மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கொரோனா நோய் தொற்றுப் பரவலும், மத்திய அரசின் பாரபட்ச நிதி ஒதுக்கீடும்!

சுசிலா

Apr 11, 2020

siragu coronavirus2
உலகெங்கிலும் கொரோனா தொற்று நோய் பாதிப்பு படு தீவிரமாக உயர்ந்து வருகிறது. உயிரிழப்பு ஒரு லட்சத்தை நெருங்கிக்கொண்டிருக்கிறது என்பது நம் எல்லோருக்கும் பேரச்சத்தைத் தருவதாக இருக்கிறது. உலகிலுள்ள மனித குலமே செய்வதறியாது கலங்கி போய் தவிப்பதை பார்க்கும்போதும், வளர்ந்த நாடுகள் அனைத்தும் மிகுந்த உயிரிழப்புகளை சந்தித்து வரும் இவ்வேளையில், நாம் என்ன செய்யப் போகிறோம், நம் அரசு என்ன செய்யப் போகிறது என்பது பெரும் கேள்விக்குறியாகவே நம் முன்னே வந்து நிற்கிறது. இந்தியாவில் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை 6,412 ஆக உயர்ந்துள்ளது. உயிரிழந்தவர்களின் எண்ணிக்கை 199 என அதிகரித்திருக்கிறது. மத்திய சுகாதாரத்துறை தெரிவித்திருக்கும் செய்தியில், கடந்த 12 மணிநேரத்தில், 30 பேர் உயிரிழந்திருப்பதாக கூறுகிறது. தமிழ்நாட்டின் நிலைமையோ கொஞ்சம் கொஞ்சமாக அதிகரித்த வண்ணம் இருக்கிறது. இன்றைய புள்ளிவிவரப்படி, கோவிட் 19 பாதிப்புள்ளானவர்களின் எண்ணிக்கை 911 எனவும், இறந்தவர்கள் 9 எனவும் கூறுகிறது. நாடு அளவில், பாதிப்புக்குள்ளானவர்கள் எண்ணிக்கையில், முதலிடத்தில் இருக்கும் மகாராஷ்டிரத்தை அடுத்து, தமிழ்நாடு இரண்டாவது இடத்தில் இருக்கிறது.

ஆனால், இந்நிலையில், கொரோனா நிதி வழங்கும் விசயத்தில் கூட, மத்திய பா.ச.க அரசு பாரபட்சம் காட்டுகிறது என்பது வேதனைக்குரிய ஒன்றாகவே இருக்கிறது. மனித நேயத்துடன், உயிர் காக்கும் இந்த நிதி வழங்கல் நடவடிக்கையில், வடமாநிலங்களுக்கு ஒரு விதமாகவும், தென் மாநிலங்களுக்கு ஒரு விதமாகவும் பாகுபாடு காட்டுகிறது. நம்மை விட குறைவாக பாதிக்கப்பட்டிருக்கும் மாநிலங்களுக்கு, அதாவது, 234 பேர்கள் பாதிப்புள்ள மாநிலமான உத்திரப்பிரதேசத்திற்கு ரூ.996 கோடியும், 179 பேர்கள் கூட இல்லாத மத்தியப்பிரதேசத்திற்கு, ரூ.910 கோடியும், 21 பேர்கள் பாதித்த ஒடிசாவிற்கு, 802 கோடியும், 32 பேர்கள் பாதித்த பீகார் மாநிலத்திற்கு ரூ.708 கோடியும் , 122 பேர் பாதித்திருக்கும் குஜராத் மாநிலத்திற்கு ரூ. 662 கோடியும், 571 பாதித்த தமிழ்நாட்டிற்கு ரூ.510 கோடி என ஒதுக்கீடு செய்திருக்கிறது. இந்த அறிவிப்பு ஒதுக்கீடு செய்த அன்று வெளியிடப்பட்டது. ஆனால், தற்போதைய நிலை தமிழ்நாட்டில் 911 என உயர்ந்திருக்கிறது. அன்றைய நிலவரப்படியே பார்த்தாலும் , நம்மைவிட குறைவான பாதிப்பு உள்ள மாநிலங்களுக்கு அதிக நிதி ஒதுக்கியிருக்கிறது பா.ச.க அரசு. பா.ச.க ஆளும் மாநிலங்களுக்கும், அது கூட்டணி வைத்திருக்கும் மாநிலங்களுக்கும் அதிக நிதி கொடுக்கிறது. தமிழ்நாடு என்றாலே எப்போதும் ஒரு வகையான பாகுபாட்டை கடைபிடிக்கிறது பா.ச.க அரசு. அதிலும், உட்சபட்ச பாகுபாடாக, பாதிக்கப்பட்ட மாநிலங்களின் வரிசையில், தமிழ்நாட்டை அடுத்து மூன்றாவதாக உள்ள கேரளத்திற்கு வெறும் ரூ. 157 கோடி அளிப்பதாகக் கூறியிருக்கிறது. இந்த விசயத்தில் கூடவா வன்மத்தைக் காட்ட வேண்டும்!

siragu coronavirus3

தமிழ்நாடு முதலமைச்சர் முதலில், 9,000 கோடி ரூபாய் தேவைப்படுகிறது என்று கடிதம் எழுதியுள்ளார். அதன் பிறகு, ரூ. 3000 கோடி தாருங்கள் என கேட்டிருக்கிறார். ஆனால், தரப்படுவதாக கூறியதோ, வெறும் 510 கோடி ரூபாய் மட்டுமே. ஏற்கனவே, நமக்கு கொடுக்கப்படவேண்டிய நிதி, இன்னமும் நிலுவையில் இருக்கிறது. இந்தியாவிலேயே, அதிக வரி, அதாவது வருமான வரியாக இருந்தாலும், சரக்கு சேவை வரியாக இருந்தாலும் சரி, அதிகமாக கொடுக்கும் மாநிலங்களில் இரண்டாவதாக தமிழ்நாடு இருக்கிறது. அப்படியிருக்கும் போது, நமக்கு முறைப்படி வரவேண்டிய பணமும் வரவில்லை. பேரிடர் நிதியிலிருந்தும் மிகக் குறைவாகவே ஒதுக்கப்படுகிறது என்றால், மத்திய பா.ச.க அரசின் நோக்கம் என்ன என்று மிக தெளிவாகத் தெரிகிறது தானே! தொடக்கத்திலிருந்தே, நம்மை வஞ்சிக்கும் விதமாகவே எப்போதும் நடந்து வருகிறது மத்திய பா.ச.க அரசு.

அடுத்து பார்த்தோமானால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் ஊதியத்தில் 30% ஒராண்டாண்டிற்கு பிடித்தம் செய்யப்படும் என்ற அறிவித்திருக்கிறது மத்திய அரசு. இந்த அறிவிப்பைக் கூட, நாடாளுமன்ற உறுப்பினர்களிடமோ, ஏனையக் கட்சிகளிடமோ கலந்தாலோசிக்கவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தன்னிச்சையாக முடிவு எடுத்து வெளியிட்டிருக்கிறது. இது கூட, இந்த சமயத்தில் மக்களின் நலனுக்காக செய்கிறது என்று விட்டுவிடலாம். ஆனால், நாடாளுமன்ற உறுப்பினர்களின் தொகுதி மேம்பாட்டு நிதியை ரத்து செய்திருக்கிறது இந்த மத்திய அரசு. நோய்த்தொற்று ஏற்படும் இந்த பேரிடர் காலத்தில், எம்.பி. க்கள் தங்களின் தொகுதி மக்களுக்கு உதவவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் போது இம்மாதிரி நடவடிக்கை எவ்விதத்தில் சரியாக இருக்க முடியும்? ஒரு சனநாயக நாட்டில் இதனை ஏற்றுக்கொள்ள முடியுமா?

மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட ஒரு மக்களின் பிரிதிநிதி , அம்மக்களுக்கு தேவையான நலத்திட்டங்களை செய்வது என்பது அவர்களின் மிக முக்கியமான கடமையாகும். அந்தந்த தொகுதிக்கு என்ன தேவைப்படுகிறது, எவ்வளவு தேவைப்படுகிறது என்பது அந்த நாடாளுமன்ற உறுப்பினருக்கு தானே தெரியும். அப்படியிருக்கையில், அந்த நிதியை பறிப்பது நியாயமாகுமா? இது ஒரு நல்லாட்சியின் செயலாக கருத முடியுமா? இங்கே, தமிழ்நாட்டிற்கு தேவைப்படும் நிதியை, பா.ச.க அரசு, தான் ஆளும், உத்திரப்பிரதேசத்திற்கோ, மத்திய பிரதேசத்திற்கோ, குஜராத்திற்கோ என பயன்படுத்தினால், அதனை நாம் எப்படி கண்டறிய முடியும்? ஒரே மாநிலத்தில் கூட, நகர்புறத்திற்கும், கிராமப்புரத்திற்கும் நிதி ஒதுக்குவதில் வேறுபாடு இருக்கிறதே!

அது, அந்தந்த மக்களின் நலனைப் பொறுத்து தானே அமையும். மேலும், மக்களால் தேர்ந்தெடுக்கப்பட்ட, மக்கள் பிரிதிநிதியின் நிதியாரத்தை பறித்தால், ஒரு மாநிலத்திலுள்ள மக்களின் உணர்வுகளை, பொருளாதாரத்தை, வாழ்வியலை, சிதைப்பதற்கு சமமானது என்பது தானே பொருள். இதனை அனைத்து மாநிலங்களும் எதிர்த்து குரல் கொடுத்து, திரும்பப்பெற வைக்க வேண்டும்.

எல்லாவற்றிற்கும் மேலாக, இது கூட்டாட்சியின் தத்துவத்திற்கு கேடு உண்டாக்குவது போன்றது தானே. அனைத்து அதிகாரமும், ஒரே இடத்தில் குவிக்கப்பட்ட வேண்டும் என்பது சனநாயக கொள்கையின் நேர் எதிரானது என்பதை யாராலும் மறுக்க முடியாது. ஒவ்வொன்றாக மாநிலத்தின் உரிமைகளை, மாநிலத்தின் தேவைகளை பார்த்து, எல்லாவற்றிற்கும் மத்திய அரசையே கைநீட்டி எதிர்பார்க்கும் நிலையை உருவாக்கி வருகிறது பா.ச.க அரசு என்பது தெள்ளத்தெளிவாகத் தெரிகிறது. இந்த கொரோனா நோய்த்தொற்று பரவும் இந்த ஆபத்தான காலகட்டத்திலும் கூட, இத்தனையும் தனக்கு சாதகமாகவே அமைத்துக்கொள்ள முற்படுகிறது மத்திய பா.ச.க அரசு!

இந்த இக்கட்டான சூழ்நிலையிலும் கூட, நம் மாநில தமிழக அதிமுக அரசோ, மத்தியஅரசு செய்யும் எல்லாவற்றிற்கும் வாய் மூடி, மௌனமாகவே இருக்கிறது. எதிர்க்கட்சியான, திமுக தான், நிதி ஒதுக்கீட்டில் உள்ள பாரபட்சத் தன்மைக்கும், நாடாளுமன்ற உறுப்பினர்களின் நிதியை ரத்து செய்தற்கும் எதிர்த்து குரல் கொடுத்து, தங்களின் நிலைப்பாட்டை பதிவு செய்திருக்கிறது.

இந்நிலையில், ஏப்ரல் 14 க்கு பிறகு மேலும் ஊரடங்கு நீட்டிக்கப்படும் என செய்திகள் வருகின்றன. அனைத்து மாநிலங்களும் அதையே வலியுறுத்துவதால், மேலும் இரு வாரங்களுக்கு ஊரடங்கு நீடிக்கப்படலாம். அது, தற்போதைய சூழலில், தேவையானதும் கூட என்று தோன்றுகிறது. ஆனால், இதனால் மிகவும் பாதிப்புக்குள்ளாவது கீழ் நடுத்தட்டு மக்களும், கீழ்த்தட்டு மக்களும் தான் என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும். அவர்களுக்கான சுகாதாரம், உணவு, அடிப்படை தேவைகள் வழங்குவதில் சிறிதும் சுணக்கம் காட்டாமல் செவ்வனே செய்வதற்கு தமிழக அரசு போர்க்கால நடவடிக்கைகள் எடுக்க வேண்டும். இன்னும் கூட மருத்துவர்களுக்கு வேண்டிய பாதுகாப்பு உபகரணங்கள் தரப்படவில்லை என்ற செய்தி வந்துகொண்டுதானிக்கிறது. இது மிகவும் வருந்தத்தக்க ஒன்று, உயிர் காக்கும் மருத்துவர்களின் உடல்நலம் மிக முக்கியம். அவர்களுக்குத் தேவையான அனைத்தும் உடனே வழங்க அரசு நடவடிக்கை எடுக்க வேண்டும். நம் சுகாதார துறை, இங்கே சமூக பரவல் இல்லை, எனவும், மூன்றாம் நிலைக்கு நாம் செல்லவில்லை என்றும் கூறுகிறது. ஆனால், பரிசோதனை செய்வதில் நாம் மிகவும் தாமதாக இருக்கிறோம் என்பது தான் உண்மை. பாதிக்கப்பட்ட வரிசையில் இரண்டாவதாக இருக்கும் நாம், பரிசோதனை செய்த மாநிலங்களின் பட்டியலில், 6 வது இடத்தில் இருக்கிறோம். மிக வேகமாக இயங்கவேண்டிய கட்டாயத்தில் இருக்கும் தமிழ்நாடு, ஒவ்வொன்றிற்கும் மத்திய அரசிடம் கையேந்தும் நிலையில் இருக்கிறது என்பது வேதனையான ஒன்றாக இருக்கிறது. தமிழ்நாட்டு அரசு, மத்திய அரசிடம், தனக்கு தேவையான நிதியை பெறுவதிலும், பரிசோதனைக்கு தேவையான உபகரணங்கள் பெறுவதிலும், மருத்துவர்களுக்கான பாதுகாப்பு உபகரணங்கள் பெறுவதிலும் உறுதியுடன் பெரும் முனைப்பு காட்ட வேண்டும்.

siragu coronavirus3

Rapid test kid ஒரு லட்சம் ஆர்டர் கொடுத்திருக்கிறோம். இன்றே வந்து விடும் என்று மூன்று நாட்களுக்கு முன் முதலமைச்சர் கூறினார். அதன்பிறகு, இரு தினங்களுக்கு முன் தலைமை செயலரும் அவ்வாறே கூறினார். ஆனால், இதுவரை வந்து சேரவில்லை என்பது மிகவும் வருத்தத்துக்குரிய ஒன்றாக இருக்கிறது. அதனை காலம் தாழ்த்தாமல் உடனே பெறுவதற்கு முயற்சி செய்து, அந்த பரிசோதனைகளை துவங்க வேண்டும் தமிழக அரசு. வேகமாக தொற்று பரவி வரும் தற்போதைய நிலையில் மிகவும் முக்கியமான ஒன்று இந்த பரிசோதனை என்பதை அரசு உணர்ந்து செயல்பட வேண்டும்.

அடித்தட்டுமக்கள் அதிகமிருக்கும் நம் போன்ற மாநிலங்கள், தங்களுக்கான உரிமைகளை விட்டுக்கொடுக்கக்கூடாது. பெறவேண்டிய நிதியை முறையாகப்பெற்று, மக்களுக்குத் தேவையானவற்றை தாராளமாக செய்வதற்கு முயற்சி செய்ய வேண்டும். மக்கள் பெரும் அச்சத்தில் இருக்கிறார்கள் என்பது கண்கூடு. மேலும், ஊரடங்கு நீடிக்கும் நிலை ஏற்பட்டால், பெரும்பாலும், அன்றாடங்காய்ச்சிகளாக இருக்கும் மக்கள் பெரிதும் பாதிக்கப்படுவார்கள் என்பதை மனதில் கொண்டு செயல்படவேண்டிய கட்டாயத்தில் இருக்கிறது தமிழக அரசு. பொருளாதாரம் மிகவும் பாதிப்புள்ளாகிய இவ்வேளையில், மத்தியில் இருந்து, பெறவேண்டிய நிதியை பெற்று, அவர்களுக்கான, உணவு, சுகாதாரம், இருப்பிடம் முதலியவற்றில் கவனம் செலுத்தி, மக்களை காப்பதில் உறுதியுடன் செயல்படுவது இப்போதைய அவசியம். உணவு கிடைக்கவில்லையென்றால், ஊரடங்கை மீறி, மக்கள் வெளியே வருவதை தடுக்க முடியாது!

வல்லமை பெற்ற பல உலகநாடுகள் செய்த தவறிலிருந்து நாம் பாடம் கற்க வேண்டும். பாதிப்பும், இறப்பும் குறைந்த அளவில் இருக்கும் நாடுகளிலிருந்து நாம் என்ன செய்ய வேண்டும் என்பதையும் கற்று செயல்பட வேண்டும்.

சமூக பரவலை தடுக்க, தனி மனித இடைவெளியை உறுதியாக கடைப்பிடித்து, கொரோனாவை வெல்வோம். கொரோனா பாதிப்பிலிருந்தும், பசி, பட்டினி சாவிலிருந்தும் மக்களை காப்பாற்றும் மிகப்பெரிய கடமை அரசுகளுக்கு இருக்கிறது. அதனை உணர்ந்து செயல்பட வேண்டும் என்பதை நாம் அனைவரும் அரசுக்கு வலியுறுத்துவோம்.


சுசிலா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கொரோனா நோய் தொற்றுப் பரவலும், மத்திய அரசின் பாரபட்ச நிதி ஒதுக்கீடும்!”

அதிகம் படித்தது