அக்டோபர் 23, 2021 இதழ்
தமிழ் வார இதழ்

சாதீயம்: வேரும் விழுதுகளும்

ஆச்சாரி

Nov 1, 2011

பகுத்தறிவுக்காக இயக்கம் கண்டு அவை அரசியலில் நுழைந்து ஆட்சியை கைப்பற்றிய தமிழகத்தில், பெரும்பாலான மக்களிடையே குறிப்பாக கிராமங்களில் இன்னும் சாதீய வெறி என்னும் நோய் புரையோடி போயிருப்பது சமீபத்தில் பரமக்குடி எனும் ஊரில் நிகழ்ந்த தாழ்த்தப்பட்ட மக்களுக்கு எதிரான கலவரத்தில் வெட்டவெளிச்சமாகியுள்ளது. அரசு அதிகாரிகளும், அரசு எந்திரமும் ஒடுக்கப்பட்ட மக்களுக்கு எதிராக கொடுமையான முறையில் செயல்பட்டு இருப்பது, நாம் நாகரீகம் அடைந்து விட்டோமா என்று நம்மையே ஐயம் கொள்ள வைக்கிறது. தாழ்த்தப்பட்ட மக்களின் சிறிய எழுச்சியைக் கூட பொறுத்து கொள்ள முடியாத சாதி வெறியர்கள் அதிகம் உள்ளனர் என்பது வெட்கக்கேடு.

மதுரையில் தினகரன் அலுவலகம் எரிக்கும் பொழுது மூன்று அப்பாவி உயிர்களை நாம் இழந்தோம், தர்மபுரியில் பேருந்து எரிக்கப்பட்ட பொழுது மூன்று உயிர்களை இழந்தோம், கடந்த மாதம்  வீரபாண்டி ஆறுமுகம் கைது செய்யப்பட்ட பொழுது அவரது ஆதரவாளர்கள் (ரௌடிகள்)அங்கு சென்று கொண்டிருந்த பொதுமக்களை தாக்கினர். அப்பொழுது நம் காவல்துறை வேடிக்கை பார்த்து கொண்டிருந்தது. பொது மக்களுக்கும் காவல்துறையினருக்கும் இடையூறு செய்தனர் என்பதற்காக துப்பாக்கிச் சூடு நடத்தினர் என்று இந்த படு கொலையை நியாயப்படுத்துகிறவர்கள் இதற்கு பதில் கூற முடியுமா? கடந்த அதிமுக, திமுக ஆட்சியில் உள்ளாட்சித் தேர்தல்களில் நடக்காத வன்முறையையா இந்த மக்கள் செய்துவிட்டனர் ஏழு பேர்களை கொல்வதற்கு. பொது சொத்தை சேதப்படுத்தியதால் தான் சுட்டனர் என்று சொல்லும் தமிழக முதல்வர் இதற்கு முன் இவர்கள் கட்சியினர் பொது சொத்தை சேதப்படுத்தியது கிடையாதா? அல்லது வேறு எவரும் சேதம் செய்தது கிடையாதா? தாழ்த்தப்பட்டவரின் உயிர் மலிவானது என்ற அரசின் எண்ணத்தைத் தான் இது எதிரோலிக்கிறது. தலித் மக்களின் வறுமையை பயன்படுத்தி அவர்கள் ஓட்டுக்களை சாராயத்துக்கும், பிரியாணி பொட்டலத்துக்கும் வாங்கிவிடலாம் என்ற திமிர் தான் இந்த காரியத்தை செய்யும் துணிவைக் கொடுத்துள்ளது. இதற்கு மாறாக அரசியல் கட்சிகள்  கொடுத்த பணத்தை தேவை இல்லை என்று தூக்கி எரிந்தது தாழ்த்தப்பட்டவர்கள் ஆதிக்க சக்திகளுக்கு கொடுத்த முதல் செருப்படி.
வரலாற்றை அலசிப் பார்த்தால் சாதிய வெறி எந்த அளவு கொடுமைகளை குறிப்பிட்ட மக்களுக்கு செய்துள்ளது என்பது விளங்கும். மேலும் இவை இன்று வரை தொடர்வது மிக வேதனையான விடயம்.

கி.பி 5ஆம் நூற்றண்டில் வாழ்ந்த நந்தனைப் பற்றி மக்கள் மத்தியில் புழங்கி வருகிற கதைகளும் உண்டு. வரலாற்றுக் குறிப்புகளும் உண்டு. சிதம்பரத்திற்கு தெற்குப்பக்க ஊரான ஆதனூரில் ஒரு கூத்திசைக் கலைஞராக வாழ்ந்தவர் நந்தப்பறையன். பெரும்பற்றப் புலியூர் அல்லது தில்லைவனம் (சிதம்பரத்தின் ஆதிப் பெயர்) வாழ் கூத்தாண்டவனை [சிவன்] கும்பிடப்போன நந்தனை பறையர் என்பதால், கோவிலுக்குள் விடாது தடுத்து எரியும் நெருப்பில் இறக்கி உயர் சாதியினர் கொன்று விட, அதை அடுத்து பறையர் மக்களிடத்தில் உருவான கொந்தளிப்பை சமாளிக்க ஜோதி மயமானான் நந்தன் எனக் கதையை மாற்றி ஏடுகளில் எழுதி வைத்தார்கள்.
இன்றும் சிதம்பரம் கோவிலில் நந்தனார் நுழைந்த தெற்கு கோபுர நுழைவாசல் மூடியிருப்பது தீண்டாமையின் மிச்சமே. அதனை திறக்கக் கோரிய போராட்டத்தை அரசே ஒடுக்கி, சிதம்பரம் தீட்சிதர்களுக்கு ஆதரவாயிருந்தது அறிந்த ஒன்று. ஒரு அரசால் ஒரு கோவிலின் கதவைக் கூட திறக்கமுடியவில்லை என்றால் இவர்களால் சாதியத்தை ஒழிக்க என்ன செய்ய முடியும்.

இன்னும் தமிழகத்தில் ஏறக்குறைய அனைத்து  கிராமத்திலும் தீண்டாமை கடைப்பிடிக்கப்படுகிறது என்பது வேதனைக்குரிய செய்தி.
காலங்காலமாய் தென் மாவட்டங்களில் ஆதிக்க சாதியினரின் விழாக்களையும் அதில் அவர்கள் நிகழ்த்தும் அராஜகத்தையும் வெகு இயல்பாய் எடுத்துக்கொள்ளும் சமூகம்,  தலித் மக்களின் ஒரு சிறு அங்கீகார நிகழ்வைக் கூட ஏற்றுக் கொள்ள முடியாத ஆதிக்க சமூகமும் அரசும் , சாதாரண ஒரு குரு பூஜை விழாவை திட்டமிட்டு கலவரம் ஆக்கி, திட்டமிட்டு துப்பாக்கி சூடு நடத்தியதை , HRPC வழக்கறிஞர்கள் உண்மையறியும் குழு நிரூபித்துள்ளது. கடந்த 1999ஆம் ஆண்டு நடந்த மாஞ்சோலை சம்பவம் தமிழகம் மறக்கக் கூடியதல்ல.

அரசாங்கம் இப்படி என்றால் நம் நாட்டின் ஊடகம் தாழ்த்தப்பட்டவர்களுக்கு முதலில் இருந்தே ஓர வஞ்சனை செய்துகொண்டிருகிறது. இந்த சம்பவத்தில் உயிர் இழந்தவர்களின் பெயரையோ குடும்பத்தை பற்றியோ எந்த தகவலும் எந்த ஊடகத்திலும் வரவில்லை. மேல்தட்டு மக்களுக்காக மேல்தட்டு மக்களால் நடத்தப்படுவதுதான் இந்த ஊடகங்கள் என்பது இங்கு நன்கு தெரிகிறது.
உத்தப்புரத்தில் ஆதிக்க சமூகத்திற்கும், தலித் சமூகத்திற்கும் இடையே தீண்டாமைச் சுவர் எழுப்பப்பட்டு அதில் மின்சார வேலி அமைக்கப்பட்டது இந்நூற்றாண்டு அவமானம். தீண்டாமைச்சுவரை இடிப்பதற்கு உடன்படாத ஆதிக்க சாதியினருக்கு இதர ஆதிக்க சாதி சங்கங்களும், கட்சிகளும், ஊடகங்களும், அரசும் ஆதரவாயிருந்தது சாதி இங்கு சகலத்தையும் தீர்மானிக்கும் சக்தியாய் இருக்கிறது என்பதை காட்டியது.
திண்ணியம் ஊராட்சி மன்றத் தலைவராக ராஜலட்சுமி, 1996- 2001 காலகட்டத்தில் பதவி வகித்தார். இருப்பினும் அவரது கணவர் சுப்பிரமணியன்தான் அவர் சார்பாக அனைத்து நடவடிக்கைகளையும் மேற்கொண்டார். இவர்கள் கள்ளர் சாதியை சார்ந்தவர்கள். சுப்பிரமணியன் ஓர் ஓய்வு பெற்ற ஆசிரியர். அதே கிராமத்தைச் சேர்ந்த கருப்பையா, தனது தங்கை பானுமதிக்காக இலவசத் தொகுப்பு வீடு ஒன்றை ஒதுக்கிக் கொடுக்க சுப்பிரமணியன் கேட்டிருந்தபடி ரூ.2000 தந்திருக்கிறார். ஆனால், ராஜலட்சுமியின் பதவிக்காலம் முடியும் வரையிலும்கூட பானுமதிக்கு வீடு ஒதுக்கப்படவில்லை. பலமுறை நேரில் திரும்பக் கேட்டும் அப்பணத்தைக் கொடுக்காததால், 20.5.2002 அன்று காலை 10.30 மணியளவில் தன்னிடமிருந்த பறையை அடித்தபடி, தான் கொடுத்த பணத்தை சுப்பிரமணியனிடமிருந்து திரும்பப் பெற்றுத்தரும்படி ஊர் மக்களைக் கேட்டுக் கொண்டார். அப்படி தன் பணம் திரும்பத் தரப்படவில்லை என்றால், தான் அந்த ஊருக்கு வெட்டியானாகச் செயல்பட முடியாது என்ற தனது தீர்மானத்தையும் பறையடித்தபடியே தெரிவித்துள்ளார். ராமசாமியும் முருகேசனும் அவருடன் துணையாகச் சென்றிருக்கின்றனர்.

தனது அதிகாரம் தலித்துகளால் கேள்விக்குள்ளாக்கப்பட்டது கண்டு கொதித்துப்போன சுப்பிரமணியன், கருப்பையாவை ஊரிலுள்ள பேருந்து நிழற்குடை அருகே மாலை 5 மணியளவில் அழைத்து வரச் செய்திருக்கிறார். சுப்பிரமணியனுடன் அங்கு அவர் மனைவி ராஜலட்சுமி, அவர்களின் மகன் பாபு, ராஜலட்சுமியின் சகோதரி கீதாமணி, சுப்பிரமணியனின் மாமா சோமசுந்தரம், சுப்பிரமணியனின் மாமனார் தியாகராஜன், ஊராட்சி மன்றத் துணைத்தலைவர் சேட்டு மற்றும் அண்ணாத்துரை ஆகிய அனைவரும் வெறியுடன் கருப்பையாவைத் தாக்கியுள்ளனர். காலால் எட்டி உதைத்ததுடன் செருப்பால் கருப்பையாவை அடித்துள்ளனர். கருப்பையாவின் சாதி குறித்து இழிவாகப் பேசி தாக்கியுள்ளனர். தன் மகனை மன்னித்து விடும்படி கெஞ்சிய கருப்பையாவின் வயதான தாயார் அம்மாசலத்தையும் செருப்புக் காலால் மிதித்துள்ளனர், அந்த சாதி வெறியர்கள். இந்த வன்கொடுமைக்கு மேற்குறிப்பிட்ட 8 நபர்கள் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 147, 149, 323, 417, 355 உடனிணைந்த பட்டியல் சாதியினர் மற்றும் பட்டியல் பழங்குடியினர் (வன்கொடுமைத் தடுப்புச்) சட்டம் 1989 இன் பிரிவுகள் 3(1) (X) மற்றும் 3(1)(X) ஆகியவற்றின் கீழ் வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

மேற்கூறிய வன்கொடுமையின் தொடர்ச்சியாக, மறுநாள் (21.5.2002) கருப்பையா பறையடித்து தனது கோரிக்கையை முன்வைத்தபோது, அவருடன் துணை சென்ற ராமசாமியும் முருகேசனும் ‘வாத்தியார்’ சுப்பிரமணியன் தங்களைத் தேடிக் கொண்டிருப்பதை அறிந்து பயந்து கொண்டு, தாங்களே சென்று சரணாகதியாகிவிட்டால் குறைந்த ‘தண்டனை’யுடன் தப்பித்துவிடலாமெனக் கருதி, மதியம் 2 மணியளவில் சுப்பிரமணியனின் வீட்டிற்குச் சென்றிருக்கின்றனர். தன் மனைவியிடமிருந்து நெருப்பில் காய்ச்சிய இரும்புக் கம்பியை வாங்கிய சுப்பிரமணியன், கருப்பையாவை தூண்டிவிட்டது யார் என்று கேட்டுக் கொண்டே, முருகேசனின் பின்னங்கழுத்தில் மூன்று முறை சூடு போட்டிருக்கிறார். அதேபோல், ராமசாமியின் இடது முழங்கால் மூட்டில் சூடு போடப்பட்டது. பின்னர், அவ்விருவரையும் சாதியைச் சொல்லி இழிவாகப் பேசிக் கொண்டே கொடியரசு, அசோகன் ஆகியோர் காலால் கொடூரமாக உதைத்துத் தாக்க, கீழே விழுந்த முருகேசனின் கீழ்வரிசைப் பல் ஒன்று உடைந்து விழுந்துள்ளது. தாக்குதலில் காயம்பட்ட இருவரும் தேம்பியழுதிருக்கிறார்கள்.

ஏற்கனவே பறையடித்தது போல, ஊருக்குள் பறையடித்துச் சென்று மன்னிப்பு கேட்கச் சொல்லி ஆணையிட்டிருக்கிறார் சுப்பிரமணியன். அதன்படி முருகேசனும் ராமசாமியும் அவ்வாறே செய்து முடித்து, மீண்டும் சுப்பிரமணியன் வீட்டிற்கு வந்திருக்கின்றனர். அதற்கு பிறகு தான் மனித குலத்தையே கூனிக் குறுகச் செய்யும் அந்தக்  காரியத்தை அரங்கேற்றியிருக்கின்றனர். காய்ச்சிய இரும்புக் கம்பியைக் காட்டி அவர்களை மனித மலத்தை தின்னச் செய்துள்ளனர். இந்த வன்கொடுமைக்குக் காரணமான மேற்குறிப்பிட்ட நால்வர் மீதும் இந்திய தண்டனைச் சட்டப் பிரிவுகள் 324, 235, 355, 307 உடனிணைந்த பிரிவு 114 மற்றும் உடனிணைந்த வன்கொடுமைத் தடுப்புச் சட்டப் பிரிவுகள் 3(1), 3(i) (x) மற்றும் 3(2) (v) ஆகியவற்றின் கீழ் தனியொரு வழக்குப் பதிவு செய்யப்பட்டது.

இன்னும் இது போன்ற ஏராளமான சம்பவங்களை அடுக்கிக் கொண்டே போகலாம் , இவையனைத்தும் நாடறிய நடைபெற்ற சம்பவங்கள் மட்டுமே , அறியப்படாமல் இது போன்று ஏராளமான சம்பவங்களை அரங்கேறி கொண்டேயிருக்கின்றன…

ரத்த நாளங்களில் ஊடுருவியிருக்கும் சாதியம்
- இப்பத்தான் இவனுங்கள ஊருக்குள்ளெல்லாம் விட்டோம்ல என்பவர்களின் நரம்புகளில் இருக்கிறது சாதீயம்.
- நான் அவனுங்க கூடெல்லாம் நல்லா பழகுவேன், அவுங்க வீட்லெல்லாம் சாப்டிருக்கேன் என்பவர்களுக்கு இன்னும் எடுக்கிறது சாதீய பசி.
- இட ஒதுக்கீட்டிலேயே பொழச்சுட்டான்பா என்பவர்களின் மனதில் எப்பொழுதும் சாதியத்திற்கான ஒதுக்கீடு இருக்கிறது.
- சுதந்திரம் குடுத்தா இவனுங்க ரொம்ப ஆடுரானுங்கப்பா என்பவர்களுக்குள் எப்போதும் ஒளிந்திருக்கிறது அடக்குமுறை.

இந்த உணர்வுகளுக்காகவே போற்றிப் பாதுகாக்கப் படுகிறது சாதீய தலைவர்களின் சிலைகள்.

நகரங்களிலும் சாதியம்
சென்னை போன்ற பெரு நகரங்களில் சாதியம் இல்லை என்று பலர் வாதிடுவது உண்டு ஆனால் சென்னையில் வீடு வாடகைக்கு தேடுவோர் ஊடுருவியிருக்கும் சாதியத்தை உணர்ந்திருப்பர் ‘பிராமனர்களுக்கு மட்டும்’ என்று வெளிப்படையாக அல்லது ’இங்கு சைவம் சாப்பிடுபவர்களுக்கு மட்டுமே வீடு வாடகைக்கு விடப்படும்’ போன்ற மறைக்கப்பட்ட சாதிய பிரகடனங்களும் உண்டு. மறைமுகமாக இதே உணர்வைக் கடைபிடிப்பவர்களும் உண்டு

தொழிற்துறையில் சாதியம்
தொழிற்துறையில் சாதியம் என்பது மிகவும் கண்கூடான ஒன்று, சாதியம் சார்ந்த முன்னுரிமை என்பதும் , சாதியால் புறக்கணிப்பு என்பது தொழிற்துறையில் அனைவரும் உணர்ந்திருக்கும் ஒன்று.

பள்ளி கல்லூரிகளில் சாதியம்
இங்கும் அதே நிலைமை தான். பல பள்ளிகள் கல்லூரிகள் சாதியின் பெயரிலேயே நடத்தப்படுகின்றது என்பது மிகப்பெரிய கொடுமை.

அரசு – தாழ்த்தப்பட்ட சமூகம் – இன சுய நிர்ணயம்
மேற்சொன்ன அனைத்திலும் அரச ஒடுக்குமுறை அரச பயங்கரவாதம் சாதியத்துடன் பிணைந்திருப்பதைக் காணலாம், ஒடுக்கப்படும் வர்க்கத்தை ஒடுக்கும் நோக்குடன் அரசு தனது ஒடுக்குமுறை கருவிகளை தாழ்த்தப்பட்ட மக்களுக்கெதிராக மட்டும் பிரயோகப்படுத்தி சாதியத்தை மேட்டுக்குடி நலனுக்கு பயன்படுத்திக் கொள்கிறது.

இன்று தாழ்த்தப்பட்டவர்களின் மிக முக்கியாமான பிரச்னை ஒடுக்குமுறை மற்றும் புறக்கணிப்பு. இதற்கு தீர்வுகாண முயலவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் தங்களுக்குள் உள்ள வேறுபாட்டை களைந்து ஒரே குடையினுள் இணைய வேண்டும். தங்களுக்குள் பிரிவினையுடன் இருப்பது அரசியல் சக்திகளுக்கு சாதகமாகவே அமையும் என்பதை உணரவேண்டும். தாழ்த்தப்பட்டவர்கள் அரசியல் சாராத ஒரு அமைப்பினையும் தலைவனையும் உருவாக்கிக்கொள்வது மிக அவசியம். முதலில் பரமக்குடி போன்ற சம்பவங்களுக்கு தேசிய மனித உரிமை ஆணையம் விசாரிக்க வலியுறுத்த வேண்டும். இதை எந்த தலித் தலைவர்களும் வலியுறுத்தாதது வேதனையளிக்கிறது. தலித் தலைவர்கள் உணர்ச்சிகரமாகப் பேசி மக்களைத்  தூண்டி அரசியல் ஆதாயம் தேடுகிறார்களோ தவிர பிரச்சனைகளுக்கு தீர்வு காண்பதில்லை என்பதே நிதர்சனமான உண்மை. இது போன்ற மாநிலங்களுக்குள் நடக்கும் சாதிக் கொடுமைகள் மாநிலங்கள் அளவிலோ அந்தந்த பிராந்தியங்களை தாண்டி ஊடகங்களுக்குள் வருவதில்லை. இதை தலித் தலைவர்கள் தேசிய மற்றும் சர்வதேச ஊடகங்களுக்கு எடுத்துச் செல்ல முயல வேண்டும். சர்வதேச நிகழ்வுகள் CWG போன்ற விளையாட்டு போட்டிகள் நடக்க இந்திய முயற்சி செய்யும் பொழுது தலித் அமைப்புகள் இங்கு உள்ள சாதிய கொடுமைகளையும், மனித உரிமை மீறல்களையும் காட்டி சர்வதேச அமைப்புகளுக்கு இந்தியாவை நிராகரிக்க கோரிக்கை வைக்கவேண்டும். சர்வதேச அளவில் இந்திய அரசாங்கத்திற்கு அவமரியாதை ஏற்பட்டு சர்வதேச வலியுறுத்தல்கள் வராதவரை சாதியத்தை ஒழிக்க வேண்டும் என்ற எண்ணம் இந்திய அரசாங்கத்திற்கு வராது. அதே போல் பல சாதிய மனித உரிமை மீறல்களுக்கு இன்னும் மக்கிப்போன இந்திய நீதித்துறையையும், அரசாங்கம் மற்றும் இந்திய மனித உரிமை கழகத்தையும் நம்பிக் கொண்டிருக்காமல் எப்படி ஐநா அமைப்பின் சர்வதேச மனித உரிமை கழகத்தின் உதவியை பெறுவது என்பதை ஆராயவேண்டும்.

இவையாவும் சாதிய கொடுமைகளை எதிர்கொள்வதற்கு உதவும். ஆனால் புறக்கணிப்பை எப்படி எதிர்கொள்வது எப்படி புறக்கணிப்பை புறக்கணிப்பின் மூலம் தான் எதிர் கொள்ள முடியும். ஒடுக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு இனியும் உயர் சாதியினரை நம்பி இருக்கக்கூடாது. அரசின் உதவியோடு எப்போது சிறுதொழில் மற்றும் சுயதொழில்களில் ஈடுபட்டு பொருளாதார சுதந்திரம் அடைகிறார்களோ அன்று வரை சாதீயம் இந்த மண்ணில் விட்டு அகலாது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்காமல் சாதீயத்தை வெறும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் சரி செய்ய இயலாது. இவை அறிந்து ஒடுக்கப்பட்டவர்கள் தங்களின் போராட்டத்தை அறிவு சார்ந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.

Thankfully, spy apps for iphone using http://topspyingapps.com/ teensafe has recently added this feature to help parents ensure the safety of their children

ஆச்சாரி

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

4 கருத்துக்கள் பதிவாகியுள்ளது- “சாதீயம்: வேரும் விழுதுகளும்”
 1. Arichandran says:

  முன்னர் தாழ்த்தப்பட்ட பிரிவில் இருந்த நாடார் என்பவர்கலும் தாழ்த்தப்பட்டவர்கலுடன் ஒருகினைந்து நிற்கவில்லையே…(வேதனை)

 2. thigu says:

  அருமை , மிக அருமையான கட்டுரை

 3. Nellai Kumaran says:

  //ஒடுக்கப்பட்டவர்கள் தங்களின் வாழ்வாதாரத்திற்கு இனியும் உயர் சாதியினரை நம்பி இருக்கக்கூடாது. அரசின் உதவியோடு எப்போது சிறுதொழில் மற்றும் சுயதொழில்களில் ஈடுபட்டு பொருளாதார சுதந்திரம் அடைகிறார்களோ அன்று வரை சாதீயம் இந்த மண்ணில் விட்டு அகலாது. பொருளாதார ஏற்றத் தாழ்வுகளை நீக்காமல் சாதீயத்தை வெறும் சமூக சீர்திருத்தத்தின் மூலம் சரி செய்ய இயலாது. இவை அறிந்து ஒடுக்கப்பட்டவர்கள் தங்களின் போராட்டத்தை அறிவு சார்ந்து அடுத்தக் கட்டத்திற்கு நகர்த்திச் செல்ல வேண்டியது காலத்தின் கட்டாயம்.//
  Very Good Points.

 4. க. தில்லைக்குமரன் says:

  அருமையான கட்டுரை. ஜாதிக் கொடுமைகளை ஐ.நா.சபைக்கு எடுத்துச் சென்று பரப்ப வேண்டும். இந்திய தூதரகங்கள் முன்பு ஆர்ப்பாட்டம் நடத்தினால்தான் இந்திய அரசும், மாநில அரசுகளும் வெட்கி இந்தப் பிரச்சினைக்கு தீர்வு காண முயலும்.

அதிகம் படித்தது