மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

குற்றாலமலையில் உள்ள 2,500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு எழுத்துக்களை இன்றளவிலும் படிக்க இயலவில்லை!

சா.சின்னதுரை

Apr 9, 2016

kutraala malai4மேற்குத் தொடர்ச்சி மலைத் தொடர்களின் தெற்குப்பகுதியில் அமைந்துள்ள பொதிகைமலை தொன்மையும், தனித்தன்மையும் வாய்ந்ததாகும். 1,868 மீட்டர் உயரமுள்ள இம்மலை, நெல்லை, கன்னியாகுமரி, கொல்லம், திருவனந்தபுரம் போன்ற தமிழக மற்றும் கேரள மாவட்ட எல்லைப் பகுதிகளுக்குள் அமைந்துள்ளது. இதில் குற்றால வனச்சரகத்திற்கு உட்பட்ட ஒரு புடவுக்கு வெளிப்புறத்தில் பொறிக்கப்பட்டுள்ள கல்வெட்டு எழுத்துக்கள், பல ஆண்டுகளாகவே அகழ்வாராய்ச்சியாளர்களிடம் கண்ணாமூச்சிக் காட்டிக்கொண்டிருக்கிறது. சுமார் 2500 வருடங்களுக்கு முற்பட்ட அக்கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை இன்றளவிலும் முழுமையாகப் படிக்க இயலவில்லை.

அப்படி என்னதான் அக்கல்வெட்டில் உள்ளன என்பதை நேரடியாகப் பார்ப்பதற்காக அங்குசெல்ல முடிவெடுத்தோம். குற்றாலத்திலிருந்து 35 கி.மீ. தூரத்திற்கு மலை வழியே கால்நடையாக நடந்து செல்லவேண்டும். குற்றால நண்பர் ஒருவர் வழிகாட்ட, இடுப்பு உயரத்திற்கு புதர்களால் சூழப்பட்ட பாதைகள் ஊடாக, செங்குத்துச்சரிவு ஊடாக, ஆறுகள் ஊடாக,… காட்டுப்பயணம் தொடர்ந்தது. 4 மணிநேர மலை நடைப்பயணத்திற்குப்பின், கல்வெட்டு பொறிக்கப்பட்டிருந்த இடத்தை அடைந்தோம். இந்த இடத்தின் பெயர்தான், ‘சன்னியாசிபுடவு’. உள்ளூர் மக்கள், இதனை ‘பரதேசி குகை’ எனஅழைக்கின்றனர்.

நெடுங்காலத்திற்கு முன்னர் சன்னியாசி ஒருவர் இப்புடவிலே வாழ்ந்ததாகவும், காட்டில் கிடைப்பவற்றை உண்டு அங்கேயே காலம் கழித்ததாகவும் வழிகாட்டி தெரிவித்தார். வழிகாட்டிக்கு அந்தப்புடவு மட்டும்தான் தெரிந்திருந்தது. கல்வெட்டு எழுத்துக்கள் இருக்குமிடம் அவருக்குத் தெரியாது என்றதால், அரைமணி நேரமாக துருவித்துருவி தேடிப்பார்த்து எழுத்துக்களை ஒருவழியாகக் கண்டுபிடித்தோம்.

புடவின் வெளிப்புறத்தில் அமைந்திருந்த கல்வெட்டில் 15 எழுத்துக்கள் பொறிக்கப்பட்டுள்ளன. 100 வருடங்களுக்கு முன்பே இக்கல்வெட்டு கண்டுபிடிக்கப்பட்டு விட்டது. ஆனால் இன்றளவிலும் அவ்வெழுத்துக்கள் குறிப்பிடுவது என்ன, எப்போது யாரால் பொறிக்கப்பட்டிருக்கும் என்ற கேள்விகளுக்கு விடை கிடைக்கவில்லை.

kutraala malai3”கல்வெட்டு ஆராய்ச்சியாளர்கள் ஆண்டுதோறும் குற்றால சன்னியாசிப்புடவுக்கு ஆய்வு நடத்த செல்கின்றனர். ஆனால், குறிப்புகள் ஏதும் கிடைக்கமால் ஏமாற்றத்துடன் திரும்பி வருகின்றனர். தற்போது அக்கல்வெட்டு பொறிக்கப்பட்ட காலக்கணிப்புப் பற்றிய குறிப்பு மட்டுமே உள்ளது” என்கிறார், குற்றால தொல்லியல் அருங்காட்சியக ஊழியர்கள். குற்றாலம் தொல்லியல் அருங்காட்சியகத்தில், சன்னியாசிப்புடவுக் கல்வெட்டின் மாதிரி வைக்கப்பட்டுள்ளது.

சன்னியாசிப்புடவு கல்வெட்டில் உள்ள 5 வது எழுத்தும், கி.மு. மூன்றாம் நூற்றாண்டைச் சேர்ந்த மாங்குளம் கல்வெட்டில் உள்ள 5 வது எழுத்தும் ஒரே மாதிரியாக உள்ளன. எனினும் மற்ற எழுத்துக்கள், மாங்குளம் கல்வெட்டுகளிலுள்ள எழுத்துக்களுடன் பொருந்தாததால் இதை, மாங்குளம் கல்வெட்டுக்கு முந்தியவையாகவே தொல்லியல் ஆய்வாளர்கள் கருதுகின்றனர். மாங்குளம் கல்வெட்டுக்களே இதுவரை அறியப்பட்டவற்றுள் மிகவும் பழமையான தமிழ்பிராமிக் கல்வெட்டு என்பது குறிப்பிடத்தக்கது.

தொல்லியல் அறிஞரான நடன காசிநாதன், தன்னுடைய ‘தமிழகம் அரப்பன் நாகரிகத் தாயகம்’ என்ற நூலில், ”சன்னியாசிப்புடவு கல்வெட்டில் உள்ள எழுத்துக்கள், அரப்பன்கால உருவ எழுத்துக்கள் நிலையான எழுத்துக்களாக வளர்ச்சி பெற்றகாலத்துக்கு முன்பாக வழக்கலிருந்த எழுத்துக்களாக இருக்கலாம்” என்று குறிப்பிடுகிறார்.

kutraala malai2கி.மு.800-களிலேயே தமிழ்பிராமி எழுத்துக்கள் முழுவழக்கில் வந்து விட்டதை, கொற்கையில் கிடைத்த பானை ஒட்டுக்கீறல்களை கொண்டு நிறுவிடமுடியும். இதன் காலம் கரிமநாற்படுத்தல் மூலம் கி.மு.785±95 எனக்கணிக்கப்பட்டது. ஒலி எழுத்துக்களாக (எழுத்துக்களின் 4 வளர்ச்சி நிலைகளில் ஒன்று) இருந்த தமிழகத்தின் பெருங்கற்கால குறியீடுகள், தமிழ்பிராமி என்னும் நிலை எழுத்துக்களாக வளர்ச்சி அடைந்த காலத்திலேயே சன்னியாசிபுடவின் எழுத்துக்கள் பொறிக்கப்பட்டிருக்கலாம். அதன்படி பார்க்கும்போது சன்யாசிப்புடவு எழுத்துக்களின் காலம் கி. மு.1000 என்று கூறலாம்.

சன்னியாசிப்புடவு கல்வெட்டின் 8 வது எழுத்தாக இருக்கும் மேல்நோக்கிய முக்கோணக் குறியீடு, சிந்துச்சமவெளிக் குறியீடுகளிலும், தமிழகம் மற்றும் ஈழத்தில் கிடைத்த பெருங்கற்கால பானையோடுகளில் காணப்படும் முக்கோணக் குறியீடுகளைப் போல் காணப்படுகிறது. இந்த ஒப்புமை, அரப்பன் நாகரிக எழுத்துக்களில் இருந்து, தமிழகத்தின் பெருங்கற்கால குறியீடுகளும் (Grafitti Marks), அதிலிருந்து பண்டைய தமிழ்எழுத்துகளும் (Tamil Brahmi) வளர்ச்சி அடைந்தன என்ற கருதுகோளுக்கு மேலும் ஒரு சான்றாக அமைகிறது. அதனால் இக்கல்வெட்டு தமிழ் எழுத்துக்களின் வளர்ச்சி பற்றிய ஆய்வில் முக்கியப்பங்கு வகிக்கிறது.

சன்னியாசிபுடவுக் கல்வெட்டில் உள்ள எழுத்துக்களை படித்தறியப்பட்டு விட்டால், தமிழ்எழுத்துகளின் தோற்றம் இன்னும் கூட முந்த வாய்ப்பிருக்கிறது.

தொல்லியல்துறை கவனிக்குமா?

kutraala malai1இந்தக் கல்வெட்டு பொறிக்கப்பட்டுள்ள சன்னியாசிப்புடவு, மலைத்தோட்டப் பயிர்களை சாகுபடி செய்யும் ஒரு தனியார் நிறுவனத்திற்கு சொந்தமான இடத்தில் பாதுகாப்பு இன்றி உள்ளது. பொதுவாக, தொன்மையைப் பறைசாற்றும் எல்லா வகையான சின்னங்கள், கட்டிடங்கள், இடங்கள், பொருள்கள் இவை அனைத்தையும் பாதுகாப்பதும், பராமரிப்பதும் தொல்லியல் துறையின் தலையாயப் பணிகளாகும். சன்னியாசிப்புடவு கல்வெட்டு பற்றிய தொல்லியல் ஆய்வு இன்னும் நிறைவுபெறாத நிலையில், இதைப் பாதுகாப்பது மிகவும் அவசியம். எனவே இக்கல்வெட்டு அமைந்துள்ள புடவை பாதுகாக்கப்பட்ட சின்னமாக அறிவித்து, புடவைச் சுற்றிலும் பாதுகாப்புவேலி அமைத்து, அறிவிப்புப்பலகை வைக்கவேண்டும் என தொல்லியல் ஆர்வலர்கள் கேட்டுக்கொண்டுள்ளனர்.


சா.சின்னதுரை

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “குற்றாலமலையில் உள்ள 2,500 வருடங்களுக்கு முற்பட்ட கல்வெட்டு எழுத்துக்களை இன்றளவிலும் படிக்க இயலவில்லை!”

அதிகம் படித்தது