மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சிறியதாகத் தோன்றும் பிரச்சினைகள்

இராமியா

Oct 5, 2019

 

சோசலிசத் தத்துவங்களை எளிமையாகவும், சுருக்கமாகவும் விளக்க வந்த தோழர் ப.ஜீவானந்தம், ஒரு சிறிய ஊரின் இருண்ட சந்து பொந்துகளில் இருந்து ஏழைக் குடும்பங்கள் வெளியேறுவதில் மக்களின் வாழ்வுப் போராட்டத்தின் பிரச்சினை பொதிந்து கிடக்கிறது என்று தொடங்கி, மக்களுக்கான சோசலிசத் தத்துவங்களை விளக்கி இருப்பார்.

ஆம். ஒரு ஏழைக்குடும்பம், தான் வாழும் ஊரில் வாழ முடியாமல் வெளியேறுகிறது என்றால், அச்சமூகம் மக்களின் நல்வாழ்வுக்கு எதிரான சமூக நோயினால் கடுமையாகப் பாதிக்கப்பட்டு இருக்கிறது என்றுதான் பொருள். இதுபோன்ற நோய்கள் பல நம் கண் முன்னே தெளிவாகத் தெரிந்தும் அவை நோய் என்று உணராமலேயே காலம் கடத்திக்கொண்டு இருக்கிறோம்.

siragu plastic1

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியை (single use plastic)  இந்த ஆண்டுத் தொடக்கத்தில் அரசு தடைசெய்தது. காரணம் அது சுற்றுச்சூழலை மாசுபடுத்துகிறது. சரி! சுற்றுச்சூழலை மாசுபடுத்தும் அனைத்து ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிகளும் தடை செய்யப்பட்டு விட்டனவா?

ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியைத் தடைசெய்து ஒன்பது மாதங்கள் ஆகிவிட்டன. தடை செய்யப்பட்ட நெகிழிப் பட்டியலில் தண்ணீர்ப்புட்டி (bottle) சேர்க்கப்படவில்லை. ஆனால் சுற்றுப்புறத்தை மாசுபடுத்துவதில் இதற்கு பெரும்பங்கு உண்டு. இதை சில சூழலியலாளர்கள் எடுத்துக்காட்டினார்கள். ஆனால் அரசு எந்த நடவடிக்கையும் எடுக்கவில்லை. சூழலியலாளர்களின் அழுத்தத்திற்கு அரசு செவிசாய்த்து விடக்கூடாது என்று எச்சரிக்கையாகத் தண்ணீர்ப் புட்டிக்குத் தடைவிதிக்கக்கூடாது என்று அதன் உற்பத்தியாளர்கள் 17.9.2019 அன்று அரசிடம் முறையிட்டு இருக்கின்றனர்.

இவர்கள் பரவாயில்லை, தங்களுக்கு விலக்கு அளிக்கும்படி கோரிக்கை வைத்து இருக்கிறார்கள் தூதஞ்சலில் பொட்டலம் கட்டப் பயன்படுத்தப்படும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியைப் பயன்படுத்துபவர்கள் எந்தவிதக் கலக்கமும் இன்றி அதைத் தொடர்ந்து பயன்படுத்திக் கொண்டு இருக்கிறார்கள். இதைத் தடைசெய்ய வேண்டும் என்ற விவாதம் கூட பொது வெளியில் வரவில்லை. ஏன்?

அரசு தடைவிதித்து இருக்கும் நெகிழியைப் பயன்படுத்துபவர்கள் அனைவரும் சிறுதொழில் செய்பவர்கள். இன்றைய முதலாளித்துவ வளர்ச்சிக்கட்டம் இவர்களை எல்லாம் கூலிப் பட்டாளத்தில் சேர்த்துவிட்டு மூலதனப் பயணத்தில் ஏற்படும் உராய்வுகளை மிருதுவாக்கிக் கொள்ளப்பார்க்கிறது. ஆகவே பெரு முதலாளிகளின் அடிமையான அரசு உடனே அதற்குத் தடைவிதித்து விட்டது.

siragu water bottleதண்ணீர்ப் புட்டிகளும் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழிதான். ஆனால் குடிநீர்த் தொழிலில் முதலாளிகளின் மூலதனம் பெருமளவு ஈடுபடுத்தப்பட்டு உள்ளது. இந்த நெகிழிக்குத் தடை விதித்தால் மூலதனப் பயணத்தில் மேலும் உராய்வு ஏற்படும். ஆகவே அதற்குத் தடை விதிக்கவில்லை. சூழலியலாளர்களின் பேச்சை எல்லாம் கேட்டுத் தடை ஏதும் விதித்து விடக்கூடாது என்று அத்தொழிலில் உள்ள முதலாளிகள் கோரிக்கை (எச்சரிக்கை) விடுத்து உள்ளனர்.

தூதஞ்சல் தொழில் அரசின் அஞ்சல் துறைக்குப் போட்டியாக / எதிராக முதலாளிகளால் தோற்றுவிக்கப்பட்டது ஆகும். இது உலகளாவிய தொழிலாகப் பரிணமித்தும் விட்டது. இதில் கைவைத்தால் பெரு முதலாளிகளுக்குக் கடும்கோபம் வரும். இத்தொழிலில் பொட்டலம் கட்ட பயன்படும் பொருள் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியே. இருந்தாலும் இதைத் தடைசெய்வது பற்றிய விவாதமே எழவில்லை. இதனால் எல்லாம் சுற்றுச்சூழல் மாசுபடாதா என்றால் நிச்சயம் படத்தான் செய்யும். ஆனால் மூலதனப் பயணத்தில் உராய்வும், தடங்கலும் ஏற்படாமல் பார்த்துக்கொள்வது முக்கியமா அல்லது சுற்றுச்சூழல் கெடாமல் பார்த்துக் கொள்வது முக்கியமா?

முதலாளித்துவ அரசைப் பொறுத்தவரை சுற்றுச்சூழல் கெட்டுப் போவதைப் பற்றிய கவலை இல்லை. உலகில் உயிரினங்கள் அனைத்தும் புவி வெப்ப உயர்வினால் அழிந்து போவதைப் பற்றியும் கவலை இல்லை. மூலதனப் பயணத்திற்கு உராய்வு ஏற்படாமல் பார்த்துக் கொள்வதுதான் அதன் ஒரே வேலை. மற்ற எதைப்பற்றியும் அது கவலைப்படாது.

ஆனால் உழைக்கும் மக்கள் அப்படி இருக்க முடியுமா? ஒரு சிறிய ஊரின் இருண்ட சந்து பொந்துகளில் இருந்து ஏழை மக்கள் வெளியேறுவது முதல் ஒற்றைப் பயன்பாட்டு நெகிழியைத் தடை செய்வதில் பாரபட்சம் காட்டுவது தொடர்ச்சியாக, விவசாயிகள் தற்கொலை செய்து கொள்ளும் நிகழ்வுகள் வரையிலும் ஆராய்ந்து பார்த்தால் மூலதனத்திற்கும் உழைப்புக்கும் இடையேயான போராட்டமே என்று தெளிவாகத் தெரிகிறது. இப்போராட்டத்தில் மூலதனத்தை உழைப்பு வென்றால் ஒழிய அதாவது முதலாளித்துவத்தை ஒழித்து சோசலிச அமைப்பு ஏற்பட்டால் ஒழிய மக்கள் அமைதியாக வாழ முடியாது என்பதும், உலகில் உயிரினங்கள் அழிந்துவிடும் என்பதும் தெளிவாகத் தெரிகிறது.

பிரச்சினைகள் சிறியதாகத்தானே தெரிகிறது என்று சும்மாவே இருக்கப் போகிறோமா அல்லது விளைவுகள் மோசமாக இருக்கிறதே என்று செயலில் இறங்கப் போகிறோமா? நாம் என்ன செய்யப்போகிறோம்?


இராமியா

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சிறியதாகத் தோன்றும் பிரச்சினைகள்”

அதிகம் படித்தது