மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

காலம் கனியும்!

செல்வக்குமார் சங்கரநாராயணன்

Apr 15, 2017

siragu-image1

எந்த ஒரு செயலாக இருந்தாலும் சரி, நாம் அதில் எதிர்பார்ப்பது வெற்றி ஒன்றை மட்டும்தான். புதிதாகத் துவங்கிய தொழிலாக இருக்கட்டும், முதற் முயற்சியிலேயே சென்ற வேலைக்கான நேர்முகத் தேர்வாக இருக்கட்டும், பணியில் முன்னேற்றம், இப்படி எல்லாவிதமான செயல்களிலும் மனம் விரும்புவது வெற்றியைத்தான். வெற்றி கிடைக்கவேண்டும் என்பதே எல்லாருடைய எண்ணமும் அதில் தவறேதும் இல்லை, ஆனால் எனக்கு இன்றிரவே வேண்டும்! அடுத்த நொடியே வேண்டும்! என்று எண்ணுவது தான் அனைத்துப் பிரச்சனைகளுக்கும் வழிவகுக்கிறது.

என்னுடன் படித்த அவன் மகிழுந்துவில் செல்கிறான், நான் மட்டும் இந்த இரு சக்கர வாகனத்தில் செல்கிறேன் என்று நொந்து கொள்வோர் எத்தனை பேருக்குத் தெரியும்? அவன் அந்த நான்கு சக்கர வாகனத்தை வாங்குவதற்கு எத்தனை நாள் உறக்கங்களை உழைப்பில் கொட்டியிருக்கிறான் என்று. அவன் அதை வாங்குவதற்குப் பட்ட துன்பத்தை நீங்கள் நேரில் ஒரு வேளை பார்த்திருந்தால் உங்ககளுக்கு அந்த மகிழுந்துவின் மீது ஆசை வந்திருக்கவே வந்திருக்காது.” அவன் மகிழுந்து வைத்திருக்கிறான் நாமும் அவனைப் போல் உழைத்து வாங்கிவிடலாமே ஒன்றை“ என்று நினைத்துப் பாருங்கள், அங்கே அந்த நினைப்பே விரைவில் உங்களுக்கு ஒரு மகிழுந்துவை வெற்றியெனப் பரிசளித்திருக்கும்.

ஒரே தேர்வறை , ஒரே வினாத்தாள் மற்றும் சம கால நேரங்களில் தேர்வெழுதிய நண்பர்கள் இருவரில் ஒருவன் சற்றே கூடுதல் மதிப்பெண் வாங்குகிறான்.அப்பொழுது குறைவான மதிப்பெண் வாங்கிய மாணவன், “சற்றே கூடுதல் கவனம் செலுத்தியிருக்கலாம் ! இதனாலென்ன அடுத்த தேர்வில் நானும் நல்ல மதிப்பெண் பெறப் பாடுபடுவேன்” என்று நினைத்து செயலாற்றும் பொழுது நிச்சயம் அடுத்தத் தேர்வில் அவனுக்கு சில கூடுதல் மதிப்பெண்கள் வெற்றியை அளித்திருக்கும்.

எல்லாவற்றிற்கும் நேர காலம் என்பது உண்டு! நாம் நினைத்த நேரத்தில் எல்லாம் நடந்துவிடுவதில்லை. மேற்கூறிய மகிழுந்து மற்றும் மாணவனின் மதிப்பெண்கள் விடயத்தில் அவை எல்லாம் நடக்கும் சாத்தியக்கூறு நுறு சதவிகிதம் உண்டு! ஆனால் அது உடனே நிகழ்ந்துவிடாது. எல்லாவற்றிற்கும் நேரமும் காலமும் கனியவேண்டும். அந்த மகிழுந்துப் பிரியருக்கு உழைப்பின் மூலம் வருவாய் சேமிப்பு அதிகரிக்க வேண்டும், அதே போல அந்த மாணவனுக்கோ அடுத்த தேர்வு வரும் வரையில் அவன் தன்னை இன்னுமும் மெருகேற்ற வேண்டும். இது ஒரு சிறு உதாரணம் தான், ஆனால் நம் எல்லா விடயங்களும் கிட்டத்தட்ட இதே போலத்தான்.

நடைமுறை வாழ்க்கை தான் நமக்கு மிகப் பெரியதொரு ஆசிரியர் என்பதில் எந்தவொரு ஐயமுமில்லை. ஒரு மரக்கன்று நடுகிறோம், நாள்தோறும் அதற்கு நீருற்றுகிறோம் என்பதற்காக அது நமக்கு நாள்தோறும் காய் கனிகளைத் தருவதில்லை! அதனால் எந்த காலத்தில் பூத்துக் காய்த்து கனிகளை வாரி வழங்க முடியுமோ அப்பொழுது தான் நமக்கு அந்த மரம் அவற்றைத் தருகிறது. அது போலத்தான் நம் வாழ்வின் எந்தவொரு செயலும்! செயலின் மீது முழு கவனமும் ஈடுபாடும் கொண்டு அதையே முழுமூச்சென எண்ணிச் செயலாற்றும் பொழுது நமக்குக் கிடைக்கும் வெற்றி என்பது நிச்சயம் ஒரு நாள் கிடைத்தே தீரும்! நமக்கான காலம் கனியும் என்ற நம்பிக்கையுடன் உங்களுக்கான உலகத்தில் வெற்றி நடை போடுங்கள்!


செல்வக்குமார் சங்கரநாராயணன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “காலம் கனியும்!”

அதிகம் படித்தது