மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சமூகப் புரட்சியாளர் சாகுமகராஜ்!!

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

Sep 23, 2017

Siragu shahu_maharaj1

சத்திரபதி சாகு மகராஜ் 26 ஜூன் மாதம் 1874 ஆம் ஆண்டு மாராட்டிய மாநிலத்தில் பிறந்தவர். இந்திய வரலாற்றில் முதன்முதலில் இட ஒதுக்கீட்டை அமல்படுத்தியவர் இவர். சாதி ஒழிப்பிற்காவும், தீண்டாமைக்கு எதிராகவும் குரல் எழுப்பியவர். பகுஜன் சமாஜின் மாணவர்கள் விடுதி இயக்கத்தின் முன்னோடி. பார்ப்பன ஆதிக்கத்தையும், இந்து மதத்தின் ஆதிக்கத்தையும் எதிர்த்தவர். சமூக நீதியின் தந்தை, அண்ணல் அம்பேத்கரின் இயக்கத்தை முழுதும் ஆதரித்தவர்.

ஒடுக்கப்பட்ட மக்களின் வாழ்க்கைத் தரத்தை உயர்த்த பல நிலைகளில் திட்டங்கள் கொண்டு வந்தார். கல்வியும், வேலைவாய்ப்பும் அனைவருக்கும் கிடைக்க வழிவகை செய்தார். பார்ப்பனர் அல்லாத மாணவர்களுக்காக பல விடுதிகளை கோல்லாபூரில் (kolhapur) திறந்தவர். அதே போன்று கல்வி கற்ற மாணவர்களுக்கு வேலைவாய்ப்பையும் உறுதி செய்தார். 1902 லேயே இத்தகைய திட்டங்களை வகுத்து சமூக நீதியை நிலைநாட்டினார் என்பதே மிகச்சிறப்பான செய்தி.

அதே போன்று அவர் மன்னராக இருந்து ஆட்சி செய்த மாநிலத்தில் குழந்தைத் திருமணத்தை தடை செய்தார். சாதி மறுப்பு திருமணங்களையும், விதவை மறுமணத்தையும் ஆதிரித்து செயல்படுத்தியவர். அனைத்து சாதியினரும் அர்ச்சகராக வேண்டும் என்பதை வலியுறுத்தி பல பார்ப்பனர் அல்லாத மக்கள் அர்ச்சகராக பயிற்சி அளித்தார். இந்த சமூகப் புரட்சிக்காக பால கங்காதர திலக் போன்ற சனதனவாதிகளின் கடுமையான எதிர்ப்பைச் சந்தித்தார்.

உத்திரபிரதேச முன்னாள் முதலமைச்சராக இருந்து திரு. மாயவதி அவர்கள் 2010 ஆம் ஆண்டு அமேதி எனும் மாவட்டத்திற்கு சாகு மகராஜ் மாவட்டம் எனப் பெயர் சூட்டினார். அதே போன்று நீதிக்கட்சியின் தலைவர்களில் ஒருவரான டி.எம்.நாயர், மைசூர் சமஸ்தான மன்னர் கிருஷ்ணராஜு, சாகுமகராஜ் மூவரும் இங்கிலாந்தில் ஒன்றாகப் படித்தவர்கள், ஒத்தக் கருத்துடையவர்கள்.

சாகு மகராஜுக்கு கடவுள் பக்தி உண்டு. ஆனால் அரண்மனையில் இருந்த பார்ப்பனர்கள் இவர் சூத்திரர் என்ற காரணத்தால் அவருக்கு வேதச் சடங்குகள் செய்யாமல் புராணச் சடங்குகள் செய்தார்கள். அதை எதிர்த்த சாகு அவர்கள் அந்த சங்கராச்சாரிகளின் சொத்தைப் பற்றி ஆராய்ந்தார். சங்கராச்சாரி தன் வாரிசை மன்னர் ஒப்புதல் இல்லாமல் நியமித்ததை கண்டுப்பிடித்து சொத்துகளை பறிமுதல் செய்தார். சொத்தைக் கைப்பற்ற ஜுனியர் சீனியர் சங்கராச்சாரிகள் போட்டி போட்டனர். அதில் ஜுனியர் சங்கராச்சாரி வேத சடங்குகள் செய்வதாகக் கூறி சொத்தை திரும்பக் கைப்பற்றினார்.

மல்யுத்தம் செய்வதில் மிகுந்த ஈடுபாடு கொண்டிருந்தவர். இந்திய தபால் துறை, அவரின் நினைவாக தபால் தலை வெளியிட்டுள்ளது. அதில் சமூகப் புரட்சியாளர், உண்மையான மக்களாட்சி புரிந்தவர், கலை, இசை மற்றும் விளையாட்டுகளை ஊக்குவித்தவர் எனப் பாராட்டி உள்ளது.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சமூகப் புரட்சியாளர் சாகுமகராஜ்!!”

அதிகம் படித்தது