மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குடும்பத்தினரால் மாநிலம் விட்டு மாநிலம் வெளியேற்றப்பட்ட மனநிலை பாதித்தவர்களின் அவலம்

நாகா ரா

Oct 22, 2016

நுனி நாக்கு ஆங்கிலம், புரியாத மொழி பேசி சுற்றித்திரியும் மனநிலை பாதித்தவர்கள்… குடும்பத்தினரால் வாகனங்கள் மூலம் மாநிலம் விட்டு மாநிலம் வெளியேற்றப்பட்ட அவலம்

தஞ்சாவூர்:

siragu-mananalam1
இதயத்தில் ஈரம் இல்லாதவர்கள், கொடூர கொலையை செய்தவர்களை விட மோசமானவர்கள் நாட்டில் இருக்க முடியுமா? உண்டு… உண்டு… அப்படி இருக்கின்றனர்… ஈனப்பிறவிகள் என்றுதான் கூற வேண்டியுள்ளது.

தங்களைப் பெற்ற பெற்றோர்… தங்கள் கூடப் பிறந்தவர்களை அனாதையாக விட்டுச் செல்லும் கல் மனம் கொண்டவர்கள் பற்றி தெரிய வந்த விசயமே இந்த கட்டுரையின் வடிவம் ஆகும்.

சென்னை, கும்பகோணம், தஞ்சை, திருச்சி, நாமக்கல், ஈரோடு, சேலம், ஓசூர், கோயம்புத்தூர், மதுரை என மாவட்ட தலைநகரங்களை நீங்கள் பேருந்துகளிலோ, வாகனங்களிலோ கடக்கும்போது பார்த்திருக்கலாம்.

இதைப் படித்த பின்னர் கூட வாகனத்தில் செல்லும் போது பார்க்கலாம். கிழிந்த அழுக்கு ஏறிய உடை, சடையாக தொங்கும் முடி, விரல்களில் நீளமாக வளர்ந்த நகத்துடன்… தான் என்ன செய்கிறோம்… என்பதே தெரியாமல் குப்பை மேடு, குப்பைத் தொட்டி போன்றவற்றில் கிடக்கும் பழைய பொருட்களை எடுப்பதும், அதில் கிடக்கும் உணவுப் பொருட்களை எடுத்து உண்ணும்… நம்மைப் போன்ற ரத்தம், உடல் என்று கொண்ட சக மனிதர்கள்… மனநிலை மாறிப் போனவர்கள்…

அருகில் சென்று பார்த்துள்ளீர்களா… அவர்கள் பேசுவதை கேட்டுள்ளீர்களா? இவர்கள் என்ன ஆகாயத்தில் இருந்து குதித்து வந்தவர்களா? இல்லை ஏலியன்களா?… இல்லை எங்கே… பிற மாவட்டங்களைச் சேர்ந்தவர்கள்..

ஏன்… பிற மாநிலத்தைச் சேர்ந்தவர்களாகக் கூட இருப்பார்கள். சிறுவர்களின் கேலியையும், கிண்டல்களையும் அவர்கள் வீசி ஏறியும் கற்களால் ஏற்படும் வலியைக் கூட வெளியில் சொல்ல முடியாதவர்களாக இருக்கின்றனர்.

திருச்சி மத்தியப் பேருந்து நிலையம் அருகில் இப்படித்தான் நண்பருடன் சென்றபோது ஒருவர் நுனிநாக்கு ஆங்கிலத்தில் பேசிக்கொண்டே சென்றார். அவர் அணிந்திருந்த உடையோ ராஜஸ்தான் மாநிலத்தவர்கள் அணியும் உடை போன்று இருந்தது.

ஆனால் அவரை தடுத்து நிறுத்தி கேள்விகள் கேட்டால் புரியாத மொழியில் பேசிவிட்டு சட்டென்று நகர்ந்தார். இப்படித்தான் பல மாவட்டங்களிலும் மனநிலை பாதித்தவர்கள் சுற்றித்திரிகின்றனர்.

அவர்களுக்கு உணவு என்பது என்ன தெரியுங்களா? நம்மைப் போன்றவர்கள் உணவகங்களில் சாப்பிட்டு விட்டு “முடியலை” என்று குப்பைத் தொட்டியில் வீசும் மிச்சம் மீதிதான்.

இவர்களுக்கு குடும்பங்கள் இல்லையா… அல்லது உடன் பிறந்தவர்களோ… மகனோ… மகளோ… இல்லையா… நம் நண்பர்களுடன் விசாரணையில் இறங்கியபோது கண்களில் நம்மை அறியாமல் கண்ணீர் மல்க ஆரம்பித்தது.

அந்த விசாரணையில் கிடைத்த தகவல்கள்தான் இவை. அதுதான் இந்த கட்டுரையாக உருப்பெற்றுள்ளது.

தமிழகத்தில் மனநிலை பாதித்தவர்களை பாதுகாக்க மனமின்றி இருக்கும் உறவினர்கள் மருத்துவமனைகளில் சேர்த்துவிடுகின்றனர்.

சிலரோ… இவர்களால் தங்களுக்கு கவுரவக் குறைச்சல் என்று நினைத்து தமிழகத்தில் இருந்து பிற மாநிலங்களுக்குச் செல்லும் லாரி டிரைவர்களிடம் கணிசமாக பணத்தைக் கொடுக்கின்றனர்.

siragu-mananilai

பின்னர் தங்கள் தந்தையோ… தாயோ… கூடப் பிறந்தவர்கள் யாரோ… பராமரிக்க மனமின்றி அவர்களுக்கு உணவில் மயக்க மருந்தை கலந்து கொடுக்கின்றனர். மயங்கிய அந்த மனநிலை பாதித்தவர்கள் வாகனத்தில் பிற மாநிலத்தை நோக்கி பயணப்படுகின்றனர்.

இப்படி வாகனத்தில் ஏற்றிச் செல்லப்படுபவர்களை பிற மாவட்டங்களிலோ… அல்லது மாநில எல்லைகளில் வாகன ஓட்டுனர்கள் வாங்கிய பணத்திற்கு வஞ்சகம் செய்யாமல் சிற்றுண்டி உணவுகளை வாங்கிக் கொடுத்து இறக்கி விட்டுச் செல்கின்றனர்.

பின்னர் அந்த மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் வீட்டுக்குத் திரும்பியா வரப்போகிறார்கள். பராமரிக்க ஆட்கள் இன்றி சாலைகளில் சுற்றித்திரிவது, சாப்பிட ஏது கிடைக்கிறதோ அதை தின்பது… என்று அவர்களின் நிலை அந்தோ பரிதாபம்தான்.

தமிழகத்தை மனநிலை பாதிக்கப்பட்டவர்கள் உறவினர்களால் இப்படி மாநிலம், மாவட்டம் கடத்தப்படுகின்றனர் என்றால்… பிற மாநிலத்தவர்கள் செய்வது அதை விட வேதனைதான்.

வீடுகளில் வைத்து பராமரிக்க முடியவில்லை என்பதால் வெகுதூர பயணமாகச் செல்லும் ரயில்களில் ஏற்றி கழிவறையில் உட்கார வைத்து விடுகின்றனர்.

அந்த ரயில் எங்கு செல்கிறதோ… அங்கோ… அல்லது அந்த மனநிலை பாதித்தவர்கள் எங்கு இறங்குகிறார்களோ… அதுவோ அவர்களின் புகுந்த வீடாக மாறிவிடுகிறது. அதுமட்டுமா… இருசக்கர, நான்கு சக்கர வாகனங்கள் உட்பட வாகனங்களை ஏற்றி வரும் கொள்கலன் வாகங்களின் ஓட்டுனர்களுக்கு பணத்தை அள்ளிக் கொடுக்கின்றனர்.

அவர்களும் பல சுங்கச்சாவடிகளை கடந்து வந்து தமிழகத்தில் அந்த மனநிலை பாதித்தவர்களை இறக்கி விட்டுச் செல்கின்றனர். இதில் என்ன கொடுமை என்றால்… மிகவும் அதிகம் படித்தவர்களாக இருக்கின்றனர் அவர்கள்.

இப்படித்தான் தஞ்சை பழைய மாவட்ட ஆட்சியர் அலுவலகம் அருகில் ஒருகால் ஊனமடைந்த நிலையில் ஒரு வாலிபர் கைகளால் ஊர்ந்து சென்று கொண்டிருந்தார்.

ஆற்றுப்பாலம் அருகே காவலர் நிழற்குடையில் சாய்ந்து உட்கார்ந்த அவர் கம்பீரமான குரலில் தனக்குத் தானே பேச ஆரம்பித்து விட்டார்.

அவர் கூறியவை அனைத்தும் அதிர்ச்சி ரகங்கள்தான். எந்தெந்த துறையில் யார் ஊழல் செய்கின்றனர் என்பது போல் இருந்தது அவரது பேச்சு.

அதிகபட்சம் 30 வயதிற்குள்தான் இருக்கும். ஆனால் மனநிலை பாதிக்கப்பட்டு இப்படி சாலையில் திரியும் நிலை அவருக்கு.
மக்களே… ஐந்தறிவு சீவனான மிருகங்களே தங்கள் குடும்பங்களை பாதுகாக்க விஸ்வரூபம் எடுக்கின்றன.

ஆனால் ஆறறிவு படைத்த நாம் மட்டும் ஏன் இவ்வளவு கீழ்த்தரமாக போக வேண்டும். இதை விட கொடுமை என்ன தெரியுங்களா?

மனநிலை பாதித்த வெளி மாநிலத்தைச் சேர்ந்த பெண்களும் இப்படி சுற்றித் திரிகின்றனர். இவர்களுக்கு ஏற்படும் கொடுமை வார்த்தைகளால் சொல்லி மாளாது.

அந்தப் பெண்களையும் காமக் கண்ணால் உரித்து எடுக்கும் சமூக விரோதிகள்… இரவு நேரத்தில் அவர்களிடம் முறைகேடாக நடப்பதுதான் வேதனையிலும் வேதனை.

தங்கள் வீட்டில் இதுபோன்று யாராவது இருந்தால் அவர்களிடம் இப்படி நடக்க மனம் வருமா? இச்சையைத் தீர்க்க இவர்கள்தான் கிடைத்தார்களா?

இப்படி தங்களுக்கு என்ன நடந்தது என்பதே தெரியாமல் மேடிட்ட வயிற்றுடன் சுற்றித்திரியும் அந்தப் பெண்களைக் கண்டால் கல் மனதும் நொறுங்கி விடும் என்பது மட்டும் உண்மையிலும் உண்மை.

இப்படி குடும்பத்தினரால் ஒதுக்கப்பட்ட இவர்களை பல சமூக அமைப்புகள், தன்னார்வலர்கள் மீட்டு மனநிலை காப்பகத்தில் சேர்க்கின்றனர். ஆனால் எத்தனை பேரை இப்படி மீட்க முடியும். காப்பாற்ற முடியும்.

நல்ல மனது இருந்தால்… இதயம் துடித்தால் இனியாவது இது போன்ற கொடூர செயல்கள் நடக்காமல் இருக்க வேண்டும். குழந்தைகளை விட அதிகளவு கவனம் எடுத்து இவர்களைப் பாதுகாக்க வேண்டும் என்பதுதான் எல்லோருடைய விருப்பம்…


நாகா ரா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குடும்பத்தினரால் மாநிலம் விட்டு மாநிலம் வெளியேற்றப்பட்ட மனநிலை பாதித்தவர்களின் அவலம்”

அதிகம் படித்தது