மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுகமான வாழ்வு பெற சுருள்பாசியின் பங்கு

சித்திர சேனன்

Oct 11, 2014

spirulina1சுருள்பாசி என்றால் என்ன? என்று முதலில் நாம் அறிந்து கொள்ள வேண்டும். சுருள்பாசி சுபைருலீனா என்ற பெயரில் அழைக்கப்படுகிறது. இது ஒரு நுண்ணிய, நேரடியாகக் கண்ணுக்குத் தெரியாத நீலப்பச்சை நிறமுடைய நீரில் வாழும் தாவரம் ஆகும். இது இயற்கையிலேயே பல ஊட்டச்சத்துக்கள் நிறைந்த ஒரு தாவரமாகும். இந்த சுருள் பாசியில் 55.65% புரதச் சத்து உள்ளது. இது உடல் வளர்ச்சிக்கு மிக முக்கியமானதொரு உணவாகும்.

உலகில் சுமார் 25 ஆயிரம் வகைப் பாசி இருந்தாலும் 75 வகையான பாசிகள் மட்டுமே உணவாகப் பயன்படுகின்றன. இதில் முதல் நிலையில் இருப்பது சுபைருலினா எனப்படும் இந்த சுருள்பாசியே.

தயாரிப்பு முறை:

spirulina3மதுரை மாவட்டம், உசிலம்பட்டி பிரதான சாலையில் செல்லம்பட்டி என்ற ஊர் அமைந்துள்ளது. இந்த செல்லம்பட்டியில் வெட்-டிரஸ்ட் என்ற தொண்டு நிறுவனத்தில் சுபைருலீனா பாசி விளைவிக்கும் பயிற்சியைப் பெற்ற உஷாராணி என்பவர் இத்தயாரிப்பு முறை பற்றி நமக்குக் கூறினார்.

பாரம்பரிய விவசாயக் குடும்பத்தில் பிறந்த நான், விவசாயத்தில் வறட்சியும், பெருவெள்ளமும் தென்மாவட்டங்களில் பரவி இருந்த நிலையில் ஒரு மாற்று விவசாயத்திற்கான வழியை தேர்ந்தெடுக்க வேண்டிய காலகட்டத்தில் இருந்த போது, இந்த வெப்-டிரஸ்ட் நிறுவனம் எனக்கும், என்னைப் போன்ற பல பெண்களுக்கும் “சுருள்பாசி விளைவிக்கும்” தொழிலை அறிமுகப்படுத்தியது. இந்நிறுவன வழிகாட்டலோடு நான் இந்த மாற்று விவசாயப் பணிக்கு ஆயத்தமானேன்.

spirulina2சுருள்பாசி விளைவிக்க முதலில் 20 ஆயிரம் ரூபாய் தேவைப்பட்டது. நான்கு மீட்டர் அகலம், ஆறு மீட்டர் நீளம் கொண்ட தொட்டியில் தார்பாய் விரித்து இரண்டு அடி உயரத்திற்கு தண்ணீர் நிரப்பினால் பாசி விளைவிக்கும் களம் தயாராகிவிடும். தாய் பாசி வாங்கி வந்து இந்தத் தண்ணீருக்குள் விட்டு, தினமும் 15 முதல் 20 முறை தண்ணீரை கிளறி விட வேண்டும். நான்காவது நாளில் இருந்து பாசி அறுவடைக்கு தயாராகி விடும்.

spirulina9தினமும் 200 முதல் 500 கிராம் வரை சேகரிக்கலாம். பாசி வளர்வதற்குத் தேவையான நுண்ணூட்டச்சத்தும், ஆவியான தண்ணீரின் அளவிற்குத் தினமும் தண்ணீரும் ஊற்றி வந்தாலே போதும். ஓராண்டு வரையில் தினசரி விளைச்சல் கிடைக்கும். பின் பாசியை காயவைத்து பவுடராக்கி விற்பனைக்கு தயாராக்க வேண்டும். கிலோ 600 ரூபாய் வரை விலை கிடைக்கிறது. எங்களிடம் இருந்து வாங்கும் இந்த பாசியை மாத்திரைகளாகவும், உணவுப் பொருளாகவும் மதிப்புக்கூட்டி விற்பனை செய்கின்றனர். செலவுகள் போக தினசரி 100 முதல் 200 வரை கிடைக்கிறது என்கிறார் உஷாராணி.

சுருள்பாசி உணவுகள்:

BZAS280385Rஇந்த சுருள்பாசியை கேப்சூல்(மாத்திரை) வடிவில் தர்மா எக்ஸ்போர்ட்ஸ் (Dharma Exports) என்ற நிறுவனம் தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு விட்டுள்ளது. இந்த சுபைருலீனா குப்பிகளை குழந்தைகள் ஒரு நாளைக்கு 2 என்றும், பெரியவர்கள் 4 என்ற அளவிலும் உட்கொள்ள வேண்டும். இதை காலை, மாலையில் உணவுக்கு முன் அருந்துவது நல்லது என தர்மா எக்ஸ்போர்ட்ஸ் நிறுவனர் தர்மநிதி அவர்கள் கூறுகிறார்.

மேலும் இந்த நிறுவனம் கடலை மிட்டாய், கொக்கோ மிட்டாய் போன்ற உணவுப் பொருட்களை சுபைருலீனா மூம் தயாரித்து மக்கள் பயன்பாட்டிற்கு விற்பனை செய்யப்படுகிறது. மேலும் இந்த சுபைருலீனாவிலிருந்து பிசுகெட், சாக்லெட், முறுக்கு, சேமியா, அப்பளம், லட்டு, குளிர்பானம் எனப் பல்வேறு மதிப்பு கூட்டப்பட்ட பொருட்கள் செய்து மக்கள் பயன்பாட்டிற்கு விட்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.

சுபைருலீனாவில் – சுருள் பாசியில் உள்ள ஊட்டச்சத்துக்களின் பட்டியல்:

இந்த சுருள் பாசியில் மனித உடலுக்குத் தேவையான வைட்டமின் ஏ,டி,இ,கே, அமினோ ஆசிட், காமோலினா லிங்க் அமிலம், புரதம் (55% முதல் 65% வரை), மக்னீசியம், நைட்டனின் ஏ, பீட்டா கரோட்டின் , வைட்டமின் பி6, பி12, இரும்புச்சத்து, கார்போஹைட்டிரேட், சூப்பர் ஆக்ஸைடு, டிஸ்மியூட்டேஸ் (SOD) போன்ற ஊட்டச்சத்துக்கள் நிறைந்துள்ளன.

மேலும் இதில் அனைத்து வகையான தாதுக்களும் உள்ளன. உடலைச் சீராக இயக்கவும், நோய் எதிர்ப்பு சக்தியை அதிகரிக்கவும் உதவுகின்றன.

ஸ்பைருலீனா சுருள்பாசியில் உள்ள சத்தும், தீர்க்கும் நோய்களும்:

spirulina10.jpg

 •     தாய்ப்பாலுக்கு அடுத்தபடியாக அதிக சத்துள்ள உணவுப்பொருள் சுபைருலீனா மட்டுமே. பசும்பாலை விட 4   மடங்கு சத்து நிறைந்தது.
 •   ஆய்வாளர்கள் விண்வெளிப் பயணத்தின்போது இதையே உணவாகப் பயன்படுத்துகின்றனர்.
 •   சுபைருலீனாவில் 55-65% உள்ள புரதம் உடலில் ஜீரண சக்தியை அதிகரிக்கிறது. குழந்தைகள், இளைஞர்கள், கர்ப்பிணி பெண்கள், பாலூட்டும் தாய்மார்கள், கடின உழைப்பாளிகள், மூத்தோர்கள் என அனைவருக்கும் ஏற்ற இணை உணவாகும்.
 • தாது உப்புக்களாகிய மக்னீசியம், கால்சியம், பொட்டாசியம், தாய்ப்பால் சுரக்க உதவுகிறது. கை, கால், மூட்டுவலியை முற்றிலும் நீக்குகிறது.
 • வைட்டமின் ஏ, கண் பார்வையை சீராக இருக்கச் செய்கிறது. இதிலுள்ள ‘பி’ வைட்டமின்கள் சர்க்கரை நோயால் பாதிக்கப்பட்டவர்களின் கணையம் சீராக செயல்பட்டு தேவையான அளவு இன்சுலின் சுரக்கச் செய்து இரத்தத்தில் சர்க்கரை அளவை கட்டுப்படுத்துகிறது.
 •   15 மடங்கு அதிகம் உள்ள இரும்புச்சத்து இரத்த சோகை நோய் வராமல் தடுக்கிறது. இரத்தத்தில் ஹீமோகுளோபின் அளவை அதிகரிக்கிறது. இதிலுள்ள துத்த நாகச்சத்து முடி உதிர்தலை தடுக்கிறது.
 • காமா லினோலினக் அமிலம் (GLA) உடலில் உள்ள கொழுப்பு சத்து சீராக இருப்பதற்கு உதவி புரிந்து உடல் பருமனைத் தடுக்கிறது. இரத்த அழுத்த நோய் வராமல் பாதுகாக்கிறது.
 • உடலில் இறந்த செல்லிற்கு புத்துயிர் கொடுக்க வல்லது. எனவே புற்றுநோய் மற்றும் குடல்புண் போன்ற நோய்களை நீக்கவல்லது.
 • தோல் சுருக்கங்களை நீக்கி இளமையைத் தருகிறது. தோல் சம்பந்தப்பட்ட நோய்களை நீக்க வல்லது. வெண் தேமலை படிப்படியாக குறைக்கிறது.
 • HIV/AIDS நோயால் பாதிக்கப்பட்டவர்கள் சுபைருலீனாவைத் தொடர்ந்து உட்கொண்டால் HIV வைரஸ் மேலும் பரவாமல் தடுப்பதுடன் நோயாளிகளின் வாழ் நாட்களை அதிகப்படுத்த உதவுகிறது.
 • பீட்டோ கரோட்டின் சத்து கேரட்டில் உள்ளதை விட 10 மடங்கு அதிகம் உள்ளது. அழகு நிலையங்களில் சுபைருலீனாவைப் பயன்படுத்தி கண் கருவளையம், முகப்பரு இவற்றை நீக்கி முகப்பொலிவினைப் பெறுகிறார்கள்.
 • ஐம்புலன்களும் நோயின்றி சீராக இயங்க சுபைருலீனா உதவுகிறது.
 • ஞாபக சக்தியை அதிகரிக்கச் செய்து நாள் முழுவதும் சுறுசுறுப்பாக வைத்திருக்க உதவுகிறது.

இது மனிதருக்கு மிகுந்த ஆரோக்கியத்தைத் தருவதாக உலக சுகாதார நிறுவனம் சான்றளித்திருக்கிறது என்றால் அது மிகையல்ல.

குறிப்பு: இந்த சுபைருலீனா தொழிலைத் தொடங்க வேண்டும் என்ற சுயதொழில் ஆர்வலர்கள் இருந்தால் அவர்களின் அலைபேசி எண்ணை பெயரோடு பின்னூட்டத்தில் பதிவு செய்தால் அவர்களுக்கு பயிற்சி பற்றிய விளக்கமும், பயிற்சியும் அளிக்கப்படும்.


சித்திர சேனன்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுகமான வாழ்வு பெற சுருள்பாசியின் பங்கு”

அதிகம் படித்தது