மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

கோயில் திருப்பண்ணியர் விருத்தமும் சமுதாய முன்னேற்றமும்

முனைவர் மு.பழனியப்பன்

Feb 15, 2020

siragu kovil thiruppanniyar1

ஒவ்வொருவரும் ஒவ்வொரு பணி செய்கிறார்கள். எவரும் சும்மா இருப்பதே சுகம் என்று இருப்பதில்லை. ஒவ்வொரு பணியும் ஒரு சமயத்தில் பணியாகின்றது. மற்றொரு சமயத்தில் கடமையாகின்றது. கோயிலில் செய்கின்றபோது எப்பணியும் திருப்பணி ஆகின்றது. கோயில் பூசை செய்வோர் தொடங்கி, திருஅலகிடுவோர் வரை கோயில்பணிகள் பலவாறாக உள்ளன. இப்பணிகளுள் ஒன்று பண்ணிசைத்தல் என்பதாகும். கோயிலில் இசைத் தமிழும் இயற்றமிழும் நாடகத் தமிழும் வளர்க்கப்பெற்றுவந்தன. இவற்றில் இசைத்தமிழான பண் இசைத்தல் பற்றி ஒரு சிற்றிலக்கியமே உள்ளது. கோயில் திருப்பண்ணியர் திருவிருத்தம் என்பது அவ்விலக்கியத்தின் பெயராகும். பண்ணியர் என்பதை பல வகைகளில் பொருள் கொள்ளலாம். பண்ணியர் என்பது இங்குப் பண்ணிசைப்பவர்கள் குறித்த இலக்கியம் என்ற நிலையில் பெருமை பெறுகின்றது. பண்ணியர் என்பதை தில்லைப் பெருமான் என்று பொருள் கொண்ட உரையாளர்களும் உண்டு.

நம்பியாண்டார் நம்பியால் கட்டளைக் கலித்துறையில் இயற்றப்பட்ட எழுபது பாடல்கள் கொண்ட தொகுப்பு திருப்பண்ணியர் விருத்தம் என அழைக்கப்படுகின்றது. இவ்விலக்கியத்தின் ஒவ்வொரு பாடலிலும் சிவபெருமானின் பெருமை விதந்து ஓதப்படுகிறது. அதனுடன் கோயில் சார்ந்த பணிகள், பணியாளர்கள், கோயில் சார்ந்த சமுதாயம் போன்றன பற்றிய செய்திகளும் காட்டப்பெற்றுள்ளன.

இப்பாடல்களின் வழியாக அக்கால சமுதாயம் எவ்வாறு கோயில் சார்ந்து வாழ்ந்தது என்பதையும், கோயில் திருப்பணிகள் எந்த அளவிற்கு நடைபெற்றன என்பதை அறிந்து கொள்ளமுடிகின்றது.

நம்பியாண்டார் நம்பி திருமுறைகளை வகுத்தவர் ஆவார். இவரின் தொகுப்பு முயற்சியால் சைவம் தழைத்தது. சைவ நூல்கள் என்றும் பாதுகாப்பினைப் பெற்றன. திருக்காப்பினைச் செய்த இவர் தன் காலத்தில் தான் வாழ்ந்த சமுதாயத்தின் நிலைப்பாட்டை, சமயத்தால் சமுதாயம் முன்னேற இயலும் என்ற நிலையில் பக்தி சார்ந்த படைப்புகளைப் படைத்தளித்துள்ளார். இப்படைப்புகள் இனிய படைப்புகளாக, சமுதாயத்தின் முன்னேற்றம் சொல்லும் படைப்புகளாக விளங்குகின்றன. இவரின் படைப்புகளுள் ஒன்று கோயில் திருப்பண்ணியர் விருத்தம். இப்பனுவல் சிறந்த முறையில் சமுதாயத்தை சமய நெறிப்படி வாழ வழி செய்விப்பதாக உள்ளது. சமயத்தின்பாலும், இறைவன் மீதும் பற்றும் பக்தியும் கொண்ட சமுதாயம் முன்னேற்றம் கொள்ளும் என்பதற்கு இவரின் இப்படைப்பே சான்றாகும்.

மன்னராட்சி காலத்தில் செய்யப்பட்ட அறங்களுள் முக்கியமானது கோயில் திருப்பணிகள், கோயில் கட்டுவதும், அதனைப் பாதுகாப்பதும் மிகச் சிறந்த அறங்களாகக் கருதப்பெற்றன. கோயில்களில் உள்ள பணிகளைச் செய்ய பல பணியாளர்கள் நியமிக்கப் பெற்றனர். அவர்கள் கோயில் வழி பெறும் பணிப்பணம் குறைவெனினும் புண்ணியங்கள் அதிகம். இப்புண்ணியமிக்க பணிகளைச் செய்யும் அன்பர்கள் சமுதாயத்தின் மிக முக்கியமான பணியாளர்கள் ஆவார்கள். இவர்கள் முப்போதும் திருக்கோயில் பணிகளை அளவின்றி செய்துவருகின்றனர்.

ராசராசசோழன் காலத்தில் ஆடுநர், பாடுநர், திருமுறை விண்ணப்பிப்போர், தச்சர், கல் தச்சர், ஓவியவாணர்கள் போன்ற பலர் திருக்கோயில் பணிகளுக்கென நியமிக்கப்பெற்று கோயில்கள் கலை வளர்க்கும் நிலையங்களாக விளங்கின. இன்றும் அதன் மிச்சம் இருந்து வருகிறது.

கோயில் பணி மிகப் புனிதமானது என்ற நிலையும் ஒரு காலத்தில் திரிந்தது. குறிப்பாக பெண்கள் நிலையில் திரிதல் ஏற்பட்டது. இத்திரிபுகள் சரி செய்யப்பட்டு ஒரு காலத்தில் கோயிலில் கலைவாணர்கள் இல்லாத நிலைக்கு ஆளானது.

இச்சூழலில் திருப்பண்ணியர் விருத்தம் என்பது கோயில் பணிகளின் தூய்மை பற்றி உரைப்பது கருதத்தக்கது. இதன்வழி ஒப்பிலா சமுதாயமாக மேம்பட்ட சமுதாயமாக கோயில் சார்ந்த சமுதாயம் விளங்க முடிந்தது. விளங்கிவருகிறது.

கோயிலில் நடைபெற்ற பணிகள்:

தில்லையில் நடைபெற்ற திருக்கோயில் பணிகளைப் பட்டியலிட்டு, அதனைத் தான் செய்யவில்லையே, எங்களைத் தில்லைக்காவலன் காக்கட்டும் என்று பல பாடல்களில் குறிக்கிறார் நம்பியாண்டார் நம்பி.

     “பயில்கின்றிலேன் நின் திறத்திரு நாமம் பனிமலர்த்தார்

     முயல்கின்றிலேன் நின் திருவடிக்கே”(1043)

தில்லை அம்பலவன் திருநாமத்தை ஐந்தெழுத்து மந்திரத்தைச் சொல்லும் பயிற்சி பெற்றோர் தில்லையில் அதிகமான பேர்கள் உள்ளனர். மலர் மாலைகளைத் திருவடிகளில் சூட்டுவோரும் அதிகம். ஆனால் இப்பணிகள் எதையும் நான் செய்யாமல் காலத்தை வீணே கழிக்கின்றேன் என்று நம்பியாண்டார்நம்பி தன்னை நொந்து கொள்கிறார்.

புலன்கள் வழியாகப் பெரும் இன்பமே சிறப்பானது என்று அதனையே நாளும் செய்யும் மனிதர்கள் அதனின்று விலகி புண்ணியனைப் போற்றினால் நன்மை பெறலாம் என்கிறது மற்றொரு பாடல்.

     “புண்ணியனே என்று போற்றி செயாது புலன்வழியே

     நண்ணியனேற்கு இனி யாதுகொலம்புகல் என்னுள் வந்திட்டு

     அண்ணியனே தில்லை அம்பலவா அலர் திங்கள் வைத்த

     கண்ணியனே செய்ய காமன் வெளுப்பக் கருத்தவனே” (1075)

என்ற பாடலில் புலன்வழி செல்பவர்களுக்குப் புகலிடம் இல்லை என்கிறார் நம்பியாண்டார் நம்பி. கோயில் திருப்பணி செய்போர் புலனின்பம் கடந்தவர்கள் என்பதும் தெரியவருகிறது.

     “கருப்புரு வத்திரு வார்த்தைகள் கேட்டலும் கண் பணியேன்

     விருப்புருவத்தினொடு உள்ளம் உருகேன். விதிர் விதிரேன்” (1083)

என்ற பாடலடிகளிலும் திருப்பணிகள் குறிக்கப்பெறுகின்றன. கரும்பு போன்ற இனிய அருள் மிகு வார்த்தைகளைக் கேட்டதும் கண்கள் பணியவேண்டும். விருப்பமான உருவத்தில் ஆழும் உள்ளமம் உருகவேண்டும். உடம்பு நடுங்க வேண்டும். இவையெலாம் செய்தால் இறைவன் வந்து ஆண்டுகொள்வான் என்கிறார் நம்பியாண்டார் நம்பி.

     “கூடுவது அம்பலக் கூத்தன்     அடியார் குழுவுதொறும்

     தேடுவது ஆங்கவன் ஆக்கம் அச் செவ்வழி அவ்வழியே

     ஓடுவது உள்ளத்து இருத்துவது ஒண்சுடரைப் பிறவி

     வீடுவதாக நிலைனயவல்லோர் செய்யும் வித்தகமே” (1089)

என்ற பாடலிலும் கோயில் சார்ந்த திருப்பணிகள் தொடர்கின்றன. சிவனடியார் கூட்டத்துள் இருப்பதும், அவனைத் தேடுவதும், உள்ளத்தே அவனை நிறுத்துவதும், வீடு பேறு பெறுவதற்கான வழிகள் ஆகும். கோயிலுக்குள் வந்து ஆண்டவன் திருநாமம் செப்புவது முதல் திருப்பணி. அவன் மலரடிகளுக்கு மலர்கள் சூட்டுவது அடுத்தபணி. அதற்கடுத்து அவனைத் தேடுவது சிவனடியார் கூட்டத்துள் இருப்பது, உள்ளத்தே நிறுத்துவது ஆகியன தொடரும் திருப்பணிகள் ஆகின்றன. இப்பணிகளைக் குறைவின்றிச் செய்தல் நன்னிலை கிட்டும் என்பதில் ஐயமில்லை.

     இன்னமும் பணிகள் தொடர்கின்றன.

     “நேசன் அல்லேன் நினையேன் வினை தீர்க்கும் திருவடிக்கீழ்

     வாசநன் மாமலரிட்டு இறைஞ்சேன் எனதன் வயாதனால்

     தேசன் என்னானை பொன்னார்திருச்சிற்றம்பலம் நிலவும்

     ஈசன் என்னேன் பிறப்பு என்னாய்க் கழியுங்கொல் என்தனக்கே”(1092)

என்ற நிலையில் கோயில் மீதும் ஆண்டவன் மீதும் நேசம் கொள்ளவேண்டும். வினைதீர்க்கும் திருவடிக்கு மலர்கள் இடவேண்டும்.. சிற்றம்பலத்து இருப்பவனை, வாயினால் போற்றுதல் செய்யவேண்டும். இவ்வாறு செய்தால் பிறப்பு அறவே நீங்கும். ஆனால் இதனைச் செய்யாமல் நான் அழிகிறேன் என்கிறார் நம்பி. திருவாசகமும், சிற்றம்பலக்கோவை என்ற திருக்கோவையாரையும் பயிலாதவர்கள் அவர்கள் கவிதை எழுதி சிரிப்புக்கு ஆளாகுவார்கள். திருவாசகமும், திருக்கோவையாரும் மனிதர்களை உய்விக்கப் போதுமானவை. அவற்றை வாசிப்பதும் கோயில் பணிகளில் ஒன்று. அதையாவது மனிதர்களே செய்யுங்கள் என்கிறார் நம்பியாண்டார் நம்பி.

நம்பியாண்டார் நம்பி பாடிய திருத்தொண்டர் திருவந்தாதியில் தான் அறிந்த மாணிக்க வாசக சுவாமிகள் பற்றிய குறிப்புகளை இடம் பெறச் செய்யமுடியாமல், அவற்றை திருப்பண்ணியர் விருத்தத்தில் பின்வருமாறு பதிவு செய்கிறார் நம்பியாண்டார் நம்பி.

     “வருவாசகத்தினில் முற்றுணர்ந்தோனை வண்தில்லை மன்னைத்

     திருவாதவூர்ச் சிவபாத்தியன் செய்திருச் சிற்றம்பலப்

     பொருளார் தருதிருக்கோவை கண்டேயும் மற்றப்பொருளைத்

     தெருளாத வுள்ளத்தவர்கவி பாடிச் சிரிப்பரே” (1095)

என்ற நிலையில் மாணிக்கவாசக சுவாமிகள் பற்றியும், அவரின் எழுத்தாற்றல் பற்றியும் இப்பாடலுக்குள் காட்டுகின்றார் நம்பியாண்டார் நம்பி.

கோயில் பணி செய்வோர் சொர்க்கம் புகுவர் மற்றோர் நரகம் பெறுவோர் என்று ஒரு காப்புப்பாடலும் இதனுள் அமைந்துள்ளது.

     “அவரமதித்து ஆழ்நகரத்தில் இடப்படும் ஆதர்களும்

     தவமதித்து ஒப்பிலா என்னவிண் ஆளும் தகைமையரும்

     நவநிதித் தில்லையும் சிற்றம்பலத்து நடம்பயிலும்

     சிவநிதிக்கே நினை யாரும் நினைந்திட்ட செல்வருமே”(1095)

என்ற நிலையில் சொர்க்கம் புகுபவர் பற்றியும் நரகம் புகுபவர் பற்றியும் எடுத்துரைக்கிறார் நம்பியாண்டார் நம்பி.

சிவ போற்றி சொல்லாதவர்கள் நகரம் புகவும், சொல்லுபவர்கள் சொர்க்கம் புகவும் வாய்ப்புகள் வழங்கப்படுகின்றன. இவ்வாறு பற்பல பணிகள் செய்பவர்தம் இயல்புகளைக் கோயில் திருப்பண்ணியர் விருத்தம் சுட்டுகிறது.

     “சிந்திக்கவும் உரையாடவும் செம்மலராற் கழல்கள்

     வந்திக்கவும் மனம் வாய்கரம் என்னும் வழிகள் பெற்றும்

     சந்திக்கிலர் சிலர் தெண்ணவர் தண்ணர் தில்லை அம்பலத்துள்

     அந்திக் கமர்திருமேனிஎம்மான் தன் அருள்பெறவே”

மொத்தத்தில் சிவப் பணி என்பது

மனதால் இறைவனைச் சிந்தித்தல்,

வாயால் அவன் புகழ் உரையாடல்

கரங்களால் மலரடி வணங்கல்

என்னும் செயல்களை உள்ளடக்கியதாகும். ஆனால் இதனைச் செய்யாமல் பலர் அலைகின்றனர். தில்லை எம்பெருமான் அருள் பெறுதலே இப்பிறவியின் தலையாய பயன் என்று நம்பியாண்டார் நம்பி குறிப்பிடுகிறார்.

நம்பியாண்டார் நம்பி கடவுள் பணி செய்து ஆண்டவன் அருளைப் பெற்ற நிலையும் இப் படைப்பினுள் காட்டப்பெற்றுள்ளது.

     “உண்டேன் அவரருள் ஆரமிர்தத்தினை உண்டலமே

     கண்டேன் எடுத்த கழலும் கனலும் கவித்த கையும்

     ஒண்டேன் மொழியினை நோக்கிய நோக்கும் ஒளிநகையும்

     வண்டேன் மலர்த்தில்லை அம்பலத்து ஆடும் மணியினையே (1051)

என்ற நிலையில் ஆண்டவன் அருள் பெற்றமையை நம்பியாண்டார் நம்பி அகச்சான்றாகப் பதிவு செய்கிறார்.

அவன் அருள் என்னும் அமிழ்தம் பெற்றேன். அவனுடைய எடுத்த பொற்பாதம் கண்டேன். கழல், கையில் உள்ள கனல், கவித்த கை, தேன் போன்ற உமையவளைப் பார்க்கும் கண், ஒளிநகை ஆகியவற்றையெல்லாம் கண்டேன். தில்லை நடராசனது அருள் அமிழ்தம் பெற்றேன் என்று உள்ளம் பூரிக்கிறார் நம்பியாண்டார் நம்பி.

     இவனின் ஆடல் கண்டால்

           “நண்ணிய தீவினை நாசஞ் செலுத்தி நமனுலகத்து

         எண்ணினை நீக்கி இமையோர் உலகத்து இருக்கலுற்றீர்

           பெண்ணினொர் பாகத்தான் சிற்றம்பலத்துப் பெருநடனைக்

           கண்ணினை யார் தரக்கண்டுகையார் தொழுமின்களே” (1106)

என்ற பாடலின்வழி நமன் உலகம் செல்வதைத் தடுத்து, தேவர் உலகம் செல்ல வேண்டும் என்றால் நடராசப் பெருமானின் பெருநடனத்தைக் காண்க என்று காட்டுகிறார் நம்பியாண்டார் நம்பி.

இக்கோயில் திருப்பண்ணியர் விருத்தம் வழியாக கோயில் பணிகளைச் செய்வதன் மூலம் ஒரு சமுதாயம் நிலைப் பேற்றை, பிறப்பில்லா பெருவாழ்வைப் பெற இயலும் என்பது தெரியவருகிறது. மேலும் நமசிவாய மந்திரத்தைச் சொல்லுதல், திருவடிகளுக்கு மலர் சூட்டல் போன்றவற்றால் பெருநன்மை விளையும் என்பதும் தெரியவருகிறது. இவற்றைச் செய்து நாளும் எம்பெருமான் நடனம் கண்டு நல்வழி பெறட்டும் இச்சமுதாயம்.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “கோயில் திருப்பண்ணியர் விருத்தமும் சமுதாய முன்னேற்றமும்”

அதிகம் படித்தது