மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

நீரிழிவு நோய் மருத்துவர் V.வேணுகோபால் அவர்களின் நேர்காணல்

சித்திர சேனன்

Apr 2, 2016

Dr.Venugopal1கேள்வி: உங்களைப் பற்றிய அறிமுகம்?

பதில்: நான் பேராசிரியர் மருத்துவர் வேணுகோபால். பிறந்தது திருவண்ணாமலை அருகில் இருக்கும் போளூர் என்ற ஒரு சிறிய நகரம். அவ்விடத்திலே பத்தாம் வகுப்புவரை முடித்துவிட்டு, லயோலா கல்லூரியில் P.U.C. முடித்து, அதற்குப் பிறகு ஸ்டான்லி மருத்துவக்கல்லூரியில் M.B.B.S மற்றும் M.D இரண்டையும் முடித்தேன். அதன் பிறகு உதவி பேராசிரியராகவும், பேராசிரியராகவும் அரசுக் கல்லூரிகளில் பணிபுரிந்தேன். ஸ்டான்லியில் இருபது வருடத்திற்கு மேலும், சென்னை மருத்துவக் கல்லூரியில் இரண்டாண்டும், செங்கல்பட்டு மருத்துவக் கல்லூரியில் இரண்டாண்டும், கீழ்ப்பாக்கம் மருத்துவக் கல்லூரியில் ஒன்றரை ஆண்டும் என்னுடைய பணி இருந்தது.

அதற்குப் பிறகு வெளிநாட்டில் மலேசியாவில் உள்ள கோலாலம்பூர் மாநகரில் மூன்றாண்டுகளுக்கும் மேலும், அமெரிக்காவில் மேயோ கிளினிக்கிலும் என்னுடைய பணி முடிந்ததற்குப் பிறகு, மறுபடியும் தமிழகத்திற்குத் திரும்பிவந்து பெருந்துறை மருத்துவக்கல்லூரியில் மருத்துவத்துறை பேராசிரியராகவும், அதற்குப் பிறகு முதல்வராகவும் இருந்து பணி ஓய்வு பெற்றபிறகு காஞ்சிபுரம் மீனாட்சி மருத்துவக் கல்லூரியில் முதுகலைப்பட்டப்படிப்பு இயக்குனராக இருந்து பதினைந்து நாட்களுக்கு முன் ஓய்வுபெற்று, இப்பொழுது சர்க்கரைநோய் துறை என்பதால் அதிலே சிறப்புப் பயிற்சிகள் பெற்றிருப்பதால் அதை இப்பொழுது எடுத்துக்கொண்டு இப்பொழுது அதன் ஆலோசகராக சிறப்புத் துறை மருத்துவராகப் பணியாற்ற இருக்கின்றேன்.

கேள்வி: சர்க்கரை நோய் என்றால் என்ன?

Diabetic patient doing glucose level blood testபதில்: என்னுடைய கருத்துப்படி இதற்கு தவறான பெயர் கொடுத்துவிட்டார்கள் என்று நினைக்கின்றேன். சர்க்கரை நோய் என்று சொல்வதற்குப் பதிலாக, சர்க்கரை அதிகமான மாற்றம் ஏற்படுவதால் உடலில் ஏற்படும் மாற்றங்களைப் பற்றி தெரிந்துகொள்வது மிக அவசியம். நாம் உண்ணும் உணவில் மாவுச்சத்து, கொழுப்புச் சத்து, புரதச் சத்து என்ற மூன்று முக்கியமானது. மாவுச்சத்தில் முக்கியமானது என்னவென்றால், செரித்த பிறகு கடைசியாக மாறுவது குளுக்கோஸ் அல்லது சர்க்கரை. குளுக்கோஸ் என்பது ஒரு வகையான சர்க்கரை. இதனுடைய பணி என்னவென்றால், இதுதான் நம் உடம்பிற்கு சக்தி(Energy) கொடுக்கக்கூடியது. எப்படி காருக்கோ அல்லது மற்ற வாகனங்களுக்கோ பெட்ரோல் எரிபொருள் சக்தி கொடுக்கிறதோ, அதுபோல் இது ஒரு எரிபொருள்.

நம் உணவில் இருக்கும் மாவுச்சத்து குளுக்கோஸாக மாறி நமக்கு சக்தியைக் கொடுத்து நம்முடைய அன்றாட வேலைகளுக்கு அதாவது நாம் நடப்பது, தூங்குவது, என்று வேறு எந்ததெந்த வேலைகளுக்கு என்னென்ன வேண்டுமோ அந்த கலோரி என்ற சக்தி கொடுப்பதற்குரிய சர்க்கரை. மீதமிருக்கும் சர்க்கரையை ஈரல் என்ன செய்கிறதென்றால் கிளைக்கோஜன்னாக மாற்றி அது சேமித்து வைத்துக் கொள்கிறது. இவ்வாறு சேமித்துவைத்துக்கொள்ள கிளைக்கோஜன் தேவைப்படும்பொழுதும், அதாவது ஏறக்குறைய ஒரு சில நாட்கள் நாம் சாப்பிடாமல் இருப்போம், சில மணி நேரம் சாப்பிடாமல் இருந்தால், அந்த நேரத்திற்கு நம்முடைய வங்கிக் கணக்கிலிருந்து பணம் எடுப்பதுபோல, இந்த கிளைக்கோஜன் குளுக்கோஸாக மறுபடியும் மாறி சக்தி கொடுக்கிறது. அடிப்படையான காரணம் என்னவென்றால் சர்க்கரை மாவுச்சத்திலிருந்து சீரணமாகி அது நம் உடம்பில் இரத்தத்தில் சர்க்கரையாக மாறி அதாவது குளுக்கோசாக மாறி நமக்கு சக்தி கொடுக்க வேண்டும். மீதம் இருப்பது கல்லீரலில் சேமித்து வைக்கப்பட வேண்டும்.

Dr.Venugopal3இவ்வாறு இரத்தத்தில் ஓடும் சர்க்கரை ஒவ்வொரு திசுக்களுக்கும், செல்களுக்கும் உள்ளே சென்று அந்த செல்கள் வேலை செய்வதற்குரிய பணியை செய்ய வேண்டும். இவ்வாறு செல்களுக்குள் அந்த சர்க்கரை செல்லாமல் இருந்தாலோ அல்லது அது சேமிக்கவைக்கப்படாமல் இருந்தாலோ சர்க்கரையின் அளவு இரத்தத்தில் அதிகமாகும். இவ்வாறு அதிகமானால் உதவி செய்யக்கூடிய இந்த அமுதமே நஞ்சாக மாறிவிடுகின்றது. சர்க்கரை தன்னுடைய வேதிப்பொருட்கள் மாற்றத்தினால் அந்த இரத்த நாளங்களை இற்றுப்போகச் செய்கின்றது. இவ்வாறு இரத்த நாளங்கள் இற்றுப்போகச்செய்வது, பெரிய இரத்த நாளங்கள், நடுநிலை இரத்த நாளங்கள், சிறிய இரத்த நாளங்கள் எல்லாம் பழுதாக மாறிவிடுகின்றது.

Dr.Venugopal5இது ஒரு நாளில் நடக்கும் வேலை இல்லை. கடல் அருகில் இருக்கும் வீட்டினுள் உள்ள இரும்பெல்லாம் ஈரப்பதக்காற்று பட்டால் இற்றுப்போய்விடும், துருப்பிடித்துப்போய்விடும். அதே போல இரத்த நாளங்களில் சர்க்கரையின் அளவு அதிகமாகும் பொழுது போகப்போக அதன் செயல்திறன் இழந்துவிடுகின்றது. இதுபோன்ற செயல்திறன் இழக்கும்பொழுது முக்கியமான உறுப்புகளான மூளை, இருதயம், சிறுநீரகங்கள், கண், கால்களில் இருக்கும் இரத்த நாளங்கள் இவையெல்லாம் பாதிக்கப்பட்டால் அதில் இரத்த ஓட்டம் தடைபடுகின்றது. அவ்வாறு இரத்த ஓட்டம் தடைபடும்பொழுது அந்த உறுப்புகள் எல்லாம் நாளடைவில் பழுதாக மாறிவிடுகின்றது. இவ்வாறு பழுதாக மாறும்போது, பழுதடைந்த இரத்த நாளங்களை நீங்கள் புதுப்பிக்க முடியாது. இது இறைவனால் ஏற்படுத்தப்பட்ட இரத்த நாளங்கள். அதுபோல் புதுப்பிக்க முடியாத இரத்த நாளங்கள் அந்த உறுப்பு பழுதாகும்போது அதற்குரிய பிரச்சனைகள் உருவாகிறது. இதுதான் சர்க்கரை நோயின் அடிப்படை தத்துவம்.

கேள்வி: இந்த சர்க்கரை நோய் எதனால் வருகிறது?

பதில்: இன்றைய சர்க்கரை நோய் வல்லுநர்கள் சர்க்கரை நோயை மூன்று பகுதியாகப் பிரித்தெடுக்கின்றார்கள். பொதுவாக மக்களிடம் சாதாரணமாக, அதிக அளவில் காணப்படக்கூடிய இரண்டாவது வகை சர்க்கரைநோய் ஏறக்குறைய 97 விழுக்காடு காணப்படுகிறது. மீதம் இருக்கும் 2 அல்லது 3 விழுக்காடு சிறு வயதிலேயே, சிறு குழந்தைகளுக்கு சில வைரஸ் நோய்கள் பாதிப்பு ஏற்படும்பொழுது சர்க்கரையைக் கட்டுப்படுத்தக்கூடிய இன்சுலின் என்ற நொதி இருக்கின்றது. அது சுரக்க வைக்கும் செல்கள் பாதிக்கப்படுவதால் இன்சுலினே கிடைக்காமல் சர்க்கரை அளவு தானாக உயர்ந்து விடுகிறது. இன்சுலின் இல்லாமல் இருக்கிற குழந்தைகள் அதாவது வைரஸ் நோயால் பாதிக்கப்பட்டு இன்சுலின் சுரக்கக்கூடிய செல்கள் அழிந்துவிட்டு அதனால் ஏற்படக்கூடிய சர்க்கரைநோய் வகை ஒன்று. அது நூற்றில் ஒன்று அல்லது இரண்டு சதவிகிதம்தான்.

பொதுவாக இருக்கிற இரண்டாவது வகை சர்க்கரை நோய் 97 விழுக்காடு, நாம் எல்லாரும் இன்று பார்ப்பது சாதாரணமாக இந்த இரண்டாவது வகை சர்க்கரைநோயைச் சேர்ந்ததுதான். பிறக்கும்பொழுது கடவுள் நம் மரபணுவில் முத்திரை குத்தி அனுப்பிவிடுகிறார், இதுபோல இவர்களுக்கு they are all potential diabetic. இவர்களின் வாழ்க்கை நெறிமுறை சரியாக இல்லை என்றால், அவர்கள் பிற்காலத்தில் சர்க்கரை வியாதிக்கு உட்படலாம், ஆட்படலாம் என்று ஒரு முத்திரை குத்தி அனுப்பப்பட்டவர்கள். இவர்கள் தங்களது வாழ்க்கையை சரியான நெறிமுறையில் கொண்டுசெல்ல வேண்டும்.

Fast Foodதேவையற்ற உபயோகமில்லாத குப்பை உணவுகளை (Junk Food) அதிகமாக விரும்பி சாப்பிடுவது, உடல் உழைப்பின்மை அதாவது உட்கார்ந்துகொண்டே இருந்து ஒரு விளையாட்டையும் விளையாடுவதில்லை, கடைக்கு அல்லது பக்கத்துத் தெருவுக்கு செல்வதென்றாலும்கூட இருசக்கர வாகனங்களை எடுத்துச் செல்வது, நாடகங்களைப் பார்த்துக்கொண்டே உட்கார்ந்திருப்பது, சிறிய வயதிலேயே தேவைக்கு அதிகமான கலோரியை உருவாக்குவது போன்ற காரணங்களால் சர்க்கரையின் அளவு அதிகமாக சேர்ந்துகொண்டே இருக்கிறது. ஒரு அளவிற்கு மேல் அதிகமாக சர்க்கரை சேரும்பொழுது கொழுப்பாக மாறி உடல் பருமன் ஏற்படும். அவர்களது உடம்பைப் பார்க்கும்பொழுதே தளதளவென்று இருப்பது போன்ற சூழலை உருவாக்குகிறது. இவர்களுக்கு பிற்காலத்தில் 20, 25, 30 வயதுக்குள்ளாகவே சர்க்கரை ஏறிவிடும்.

Dr.Venugopal9எதனால் சர்க்கரை இதுபோல இரத்த நாளங்களிலே அதிகமாக இருக்கிறது என்றால், கணையத்தில் பீட்டா செல்கள் என்று இருக்கிறது. அந்த பீட்டா செல்கள்தான் இன்சுலினை சுரக்க வேண்டும்.

இன்சுலினின் முக்கியான வேலைகள் நான்கு. ஒன்று மாவுச்சத்திலிருந்து வரும் சர்க்கரையை சக்தியாக பயன்படுத்துவதற்கு உபயோகப்படுத்துவது. இரண்டு, சர்க்கரையை இரத்த நாளங்களிலிருந்து செல்களுக்கு உள்ளே புகுத்துவது. மூன்று மீதம் இருக்கிற சர்க்கரையை கல்லீரலில் கிளைக்கோஜனாக சேமித்து வைப்பது. நான்கு, தேவைப்படும்பொழுது அதாவது விரதமிருக்கலாம், பட்டினியாக இருக்கலாம், அந்த நேரத்தில் கிளைக்கோஜன் சேமிப்பிலிருந்து மறுபடியும் சர்க்கரையாக மாற்றி உதவுவது. இதுபோன்ற வேலைகளைச் செய்வது இன்சுலின்.

Dr.Venugopal6இந்த இன்சுலின் சுரப்பு அதிகமாக இல்லையென்றால் சர்க்கரையின் அளவு அதிகமாகிவிடும். ஏனென்றால் சர்க்கரையினுடைய செயல்திறன் இல்லை, அது செய்யவேண்டிய வேலை என்னவென்றால் நமக்கு எரிபொருளாக பயன்படுத்தி, அது நமக்கு சக்தியைக் கொடுக்கவேண்டும். இது நமக்கு பெட்ரோல் மாதிரி நம் உடம்புக்கு. சர்க்கரை பெட்ரோல். அது எரிபொருளாக மாறவில்லையென்றால் அந்த பெட்ரோல் உபயோகமில்லாமல் அப்படியே இருக்கிறது. இரத்த நாளத்தில் அந்த பெட்ரோல் இருந்தது என்றால் இரத்த நாளத்தை பழுதடையச் செய்கிறது. அதேசமயம் எரிபொருளாகவில்லையே, அதை சேமிப்பு செய்து வைக்கலாம் என்றால் கல்லீரலிலும் வைப்பதில்லை. தேவையான நேரத்தில் சர்க்கரையை இரத்தநாளங்களக்குக் கொண்டுவராமல் சாதாரணமாக இருக்கும்பொழுது மறுபடியும் சர்க்கரையாக இழுத்துக்கொண்டுவந்தால் அளவு அதிகமாகிறது. எனவே இன்சுலினின் குறைபாடு, இன்சுலினின் செயல்திறன் குறைகிறது. அது ஒரு நாள், இரண்டு நாள் அல்ல.

Dr.Venugopal11மரபணுக்கள் சரியாக இருக்கும்பொழுது இன்சுலின் செயல்திறனை எப்படி சரிசெய்யவேண்டும் என்றால், நன்றாக உடலுழைப்பு தேவை. என்ன உடலுழைப்பு என்றால் கடுமையான வேலை செய்ய வேண்டும். அப்படி செய்ய முடியாதவர்கள் குறைந்தபட்சம் ஒரு விளையாட்டு, தினசரி செய்யக்கூடியது அதாவது சைக்கிளில் செல்வது, நடைபயிற்சி மேற்கொள்வது. மாணவர்கள் நடைபயிற்சி செல்லமுடியாததால் என்னசெய்யவேண்டும் என்றால் காலையில் விளையாட்டு. இப்பொழுது விளையாட்டு வகுப்பே இல்லை அதாவது உடற்பயிற்சியே இல்லை. அதே நேரத்தில் சைக்கிள் நல்லது. விடுமுறை நாட்களில் விளையாடுவது, நீச்சல் செய்வது, சைக்கிளில் மலையேற்றம், நடப்பது, வீட்டிற்கு காய்கறி வாங்கி வருவது, நம் துணியை நாமே துவைத்து அணிவது, நாம் சாப்பிடும் தட்டை நாமே கழுவிக் கொள்வது போன்ற வேலைகளைச் செய்தாலே நம்முடைய எரிபொருளின் சக்தி சரியாக பயன்படுத்துகிறது. ஆனால் நாம் என்ன செய்கிறோம், சாப்பிடுகிறோம், உட்காருகிறோம், தொலைக்காட்சி பார்க்கிறோம், உட்கார்ந்துகொண்டு அலைபேசியில் விளையாட்டு (games) விளையாடுகிறோம். இதுபோல செய்ய செய்ய எரிபொருளை சரியாக பயன்படுத்தாமல் இருப்பதுதான் பிரச்சனை. இதை நெறிமுறைப்படுத்தி, விழிப்புணர்ச்சி உருவாக்கவேண்டும் என்றால் இதுதான் primary prevention. சர்க்கரை வராமல் தடுக்கக்கூடிய primary prevention.

ஏனென்றால் இன்சுலினுடைய செயல்திறனை நீங்கள் அதிகப்படுத்துகிறீர்கள். பீட்டா செல்களில் நல்ல செயல்திறன் இருந்தால்தான் இன்சுலின் உருவாகும். இது நிலத்தில் நீர் ஊறுவது போல் காய்ந்து போய்விட்டது என்றால் அங்கு நீர் ஊறாது. வாழ்நாள் செல்லச்செல்ல பீட்டா செல்களின் எண்ணிக்கை குறையஆரம்பிக்கும். ஒரு அளவிற்கு எண்ணிக்கை குறைந்தது என்றால் இன்சுலினே கிடைக்காமல் போய்விடும். எனவே அவனுக்கு சர்க்கரை இயற்கையாகவே அதிகரித்துவிடும். சர்க்கரை இயற்கையாகவே அதிகரித்தால் இரத்தநாளங்கள் பழுதடையும். இரத்த நாளங்கள் பழுதடைந்தால் உறுப்புகள் பாதிக்கப்படும். உறுப்புகள் பாதிக்கப்பட்டால் 50 வயதில் 70வயது, 80 வயது கிழவனாகிவிடுவான். பின் ஒவ்வொன்றாகப் பிரச்சனைகள் உருவாகும். இது வியாதியே இல்லை, நாமாகவே வாங்கிக்கொள்கிற வம்பு. வம்பை விலைக்கு வாங்குவது இதுதான். இதுதான் சர்க்கரை வியாதியின் அடிப்படை.

கேள்வி: இந்த சர்க்கரை வியாதி எந்த வயது உள்ளவர்களுக்கு வரும்?, இதற்கு வயது வித்தியாசம் இருக்கிறதா?

Dr.Venugopal20jpgபதில்: இப்பொழுது இருக்கும் வசதிகளோ, உணவு வகைகளோ, மற்றவையோ அந்தகாலத்தில் இல்லை. எனக்குத் தெரிந்து இனிப்பு செய்யவேண்டும் என்றால், நம் வீட்டில் ஏதோ பண்டிகைகளோ அல்லது விழாக்களோ இருக்கும்காலங்களில்தான் செய்வார்கள். நன்றாக சாப்பிட்டாலும் அதற்கு ஏற்றவாறு நன்றாக வேலை செய்வார்கள். அரிசிகளில் உள்ள நல்ல சத்துக்களையெல்லாம் தவிடாக்கி பாலீஷ் செய்துவிட்டு வெறும் சக்கையை சாப்பிடுவது மாதிரி இல்லை அப்பொழுதெல்லாம் இல்லை, அன்று கைகுத்தல் அரிசி இருந்தது, பல வகையான தானிங்களான கம்பு, கேழ்வரகு என்று இருந்தது. என்றைக்கு நம்முடைய பொருளாதார சூழ்நிலைக்கு ஏற்ப நாம் வாழ்க்கை, வசதிகளை அனுபவிக்க ஆரம்பித்தோமோ, அன்றைக்கே வாருங்கள் என்று வெற்றிலைப் பாக்கு வைத்து நோயை வரவேற்றுவிட்டோம். இது நம்முடைய வாழ்க்கை முன்னேற்றத்திற்கு ஒரு தடை.

Dr.Venugopal12என்றைக்கு ஒருவருக்கு தொப்பை விழ ஆரம்பித்துவிட்டதோ அப்பொழுதே சர்க்கரை வருகிறது என்று அர்த்தம். கொழுப்பும், சர்க்கரையும் ஒன்றுக்கொன்று உறவு. சர்க்கரை மிக அதிகமானால் கொழுப்பாக மாறி அதுவே தொப்பை ஏற்பட காரணமாக அமைகிறது. நன்றாக பூசணிக்காய் மாதிரி வயிறு இருப்பவர்களுக்கு உறுதியாக 50சதவிகிதம் சர்க்கரை இருக்கிறது. இந்த சர்க்கரை நோய்க்கு தாரக மந்திரம் உடலுழைப்புத்தான். ஒரு நாள் உடலுழைப்பு இல்லை, முப்பது வயது வரை உழைப்பு இல்லாமல், முப்பது வயதிற்கு மேல் சென்று உடலுழைப்பு செய்ய வேண்டும் என்றால் நான் என்ன உழைப்பது என்பான். அவன் காட்டில் சென்று கடப்பாரை எடுத்து வெட்ட முடியாது.

மணவெட்டியை எடுத்து சாலையில் வேலை செய்கிற மக்களுக்கு மரபணுவில் சர்க்கரை வரும் என்று முத்திரை போட்டு அனுப்பினால்கூட அவர்களுக்கு இறக்கிற வரையிலும் சர்க்கரை வராது. இதுதான் தாரக மந்திரம். சர்க்கரை நோய் இந்த வயதில்தான் வரும் என்று இல்லை. முன்பெல்லாம் 50, 60 வயதுக்கு மேல்தான் வரும். இப்பொழுது 20, 30 வயதிலேயே வர ஆரம்பித்துவிட்டது. காரணம் நம்முடைய பொருளாதார வளர்ச்சி, நம்முடைய முன்னேற்றம், நம்முடைய சொகுசு வாழ்க்கை கூடவே சர்க்கரை வருவதற்கு வாய்ப்பு.

கேள்வி: சர்க்கரை நோயின் அறிகுறிகள் என்ன?

Dr.Venugopal24பதில்: அதிக நாட்களுக்கு அறிகுறியே இல்லாமல் இருக்கும். சிலர் ஆயுள்காப்பீடு எடுக்கச்செல்வார்கள், மருத்துவப் பரிசோதனைக்குச் செல்வார்கள் அந்த நேரத்தில் முதலில் இருப்பது தெரியும். ஒருவருக்கு சிறிய விபத்து நடந்திருக்கும், நேற்று வரையிலும் சர்க்கரை நன்றாகத்தான் இருந்தது மருத்துவ பரிசோதனையில் ஆனால் இன்றைக்கு இருசக்கர வாகனத்தில் ஒரு சிறிய விபத்து நடந்திருக்கும். அதன் காரணமாக இரத்தப்பரிசோதனை செய்தால் சர்க்கரை ஏறியிருக்கும். எனவே திடீரென்று ஏற்பட்டிருக்கும் அலட்சிகள்.

90 பேருக்கு அறிகுறிகள் இல்லாமலே இருந்து, சர்க்கரை ஒரு அளவிற்கு மேல் போகும்பொழுது அவர்களுக்கு முதன் முதலில் அதிக தாகம், நா வறட்சியினால் தாகம், நிறைய நீர் செல்வது போன்ற அறிகுறிகள் உருவாகும். இதனை Polyurea, Polydipsiya என்பார்கள். சிலருக்கு சாப்பிட்டாலும் பசி அடங்காது, மறுபடியும் மறுபடியும் சாப்பிடவேண்டும் என்கிற சூழ்நிலை இருக்கும். இது ஆரம்பநிலை. சிலருக்கு காலில் மதமதப்பு, எரிச்சலோடு உள்ள வலி, கால் குத்தல், சோர்வு, எவ்வளவு சாப்பிட்டாலும் சோர்வு இருக்கும் அடித்துப்போட்டமாதிரி, அப்படியே தூங்கலாமா என்று தோன்றும்.

மற்றொன்று ஆண்களுக்கு பிறப்புறுப்பு முனையில் இருக்கிற தோலில் சிறிய சிறிய புண்கள், அழுக்கு சேருகிறது போல் சேர்ந்து நமச்சல் இருக்கும். நிறையபேர் இதனை பாலியல் நோயா என்றுகூட சந்தேகப்பட்டுவிடுவார்கள். அப்படியெல்லாம் இல்லை, இது ஆண்களுக்கு ஏற்படுகிறது.

பெண்களுக்கு வெள்ளைப்படுதல் என்று சொல்வார்கள். நமச்சலோடு வெள்ளைப்படும். சர்க்கரை அதிகமாக இருந்தது என்றால் பூஞ்சரம் சேருவதற்கு வாய்ப்பு இருக்கிறது. அது இருக்கும்பொழுது பூஞ்சை (fungus) உருவாகும். அதனால் நமச்சல் போன்றவை இருப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது. இது நூற்றுக்கு ஐந்து அல்லது ஆறு நபர்களுக்குத்தான் இருக்கும், எல்லாருக்குமே இருக்கவேண்டும் என்கிற அவசியம் இல்லை. balanitis அல்லது vaginitis என்றும், polyuria, polydipsia என்றும் இருக்கிறது. சிலருக்கு காயமோ அல்லது புண்ணோ ஏற்பட்டால் விரைவில் ஆறாத சூழல், சோர்வு, அதிக தாகம், நா வறட்சி, அதிகமாக நீர் போதல், பிறப்புறுப்புகளில் இருக்கிற நமச்சல், காயம் விரைவில் ஆறாமை இதுதான் ஆரம்பகாலம். ஆனால் ஐம்பது சதவிகித நபர்களுக்கு அறிகுறிகளே இருக்காது.

கேள்வி: இது தொற்றுநோயா?

Dr.Venugopal10பதில்: இது மரபு சார்ந்த நோய். பெற்றோர்கள் சொத்து கொடுக்கிறார்களோ இல்லையோ சர்க்கரை நோயைக் கொடுப்பதற்கு வாய்ப்பு இருக்கிறது.

கேள்வி: சர்க்கரை நோயை உறுதி செய்கிற சோதனை முறையைக் கூறுங்கள்?

Dr.Venugopal19jpgபதில்: இதற்கு சோதனை முறை என்றால் ஒன்றே ஒன்றுதான். இரத்தப்பரிசோதனைதான் செய்யவேண்டும். வெறும் வயிற்றிலேயும், உணவு அருந்தி இரண்டு மணிநேரம் கழித்து ஒரு முறையும் என்று இரண்டுமுறை இரத்தப்பரிசோதனை செய்தால் போதும்.

ஆனால் சிலர் முக்கியமாக பேறுகாலத்தில் இருப்பவர்கள் அல்லது சந்தேகத்துடன்(Border line) இருப்பவர்களுக்கெல்லாம் வெறும் வயிற்றில் ஒரு குறிப்பிட்ட அளவு குளுக்கோஸ் அதாவது 75 கிராமோ அல்லது 100 கிராமோ கொடுத்து அரை மணிநேரத்திற்கு ஒரு முறை, ஒரு மணி நேரத்திற்கு ஒரு முறை என்று 3 அல்லது 4 முறை சர்க்கரை எடுத்து இவர்களுக்கு அந்த சர்க்கரை எந்த அளவிற்கு ஏற்ற இறக்கம் இருக்கிறது என்று கண்டுபிடிக்கலாம். இதற்கு GTT என்று சொல்வார்கள். இவையிரண்டும்தான் முக்கியமான சோதனை முறை.

கேள்வி: இந்த சர்க்கரை நோய் வந்துவிட்டால் இந்த நோயைத் தொடர்ந்து வேறு ஏதேனும் நோய்கள் வருவதற்கு வாய்ப்பு இருக்கிறதா?

Dr.Venugopal17பதில்: என்னுடைய மாணவர்களுக்கெல்லாம் சொல்வேன், ‘இந்த சர்க்கரை நோய் ரம்மியில் இருக்கிற ஜோக்கர் கார்டு மாதிரி என்று. எதில் வேண்டுமானாலும் சேர்ந்துகொள்ளும். சாதாரணமாக ஒருவருக்கு காய்ச்சல் வருகிறது, அவருக்கு நல்ல எதிர்ப்பு சக்தி இருந்தது என்றால் இரண்டு நாட்களில் சரியாகிவிடும். இதே காய்ச்சல் சர்க்கரைநோய் உள்ளவரிடம் இருந்தது என்றால் மூன்று நாள் அல்லது நான்கு நாட்கள் ஆகும். ஏனென்றால் எல்லோருடைய எதிர்ப்பு சக்தியைக் குறைக்கும். சர்க்கரை நோய் வந்துவிட்டால் நோயினுடைய தாக்கங்கள் அதிகமாக இருக்கும். எந்த திசுக்களுக்கும் இரத்த ஓட்டம் வேண்டும். சர்க்கரை நோய் வருவதால் இரத்த நாளங்கள் பழுதடைவதால் இரத்த ஓட்டம் தடைபடுகிறது. இரத்த ஓட்டங்கள் தடைபடுவதால் இதயம் பழுதாகலாம், இரத்த அழுத்தம் வரலாம், இரத்த அடைப்பு ஏற்படலாம், மூளைக்குச் செல்வதற்கு இரத்த அடைப்பு ஏற்பட்டால் பக்கவாதம், முகவாதம் வரலாம்.

சிறுநீரகங்களுக்கு இருக்கிற இரத்த நாளங்கள் பழுதடைவதால் சிறுநீரக செயலிழப்பு ஏற்படும், dialysis சிறுநீரக மாற்றங்கள் இப்படித்தான் செல்லும். கண் மிகவும் மென்மையானது, நுண்ணியது, இந்த கண்ணில் இருக்கிற இரத்த நாளங்கள் பாதிக்கப்பட்டால் வீங்கி வெடித்துவிடும். வெடிக்கும்பொழுது இரத்தக்கசிவு ஏற்படும். இரத்தக்கசிவு ஏற்பட்டது என்றால் கண் பார்வையை பாதிக்கும். ஆரம்பத்தில் இரத்தக் கசிவு, இதை ஆரம்பத்திலேயே கண்டுபிடித்துவிட்டால் லேசர் சிகிச்சை செய்து மூலம் சரிசெய்யலாம். ஆனால் அதே அதிகமாகிவிட்டது என்றால் இரத்த கசிவு உறைந்து, அந்த விழித்திறையையும் சேர்த்து பிய்த்து இழுத்துவிடும். அதோடு விழி பாதிப்பு ஏற்படும். இதெல்லாம் ஒரே நாளில் நடப்பது இல்லை, படிப்படியாக நடப்பது. விடயங்கள் தெரியாமலே போய்க்கொண்டே இருக்கும்.

கேள்வி: சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் வருமா?

Dr.Venugopal21jpgபதில்: சர்க்கரை அதிகமாக சாப்பிட்டால் சர்க்கரை நோய் வரும் என்பதல்ல, நீங்கள் எவ்வளவு சாப்பிட்டாலும் உங்களது கணையங்கள் நல்ல நிலையில் இருந்து, அதில் இன்சுலின் சுரப்பு நன்றாக இருந்தது என்றால் பத்து ஜாங்கிரி சாப்பிட்டாலும், உங்களுக்குத் தேவையானதை எரிபொருளாக பயன்படுத்தி மீதத்தை சேமித்து வைத்துக்கொள்ளும். இன்சுலினுடைய செயல்திறன் சரியாக இல்லையென்றால் நீங்கள் அரை ஜாங்கிரி சாப்பிட்டால்கூட ஏறிவிடும். இரத்தத்தில் சர்க்கரையின் அளவு இன்சுலினுடைய செயல்திறனைப் பொறுத்தது. இன்சுலினுடைய செயல்திறன் சரியாக இல்லை இன்சுலின் resistance இருந்தது என்றால் சர்க்கரையினுடைய அளவு ஏறும். உண்மையில் சர்க்கரை ஒரு எரிபொருள், வெள்ளை பெட்ரோல் மாதிரி. அந்த எரிபொருளை சரியாக பயன்படுத்தவில்லை என்றால் அமுதம் நஞ்சாகிறது.

கேள்வி: எத்தனை வகையான சர்க்கரை நோய் இருக்கிறது?

Falmouth Elementary first grader Owen Pollard, 6, has his blood sugar carbohydrate levels checked in Falmouth.பதில்: முக்கியமாக இரண்டாவது வகை diabetes-தான் மரபணுவைச் சேர்ந்தது. இது 97விழுக்காடு தான். முதல் வகை diabetes அரிதானது. 5வயது சிறுவர்களுக்குக் கூட வரலாம். அதாவது ஒரு வைரஸ் நோய். கணையத்தைத் தாக்குகிற வைரஸ் நோய்கள், அதில் இருக்கிற பீட்டா செல்களுக்கு அழிவு ஏற்பட்டால் சுனாமி மாதிரி ஒரே நாளில் நேற்று வரையிலும் நன்றாக இருந்த குழந்தை இன்று உடம்பு சரியில்லாமல் போய்விடும் அதேபோல வாழ்க்கை முழுவதும் இன்சுலின் கொடுக்க வேண்டும். சர்க்கரை மருத்துவமே மூன்று விதமானது. உணவுக் கட்டுப்பாடு, உடல் உழைப்பு, மருந்துகள். மருந்துகள் இரண்டு வகை இன்சுலின் ஊசி போடுவது, அல்லது நம் உடம்பிலே இன்சுலினை சுரக்க வைப்பது.

கேள்வி: இன்சுலின் போடுவதைத் தவிர்த்து வேறு சிகிச்சை முறைகள் பண்ண முடியுமா?

Dr.Venugopal7பதில்: உதாரணத்திற்கு நம் உடம்பில் ஆயிரம் பீட்டா செல்கள் இருக்கிறது என்று வைத்துக்கொண்டால், அதில் 500 பீட்டா செல்கள் சர்க்கரையினாலும், வயதினாலும் மரபணுக்களாலும் அழிந்து போய்க்கொண்டே இருக்கிறது. இன்சுலின் நம் உடம்பில் ஓரளவிற்கு சுரக்கிற அளவிற்கு இருந்தது என்றால் நாம் மாத்திரைகள் கொடுத்தோம் என்றால் உடம்பிலேயே இன்சுலின் சுரப்பு அதிகமாகும். சுரந்த இன்சுலினின் செயல்திறனும் அதிகமாகும்.

உதாரணமாக 100 பேர் இருக்கிறார்கள், 10 பேர்தான் வேலைசெய்கிறார்கள் மீதம் இருக்கும் 90 பேரும் சோம்பி இருக்கிறார்கள் என்றால், அந்த இடத்தில் ஒரு நிர்வகிப்பவர் இருந்தால் 90 பேர்களிடமும் வேலை வாங்கினால் வேலை நன்றாக நடக்கும். அதுபோல ஒரு முறை. ஆனால் உடலில் இன்சுலினே சுரக்கவில்லை, நாள்பட பீட்டா செல்களின் அழிவு அதிகம் ஏற்பட்டுவிட்டது என்றால் இரண்டாவது வகைக்குக்கூட இன்சுலின் தேவைப்படும். அந்த நிலைக்கு எப்பொழுது வரும் என்றால், நாள்பட நாள்பட நீங்கள் உடம்பைக் கெடுத்துக்கொண்டீர்கள் என்றால் பீட்டா செல் அழிவைப் பொறுத்து இருக்கும். பீட்டா செல்லின் எண்ணிக்கைதான் இன்சுலின் தேவையா? இல்லையா? என்பது. அதனுடைய சிகிச்சையே இரண்டு வகைதான்.

கேள்வி: இந்த நோய் வராமல் தடுக்கவேண்டும் என்றால் மக்கள் மேற்கொள்ளவேண்டிய முன்னெச்சரிக்கை நடவடிக்கைகள் என்ன?

Dr.Venugopal25பதில்: இதற்கான முன்னெச்சரிக்கை நடவடிக்கைகளை நாம் செய்துவிட்டோம் என்றால் நம் சமுதாயத்திற்கு ஒரு பெரிய உதவி செய்வது மாதிரி. ஏறக்குறைய இந்தியாவில் அதுவும் தென்னிந்தியாவில் இருக்கிற மக்களில் 70 அல்லது 80 விழுக்காடு மக்களுக்கு பாரம்பரியமாக சர்க்கரை நோய் வரக்கூடிய வாய்ப்புகளே இருக்கிறது. ஏனென்றால் நம்முடைய வாழ்க்கை முறையும், இடமும் அதுபோல. இதுபோன்ற மக்களுக்கு சிறிய வயதிலேயே விழிப்புணர்வு ஏற்படுத்த வேண்டும். எப்படி என்றால் நீங்கள் சரியான சரிவிகித உணவுகள் சாப்பிட வேண்டும், தேவையான அளவு உணவுகள் சாப்பிட வேண்டும், சாப்பிடும் உணவை சரியாக பயன்படுத்திக்கொள்ள வேண்டும், உடல் உழைப்பு வேண்டும். சாப்பிடும் உணவிற்கு ஏற்றாற்போல் உழைக்க வேண்டும், எந்த வேலையும் செய்யாமல் உட்கார்ந்திருக்கக் கூடாது. விளையாட்டு, வீட்டு வேலைகள், மற்ற வேலைகள் என்று வேலைகள் செய்ய வேண்டும்.

பசி என்று வரும்பொழுது முக்கால் வயிறுதான் சாப்பிட வேண்டும். தேவையான அளவு புரதச்சத்து, தேவையான அளவு மாவுச்சத்து எடுத்துக்கொள்ள வேண்டும். முக்கியமாக குழந்தைகளுக்கு தோட்டத்தில் விளையும் பச்சைக் காய்கறிகள், கீரைகள் சேர்த்துக் கொள்ள வேண்டும். பழங்களை பயன்படுத்துவதற்கு பழக்கப்படுத்த வேண்டும். இதுபோன்ற சத்துள்ள ஆகாரம் நல்ல ஆகாரங்கள்.

Junk Foods சாப்பிடலாம், நீங்கள் pizza சாப்பிட வேண்டாம் என்று சொல்லவில்லை. ஆனால் தினசரி அதை சாப்பிட்டால் பலனில்லை. என்றைக்கோ ஒரு நாள் என்று எடுத்துக்கொள்ளலாம். பண்டிகை மற்றும் விழாக்காலங்களில் இனிப்பு சாப்பிடுங்கள், வேண்டாம் என்றில்லை. சர்க்கரை நோயாளிக்கே நாங்கள் சாப்பிடுங்கள் என்று சொல்கிறோம். ஆனால் அதை சரிசெய்து (அனுசரித்து) நடந்துகொள்ள வேண்டும். இதுதூன் தாரக மந்திரம்.

கேள்வி: சர்க்கரை நோயைத் தடுக்க என்ன மாதிரியான உணவுமுறைகளை கடைபிடிக்க வேண்டும்? எந்த உணவுகளைத் தவிர்க்க வேண்டும்?

Dr.Venugopal23jpgபதில்: சர்க்கரை நோய்க்கு இந்த உணவுகளை சாப்பிடாதீர்கள் என்றால் அது கடுமையானது. உதாரணமாக ஒரு அசைவம் சாப்பிடுபவர்கள் இருக்கிறார்கள் என்றால், அவர்களிடம் ஆட்டுக்கறியை முடிந்த அளவுக்கு குறைவாக சேர்த்துக்கொள்ளுங்கள் என்று நாம் சொல்கிறோம். ஆனால் அவர்கள் நான் தினமும் பிரியாணிதான் சாப்பிடுவேன், தினமும் வறுத்த கறிதான் சாப்பிடுவேன் என்றால் முடியாது. அசைவத்திலேயே கொழுப்பு சத்து நீக்கிய உணவுகள் எடுத்துக் கொள்ளலாம். உதாரணத்திற்கு மீனை அதிகமாக சேர்த்துக்கொள்ளுங்கள், நாட்டுக்கோழியாக இருந்தது என்றால் கொழுப்பில்லாததை சேர்த்துக்கொள்ளுங்கள் வாரத்திற்கு ஒரு முறையோ அல்லது இரண்டு முறையோ. அதேபோல நீங்கள் எண்ணெயின் அளவைப் பார்த்து பயன்படுத்துங்கள். நோய் உள்ளவர்களுக்கு ஒரு அரை லிட்டர்தான், நோய் இல்லாதவர்களுக்கு முக்கால் லிட்டர் வரையிலும் எடுத்துக்கொள்ளலாம். ஆனால் இப்போது பொரித்த உணவு (Deep fry), தோசையாக இருந்தாலும்கூட மொறுகலாக வேண்டும் என்பார்கள். இதுபோல் இல்லாமல் நாம் உணவுமுறையில் யோசனை செய்துகொண்டே வரவேண்டும்.

கேள்வி: நம் மக்களுக்கு என்ன சொல்ல விரும்புகிறீர்கள்?

Dr.Venugopal22jpgபதில்: மன சோர்வு படாமல், உணவுமுறைகளில் தெளிந்து, எதை தாராளமாக சேர்த்துக்கொள்ளலாம், எதை மிதமாக சேர்த்துக்கொள்ளலாம், எதை முடிந்த அளவுக்கு தவிர்க்கவேண்டும் என்பதைத் தெரிந்து பழக்கப்படுத்திக்கொள்ள வேண்டும். உதாரணமாக நான் கோகோ கோலா, ஃபான்டா, சர்க்கரை தண்ணீர், கலர் தண்ணீரெல்லாம் குடித்துக்கொண்டிருப்பேன் என்பதை ஏற்றுக்கொள்ள முடியாது. அதுவும் சர்க்கரை நோய் வந்தபிறகு அதை சாப்பிடவே கூடாது, இதெல்லாம் கட்டாயம் தவிர்க்க வேண்டும். பழைய காலத்தில் கஞ்சித் தண்ணீர் குடிக்கும் பழக்கமெல்லாம் இருந்தது, ஆனால் இன்று அதெல்லாம் மறந்து போய்விட்டது.

சர்க்கரை வந்துவிட்டால் ராகியில் கூழ் சாப்பிடலாம், களி சாப்பிடலாம் என்றெல்லாம் இல்லை. கூழ், களி எல்லாம் நன்றாக உடல் உழைப்பு இருப்பவனுக்குத்தான். எதையுமே கூழாகவோ, களியாகவோ சேர்த்துக்கொண்டால் அது சாதாரண மக்களுக்கு சர்க்கரை இருந்தால் பயன்படாது. அந்த ராகியை முருங்கைக்கீரை சேர்த்து எண்ணெய் அதிகமாக இல்லாமல் அடையாக செய்து சேர்த்துக்கொள்ளுங்கள். அதே ராகியை சாதமாகக்கூட பயன்படுத்தலாம். இதுபோல மாற்று உணவுகளை எப்படி எப்படி பழக்கப்படுத்துவது என்று தெரிந்து கொள்ள வேண்டும். சர்க்கரை வராமல் தடுப்பதற்கு இளம் வயதிலிருந்தே விழிப்புணர்ச்சி ஏற்படுத்தி வாழ்கிற வாழ்க்கை முறைதான் சிறந்தது. சிறிய வயதில் பாரதியார் சொன்னதுபோல் ‘ஓடிவிளையாடு பாப்பா, நீ ஓய்ந்திருக்கலாகாது பாப்பா’ இதுதான் தடுப்பு.

கேள்வி: சர்க்கரைக்கு பல சிகிச்சை முறைகள் இருக்கிறது, இதில் எந்த வைத்தியமுறை சிறந்தது?

பதில்: நம் உடம்பிற்கு மனக் கட்டுப்பாடு, உணவுக் கட்டுப்பாடு தேவை. இவற்றை கட்டுப்படுத்துவதற்கு இன்சுலின் தேவை. அந்த இன்சுலின் அளவை எப்படி ஏற்படுத்துவது. நான் அலோபதி மருத்துவராகத்தான் சொல்கிறேன், Break எடுக்கிற காரை ஓட்டுவது மாதிரி. மற்ற வைத்தியத்தைப் பற்றி சொல்வதற்கு எனக்கு அருகதை இல்லை. தமிழில் ஒரு பழமொழி உண்டு ‘எதைத் திண்றால் பித்தம் தெளியும்’ என்று. இது ஒரு முறை வந்துவிட்டால் அதனுடன் நம் வாழ்நாளை இதோடு வாழ்ந்தாக வேண்டும்.

எப்படி வாழ்ந்தாகவேண்டும் என்றால் பேய்க்கு வாக்கப்பட்டுவிட்டீர்கள். இனி அந்த பேய் நம்மை எந்த பிரச்சனையும் செய்யாமல் இருக்கிற மாதிரி வாழ்ந்துவிட்டு கடைசிவரையிலும் அதற்கு இடம் கொடுக்காமல் இருக்கவேண்டும். டைபாய்டு காய்ச்சல் வந்தது மாத்திரை சாப்பிட்டேன் சரியாகிவிட்டது என்பதுபோல் இல்லை, சர்க்கரை நோய் வந்துவிட்டது என்றால் அதோடு வாழப்பழகிக்கொள்ளவேண்டும். கடைசி நாள் மண்ணில் போகிற வரையிலும் உங்களோடு அது இருக்கும், அது பிரச்சனை கொடுக்காமல் வைத்துக்கொள்வது உங்களது சாமர்த்தியம்.

 

 


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “நீரிழிவு நோய் மருத்துவர் V.வேணுகோபால் அவர்களின் நேர்காணல்”

அதிகம் படித்தது