கள். அவற்றில் ஒன்று தான் காப்புரிமைத் தத்துவம். இதன் படி ஒரு தொழில் நுட்ப நடைமுறையைப் புதிதாகக் கண்டு பிடிப்பவர் அல்லது வடிவமைப்பவர் அதற்கான காப்புரிமையைப் பெற்றுக் கொள்ளலாம். அதன் பின் அந்தத் தொழில் நுட்பத்தைப் பயன் படுத்த வேண்டும் என்றால் அவருடைய அனுமதியைப் பெற வேண்டும். அதற்கு அவர் ஒரு தொகையை நிர்ணயம் செய்து, அதைப் பெற்றுக் கொண்டு அனுமதி அளிக்கலாம். இந்த நடைமுறையினால் அறிவியல் அறிஞர்களுக்கு ஊக்கம் ஏற்படும் என்றும், மேலும் மேலும் அறிவியல் வளர்ச்சி ஏற்படும் என்றும் கூறுகிறார்கள்.

ஆனால் உண்மையில் நடப்பது என்ன? எந்த ஒரு தனிப்பட்ட அறிஞரோ அல்லது அறிஞர்களின் குழுவோ காப்புரிமையைப் பெறுவது இல்லை. அவர்களை ஆட்டுவிக்கும் ஒரு முதலாளியக் குழுமம் தான் அப்படிப்பட்ட காப்புரிமையைப் பெறுகிறது. சில சமயங்களில் தனிப்பட்ட அறிஞரோ அல்லது அறிஞர்களின் குழுவோ காப்புரிமையைப் பெற்றால் அதை முதலாளியக் குழுமங்கள் விலைக்கு வாங்கி விடுகின்றன. அதன் பின் காப்புரிமைக்கான பயன்களை எல்லாம் அந்த முதலாளியக் குழுமங்களே அனுபவிக்கின்றன. அதில் என்ன கேடு விளைந்து விடும் என்கிறீர்களா?

அந்த அறிவியல் தொழில் நுட்பம் மக்களின் நலன்களுக்குப் பயன்படுவதைப் பற்றி அக்கறை கொள்ளாமல், தங்கள் மூலதனத்தை உராய்வு இல்லாமல் இலாபகரமான வழிகளில் ஈடுபடுத்துவதற்கு எப்படி உதவும் என்று தான் ஆராய்வார்கள். அப்படிப்பட்ட வழிகள் கிடைக்கும் வரை புதிய தொழில் நுட்பத்தை நிறுத்தி வைப்பார்கள். சில சமயங்களில் புதிய தொழில் நுட்பத்தைப் பயன்படுத்த வேண்டும் என்பதற்காக வெகு நன்றாகப் பயன்பட்டுக் கொண்டு இருந்த பழைய தொழில் நுட்பத்தை அழிப்பார்கள்.

எடுத்துக்காட்டாக, 50 ஆண்டுகளுக்கு முன்னால் காலரா, பெரியம்மை, சின்னம்மை, தட்டம்மைத் தடுப்பு ஊசிகள் மிக எளிதாகவும், இலவசமாகவும் கிடைத்துக் கொண்டு இருந்தன. நம் ஊராட்சி அமைப்புச் சுகாதாரப் பணியாளர்கள் வீடு வீடாக வந்து மக்களுக்குச் செலுத்திக் கொண்டு இருந்தார்கள். மருத்துவம் முதலாளியக் குழுமங்களின் பிடியில் சிக்கிய பின் தொழில் நுட்பம் வெகுவாக வளர்ந்து உள்ளது. ஆனால் மக்களுக்குப் பழைய மருந்துகளே கிடைக்காமல் போய் விட்டன. அதே போல் 30 / 40 ஆண்டுகளுக்கு முன் தெருக் குழாய்களில் கிடைத்த தண்ணீர் நேரடியாகவே குடிக்கும் தரத்தில் இருந்தது. ஆனால் “மினரல் வாட்டர்” தொழில் நுட்பம் வந்த பின் அது காய்ச்சி வடித்துக் குடிப்பதற்குக் கூடத் தகுதி இல்லாமல் ஆக்கப்பட்டு இருக்கிறது.

இது போல் பல புதிய கண்டு பிடிப்புகள் மக்களுக்கு நன்மைகளைச் செய்வதற்கு மாறாக, கெடுதல்களையே அதிகமாகச் செய்து உள்ளன. செய்து கொண்டும் உள்ளன. ஏனெனில் முதலாளித்துவ உற்பத்தி முறையில் இலாபம், அதிக இலாபம், அதை விட அதிக இலாபம் தரும் பண்டங்களை உற்பத்தி செய்யத் தான் அரசு வழி கோலுமே ஒழிய மக்கள் படும் இன்னல்களைக் கணக்கில் எடுத்துக் கொள்ளாது.

ஆனால் ஒரு சோஷலிச அரசில் இவ்வாறு செய்ய முடியுமா? அறிவியல் அறிஞர்களை அங்கு யாரும் விலை பேச முடியாது. அவர்களுக்கு மிகுந்த மரியாதை தரப்படும். அவர்களுடைய கண்டுபிடிப்புகள் முடக்கப்படாமல் அனைவருக்கும் பயன்படுமாறு விரிவாக்கப்படும். அந்த அறிவியல் அறிஞருக்கு மிகுந்த சிறப்பு அளிக்கப்பட்டு அவரே அப்பணியை முன்னின்று நடத்தவும் வழி வகை செய்யப்படும். இது போல் தான் சோவியத் ஒன்றியத்திலும், கிழக்கு ஐரோப்பிய நாடுகளிலும் சோஷலிச ஆட்சி நடந்து கொண்டு இருந்த போது நடந்தது.

அப்படி என்றால் மக்கள் என்ன செய்ய வேண்டும்? பண்ட உற்பத்தி முதலாளித்துவ முறையில் இருக்கும் வரை, அதாவது என்ன பண்டங்களை உற்பத்தி செய்ய வேண்டும் என்பதை மக்கள் முடிவு செய்யாமல் முதலாளிகள் முடிவு செய்யும் வரையில் இக்கேடுகளைத் தவிர்க்க முடியாது. ஆகவே இந்த முதலாளித்துவ உற்பத்தி முறையை உருத்தெரியாமல் ஒழித்து விட்டு சோஷலிச சமூகம் அமைய அணியமாக வேண்டும்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காப்புரிமை”

அதிகம் படித்தது