சீரழிக்கின்றனவா சிறார் சீர்நோக்கு இல்லங்கள்?
சா.சின்னதுரைJul 16, 2016
சென்னை கெல்லீஸ் சிறார் கூர்நோக்கு இல்லத்தில் தங்க வைக்கப்பட்டுள்ள சிறுவர்களில் இரு தரப்பினரிடையே மோதல், தப்பியோட்டம், தற்கொலை முயற்சி சம்பவங்கள் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளன. மூன்று ஆண்டுகளில் 100 மாணவர்களுக்கு மேல் சீர்திருத்த பள்ளிகளில் இருந்து தப்பியோடியதாக ஒரு புள்ளி விவரம் கூறுகிறது.
மாவட்டத்துக்கு ஒரு கூர்நோக்கு இல்லம் அமைக்க வேண்டும் என்று சிறார் நீதிச் சட்டம் கூறினாலும் தமிழ்நாட்டில் எட்டு கூர்நோக்கு இல்லங்கள் மட்டுமே உள்ளன. இவற்றில் சுமார் 300க்கும் மேற்பட்ட சிறார்கள் தங்கவைக்கப்பட்டுள்ளனர் சென்னை, கடலூர், திருச்சி, சேலம், திருநெல்வேலி, தஞ்சாவூர், மதுரை, கோவை ஆகிய இடங்களில் 8 கூர்நோக்கு இல்லங்கள் செயல்பட்டு வருகின்றன. இதில், மதுரை, கோவை கூர்நோக்கு இல்லங்கள் தனியார் தொண்டு நிறுவனங்களால் நடத்தப்பட்டு வந்தன. இதில், மதுரை கூர்நோக்கு இல்லம் 2015 பிப்ரவரி முதல் செயல்படுவதில்லை. இங்கு வரும் சிறுவர்கள் திருச்சி மற்றும் திருநெல்வேலிக்கு அனுப்பி வைக்கப்படுகின்றனர்.
கூர்நோக்கு இல்லங்கள் என்பவை சட்ட விரோதச் செயல்களில் ஈடுபடும் 18 வயதுக்கும் குறைவான சிறுவர்களை நல்வழிப்படுத்த உருவாக்கப்பட்டதுதான் சிறார் கூர்நோக்கு இல்லங்கள். இந்த இல்லங்களில் வழக்குகள் முடியும் வரை குழந்தைகள் தங்கவைக்கப்படுவார்கள். தண்டனை பெற்ற குழந்தைகள் ‘சிறப்பு இல்லங்களுக்கு’ அனுப்பப்படுவார்கள். அங்கு சிறுவர்களுக்கு தேவையான கல்வி, உளவியல் ஆலோசனைகள், நல்வழி போதனைகள், சட்ட வழிகாட்டல்கள் வழங்கப்படும்.
குற்றவாளி என்ற வார்த்தை சிறுவர்கள் மீது பயன்படுத்துவது சமூகத்தில் எதிர்மறை சூழ்நிலையை உருவாக்கும் என்ற நோக்கத்தில் குற்றவாளிகள் என்ற வார்த்தையை முழுமையாக தவிர்த்து, தவறு செய்த சிறுவர்கள் என்று அழைக்க வேண்டும் என்று சிறார் நீதிச் சட்டம் கூறுகிறது. ஆனால் பெரும்பாலான கூர்நோக்கு இல்லங்களில் சிறுவர்கள் குற்றவாளிகளாகத்தான் நடத்தப்படுகிறார்கள். குற்றவாளி என்ற மனநிலையிலேயே அதிகாரிகள் அவர்களை அணுகுகின்றனர். சிறுவர்கள் மீது வன்முறை திணிக்கப்படும்போது, அவர்களும் வன்முறையாளர்களாக மாறுகின்றனர். இதனால் சிறுவர்கள் ஒருவித மன உளைச்சலில் தப்பிச் செல்வது, வன்முறையில் ஈடுபடுவது போன்ற செயல்களில் ஈடுபடுகின்றனர். கூர்நோக்கு இல்லங்கள் குழந்தைகளை குற்றவாளிகளாக்கும் சூழல் இருப்பதாக சமூக ஆர்வலர்கள் கூறுகின்றனர்.
தற்போதைய சூழலில் சிறுவர்கள் திருந்துவதற்கான பயிற்சி கூடமாக கூர்நோக்கு இல்லங்கள் இல்லை. குற்றம் செய்தார்கள் என்று கூறி சிறைச்சாலையில் வைப்பதுபோல் அவர்களை அடைத்து வைத்துள்ளனர். அவர்களின் கோபம் மற்றும் குற்ற உணர்வை நீக்கி முறையான உளவியல் ஆலோசனையையும், கல்வியையும் கொடுத்தால்தான் அவர்கள் திருந்தி வருவார்கள். ஆரோக்கியமான சமூக உருவாக்கத்தில் சிறுவர்களின் பங்கு மிக முக்கியமானதாகின்றது. இதனாலேயே சிறுவர்கள் வன்முறையற்ற சூழலில் வளர்க்கப்பட வேண்டும்.
திட்டம் தீட்டி குற்றம் செய்த சிறுவர்களையும், ஆவேசத்தில் குற்றம் செய்த சிறுவர்களையும் தனித்தனியே தங்க வைக்க வேண்டும் என்று சட்டம் சொல்கிறது. ஆனால் அரசு சிறார் இல்லங்களில் இந்த விதிகள் முழுமையாக பின்பற்றப்படுவதில்லை. இதனால் மாணவர்கள் மன அழுத்தம் மற்றும் உளவியல் பிரச்னைகளுக்கு ஆளாவதாக மன நல மருத்துவர்கள் கூறுகின்றனர். பல கூர்நோக்கு இல்லங்களில் பாலியல் வன்முறைகள் நடக்கின்றன. கூர்நோக்கு இல்லங்களில் முறையான கண்காணிப்பு, கவனிப்பு இருந்தால் வன்முறைச் சம்பவங்கள் நடக்காது. சிறிய குற்றங்களில் ஈடுபடும் சிறுவர்களை கைது செய்து கூர்நோக்கு இல்லங்களில் அடைத்து வைக்கின்றனர். அங்கு, வயது அதிகமுள்ள சிறுவர்கள், இளம் சிறுவர்களை சித்ரவதை செய்யும் சூழலும் உள்ளது.
“எந்தக் குழந்தையும் நல்லக் குழந்தை தான் மண்ணில் பிறக்கையிலே! அவர் நல்லவர் ஆவதும் தீயவர் ஆவதும் அன்னை வளர்ப்பினிலே” என்ற பாடல் இங்கு நினைவிற் கொள்ள வேண்டியுள்ளது. சிறுவர்கள் நல்ல குடிமக்களாக உருவாவதும் தனது வீட்டின் பூட்டை உடைக்கும் கள்வர்களாவதும் அவர்கள் வளர்கின்ற சூழலை பொறுத்தே அமைகின்றது. எனவே பிள்ளை ஆளுமையானவர்களாக வளர்வதில் பெற்றோருக்கு மட்டுமல்ல சூழலுக்கும், அதன்வாழ் சமூகத்திற்கும் பாரிய பொறுப்பு இருக்கின்றது. குற்றங்கள் களைவதற்கு முதலில் வீட்டிலிருந்தே நடவடிக்கை ஆரம்பிக்கப்பட வேண்டும். அதிகரித்து வரும் சிறார் குற்றங்களைத் தடுக்க வேண்டுமானால் பெற்றோர், காவல்துறை, நீதித்துறை ஆகிய மூன்றும் ஒரே கோட்டில் பயணிக்க வேண்டும்.
சமீபத்தில் சிறார்கள் தப்பிச் சென்ற சம்பவம் நிகழ்ந்த புரசைவாக்கம் சிறார் இல்லமானது, சிறார்களின் பாதுகாப்புக்கு முழு பொறுப்பான சமூக பாதுகாப்பு இயக்குநரகம் உள்ள வளாகத்திலேயே அமைந்துள்ளது வேடிக்கையான உண்மையாகும். இந்த சம்பவத்தை ஒரு சந்தர்ப்பமாக எடுத்துக் கொண்டு சிறார் இல்லங்களை முழுமையாக சீரமைக்க அரசு உரிய நடவடிக்கை எடுக்க வேண்டும் என்பதே விருப்பம்.
சா.சின்னதுரை
இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.
கருத்துக்கள் பதிவாகவில்லை- “சீரழிக்கின்றனவா சிறார் சீர்நோக்கு இல்லங்கள்?”