மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சர்வோதயம்

முனைவர் மு.பழனியப்பன்

Apr 18, 2020

siragu agimsai1

காந்தியடிகளுக்கு மிகவும் பிடித்த நூல் கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல். இதனை எழுதியவர் ரஸ்கின் ஆவார். இவரின் இந்நூலைக் குஜராத்தி மொழியில் காந்தியடிகள் சர்வோதயம், அதாவது சர்வ ஜனநலம் என்ற பெயரில் மொழி பெயர்த்தார். அவருக்குள் பெருத்த மாற்றத்தை இந்நூல் ஏற்படுத்தியது. இந்நூல் ஏன் தன்னைக் கவர்ந்தது எப்படி அதற்கான காரணங்கள் என்ன என்று காந்தியடிகளே சொல்கிறார்.
எல்லாருடைய நலனில்தான் தனிப்பட்டவரின் நலனும் அடங்கியிருக்கிறது.

தங்கள் உழைப்பினால் தங்கள் வாழ்வினை நடத்த வேண்டியிருப்பதால் அனைவருக்கும் ஒரே வகையான உரிமை உண்டு. உயர் தொழில் செய்பர்கள், கீழ்நிலைத் தொழில் செய்பவர்கள் என அனைவருக்கும் ஒரே மாதிரியான உரிமை உண்டு. விவசாய வாழ்க்கை, பாட்டாளி வாழ்க்கை, கைத்தொழில் செய்பவரின் வாழ்க்கை போன்ற அனைத்துமே வாழ்வதற்கு உகந்த மென்மையான வாழ்க்கை முறைகள்.
இந்த மூன்று கருத்துகளை அந்நூல் காந்தியடிகளுக்குத் தெரிவித்தது கடையனுக்கும் கடைத்தேற்றம் என்ற நூல்.

இந்நூலின் வழியாகச் சர்வோதயம் அறிமுகமாகிறது காந்தியடிகளுக்கு. எல்லோரும் ஓர் குலம். எல்லோரும் ஓர் நிறை, எல்லோரும் இந்திய மக்கள் என்ற நன்னிலை அவருக்குள் உதயமாகிறது. கிராமமக்கள், நகர மக்கள் என்ற பாகுபாடு இருக்கக் கூடாது. இதற்கு ஒரே வழி தன்னிறைவான வாழ்க்கையை அனைவரும் அடைதலே ஆகும். தன்னிறைவான வாழ்க்கை என்பது உணவு, உடை, உறைவிடம், விளக்கொளி, தண்ணீர் போன்ற அடிப்படைத் தேவைகளைத் தமக்குத் தாமே உற்பத்தி செய்து தன் நிறைவு பெறுதலே தன்னிறைவு ஆகும்.
தன்னிறைவு கிடைத்தபின்பு தொண்டுக்கு மனம் செல்லும். தன்னிறைவு எய்தி விட்டால் துன்பம் இல்லை. எந்நாளும் இன்பமே. எவரும் துன்பப்படமாட்டார். எவரையும் துன்பப்படுத்தவும் மாட்டார்.

தன்னிறைவு என்பதும் தற்சார்பு என்பதும் முழுவதும் தன் முனைப்பாலே அடைந்து விட முடியாதவை. பிற இடங்கள், பிறரிடம் இருந்து பெற வேண்டிய பொருள்களும் உள்ளன. நாம் தர வேண்டிய பொருள்களும் உள்ளன. இவ்வகையில் தற்சார்பு என்பதும் கொண்டும் கொடுத்தும் தனக்குத் தேவையான அளவில் பொருள்களைப் பயன்படுத்துவது என்பதே ஆகும். உணவைப் பொறுத்தவரை இந்தியாவில் ஏராளமான நிலங்களும், நீர்நிலைகளும் உள்ளன. மனித வளத்திற்குப் பஞ்சமில்லை. ஆனால் மக்களைத் தங்கள் சுயதிறனில் நம்பிக்கை உடையவர்களாக மாற்றவேண்டி உள்ளது.

தன்னிறைவு என்பது முக்கியமோ அதே அளவு முக்கியமானது கூட்டுறவும். தன்னிறைவு மானுடனுக்கு எவ்வளவு இலட்சியமாக உள்ளதோ அதே அளவு பிறரைச் சார்ந்திருத்தலும் அவனுக்கு இலட்சியமாக இருக்க வேண்டும். உடனொத்த மனிதர்கள் மீது எவ்வகையிலும் சார்வு முழுமையாகத் தனித்து இயங்கக் கூடிய நிலைக்குத் தன்னை ஆளாக்கிக் கொள்ளும் மனிதன் கர்வமிக்கவனாகவும், தருக்குடையவானகவும் மாறி உலகிற்குச் சுமையாகிறான். அவனே உலகிற்குத் தொல்லை தருபவனாகவும் ஆகிறான். ஒவ்வொரு மனிதனும் சமுதாயத்தைச் சார்ந்திருத்தல் என்பதே அம்மனிதனுக்குப் பணிவடக்கம் என்பதைக் கற்றுத் தருவதாக இருக்கும். யாதும் ஊரே யாவரும் கேளிர் என்ற முதுமொழியே தன்னிறைவு பெற்ற மனிதன் மற்றவர்களுடன் தொடர்பு கொண்டிருத்தலின் வெற்றியைக் காட்டும் முதுமொழியாகும்.

தன்னிறைவு பெற்ற மனிதன் பொதுச் சேவைக்குத் தகுதி உடையவன் ஆகிறான். பொதுச் சேவை என்பது கௌரவம், பணம், சாதி, மனைவி, குடும்பம், உயிர் போன்றவற்றில் இருந்து அச்சமின்மை ஏற்படவேண்டும். இவ்வாறு இவற்றின் மீதான பயத்தை இழந்தால் மட்டுமே ஆன்ம விடுதலையை அடைய இயலும்.

சேவைக்காக நியமிக்கப் பெற்ற அதிகாரிகள் இன்னும் கவனமாக இருக்க வேண்டும். ஒரு ஆட்சியாளர் சேவை செய்வதற்கான மிக உயர்ந்த தகுதியை அடைந்திருந்தால்தான் அவர் உத்தரவுகள் பிறப்பிக்கலாம். அவருடைய உத்தரவுகள் தம்முடைய சொந்த நலன்களைப் பேணுவதற்காக அன்றிச் சமூகத்தின் நன்மைக்காக இருக்க வேண்டும். இவ்வகையில் ஓர் அதிகாரி விளங்கினால் அவர் தற்சார்பு பெற்ற பொதுச் சேவை புரியும் அதிகாரி என்ற நிலையில் தகுதி பெறுவார்.

மிக அதிகமான மக்களின் அதிகமான நலம் என்ற அரிதிப் பெரும்பான்மை என்பது அவ்வளவு பொருத்தமானதல்ல. ஐம்பத்தோரு விழுக்காடு அளவில் ஒரு கருத்தும் 49 விழுக்காடு அளவில் ஒரு கருத்தும் அமைந்தால் இரு கருத்துகளும் முட்டி மோதிக்கொண்டுதான் இருக்க முடியும். எப்போது 49 51 ஆகிவிடும் என்ற எண்ணமே அலைமோதும். இதனை விடுத்து அனைவருக்கும் மிக அதிகமான நன்மை அளிப்பது என்பதே ஜனநாயகத்தின் கோட்பாடாக அமையவேண்டும். இதுவே உண்மையான மனிதாபிமானக் கொள்கை.


முனைவர் மு.பழனியப்பன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சர்வோதயம்”

அதிகம் படித்தது