டிசம்பர் 15, 2018 இதழ்
தமிழ் வார இதழ்

கோண்டு ஓவியம்

தேமொழி

Nov 10, 2018

Siragu Gond Art1

கோண்டு ஓவியம் என்பது இந்தியப் பழங்குடியினரான கோண்டு மக்கள் (Gondi or Gond) வரையும் ஓர் ஓவிய முறை. இவர்கள் திராவிட இனத்தைச் சேர்ந்தவர்கள் என்றும், இவர்களது மொழி தெலுங்கு மொழியின் தாக்கம் கொண்டதாகவும் கூறப்படுகிறது. கோண்டு பழங்குடியினர் மத்தியப்பிரதேச மாநிலத்தில் அதிக அளவில் வாழ்கிறார்கள், மத்தியப்பிரதேசத்தின் அண்டை மாநிலங்களிலும் பரவியுள்ளார்கள். கோண்டு என்பது பச்சைமலை என்ற பொருள் தரும். இவர்கள் மூதாதையர் வழிபாட்டைக் கடைப்பிடிப்பவர்கள், இராவணனை தங்கள் முன்னோர் என்று கருதுபவர்கள். ஆதலால் இராவணன் கொடும்பாவி எரிப்பு நிகழ்வுகள் இவர்களுக்கு ஏற்புடையதன்று.

இவர்கள் இயற்கையை மிகவும் போற்றுபவர் என்பதால் இவர்கள் ஓவியங்களின் கருத்துகள் இயற்கை சார்ந்ததாக மட்டுமே இருக்கும். சுவர் ஓவியங்களாகச் செம்மைப்படுத்தப்பட்ட மண்சுவர்களில் பெரும்பான்மையாகவும், சில சமயங்களில் நன்கு மெழுகிய மண் தரைகளிலும் இயற்கை வண்ணங்களைக் கொண்டு வரைவர். அடர்த்தியான தன்மை கொண்ட வண்ணங்களில், குறிப்பாக காவி, சிவப்பு, மஞ்சள், பழுப்பு, பச்சை, நீலம் ஆகிய நிறங்கள் ஓவியங்களில் இடம் பெறும். படங்களில் காவி சிவப்பு மஞ்சள் பழுப்பு வண்ணங்களின் தாக்கம் அதிகமாகவும், நீலம், பச்சை தேவைக்கேற்பவும், கருப்பு வெள்ளை குறைவாகவும் இருக்கும். ஓவியத்திற்கான நிறத் தேர்வு இயற்கையில் காணப்படும் நிலையைக் காட்டும் வகையிலேயே பெரும்பான்மையாக அமையும். பழங்குடியின் ஓவியக்கலையாக இருந்ததை உலகஅரங்கில் வெளிக்கொணர்ந்தவர் ஜங்கர் சிங் ஷியாம் (Jangarh Singh Shyam, 1962-2001) என்பவர். இவரால் கோண்டு ஓவியங்கள் மண்சுவர்களில் இருந்து சட்டமிடப்பட்ட கேன்வாஸ் துணிகளுக்கு இடம்பெயர்ந்து, புதிய பாணியை ஏற்றுக்கொண்டு உலக அரங்கில் புகழ்பெற்றுள்ளது.

Siragu Gond Art2

இவ்வாறாக, இக்காலத்தில் கோண்டு ஓவியம் மண்தரையையும் சுவரையும் விட்டு விலகி திரைச்சீலைகளில் வணிக நோக்கில் வரையப்படும்பொழுது மரபைக் கடந்து கற்பனை உருவங்கள், இயற்கைக்கு அப்பாற்பட்ட காட்சிகள், கடவுளர் போன்ற உருவங்களுடன், வேறு நிறக் கலவைகளும் கொண்டு வரையப்படுகின்றன. ஆனால் கோண்டு ஓவியத்தின் பழமை மரபைக் காட்ட விரும்புபவர் இயற்கையில் காணப்படும் மரம், செடி, கொடி, மலர்கள், பறவைகள், விலங்குகள், மனிதர்கள், அவர்கள் வாழ்வின் நிகழ்ச்சிகள் ஆகியவற்றை மட்டுமே காட்டுவார். இயற்கை என்ற அடிப்படையில் ஓவியத்தில் தாய்த்தெய்வ உருவங்கள் மட்டும் இடம்பெறுவதுண்டு, ஆனால் தொன்மம், வழிபாடு ஆகியன இடம்பிடிப்பதில்லை. ஓவியத்தின் கரு இயற்கை..இயற்கை… இயற்கை மட்டுமே. ஓவியங்கள் வளைவான கோடுகள், புள்ளிகள் கொண்டே அமைந்திருக்கும். இவ்வாறு புள்ளிகளும் கோடுகளும் வளைவுகளும் கொண்டு வரையும் முறை ஆஸ்திரேலியாப் பழங்குடியினர் ஓவிய முறையுடன் ஒத்திருப்பதாகவும் கருதப்படுகிறது. மேலும் கோண்டு ஓவிய முறை ஆயிரக்கணக்கான ஆண்டுகளுக்கு, வரலாற்றுக்கு முற்பட்ட காலத்தில் குகைவாழ் மனிதர் காலத்தில் இருந்து தொடர்ந்து வருவது என்பது ஆய்வாளர்கள் முடிவு. கோண்டு மக்கள் தங்கள் குடும்ப விழாக்களில் வீட்டை அலங்கரிக்க கோண்டு மக்கள் இத்தகைய ஓவியங்களை வரைவர்.

குறிப்பு: கலிபோர்னியா வளைகுடாப்பகுதியில் தெற்காசியக் குடும்பங்களின் வன்முறைகளால் பாதிக்கப்படுவோருக்கு உதவவும், அவர்கள் மீட்சி பெற வழிகாட்டும் தொண்டு நிறுவனமான ‘நாரிக்கா’ (Narika – narika.org) என்ற அமைப்பு கடந்த அக்டோபர் மாதம், சான் ஹோசே நகரின் பகுதியில், கோண்டு ஓவியப் பயிற்சி வகுப்பொன்றை ஓவியர் ரூபா பகவன் மூலம் நடத்தியது. மரத்தின் மீதிருக்கும் பறவையை சித்தரிக்கும் கோண்டு படமொன்றை ஓவிய ஆர்வலர் அனைவருக்கும் வரைவதற்கு ஆசிரியர் ரூபா பயிற்சி அளித்தார். அப்பொழுது வரையப்பட்ட ஓவியம் இது.


தேமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோண்டு ஓவியம்”

அதிகம் படித்தது