மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 26

கி.ஆறுமுகம்

Sep 13, 2014

hindhi1“எதிரியையும் நண்பனாகக் கருதி அவன் ஆபத்து நேரத்தில் உதவி செய்து மனமாற்றத்திற்கு வழி செய்பவனே சிறந்த உண்மையான சத்தியாக்கிரகி ஆவான்” என்று காந்தி அறிவித்தார். காந்தியின் இத்தகைய அறிவிப்புகளைக் கண்ட இடதுசாரி இளைஞர்கள், இது என்ன ஒரு பித்துக்குளித்தனமான அறிவிப்பு, இருநூறு ஆண்டுகளாக அடிமைப்பட்டிருப்பதைக் கண்டு இரக்கம் கொள்வதா?, பிரிட்டிசு தாக்கப்பட்டால் என்ன குடிமுழுகிப் போய்விடும்?. பிரிட்டிசார் இந்தியாவிற்கு செய்திருக்கும் கொடுமைகளை விடவா ஹிட்லர் ஐரோப்பாவில் செய்துவிட்டார்?, பிரிட்டிசார் அழிந்துவிடுவார் என்று கண்ணீர் வடிக்கும் இந்த கிழவர், முதல் உலக யுத்தத்தில் இங்கிலாந்தும் பிரான்சும், ஜெர்மனியை அழிக்கச் சென்றதை மறந்தது ஏன்? அவர்கள் விதைத்த அழிவு விதைதானே இன்று ஹிட்லராக வந்திருக்கிறது. இந்தப் போரில் இந்தியாவும் ஈடுபடும் என்று அறிந்த பிரிட்டிசாரின் மீது கருணை காட்டுவது, அதுவும் இந்தியாவின் சுதந்திரம் பற்றி சிந்திக்காமல் அவர்கள் மீது இரக்கம் காட்டுவது முறையற்ற செயல். இந்த கிழவரை நம்பி இத்தனை நாட்கள் நாட்டுமக்கள் அனைவரும் செய்த தியாகத்திற்கு பலம் இல்லாமல் போய்விடும் போல இருக்கிறதே? என்று மக்கள் கொந்தளித்தார்கள்.

போசு, கருணைக்கு இது நேரம் அல்ல, ஒரு நாட்டின் அரசியலில் மிக அரிதாக கிடைக்கும் வாய்ப்பு நமக்கு கிடைத்துள்ளது, இதை சரியாக நாம் பயன்படுத்தி சுதந்திரம் அடைய வேண்டும். பகவத்கீதையில் மகாபாரதத்தில் அர்ஜீனனுக்கு, கண்ண பரமாத்மா உபதேசித்ததை காந்தி மீண்டும் ஒரு முறை படித்து பார்க்கட்டும். சொந்தம் பந்தம், உற்றார் உறவினர் என்பதையெல்லாம் பார்க்காமல், வில்லை எடுத்து நான் பூட்டி அதர்மத்தை அழித்து தர்மத்தை நிலைநாட்ட வேண்டும் என்று போசு சுட்டி காட்டினார்.

காரிய கமிட்டி கூட்டத்தில் பார்வையாளராகக் கலந்து கொண்ட முத்துராமலிங்கத்தேவர் பிற்காலத்தில் மதுரையில் பொதுக்கூட்டத்தில் பேசும் பொழுது காரிய கமிட்டி கூட்டத்தில் போசுக்கும் நேருக்கும் நடந்த உரையாடலை தெரிவித்தார்.

subash-14-4நேரு: உலகத்திலுள்ள சனநாயக நாடுகள் அனைத்தும் போரில் பிரிட்டனுக்கு உதவ முன்வைத்துள்ளது என்றார்.

போசு: உலக சனநாயக நாடுகள் என்று தாங்கள் குறிப்பிடுவது கனடா, ஆஸ்திரேலியா, தென்னாப்பிரிக்கா போன்ற நாடுகளா? அல்லது இலங்கை, பர்மா போன்று பிரிட்டிசாரிடம் அடிமைப்பட்டுள்ள நாடுகளா? அல்லது இவ்விரண்டிலும் ஈடுபடாத நாடுகளா?

பதிலே கிடையாது. சிறிது நேரம் அமைதியாக இருந்து பின் மீண்டும்

நேரு: பாசிசம் தலைதூக்கி வருகிறது. அதை அடக்க அமெரிக்க, ஆங்கிலேயர்கள் போன்ற நாடுகள் பாடுபடுகின்றது. அதற்கு நாம் உதவ வேண்டாமா?

போசு: பாசிசம் தலைதூக்காமல் தடுப்பது நியாயமே. ஸ்பெயினில் பாசிசம் தலை தூக்கிய நேரத்தில், பிரிட்டிசார் அங்கு பாசிசத்தை அடக்காமல் எங்கு சென்றனர்.

பதிலே கிடையாது. சிறிது நேரம் அமைதி பின் மீண்டும்

நேரு: சிறிய நாடுகளை காப்பாற்ற ஆங்கிலேயர்கள் போர் புரிகின்றனர்.

போசு: சிறிய நாடுகளை காப்பாற்றுவது எனில் மியூனிச் ஒப்பந்தத்தில் பிரிட்டன் ஜெர்மனியோடு கையெழுத்துப் போட்டதன் அர்த்தம் என்ற அச்செய்கை சிறுபான்மை நாடுகளைக் காட்டிக் கொடுத்ததல்லவா?

என்று போசு கேட்டது தான் நேருவினால் பேச முடியவில்லை. கோபத்துடன் தன்கையில் வைத்திருந்த புத்தகத்தை போசின் மீது தட்டி ‘யூ’ என்று வெறித்துப் பார்த்தார். போசு சிறிது நேரம் பொறுமையுடன் இருந்துவிட்டு காந்தியைப் பார்த்து தாங்கள் இவ்வளவு காலம் போதித்த அகிம்சை இதுதான். தாங்களால் அகிம்சையை கடைபிடிப்பதில் முதன்மையானவர் என்று நீங்கள் போற்றுபவர் கடைபிடித்த இதுதான் அகிம்சையா?. நீங்கள் அழைத்தீர்கள் வந்தேன், கடமையைச் செய்தேன், போகிறேன் என்று கூறிவிட்டு வெளியேறினார். பின் காந்தியின் தீர்மானத்தை முழுவதும் காங்கிரசு ஏற்காததினால் நேரு ஒரு புதிய தீர்மானத்தை அறிவித்தார், அதனை காந்தியும் ஆதரித்தார். அந்தத் தீர்மானத்தை காந்தி, இந்தியாவிற்கு மட்டுமல்லாமல் உலகில் உள்ள ஏகாதிபத்தியத்தில் அடிமைப்பட்ட நாடுகள் அனைத்திற்கும் பொருந்தக்கூடிய ஒரு நல்ல தீர்மானம் இது என்று அறிவித்தார்.

போசு, அந்தத் தீர்மானத்தைக் கவனமாக ஆராய்ந்து பார்த்தால் வெறும் வார்த்தை ஜாலம்தான் இருக்கிறதே தவிர உருப்படியாக ஒன்றும் இல்லை. வெங்காயத்தை உரிக்க உரிக்க வெறும் தோல் மட்டுமே வருவதைப் போல அந்தத் தீர்மானத்தில் செயல்திட்டத்தைப் பற்றிய அம்சம் எதுவுமே இல்லை. வெறும் உமிதான் இருக்கிறது உள்ளே இருக்க வேண்டிய அரிசி இல்லை. பிரிட்டிசார், போருக்குப் பிறகு இந்தியாவின் அரசியல் அதிகாரம் பற்றிய காங்கிரசு கேள்விக்கு பிரிட்டிசார் பதில் தராமல் இருந்தால் காங்கிரசு நிலை என்ன என்பது பற்றிய தெளிவு அந்தத் தீர்மானத்தில் இல்லை என்று கூறினார் போசு. அன்றிலிருந்து இன்று வரை காங்கிரசு, மக்களிடம் வெளிவரும் வார்த்தை ஜாலத்தினால்தான் தன் ஆட்சியில் இத்தனை ஆண்டுகளாக மக்களை ஏமாற்றி வந்திருக்கிறது. அந்த வார்த்தை ஜாலத்தினையும் மக்களை ஏமாற்றும் அரசியல் திட்டத்தினை தொடங்கிவைத்தவர் நேரு. அன்று அதை கண்டித்தவர் போசு. இன்று யார்?.

subash2காந்தி நேருவின் தீர்மானத்தினை ஏற்று, நேருவை காங்கிரசு தலைவராகவும் ஏற்று காங்கிரசு செயல்பாடுகள் அனைத்திற்கும் நேருவே பொறுப்பேற்க வேண்டும் என்றார். ஆனால் காங்கிரசின் சட்டவிதிகள் இடம் அளிக்காததினால் போர்கால கமிட்டி உருவாக்கி அதன் தலைவராக நேருவை அமைத்தனர் காங்கிரசார். பின் பிரிட்டிசு ஓர் அறிக்கை விடுத்தது, அதை எதிர்க்க காந்தி, காங்கிரசு மந்திரிகள் அனைவரும் தனது சட்டசபை பதவியை விட்டு விலக ராஜினாமா செய்ய வேண்டும் என்று அறிவித்தார். அதை ஏற்று காங்கிரசு காரர்கள் ராஜினாமா செய்தனர்கள். பின் பிரிட்டிசு அரசாங்கம் காங்கிரசு முகத்துக்கு நேராக கதவை இழுத்துச் சாத்திவிட்டாலும், ஒரு கௌரவமான தீர்வுக்கு காங்கிரசு காரிய கமிட்டி தொடர்ந்து பாடுபடும் என்று குறிப்பிட்டிருந்தது. இதனைப் பார்த்ததும் போசு கோபத்தின் உச்சிக்கே போய்விட்டார். தனது பார்வர்டு பிளாக் பத்திரிகையில், பிரிட்டிசு அரசாங்கம் பேச்சு வார்த்தைக்கான கதவை இழுத்துச் சாத்திவிட்டாலும் காங்கிரசு காரிய கமிட்டி கௌரவமான ஒரு தீர்ப்பு காண தொடர்ந்து முயற்சிக்குமாம்! இதன் அர்த்தம் என்ன?, பிரிட்டிசு அரசாங்கம் எங்களை எட்டி உதைத்தாலும், நாங்கள் அவர்களது பாதத்தை நக்குவோம் என்பதுதானே?. போராட்டத்தை நீங்கள் தொடங்கவில்லை எனில் மக்களை ஏமாற்றாதீர்கள், நீங்கள் எடுத்துச் செல்ல முடியாத போராட்டத்தினை பார்வர்டு பிளாக் முன் நின்று நடத்தும். காங்கிரசு காரர்களுக்கு பதவி ஆசை வந்துவிட்டது, எனவேதான் ராஜினாமா செய்த பின்னரும் கூட நாங்கள் ஆட்சியைப் பிடிப்போம் என்று சொல்லிக்கொண்டிருக்கிறார்கள். போராட்டத்தினை பற்றியில்லாமல் ராஜாஜி, ராஜினாமாச் செய்துள்ள காங்கிரசு அமைச்சர்கள் மூன்று மாத விடுமுறையில் வெளியேறியிருப்பதாகப் பேசி வருகிறார். இது போன்று பதவியில் உள்ளவர்களை மக்களே பிற்காலத்தில் மறக்க நேரிடும் காங்கிரசை ஆரம்பித்த சுரேந்திரநாத் பானர்ஜியை சுட்டி காட்டினார் போசு.

subash 15-3பின் அரசியல் மேல் நாடுகளில் மூத்த தலைவர்கள் தாமாகவே ஒதுங்கி இளைஞர்களுக்கு வழிவிடுவார்கள். பிரிட்டிசு முன்னாள் பிரதமர் லார்டு பால்ட்வின் புகழின் உச்சியிலேயே தனது பதவியை ராஜினாமா செய்ததினால் தான் இன்று அவரின் ஆலோசனையை சகல தரப்பினரும் மதித்து ஏற்கிறார்கள். ஆனால் இந்தியாவில் சில தலைவர்கள் ஒரு முறை தலைமைப் பதவியைப் பிடித்து விட்டால் ஆயுள் காலம் முழுக்க அதை விட்டு இறங்க சம்மதிப்பதே இல்லை. அவர்களை மக்கள்தான் இறக்க வேண்டும். இன்று உள்ள தமிழ்நாட்டின் அரசியல் கட்சிகளை பற்றி கூட சிந்தித்தது போல், போசு அன்றே பேசினார். பேச்சு… பேச்சு என்ற வார்த்தை ஜாலத்தாலேயே மக்களை மயக்கி ஏமாற்றுவது, இதற்கு சிறந்த எடுத்துக்காட்டுதான் நமது தமிழ்நாட்டில் மிகச்சிறந்த திராவிட முன்னேற்ற கழகம். மற்றொன்று அண்ணாதிராவிட முன்னேற்ற கழகம் மக்களை பற்றி சிந்திப்பதே இல்லை. தனது பதவியை மட்டுமே சிந்திக்கும் சிறந்த தலைமை இது போன்ற அரசியலை அன்றே போசு மிகவும் கடுமையாக விமர்சித்துள்ளார். ஆனால் இன்று உள்ள மக்கள் என்று சிந்திப்பார்கள்?

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 26”

அதிகம் படித்தது