மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 27

கி.ஆறுமுகம்

Sep 20, 2014

subash31940 மார்ச் மாதம் 17ம் தேதி ரிம்காரில் 53வது காங்கிரசு மகாசபை கூட்டம் கூடியது. கூட்டம் கூடுவதற்கு இரண்டு நாட்களுக்கு முன் லண்டன் காக்ஸ்டன் ஹாலில் ஜாலியன் வாலாபாக் படுகொலைக்குக் காரணமான முன்னாள் பஞ்சாப் லெப்டினென்ட் கவர்னர், சர்.மைக்கேல் ஒட்வியர் உத்தம்சிங் என்ற பஞ்சாப் புரட்சி வீரரால் சுட்டுக் கொல்லப்பட்டார். இந்திய மந்திரியான லார்டு ஷெட்லண்டும் சுடப்பட்டு படுகாயமடைந்தார். இச்செயலை காந்தி கடுமையாகக் கண்டித்தார். இது ஒரு பைத்தியக்காரத்தனமான செயல் என்று அறிவிப்பை வெளியிட்டார். நேருவும் இதனை கண்டித்தார். நேருவின் செயலாளர் கிருஷ்ண மேனன் என்பவர் உத்தம் சிங் என்ற இளைஞன் அறியாமல் மன பேதலிப்பால் இதைச் செய்துவிட்டதாகக் கூறினார். அப்படியே கூறும்படி உத்தம் சிங்கிற்கும் தகவல் அனுப்பி அவ்வாறு கூறினால் தூக்கு தண்டனையிலிருந்து தப்பிவிடலாம் என்று ஆலோசனையும் கூறியிருந்தார். காங்கிரசு தலைமை செயலற்று இருப்பதினால் இந்திய இளைஞர்கள் கையில் துப்பாக்கி ஏந்தி இம்மாதிரி பைத்தியக்காரத்தனத்தைத் தொடர்ந்து செய்வதைத் தவிர வேறு வழியில்லை என்று அறிக்கை விட்டு உத்தம் சிங்கை வெகுவாகப் பாராட்டினார்.

hindhi1வங்க சிங்கம் போசு, பின் காந்தி , நேருவையும் அவர்களின் அறிவிப்பைக் கண்டு கடும் கண்டனமும் தெரிவித்தார். ராம்கார் காங்கிரசு மாநாட்டில் பேசிய காந்தி சட்டமறுப்பு இயக்கத்தை உடனடியாக ஆரம்பிப்பதற்கான சூழ்நிலைகள் சாதகமாக இருப்பதாக எனக்குத் திருப்தி ஏற்படவில்லை. காங்கிரசில் அதிகரித்திருக்கும் போலிகளைக் கண்டுதான் என் கவலை அதிகரிக்கிறது. நீங்கள் அனைவரும் ஒற்றுமையுடன் படைவீரர்கள் போல் இருக்க வேண்டும். எனில் போர் படையில் தளபதியின் வார்த்தை மீற முடியாத சட்டமாகும். அப்படி என்னை ஒரு தளபதியாக ஏற்றுக்கொண்டு எனது கட்டளைகளை ஏற்று செயல்பட வேண்டும். எனக்கு எப்பொழுது முழு நம்பிக்கை பிறக்கின்றதோ அப்போது நான் சட்ட மறுப்பு இயக்கத்தை தொடங்குவேன் அதுவரை நான் மக்களுக்கு அகிம்சையை போதிக்கப் போகிறேன் எனது அகிம்சை கொள்கையில் ஈடுபாடு உள்ளவர்கள் என்னுடன் இருக்கலாம். அதில் நம்பிக்கை இல்லாதவர்கள் உடனடியாக போரை தொடங்க நினைப்பவர்கள் உடனே காங்கிரசில் இருந்து வெளியேறலாம். அவர்கள் நினைத்தபடி போராட்டத்தை நடத்தலாம். அவர்கள் அகிம்சைமுறையில் போராட்டம் நடத்துவார்கள் எனில் நானும் அவர்கள் உடன் இணைய தயாராக இருக்கிறேன்.

இந்த அறிவிப்பு போசின் பார்வர்ட் பிளாக் , அகில இந்திய கிசான் சபா முதலிய இடதுசாரி இயக்கங்களுக்கும் காங்கிரசுக்கும் பிளவு முற்றி விட்டதையே உணர்த்தியது. போசு ராமகார் நகரில் காங்கிரசு மற்றும் ஆங்கிலேயர்கள் ஏகாதிபத்தியத்துக்கு எதிர்ப்பு என்று ஒரு மாநாட்டை நடத்தி அதில் ஏகாதிபத்தியத்தை எதிர்ப்பதற்கும் தேசியப் போராட்டத்திற்கு காங்கிரசை நம்பிப் பயனில்லை காந்தியின் பேச்சு அதைத்தான் காட்டுகிறது என்று அறிவித்தார். போராட்டத்திற்கான ஏற்பாடுகளை பார்வர்ட் பிளாக் நாடுமுழுக்க செய்திருந்தது. ஆங்கிலேய அரசு மிக சுறுசுறுப்புடன் செயல்பட்டு பார்வர்ட் பிளாக் தலைவர்களை கைது செய்தது.

subash4தமிழ்நாட்டில் முத்துராமலிங்கத் தேவர் கைது செய்து சிறையில் அடைக்கப்பட்டார். போசு போலவே தனது ஐ.சி.எஸ் பதவியை உதறிவிட்டு பார்வர்ட் பிளாக் கட்சியில் சேர்ந்து விடுதலைக்கு பாடுபட்டு வந்த எச்.வி. காமத் அகில இந்திய பார்வர்ட் பிளாக் செயலாளராக இருந்தார் , இவரும் கைது செய்யப்பட்டார். பம்பாயில் சேனாதிபதி பாபட் , ஆந்திராவில் அன்னபூர்ணய்யா , போன்றவர்களும் கைது செய்யப்பட்டார்கள். பிரிட்டிஷ் அரசாங்கம் நாடு முழுவதும் ஏராளமான பார்வர்ட் பிளாக் தொண்டர்களையும் கைது செய்து சிறையில் அடைத்து வைத்து மக்கள் போராட்டத்தினை தொடங்கி வைத்தது. இதனைக் கண்ட காங்கிரசு தலைவர்கள் சிலர் ஒற்றுமையை குலைப்பவர்கள் என்று அறிக்கை வெளியிட்டனர். இதற்கு போசு கடும் கண்டனம் தெரிவித்தார். இதுவரை காங்கிரசு போராட்டத்தை தொடங்கவில்லை , அப்படியே போராட்டத்தை தொடங்க விரும்புவர்கள் காங்கிரசில் இருந்து வெளியேறி போராட்டத்தைத் தொடங்கலாம் என்று ராம்கார் காங்கிரசு மாநாட்டில் வெளிப்படையாகவே அறிவித்தார்கள். இப்பொழுது பார்வர்ட் பிளாக் மற்றும் கிசான் சபா ஊழியர்கள் போராட்டத்தை ஆரம்பித்து சிறையில் உள்ளார்கள். இவர்கள் ஒற்றுமையை குலைப்பவர்கள் என்று கூறுவதா? இவர்கள் தாங்களும் போராட்டத்தினை ஆரம்பிக்க மாட்டார்கள் , போராட்டத்தினை ஆரம்பித்தவர்களையும் குறை கூறுகிறார்கள். இது எப்படி உள்ளது என்றால் , நாயினிடம் கிடைத்த தேங்காய் போன்று உள்ளது என்றார் போசு. உழைக்கும் மக்களின் சிறப்பை போற்றும் விதம் மே மாதம் முதல் தேதியை இந்தியா முழுவதும் மே தினமாகக் கொண்டாட வேண்டும் என்று அறிவித்தார். போராட்டத்தில் மக்களுக்கு ஒரு தலையங்கத்தை எழுதினார் போசு. எங்களுக்கு விடுதலை கொடு அல்லது சாவைக் கொடு என்பதே போராட்டக்காரர்களின் கோஷமாக இருக்க வேண்டும் என்றும் , நாட்டு மக்களுக்கு போசு செய்தி விடுத்தார்.

subash5போசின் அறிக்கை மற்றும் போராட்டத்தினை பார்த்த காங்கிரசு உடனே காங்கிரசு காரிய கமிட்டி நாடெங்கும் சத்தியாக்கிரக கமிட்டிகளை அமைத்து சத்தியாக்கிரக உறுதி மொழியை ஒவ்வொரு காங்கிரசுக்காரரும் எடுத்துக் கொள்ள வேண்டும் என்று அறிவித்தது. இதனை பெரும் மனதோடு போசு வரவேற்றார். விரைவில் பொது சத்தியாக்கிரகத்தைத் தொடங்க வேண்டும் என்றும் ஐரோப்பா கண்டமே யுத்த முனையில் உள்ளது. இந்த நேரத்தில் இந்தியாவின் 35 கோடி மக்களும் ஒற்றுமையுடன் போராடினால் நமது சுதந்திரம் விரைவில் கிடைத்துவிடும் , யாரால் தடுக்க முடியும். இதோ கைக்கெட்டிய தூரத்தில் இந்திய சுதந்திரம் காட்சியளிக்கிறது , நாம் செய்ய வேண்டியது எல்லாம் ஒன்றுதான் அனைவரும் முழுபலத்தோடு ஒற்றுமையாக அதனைக் கைப்பற்றிக் கொள்ளுவது மட்டும்தான் என்றார். மே 25ம் தேதி டாக்காவில் வங்க மாநில காங்கிரசு மாநாடு நடைபெற்றது. காங்கிரசுக்காரர்கள் காங்கிரசில் இருந்து போசை விலக்கி வைத்திருந்தாலும் வங்காள மக்கள் வெளிப்படையாகவே வங்காள காங்கிரசு தலைவர் போசுதான் என்று அறிவித்தார்கள். அதனை மெய்விக்கும் விதம் டாக்கா மாநாடு போசின் சிறப்பான தலைமையில் நடைப்பெற்றது. இதில் கல்கத்தா நகரின் மத்தியில் ஹால்வெல் என்ற பிரிட்டிஷ்படைவீரனின் சிலையை அகற்ற வேண்டும் என்று தீர்மானம் நிறைவேற்றப்பட்டது.

1940 ஜுன் 18-ம் தேதி நாக்பூரில் அகில இந்திய பார்வர்ட் பிளாக்கின் இரண்டாவது தேசிய மாநாடு போசு தலைமையில் நடைபெற்றது. அதில் போசு ஐரோப்பாவில் போர் கடுமையாக நடைபெற்றுவருகிறது. ஹிட்லர் வெற்றி பெற்று வந்துள்ளார் , எந்த நேரத்திலும் இங்கிலாந்தின் மீது தமது போரைத் தொடங்கலாம். ஜெர்மனி இத்தாலி , சோவியத் ரஷ்யாவும் பிரிட்டனை தனது முதல் எதிரியாக நினைக்கிறது. இந்த நேரத்தில் பிரிட்டிசு சாம்ராஜ்யத்தை குலைக்க ஒரு திட்டம் திரட்டி செயல்பட்டு வருவதாகத் தோன்றுகிறது. இத்திட்டத்தை செயல்படுத்த இந்த மூன்று நாடுகளும் ஜப்பானின் உதவியை நாடும் என்று எதிர்பார்க்க்கப்படுகிறது. இந்த நேரத்தில் நாம் ஒரு தேசிய அரசாங்கத்தை அமைத்து இந்தியர்களிடம் ஆட்சிப் பொறுப்பைக் கொடுத்துவிட வேண்டும் என்று அனைவரும் ஒற்றுமையுடன் செயல்பட வேண்டும். நாக்பூரை விட்டு வெளியே செல்லும் முன் நம் மனதில் சுதந்திரம் பெறுவதற்கான திட்டத்தோடுதான் அனைவரும் நாக்பூரில் இருந்து செல்ல வேண்டும்.

bosu19-2“எல்லா அதிகாரமும் இந்திய மக்களுக்கே இன்று முதல் இப்போதே” என்ற கோஷத்தை முழங்குவோமாக என்று வீர முழக்கமிட்டார் போசு. ஜீன் மாதம் 29ம் தேதி பார்வர்ட் பிளாக் இதழில் போசு ஒரு அறிக்கையை வெளியிட்டார். இந்த இதழை வெளிக் கொண்டுவர தவிர்க்க முடியாத தாமதம் ஏற்பட்டு விட்டது , உண்மையில் இந்த இதழை நிறுத்தும் சூழ்நிலை ஏற்பட்டுவிட்டது. நமது அலுவலகம் அரசாங்கத்தினால் சோதனை செய்யப்பட்டு நமது டிபாசிட் தொகையும் பறிமுதல் செய்யப்பட்டது. பின் புதியதாக ரூ.2000 டிபாசிட் கட்டும்படி நேர்ந்தது. வங்காள அரசாங்கம் நம்மீது செலுத்திய கவனத்திற்கு மிகுந்த நன்றி. ஹால்வெல் சிலையை அகற்ற வேண்டுமென்று வங்காள மாநில காங்கிரசு கமிட்டியின் டாக்கா மாநாடு தீர்மானத்திலிருந்து ஜுலை 3ம் தேதி வங்காளத்தின் கடைசி சுதந்திர மன்னரான சிராஜ் உத்தௌலா தினமாக வங்காளம் முழுவதும் கொண்டாடப்பட இருக்கிறது. கடந்த 150 ஆண்டுகளாக கல்கத்தாவின் இதயப் பகுதியில் உள்ள ஹால்வெல் சிலை , மன்னர் சிராஜ் உத்தௌலாவின் மதிப்பை களங்கம் செய்வதாகவும் நமது அடிமைத் தனத்தின் சின்னமாகவும் உள்ளது. ஜீலை 3-ம் தேதி அதனை அகற்றும் போராட்டம் தொடங்க இருக்கிறது. நானே முதல் தொண்டனாக நின்று போராட்டத்திற்கு தலைமை ஏற்றுச் செல்ல இருக்கிறேன். பின் நாக்பூர் பார்வர்டு பிளாக் மாநாடு பற்றியும் குறிப்பிட்டிருந்தார். இந்த அறிக்கைதான் போசு பார்வர்ட் பிளாக் பத்திரிகையில் கடைசியாக வெளியிட்ட அறிக்கை.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 27”

அதிகம் படித்தது