மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கிளேப் மக்ஸிமிலியானவிச் கிரிஸிஸானவ்ஸ்கி

இராமியா

Apr 30, 2022

1921ஆம் ஆண்டு சோவியத் ஒன்றியத்தில் பருவ மழை தவறியதால் தானிய விளைச்சல் குறைந்து பஞ்சம் ஏற்பட்டது. இதைக் கண்ட முதலாளித்துவ நாடுகள் இந்தப் பஞ்சம் புரட்சியைத் திருப்பி அடித்து விடும் என்று ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தன. பஞ்சத்தை சமாளிக்கும் பணியை லெனின் மிகையில் இவானொவிச் கலீனினிடம் (Mikhail Ivanovich Kalinin)விட்டு இருந்தார். கலீனின் நாடு முழுவதும் சுற்றி நிலைமையை ஆராய்ந்தார். பதுக்கல்காரர்கள் மீது கடுமையான நடவடிக்கைகளை எடுத்து, தானியங்களை வெளிக் கொணர்ந்தும் பஞ்சத்தின் தீவிரம் குறைந்த பாடில்லை.

siragu Mikhail Ivanovich Kalinin
மிகையில் இவானொவிச் கலீனின்

வெளி நாடுகளில் இருந்து தானியங்களை வாங்கினால் மட்டுமே பஞ்த்தைச் சமாளிக்க முடியும் என்று அவர் உணர்ந்தார். ஆனால் புரட்சியை முறியடிக்க வேண்டும் என்ற வெறியுடன் காத்துக் கொண்டு இருக்கும் முதலாளித்துவ நாடுகள் அதற்கு ஒத்துழைக்குமா? அவர் லெனினிடம் தன் ஐயத்தை வெளியிட்டார். “நாம் முயற்சி செய்வோம்” என்று லெனின் கூறினார். அனைத்து அமெரிக்க ஐரோப்பிய நாடுகளிடம் வேண்டுகோள் விடப்பட்டது.

சோவியத் ஒன்றியத்தின் வேண்டுகோளை ஏற்பதா நிராகரிப்பதா என்று அந்நாடுகள் தங்களுக்குள் விவாதித்தன. புரட்சி செய்த மக்களைப் பட்டினி போட்டுக் கொல்ல வேண்டும் என்று முதலில் அவர்கள் நினைத்தார்கள். ஆனால் அவ்வாறு செய்வது புரட்சியை முறியடிக்க உதவாது என்றும் அவர்களுக்குத் தோன்றியது. பட்டினி போடுவதன் மூலம் மொத்த மக்களையும் கொன்று விடமுடியாது. எப்படியும் ஒர் ஆண்டுக்குள் பருவ நிலை சீரடைந்து பஞ்சம் தீர்ந்து விடும். புரட்சியை முறியடிக்க ஒரே வழி சோவியத் ஒன்றியத்தின் நிதி ஆதாரத்தை வற்றச் செய்வதே. இவ்வாறு யோசித்த முதலாளித்துவ நாடுகள் சோவியத் ஒன்றியத்துக்கு வேண்டிய அளவு தானியங்களை அளிக்க முன் வந்தன. ஆனால் அதற்கு அநியாய விலை கேட்டன. அதுவும் தங்கமாகக் கேட்டன.

லெனினும் கலீனினும் நாட்டு நிதி நிலைமையை ஆராய்ந்தனர். கையிருப்பில் போதுமான அளவு தங்கம் இல்லை. என்ன செய்வது? அவர்கள் மற்ற தோழர்களிடம் ஆலோசனை செய்தனர். தோழர்கள் துடிதுடிப்பானவர்கள். நாட்டில் ஏராளமான தேவாலயங்கள் உள்ளன, ஒவ்வொரு தேவாலயத்திலும் ஏராளமான அளவில் தங்கம் பதுக்கப்பட்டு இருந்தது. அவற்றைப் பறிமுதல் செய்து, பிரச்சினையைத் தீர்க்கலாம் என்று அவர்கள் கூறினார்கள். சரியான யோசனை என்று லெனின் பாராட்டினார்.

நாட்டின் நிதி ஆதாரம் வற்றிய நிலையில் பொருளாதாரம் சரிந்து மக்கள் புரட்சிக்கு எதிராகக் கொந்தளித்து எழுவார்கள் என்று முதலாளித்துவ நாடுகள் ஆவலுடன் காத்துக் கொண்டு இருந்தன. ஆனால் நடந்ததோ வேறு.

siragu Gleb Maksimilianovich Krzhizhanovskiகிளேப் மக்ஸிமிலியானவிச் கிரிஸிஸானவ்ஸ்கி

Gleb Maksimilianovich Krzhizhanovski

நாட்டின் பொருளாதார நிலைமை மிகவும் மோசமாக இருந்தது. வேளாண்மையும் தொழிலும் வளர வேண்டும். அதற்கு இயந்திரங்கள் வேண்டும். அதை விட முக்கியமாக மின்சாரம் வேண்டும். மின்சாரத்தை உற்பத்தி செய்யும் டர்பைன்கள் மிகக் குறைந்த எண்ணிக்கையிலேயே இருந்தன. அவற்றிலும் பழுது இல்லாமல் முழுத் திறனுடன் இயங்கக் கூடிய டர்பைன் ஒன்றே ஒன்று மட்டுமே இருந்தது. நாட்டின் தொழில் வளர்ச்சிக்குத் தேவையான டர்பைன்களையும் பிற இயந்திரங்களையும் வாங்க வேண்டும். ஆனால் பஞ்சம் தீர்க்கும் பணியில் நாட்டின் நிதி ஆதாரம் வற்றிய நிலையில் எப்படி வாங்குவது?

லெனின் ஆற்றல் அறிவியல் அறிஞரும், தன் நெருங்கிய தோழருமான கிளேப் மக்ஸிமிலியானவிச் கிரிஸிஸானவ்ஸ்கியை அழைத்தார். அவரும் நாட்டு நிலைமையை நன்கு அறிந்து இருந்தார். லெனின் அவரிடம் வெளி நாடுகளிடம் இருந்து நாட்டுக்குத் தேவையான இயந்திரங்களை வாங்க நிதி அதாரம் முற்றிலும் இல்லை என்றும், அப்படியே இருந்தாலும் முதலாளித்துவ நாடுகள் அதிக விலைக்கும் தராது என்றும் கூறினார். ஆனால் மின்சாரத்தை எப்படியும் உற்பத்தி செய்தே ஆக வேணடும் என்றும் கூறினார். கிரிஸிஸானவ்ஸ்கி லெனின் என்ன சொல்லப் பேகிறார் என அவரைக் கூர்ந்து பார்த்துக் கொண்டு இருந்தார்.

லெனின் “நாட்டில் இருக்கும் ஒரே ஒரு டர்பைனை அக்கு வேறு ஆணி வேறாகப் பிரித்துப் பார்த்து (dismantle) அதை நன்றாகப் புரிந்து கொள்ள வேண்டும். பின் அதை முன் போலவே ஒன்றிணைக்க (re assemble) வேண்டும். பிரித்துப் பார்த்த போது அதைப் புரிந்து கொண்டதை வைத்துக் கொண்டு, அதைப் போலவே பல டர்பைன்களை உற்பத்தி செய்ய வேண்டும்” என்று கூறினார். இது சாதாரண வேலை அல்ல. ஆனாலும் கிரிஸிஸானவ்ஸ்கி சரி என்று ஒப்புக் கொண்டார். தன் தோழர்களின் துணையுடன் ஒரே வாரத்தில் பிரித்துப் பார்த்து மீண்டும் ஒன்றிணைத்து விட்டார். அதன் பின் ஒரு மாதத்திற்கு உள்ளேயே புதிய டர்பைன்களை உற்பத்தி செய்யத் தொடங்கி விட்டார். முதலாளித்துவ நாடுகள் கற்பனை கூட செய்து பார்க்க முடியாத குறுகிய காலத்தில் சோவியத் ஒன்றியம் முழுமைக்கும் மின்சாரம் வழங்கும் திட்டத்தைச் செயல்படுத்தி விட்டனர் கிரிஸிஸானவ்ஸ்கியும் அவரது தோழர்களும்.

பஞ்சம் தீர்க்க உணவு வழங்கும் சாக்கில் நாட்டின் நிதி ஆதாரத்தை வற்ற வைத்து விட்டால், அதன் பின் தொழில் வளர்ச்சிக்குப் போதிய நிதி இல்லாத நிலையில் சோஷலிச அமைப்பு கவிழ்ந்து விடும் என்று ஆசையுடன் காத்துக் கொண்டு இருந்தன முதலாளித்துவ நாடுகள். எந்த வெளி நாட்டு உதவியும் இன்றி, தங்களால் கற்பனையும் செய்ய முடியாத குறுகிய காலத்தில் நாடு முழுமையையும் மின்மயம் ஆக்கிய உண்மையை அறிந்து முதலாளிகளும் முதலாளித்துவ அறிஞர்களும் அதிரச்சி அடைந்தனர்.


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கிளேப் மக்ஸிமிலியானவிச் கிரிஸிஸானவ்ஸ்கி”

அதிகம் படித்தது