மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 24

கி.ஆறுமுகம்

Aug 30, 2014

bosu2போசை இரண்டு முறை சிறையில் அடைத்த ஆங்கில அரசுக்கு, வங்காள மக்கள் சரியான பாடம் கற்பித்தார்கள். ஒரு முறை அவரை கல்கத்தா நகர மேயராக்கினர், மற்றொரு முறை சட்டமன்ற உறுப்பினராக்கினார்கள். இப்போது காந்திக்கு பாடம் கற்பிக்க காத்திருந்தனர். வங்காள மக்களுக்கு அதற்கான நேரம் சரியாக அமைந்தது. வங்காள காங்கிரசு கமிட்டி தலைவர் தேர்தலில் போசை போட்டியிடச் செய்து, தலைவராக தேர்ந்தெடுத்து காங்கிரசு தலைவர் பதவியை போசு ராஜினாமா செய்ய காரணமானவர்கள் முன்னிலையில், மீண்டும் வங்காள காங்கிரசு தலைவராக தேர்ந்தெடுத்து காங்கிரசு மேலிடத்திற்கு கரியை பூசினர் வங்காள மக்கள். போசு தலைவரானவுடன் வங்காள காங்கிரசு மிக உற்சாகத்துடன் செயல்படத் துவங்கியது. பல ஆண்டுகளாக சிறையில் இருந்த சுமார் 80 அரசியல் கைதிகள் தாங்கள் விடுதலையாகும் வரை உண்ணாவிரதம் இருக்க போவதாக அறிவித்தனர். காந்தி உடனே ஆங்கில அரசுக்குக் கடிதம் எழுதி அவர்களை விடுதலை செய்ய வேண்டினார். ஆனால் வங்காள கவர்னர், அவர்கள் அனைவரும் தீவிரவாதிகள், புரட்சியாளர்கள், அவர்களை விடுதலை செய்ய முடியாது என அறிவித்தார். காந்தி மீண்டும் கடிதம் எழுதினார் அவர்கள் புரட்சியின் மீது, நம்பிக்கையிழந்து விட்டனர் என தமக்கு கடிதம் எழுதியுள்ளனர், எனவே அவர்களை விடுதலை செய்ய வேண்டுகிறேன் என அரசுக்கு கடிதம் அனுப்பினார். வங்க காங்கிரசு தலைவர் போசு சிறைச்சாலைக்குச் சென்று கைதிகளை நேரில் பார்த்து தங்களை விடுதலை செய்ய மாகாண காங்கிரசு முழு முயற்சியில் ஈடுபட்டுள்ளது என உறுதி அளித்து அவர்கள் உண்ணாவிரதத்தை நிறுத்துமாறு கேட்டுக் கொண்டார். உடனே கைதிகள் உண்ணாவிரதத்தை நிறுத்தினர்.

பின் ஜுலை மாதம் 9 ஆம் தேதியை, வங்க அரசியல் கைதிகள் விடுதலை நாளாகக் கொண்டாட வேண்டும் என்று போசு ஓர் அறிவிப்பை வெளியிட்டார். இதைப் பார்த்ததும் காங்கிரசு மேலிடத்திற்கு கோபம் வந்தது. பம்பாயில் அகில இந்திய காங்கிரசு கமிட்டி கூட்டத்தில் நிறைவேற்றப்பட்ட இரண்டு தீர்மானங்களைக் கூறி, அதை போசு மீறி விட்டதாக காங்கிரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் கூறினார். அந்த இரண்டு தீர்மானத்தில் ஒன்று, எந்த மாநிலத்தில் உள்ள காங்கிரசு கட்சியோ, அதன் உறுப்பினர்களோ, அகில இந்திய காங்கிரசு காரியக் கமிட்டியைக் கேட்காமல் எந்த போராட்டங்களையும் நடத்தக் கூடாது. இரண்டாது தீர்மானம், மாநில காங்கிரசு கமிட்டிகள், காங்கிரசு மந்திரி சபை விஷயங்களில் தலையிடக்கூடாது. இதை அப்போதே போசு எதிர்த்தார். இது மாநில காங்கிரசு கமிட்டியின் உரிமைகளை பறிக்கும் தீர்மானங்கள். ஆங்கிலேய அரசை கண்டித்து உண்ணாவிரதமோ அல்லது எந்த போராட்டமும் நடத்தினால் காங்கிரசு மேலிடத்திற்கு என்ன நட்டம் ஏற்படப்போகிறது. எதற்கு எடுத்தாலும் அகில இந்திய காங்கிரசு கமிட்டியின் உத்தரவையும் ஒப்புதலையும் மாநில காங்கிரசு கமிட்டி எதிர்பார்த்து நிற்க வேண்டும் என்பது, மாநில காங்கிரசு கையை கட்டிப்பொடும் செயல் என்றார் போசு.

bosu1ஜுலை மாதம் 9ம் தேதியில் போசு முன்பே அறித்தது போல் கண்டன தினம் மற்றும் கைதிகள் விடுதலை தினம் என வங்காளத்தில் மட்டுமின்றி தேசம் முழுவதும் விழா ஏற்பாடுகள் செய்யப்பட்டது. இதைக் கண்டதும் காங்கிரசு தலைவர் ராஜேந்திர பிரசாத் இதை நிறுத்துமாறும் மற்றும் கண்டன தினப் பொதுக்கூட்டம், ஊர்வலம் அனைத்திற்கும் காங்கிரசு ஒப்புதல் அழிக்கவில்லை, எனவே காங்கிரசு உறுப்பினர்மற்றும் காங்கிரசு பொறுப்பில் உள்ள எவரும் இதில் கலந்து கொள்ளக் கூடாது என்றார். ஆனால் வங்காளத்தில் திட்டமிட்டபடி பொதுக்கூட்டம், ஊர்வலம் என மக்கள் சிறப்பாக நடத்தி முடித்தனர்.

போசு பேசிய, பொது கூட்டத்திற்கு காங்கிரசு உறுப்பினர்கள், காங்கிரசில் பொறுப்பில் உள்ளவர்கள் அனைவரும் மற்றும் மக்கள் கூட்டம் என சிறப்பாக முடிந்தது.  ஆகஸ்ட் 9ஆம் தேதி வர்தாவில் அகில இந்திய காங்கிரசு காரியக் கமிட்டிக் கூட்டம் கூடியது. இதில் போசு காங்கிரசு தலைவரின் கட்டளை மற்றும் காங்கிரசு தீர்மானங்களை மீறிவிட்டார், எனவே அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை எடுக்க வேண்டும் என்று அகிம்சாவாதிகள் கூக்குரல் எழுப்பினர். இந்தக் கூட்டம் நடப்பதற்கு முன் காங்கிரசு தலைவருக்கு, போசு 9-ம் தேதி வங்காளத்தில் நடந்த போராட்டத்திற்கு தாமே முழுபொறுப்பு ஏற்பதாக ஒரு கடிதம் எழுதியிருந்தார். இதனை சுட்டிக்காட்டி அகிம்சாவதிகள், “அதான் அவரே ஒப்புக்கொண்டாரே ஒழுங்கு நடவடிக்கை எடுத்துவிட வேண்டியது தானே” என்று கூச்சலிட்டனர்கள். என்ன இருந்தாலும் அவர் முன்னாள் காங்கிரசு தலைவர், இந்நாள் மாநில காங்கிரசு தலைவர், அவர் பிரிட்டிசை எதிர்த்து அரசியல் கைதிகள் விடுதலைக்காக தான் போராடியுள்ளார், இதற்காக அவர் மீது நடவடிக்கை எடுத்தால் நாம் அவரை பழிவாங்குவதாக மக்கள் எண்ணுவர் என்றார் நேரு. ஆனால் வல்லபாய் பட்டேல் “சட்டம், ஒழுங்கு என்றால் அனைவருக்கும் ஒன்றுதான். இன்று இவர் பின், மற்றொருவர் என இப்படி விட்டுவிட்டால் கட்சி கட்டுப்பாட்டை காப்பாற்ற முடியாது. கட்சி விதிமுறைகளையும், சட்டவிதிகளையும் அனைவரும் பின்பற்ற வேண்டும், இவர் மீது நடவடிக்கை எடுத்தாக வேண்டும்” என்றார். காந்தியும் இவரை ஆதரித்தார். என்ன தண்டனை கொடுக்கலாம், எச்சரிக்கையா?,இடைநீக்கமா(சஸ்பென்ஷனா?) அல்லது நிரந்தரமாக கட்சியில் இருந்து நீக்குவதா? (டிஸ்மிஸா?) என்று பரிசீலனை வந்து பின் மாநில காங்கிரசு தலைவர் பதவியிலிருந்து விலக வேண்டும், மூன்றாண்டுகளுக்கு காங்கிரசு உறுப்பினராகவும் இருக்கக்கூடாது என்று தண்டனை தீர்மானம் ஏகமனதாக நிறைவேறியது. வங்காள மக்கள் ஒழுக்கத்தின் மீது ஒழுங்கு நடவடிக்கையா என்று கேட்டனர். போசு இல்லாத காங்கிரசில் தங்களுக்கு என்ன வேலை என்று வங்காள உறுப்பினர்கள் அனைவரும் ராஜினாமா செய்து வெளியேறினார்கள்.

bosu3போசு 1939-மே மாதம் தனது அகில இந்திய காங்கிரசு தலைவர் பதவியை ராஜினாமா செய்த பொழுதே, காங்கிரசுடன் இருந்தே கொண்டே ‘பார்வர்டு பிளாக்’ என்ற அமைப்பை உருவாக்கினார். காங்கிரசில் உள்ள இடதுசாரிகள், காங்கிரசு சோஷலிஸ்டுகள், கம்யூனிஸ்ட்டுகள், தீவிர இளைஞர்கள் அனைவரையும் ஒன்று சேர்த்து வலதுசாரிகளை முறியடித்து காங்கிரசை சிறப்பாக செயல்பட வைக்க நினைத்தார். ஆனால் அவர் “பார்வர்டு பிளாக்” ஆரம்பித்ததும் சில சோஷலிஸ்டுகள் பின்வாங்க, போசு தனியாக “பார்வர்டு பிளாக்” தொடங்கி சிறப்பாகச் செயல்பட வைத்தார். காங்கிரசில் இருந்து முழு சுதந்திரமும் கிடைத்துவிட்டது. போசு தனது வலதுசாரி எதிர்ப்பு மற்றும் பிரிட்டிசை எதிர்த்து முழு சுதந்திர போராட்டத்தில் சிறப்பாக ஈடுபட முழுமுயற்சியில் “பார்வர்டு பிளாக்” தொடங்கப்பட்டுள்ளது என பத்திரிக்கையில் அறிவித்தார். போசு கூட்டிய பொதுக்கூட்டத்திற்கு மக்கள் கூட்டம் கூட்டமாக வந்தனர். முன் இருந்ததைவிட பன்மடங்கு போசின் உயர்வு காணப்பட்டது. காந்தி கலங்கிப் போய் அமர்ந்தார். காந்தியை மட்டுமல்ல இதற்கு முன் ஒரு முறை பிரிட்டிசு அரசையும் கதிகலங்க வைத்துள்ளார் போசு. போசை ஆசிரியராகக் கொண்ட “பார்வர்ட்” பத்திரிகை பரிபூரண சுதந்திரத்தை தீவிரமாக ஆதரித்துப் பிரச்சாரம் செய்து வந்தது. அதைக் கண்டு ஆத்திரமுற்ற பிரிட்டிசு அரசாங்கம் “பார்வர்ட்” பத்திரிக்கையை எப்படியாவது நசுக்கிவிட வேண்டும் என்று முடிவு செய்து, நாகபுரி இரயில்வே கம்பெனியைப் பற்றி “பார்வர்ட்” பத்திரிகையில் வெளியான ஒரு கட்டுரையின் மீது மானநஷ்ட வழக்கு தொடுத்தது.

1929 ஏப்ரல் 24ல் தீர்ப்பு வழங்கப்பட்டது, பார்வர்ட் பத்திரிகை இரயில்வே கம்பெனிக்கு ஒன்றரை லட்சம் ரூபாய் நஷ்ட ஈடு கொடுக்க வேண்டும் என்று அத்தீர்ப்பு கூறிற்று. அதனால் “பார்வர்ட்” பத்திரிகையைத் தொடர்ந்து நடத்த இயலவில்லை. ஆனால் அடுத்த நாளே “நியூ பார்வர்ட்” (New Forward) என்ற புதிய பத்திரிகை ஒன்றைத் தொடங்கி முதல் இதழை வெளியிட்டார் போசு. அன்று மாலையே “நியூ பார்வர்ட்” அரசாங்கத்தால் தடைசெய்யப்பட்டது. ஆனால் ஆங்கில அரசாங்கமே திகைத்து திக்குமுக்காடும் வகையில் மூன்றாம் நாளே,“லிபர்ட்டி” என்ற இன்னொரு பத்திரிகையை வெளியிட்டார்போசு. மூன்று தினங்களில் ஒன்றன் பின் ஒன்றாகமூன்று பத்திரிகைகளை வெளியிடுவது எப்படி சாத்தியமாயிற்று என்று எண்ணிய பிரிட்டிசார் போசைக் கண்டு அஞ்சினார்கள். இது போன்று தற்பொழுது போசின், பார்வர்டு பிளாக் கட்சி மற்றும் போசின் உயர்வைக் கண்ட காந்தி, காங்கிரசின் நிலைமையை எண்ணி கலங்கினார். போசின் பார்வர்ட் பிளாக் கட்சியில், இளைஞர்கள் கூட்டம் கூட்டமாக உறுப்பினர் ஆனார்கள். போசின் பத்திரிகையில், பார்வர்ட் பிளாக் கட்சி எந்த சூழ்நிலையில் எதற்காக ஆரம்பிக்கப்பட்டது என்று ஒரு தெளிவான கட்டுரை ஒன்றையும் வெளியிட்டார். அதில் இந்தியாவின் பரிபூரண சுதந்திரம் மற்றும் மக்கள் அனைவரையும் ஒற்றுமைப்படுத்துதல் போன்றவைகள் பார்வர்டு பிளாக் கட்சியின் முதன்மை வேலைகள் என அறிவித்தார். பல பொதுக்கூட்டங்கள் நடத்தினார், பின் இந்தியா முழுவதும் தமது பார்வர்ட் பிளாக் கட்சியைக் கொண்டு சேர்க்க எண்ணி இந்தியா முழுவதும் சுற்றுப் பயணம் தொடங்கினார் போசு.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 24”

அதிகம் படித்தது