மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சர் பிட்டி தியாகராயர் – ஓர் அறிமுகம்

வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

May 2, 2020

siragu sar.pitti.thiyaagaraayar1

ஏப்ரல் 27 1852 இல் பிறந்து, அதே மாதம் ஏப்ரல் 28 1925 இல் மறைந்த சர் பிட்டி தியாகராயர், நீதிக்கட்சி தொடங்கிய முன்னோடிகளில் ஒருவர். அவரைப் பற்றி, அறிஞர் அண்ணா அவர்கள் 30.6.1950 அன்று திருவல்லிக்கேணியில் நடைபெற்ற தியாகராயரது நினைவு நாள் கூட்டத்தில் ஆற்றிய உரையில்,

”திராவிடர்” என்ற உணர்ச்சியும் “திராவிட நாடு” என்ற எண்ணமும் குறைந்து, எங்கு நோக்கினும் திராவிடர் துன்ப வாழ்வில் சிக்கிச் சிதைந்துவந்த அந்தக் காலத்தில்தான் தியாகராயர் தோன்றினார். வேதனை மிகுந்த காட்சியைக் கண்டு உள்ளம் வெதும்பினார். சீறிப் போரிட்டுச் சீர்கேட்டை ஒழிக்கச் செயலிலே இறங்கினார். அவரைப் பொறுத்தமட்டும் அவருக்கு ஒரு குறையுமில்லை. மற்ற பிரச்சாரங்களைவிட அறிவுப் பிரச்சாரம் தான் முக்கியமானது என்று தியாகராயர் எண்ணினார். அன்றே அவர் அறப்போரைத் தொடங்கினார். அந்த அறப்போர் இன்று வெற்றிபெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அரசியல் வாழ்விலே பலர் இடம் பெற்றிருப்பதைக் கண்டு பெருமை அடைகிறோம். அன்று தியாகராயர் மத விடயங்களிலே புகவில்லை! புரோகிதத்தை எதிர்க்கவில்லை, ஏனென்றால், முதலில் அவர், திராவிடர்களுக்குத் தன்னுணர்வையும் தன்மானத்தையும் உண்டாக்கவே விரும்பினார். மக்களுக்கு முதன் முதலிலே தன்னுணர்வை ஏற்படுத்தி மக்களைத் தட்டி எழுப்பிய பின்தான் அவர் மத விடயத்திலே புக விரும்பினார். முதன் முதலில் நம் மக்களுக்கு என்ன தேவை என்பதை நன்குணர்ந்தே அவர் முதலிலே அப்படி ஈடுபட்டார்.

அந்த நாளிலே டாக்டர்களிலே சிறந்தவர் யார் என்றால் – மருத்துவர் அரங்காச்சாரிதான் (சென்னை அரசாங்க பொது மருத்துவமனையில் மருத்துவராகப் பணியாற்றியவர் சிறந்தவர் என்று கூறப்பட்டது. இப்பொழுது டாக்டர்களிலே சிறந்தவர் யார்? டாக்டர் குருசாமி. இதைக்கேட்டு நாம் பூரிப்படைகிறோம். அந்த நாளிலே ஆங்கிலத்தில் பேசுவதிலே யார் சிறந்தவர் என்றால், ரைட் ஆனரபிள்- சீனிவாச சாஸ்திரியார் என்று மயிலையும், திருவல்லிக்கேணியும் சொல்லிற்று. இன்று நம் திராவிடப் பெருங்குடி மக்களிலே சிறந்த பேச்சாளர் யார்? என்றால், சர்.ஏ.இராமசாமி முதலியார் என்றே யாவரும் கூறுவர். சிறந்த பொருளாதார வல்லுநர் யார்? என்று அன்று கேட்டால் யார் யாரையோ கூறுவர். இன்று நம் சர் ஆர்.கே.சண்முகம்தான் அங்ஙனம் யாவராலும் போற்றப்படுபவர். அல்லாமலும் தமிழிலே சிறந்த பாடகர் யார்? அன்று எஸ்.ஜி.கிட்டப்பா (பிரபல தமிழ்ப் பாடகி கே.பி.சுந்தராம்பாளின் கணவர் என்று கூறப்பட்டது; இப்பொழுது எம்.கே.தியாகராச பாகவதர். நகைச்சுவையிலே மன்னன் யார்? அன்று ஒரு சாமண்ணா, இன்று நம்முடைய என்.எஸ்.கிருஷ்ணன். ‘இந்து’ பத்திரிகையிலே எழுதப்படும் தலையங்கங்களை விடச் சிறந்த தலையங்கங்களை ஆங்கிலத்தில் தீட்ட நம்மிடையே டாக்டர் ஏ.கிருட்டிணசாமி இருக்கிறார்.

இன்று நம் சமுதாயம் மாறி எவ்வளவோ வளர்ச்சி பெற்றுவிட்டது. இன்று நம் திராவிடப் பெருங்குடி இவ்வளவு தூரம் வளர்ச்சி பெற்றிருப்பதற்கு யார் காரணம்? நம்முடைய தியாகராயர்தான். பேச்சுத் துறையிலே, பாடல் துறையிலே, வைத்தியத் துறையிலே, பொருளாதாரத் துறையிலே மட்டுமல்ல, எந்தத் துறையிலும் திராவிடர்கள் அவர்களுடைய வல்லமையைக் காட்ட முடியும். தியாகராயருக்குப் பின் நிலைமைகள் எவ்வளவோ மாறியிருக்கின்றன. இன்னும் மாறும். கடலடியில் சென்று முத்து எடுப்பவர்கள் என்றும் திராவிட இனத்தவரே. வேண்டுமானால் நாம் எடுத்த முத்து ஓர் ஆரிய மங்கையின் காதுகளை அணி செய்யலாம். ஆனாலும் கடலிருக்கிறது. கடலுள்ள அளவும் முத்து இருக்கும். முத்து உள்ள அளவும் நாமும் இருப்போம். ஆகவே, நமக்கு எதிர் காலம் எப்போதும் உண்டு. ஆனால் ஆரியம், அறிவு வளர்ச்சியடைந்தபின் ஆரியமாக வாழாது; ஆரியமாக மதிப்புப் பெறாது” என்று கூறினார்.
இந்த வரிகளைப் படிக்கும்போது சர்.பி.டி .தியாகராயர் அவர்களின் உழைப்பும் – தொண்டும் நமக்கு புரிகிறது அல்லவா?
தியாகராயர் அவர்கள் நெசவு மற்றும் தோல் பதனிடும் தொழிலில் ஈடுபட்டு வந்த பெரும் செல்வம் உடையவர்களாக, சென்னை கொருக்குப் பேட்டையில் வசித்து வந்த அய்யப்பர், வள்ளி அம்மாள் இணையர்களுக்கு 1852 ஆம் ஆண்டு ஏப்ரல் திங்கள் 27 ஆம் நாள் ஆண்டு மூன்றாவது மகனாகப் பிறந்தார். 1876 ஆம் ஆண்டு சென்னை மாநிலக் கல்லூரியில் படித்து பி.ஏ. பட்டமும் பெற்றார்.

பின்னர் காங்கிரஸில் பணியாற்றினார். அங்கு இருக்கும் பார்ப்பன ஆதிக்கத்தை எதிர்த்து வெளியேறினார்.

20.11.1916 அன்று சென்னையில் துவக்கப்பெற்ற தென்னிந்திய நலவுரிமைச் சங்கம்’ என்ற பெயர் தாங்கிய “பார்ப்பனரல்லாதார் இயக்கம்” தான் இன்றைய திராவிடர் இயக்கங்களுக்கும், திராவிட அரசியலுக்கும் முன்னோடி. பின்னாளில் நீதிக்கட்சி என்று அழைக்கப்பெற்றது. அந்த நீதிக்கட்சிக்குச் செயல்வடிவம் தந்த பெருமை வெள்ளுடை வேந்தர் தியாகராயரையே பெரிதும் சாரும்.

சர்.பி. தியாகராயர் நீதிக்கட்சியின் தலைவராகச் சிறப்பாகக் கட்சியை நடத்தி வந்தார். தியாகராயர் வெளியிட்ட கொள்கை விளக்க அறிக்கை, மக்களிடையே ஒரு விழிப்புணர்ச்சியைப் பெருமளவுக்குத் தட்டி எழுப்பியது. மக்களிடையே ஆதரவும் பெருகியது.
பிற்படுத்தப்பட்டோர். தாழ்த்தப்பட்டோர் மற்றும் பழங்குடியினர் ஆகியோருக்கு முழு உரிமையும், பாதுகாப்பும் வேண்டும் என்று நீதிக்கட்சி கோரியது.
வகுப்புவாரி பிரதிநிதித்துவம் பற்றி தொடர்ந்து அரசியலில் முதன்முதலில் பேசி செயல்வடிவமும் தந்தது. இன்று தமிழ்நாட்டில் இருக்கும் 69% இட ஒதுக்கீட்டிற்கு விதை இட்டதில் நீதிக்கட்சியின் பங்கும் உண்டு.
தேர்தலில் போட்டியிட்டு ஆளும் கட்சியாக 1920–1926,1930–1937 செயல்பட்டது. பின்பு எதிர்க்கட்சியாகவும் 1926–1930,1936-1944 வரையில் செயல்பட்டது. அதன் பின்னர் தான் நீதிக்கட்சி தேர்தலில் நிற்காது அது ஒரு சமுதாய இயக்கமாகவே இயங்கும் என்று தந்தை பெரியார் அறிவித்து திராவிடர் கழகம் எனப் பெயர் மாற்றினார்.

1920 நவம்பர் 20இல் நடைபெற்ற சென்னை மாகாணத் தேர்தலில் சிறப்பான வெற்றியை நீதிக்கட்சி பெற்றது.

அன்றைய ஆளுநர் வெல்லிங்டன் பிரபு, நீதிக்கட்சியின் தலைவர் சர். பிட்டி. தியாகராயரை ஆட்சி அமைக்குமாறு கேட்டுக் கொண்டார். ஆனால் தியாகராயர் முதல்வர் பதவியை ஏற்காமல், கடலூர் வழக்கறிஞர் சுப்பராயலு ரெட்டியாரை முதலமைச்சராகப் பொறுப்பேற்கச் செய்தார். கொள்கை உறுதி கொண்ட நெஞ்சால் தியாகராயர் அதை மறுத்துவிட்டார்.

அவர் முதலமைச்சர் பதவியை நாடவில்லை. என்பதை விளக்கி ஆளுநருக்குக் கடிதம் எழுதினார். அக்கடிதத்தில் அவர் : “இந்திய வரலாற்றிலேயே முன் எப்போதும் இல்லை எனும்படி, அரசியல் ஞானமற்ற பாமர மக்களைத் தட்டி எழுப்பிய பாவத்திற்காக என்னையும் அகால மரணமடைந்த என் அருமை சக தலைவர் டாக்டர் டி.எம். நாயரையும், “வெள்ளையன் வால் பிடிப்பவர்கள்” என்று காங்கிரசுப் பத்திரிகைகளும் தலைவர்களும் தூற்றுகின்றனர். நான் இப்பதவியை ஏற்பின் எனது புனிதமான கட்சிக்குக் களங்கம் விளைவித்தவன் ஆவேன். இதனால் பதவி ஏற்கமாட்டேன்” என்று விளக்கியிருந்தார்.
பாமர மக்களுக்கு கல்வியறிவும், அரசியல் அறிவும் ஏற்படுத்திய நீதிக்கட்சியையும் அதன் தலைவர்களையும் காங்கிரஸ் பார்ப்பனர்கள் எப்படி வெறுப்பு பரப்புரையை செய்தார்கள், என்பதற்கு நெடிய வரலாற்றின் சாட்சிதான் தியாகராயர் அவர்கள் எழுதிய கடிதம்.

சென்னை மாநகராட்சியின் தலைவராக நீதிக்கட்சி முன்னோடி சர். பி.டி.தியாகராயர் இருந்தபோது வேல்ஸ் நாட்டின் இளவரசர் சென்னைக்கு வருகை புரிந்தாராம். அப்போது சென்னை மாகாணத்தின் ஆளுநராக இருந்தவர் லார்டுவெல்லிங்டன்.தியாகராயரிடம், சென்னை மாநகரின் முதல் குடிமகன் என்ற முறையில் வேல்ஸ் இளவரசரை நீங்கள்தான் வரவேற்க வேண்டும், நாங்கள் குறிப்பிடும் முறையில் ஆடை அணிந்து வரவேண்டும் என்று சொன்னாராம் ஆளுநர்.

தியாகராயர் கம்பீரமாக, “எப்பொழுதும் போல வெள்ளை ஆடை தான் அணிந்து வருவேன் .விருப்பம் இல்லாவிட்டால் நான் வரவேற்க வரவில்லை” எனச் சொல்ல வெள்ளை ஆடையுடன் வந்து வரவேற்க அனுமதிதரப்பட்டது .அதனால் வெள்ளுடை வேந்தர் என அறியப்பட்டதாகக் கூறப்படுகிறது.

இதே தகவல் வேறு வடிவிலும் சொல்லப்படுகிறது.

தியாகராயர் விருந்திற்குச் சென்ற இடத்தில் அவரின் உடை காரணமாக உள்ளே அனுமதிக்கப்படவில்லை, அன்றைய காலக்கட்டங்களில் அரசாங்க விழாவில் மேனாட்டு உடையணிந்து தான் கலந்து கொள்ள வேண்டும் என்ற விதி இருந்ததாம், அதனால் விதியை மதித்து விருந்தில் கலந்துகொள்ளாது வந்துவிட்டார் பின்னர் ஆளுநர் அழைத்தபோதும் வர இயலாது, நியதி, சட்டம், கட்டளை என்பனவற்றை மதித்து நடப்பதே மனிதனுக்கு அழகு’ என அவர் சுட்டிக் காட்டினாராம்.
பின்னர் இந்தியப் பிரமுகர்கள், அவர்கள் விரும்பும் இந்திய உடை அணிந்தே அரசு விழாக்களில் கலந்துகொள்ளலாம் என்று புதிதாக ஆணை பிறப்பித்தாராம் ஆளுநர். இப்புதிய ஆணையைத் தியாகராயருக்குத் தெரியப்படுத்தி விருந்தில் கலந்து கொள்ளும்படிக் கேட்டுக்கொண்டார். தியாகராயரும் ஆளுநரைப் பாராட்டி விருந்தில் கலந்து கொண்டு சிறப்புச் செய்தார் என்றும் கூறப்படுகிறது. தியாகராயர் காலத்தில் வண்ணாரப்பேட்டையில் தொடக்கப் பள்ளி வசதிகூட அரிதாகக் காணப்பட்டது. தியாகராயர் தமது சொந்த வருமானத்தில், வண்ணாரப்பேட்டைவாழ் சிறுவர்கள் பயின்றிட “வடசென்னை செகண்டரிப் பள்ளி”யினை 3.12.1897 இல் தொடங்கினார். அனைத்து மாணவர்களும் இப்பள்ளியில் கட்டணமின்றிக் கல்வி கற்றனர். இந்தப் பள்ளி 1904இல் உயர்நிலைப் பள்ளியாக உயர்த்தப்பட்டது. தியாகராயர் காலத்திற்குப் பின்னர் இப்பள்ளி 1956 ஆம் ஆண்டு கல்லூரியாக மாற்றப்பட்டது என்பது குறிப்பிடத்தக்கது. சென்னையில் பச்சையப்பன் அறக்கட்டளையின் உறுப்பினராகவும் தலைவராகவும் 1887 முதல் 1924 வரை தியாகராயர் தொண்டாற்றி வந்தார். இவரது இடைவிடாத முயற்சியால்தான் அரசு விக்டோரியா தொழிற்பயிற்சிக் கூடம் 26.3.1889இல் நிறுவப்பட்டது. இவரது முயற்சியால் 1905இல் ஏற்படுத்தப்பட்டதே செங்கல்வராயர் தொழில் நுட்பப் பயிற்சிப் பள்ளி ஆகும். கல்விக்கு முன்னுரிமை தந்து பள்ளிகள், கல்லூரிகள் வளர்ச்சிக்குப் பெரிதும் பாடுபட்டு உழைத்தவர், தியாகராயர் என்பது குறிப்பிடத்தக்கது. தியாகச் செம்மல்-திராவிட மக்களின் பெருந்தலைவர் 28.4.1925 அன்று மக்களைத் துன்பக் கடலில் ஆழ்த்திவிட்டு விட்டு மறைந்தார்.

தியாகராயர் அவர்கள் மறைந்தபோது ,தந்தை பெரியார் அவர்கள் ஈரோட்டில் துவங்கிய ‘குடியரசு’ வார ஏடு, (1925 இல் மே திங்களில் துவங்கப்பட்டது) அதன் முதல் இதழிலேயே, அதன் இணையாசிரியர் தங்கப் பெருமாள் அவர்களால் (அவர் ‘காங்கிரஸ்காரரே’ ஒரு ஆழ்ந்த இரங்கல் கட்டுரை ”ஸ்ரீமான் பி.தியாகராயச் செட்டியாரின் மரணம்” என்ற தலைப்பில் {28.4.1925) மறைந்தவருக்குப் புகழ்மாலையாக எழுதப்பட்டது!

“அரசியல் உலகில் எமக்கும், அப்பெரியாருக்கும் உள்ள வேற்றுமை – வடதுருவம், தென்துருவம் எனின் குன்றக் கூறுதலேயாகும். எனினும் அப்பெரியாரின் அருங்குணங்களையும், அளவிலா தேச பக்தியையும் ஆற்றலையும் நாம் போற்றுகிறோம்”. என்று எழுதியிருந்தது.

திராவிட பெருந்தகை சர். பிட்டி தியாகராயர்(வாழ்க்கை வரலாறு) என்ற நூலை கே.குமாரசாமி அவர்கள் எழுதி திராவிடர் கழகம் பதிப்பித்து வெளியிட்டுள்ளது. அந்த நூலை வாங்கிப் படித்து தியாகராயரைப் பற்றி மேலும் தெரிந்துக்கொள்ளலாம்.

அன்னாரின் நினைவாகத் தான் தியாகராய நகர் என்று பெயர் சூட்டப்பட்டது.
திருவல்லிக்கேணி என நீட்டி முழங்கும் சிலரால், தியாகராய நகர் என்று அழைக்கமுடிவதில்லை, தி.நகர் என்று அழைத்து தியாகராயர் யார் என்பதையே தலைமுறைகளுக்கு கடத்த தவறிவிட்டோம். நீதிக்கட்சியின் முன்னோடிகளில் ஒருவரான தியாகராயரைப் பற்றி தெரிந்துக் கொள்ள இனியாவது முயற்சிப்போம்.


வழக்கறிஞர். ம. வீ. கனிமொழி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சர் பிட்டி தியாகராயர் – ஓர் அறிமுகம்”

அதிகம் படித்தது