மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 30

கி.ஆறுமுகம்

Oct 11, 2014

subash1நேதாஜியை மியான் அக்பர்ஷாஅழைத்துக்கொண்டு ஒரு ஓட்டலில் தங்கி ஓய்வு எடுத்த பின், பெஷாவரில் இருந்து ஆப்கானிஸ்தான் செல்ல வேண்டும், அதற்கு உதவ பகத்ராம் தல்வார் என்ற பார்வர்டு பிளாக் கட்சியில் பிரமுகராக இருந்தவர் வந்து ஜியாவுதீன்(போசு) அவரிடம் நீங்கள் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலுக்கு செல்ல வேண்டிய திட்டப் பாதையை சற்று மாற்றி அமைக்கலாம் என்று ஆலோசனை செய்தார். பின் பகத்ராம் தல்வார் ஆலோசனையின் மூலம் செல்லும் தூரம் குறைவு ஆனால் செல்லும் பாதை மிகவும் ஆபத்தான பாதை. மலைப்பாதை, குறுக்குப்பாதை அதில் செல்வதற்கு நம்பிக்கையான வழிகாட்டி ஆள் தேவை. பின் இந்த குறுக்குப் பாதையின் வழியாக செல்வது என்று தீர்மானித்து 1941 சனவரி 26ம் தேதி பயணம் தொடங்கப்பட்டது. பகத்ராம் தல்வார், அபத்கான் மற்றும் ஒரு வழிகாட்டியுடன் பயணம் தொடங்கியது. ஜியாவுதீன்(போசு), பகத்ராம் தல்வார் உறவினர் அவருக்கு பிறவியிலேயே காதும் கேட்காது, வாய் பேச முடியாத ஊமை. போசுக்கு ஆப்கான் மொழி தெரியாது என்பதற்காக இவரின் உடல்நிலை சரியில்லை மருத்துவத்திற்காக ஆப்கானிஸ்தான் செல்கிறோம் என்று வழிகாட்டிக்கு அறிவிக்கப்பட்டது.

பயணம் தொடங்கிய இந்த 1941 சனவரி 26ல்தான், கல்கத்தாவில் போசு காணாமல் போன செய்தி வெளியானது. இங்கு ஆப்கானிஸ்தான் பயணம் தொடங்கியது, கல்கத்தாவில் பல அரசியல் தலைவர்கள் பல்வேறு கருத்துக்களை தெரிவித்தனர். பல பத்திரிக்கைகள் பல செய்திகள் வெளியிட்டன. போசு காணாமல் போனதும் பிரிட்டிசு காவல் நிலையங்கள் அனைத்திற்கும் எச்சரிக்கை விடுக்கப்பட்டன. போசு தரை, கடல், ஆகாயம் போன்ற எந்த வழியிலும் தப்பித்து விடக்கூடாது, எல்லா எல்லைப்பகுதியிலும் காவல் அதிகரிக்கப்பட்டது. சோதனைகளும், தேடலும் அதிகமாயின. பத்திரிக்கையில் போசு சாமியாராக இமயமலை சென்றிருக்கலாம் என்றது ஒரு பத்திரிக்கை மற்றொன்று தென்னகம் தப்பி சென்று பாண்டிச்சேரியில் அரவிந்தர் மாதிரி ஆன்மீகத்தில் ஈடுபட்டிருக்கலாம் என்றது. பர்மாவுக்கோ, ஜப்பான் போன்ற நாடுகளுக்கு சென்றிருக்கலாம் என்றது வேறொரு பத்திரிக்கை. அப்போது ராஜாஜியிடம் போசு எங்கு சென்றிருப்பார் என்று கேட்டதிற்கு, வேறு எங்கு சென்றிருப்பார் தற்கொலைதான் செய்திருப்பார் என்று கூறினாராம். ஆனால் இன்னும் சிலர் இந்த சிங்கம் பதுங்கியது மிகப்பெரிய பாய்ச்சலுக்காக என்று நம்பினார்கள். இது போன்று கல்கத்தாவில் போசு காணாமல் போன செய்தி கலவரமாக இருக்கும் பொழுது பெஷாவரில் இருந்து ஆப்கானிஸ்தான் பயணம் தொடங்கினார்கள் ஜியாவுதீன்(போசு), பகத்ராம் தல்வார், அபத்கான் மற்றும் வழிகாட்டி.

பயணம் தொடங்கி ஜாம்ரூட் என்ற சோதனைச் சாவடியில் இவர்களது கார் சோதனை செய்யப்பட்டது. பின் காஜீரி என்ற இந்திய ஆப்கானிஸ்தான் எல்லைப் புற பழங்குடி கிராமம் அடைந்து, ஒரு ஒற்றைப் பாதையில் நடைபயணம் தொடங்கும் பொழுது அபத்கான் திருப்பி அனுப்பப்பட்டார். பெஷாவருக்கு பின் மூவரும் ஒற்றைப் பாதையில் சென்று மலை ஏற தொடங்கினார்கள். மிகவும் பெரிய மலை அதனை கடந்து செல்ல வேண்டும். போசுக்கு இதுதான் முதல் முறை மலையில் நடப்பது, பல மணி நேர நடைபயணத்திற்குப் பின் போசு களைப்பில் ஓய்வுக்கு சிறிது அமர்ந்தார். அந்த நேரத்தில் பகத்ராம் தல்வார் ஓர் நற்செய்தியை போசுக்கு தெரிவித்தார். அது நாம் பிரிட்டிசு எல்லையை கடந்துவிட்டோம். ஆப்கானிஸ்தான் எல்லை ஆரம்பமாயிற்று என்று கூறியதும் போசு துள்ளி எழுந்து மிக உற்சாகத்துடன் மீண்டும் வேகமாக பயணத்தைத் தொடங்கினார்.

subash3அவர்கள் ஓர் ஆப்கானிஸ்தான் கிராமத்தை அடைந்ததும் அந்த வழிகாட்டியையும் திருப்பி அனுப்பிவிட்டார்கள். பின் இருவரின் பயணம் தொடங்கியது. இரவு அந்த கிராமத்தில் ஓய்வுக்குப் பின் போசு, பகத்ராம் தல்வார் இருவரும் ஒரு மிகப் பெரிய பனிமலை கண்வாயை கடக்க வேண்டியிருந்தது. அதைக்கடந்த பின் தொடர்ந்து நடந்து அவர்கள் கர்டி என்ற கிராமத்தை அடைந்தனர். பேருந்தில் பயணம் செய்தால் சில மணி நேரத்தில் இந்த கிராமத்தை அடைந்திருக்கலாம், ஆனால் இரண்டு நாட்களுக்கு நடைபயணத்திற்குப் பின் இவர்கள் அடைந்தார்கள். அங்கிருந்து காபூல் பெஷாவர் தேசிய நெடுஞ்சாலைக்குச் சென்று நடைபயணத்தைத் தொடங்கினார்கள். வரும் வழியில் வண்டியில் ஏதேனும் உதவி கிடைக்குமா என்று எதிர்பார்த்துக் கொண்டு, பின் ஒரு வண்டியில் ஏறிக்கொண்டு ஜலாலாபாத் என்ற இடத்தை அடைந்தார்கள். கடும் குளிர்காலத்தில் சனவரியில் பயணம் செய்ததினால் அன்று இரவுப் பொழுதில் அந்த இடத்தில் தங்கி ஓய்வு எடுத்துக்கொண்டு மீண்டும் பயணத்தைத் தொடங்கும் முன், ஹாகி முகமது அமீன் என்பவரை சந்தித்தனர். அவர் இவர்களுக்குத் தேவையான உதவியை செய்து பின் செல்லும் வழியில் எங்கு எவ்வாறு சோதனைகள் செய்வார்கள் என்று தெரிவித்தார். எப்படி நடந்து கொள்ள வேண்டும் என்ற ஆலோசனையையும் தெரிவித்தார். பின் போசு, பகத்ராம் தல்வார் இருவரும் ஒரு வண்டியில் பயணத்தைத் தொடங்கினார்கள். சிறிது தூர பயணத்திற்குப் பிறகு அந்த வண்டியை விட்டு இறங்கிக்கொண்டு வேறு வண்டியைப் பிடித்து பயணத்தை தொடங்கினார்கள்.

வழியில் ஒரு சோதனைச் சாவடியில் தப்பி, பின் ஆப்கானிஸ்தான் தலைநகரான காபூலை அடைந்தனர். அங்கு அவர்கள் தங்குவதற்கு ஒரு இடத்தைத் தேடி அலைந்தார்கள். பின் ஒரு பராமரிப்பற்று கிடந்த சத்திரத்தைப் பார்த்தார்கள், அங்கு ஒட்டகங்கள் கட்டப்பட்டிருந்தது. மனிதர்கள் தங்குவதற்கு ஏற்புடையதாக அது இல்லை, இருந்தாலும் போசும் பகத்ராம் தல்வார் இருவரும் அங்கேயே தங்கி இருந்தார்கள். இவர்களின் மேல் சந்தேகம் உற்ற ஒரு ஆப்கானிஸ்தான் காவலாளி ஒருவன் அவர்களை விசாரித்தான். ஜியாவுதீன்(போசு) ஊமை என்று பகத்ராம் தல்வார் கூறியும் அவன் விடவில்லை அவர்களை சந்தேகத்துடன் பார்த்து அங்கு வந்து தொல்லை கொடுக்கத் தொடங்கினார். போசு காபூலில் இருந்து ரசியா செல்லும் திட்டத்துடன் தான் காபூலுக்கு வந்தார். அவர் பலமுறை ரசியா தூதரகத்தைத் தொடர்புகொள்ள முயற்சி செய்தும் அது முடியவில்லை இறுதியில் ரசியா தூதரக அமைச்சரை சந்தித்த போது பகத்ராம் தல்வார், அவர் போசு என்று எவ்வளவு எடுத்துச் சொல்லியும் அவர் அதை நம்பவில்லை, மேலும் அவர்தான் போசு என்பதற்கு என்ன ஆதாரம் உள்ளது என்று கூறிவிட்டார். பின் போசின் ரசியா தப்பிச் செல்லும் திட்டம் பயன்படவில்லை எனினும் இங்கிருந்து மிக விரைவில் தப்பிச் செல்ல வேண்டும் என்று சிந்தித்தார்.

இதனால் போசு பல நாட்கள் அந்த சத்திரத்திலேயே தங்க வேண்டியிருந்தது. எனவே அந்த காவலாளி அங்கு வந்து அவர்களிடம் அடிக்கடி பணம் பெற்றுக்கொண்டிருந்தான். ஒரு நாள் போசு தன் கையில் அணிந்திருந்த தங்க கைகடிகாரத்தினை அவனுக்குக் கொடுத்துவிட்டு, இதற்கு மேல் இங்கு இருப்பது ஆபத்து என்று எண்ணி இருக்கும்பொழுது, பகத்ராம் தல்வாரிக்கு அங்கு இந்திய வணிகர் உத்தம் சந்த் நினைவிற்கு வந்தது. அவரைத் தேடி கண்டுபிடித்து அவரிடம் தெரிவித்ததும் அவர் போசை தனது வீட்டுக்கு அழைத்துச் சென்று உபசரித்தார். அவரின் வீட்டில் இருந்துகொண்டு போசு ஜெர்மன் மற்றும் இத்தாலி நாட்டு தூதரகங்களோடும் தொடர்பு கொள்ள முயன்றார். போசு ரசியா தூதரக முயற்சி தோல்வி கண்டாலும், ஜெர்மன் தூதரக முயற்சி வெற்றி பெற்றது. ஜெர்மன் தூதரக அதிகாரியும் அமைச்சரும் ஹெர்ஃபில்கர் என்பவரை போசு சந்தித்து தனது திட்டத்தினைத் தெரிவித்தார். பின் போசு பல நாட்கள் காத்திருந்தும் ஜெர்மன் அதிகாரி எந்த அக்கறையும் காட்டவில்லை என்று தெரிந்தது.

subash4போசுக்கு ஏற்கனவே எப்படியாவது இங்கிருந்து ரசியா எல்லைக்கு தப்பிச் செல்ல வேண்டும் என்று நினைத்த பொழுது, ஜெர்மனி தூதரகத்தில் இருந்து போசு ஐரோப்பாவுக்குச் செல்வதற்கான ஏற்பாடுகளை அல்பர்ட்டோ குவாரோனியைச் சந்தித்து கலந்துரையாடி முடிவு செய்து கொள்ளவும் என்ற செய்தி வந்தது. பின் போசு அல்பர்ட்டோ குவாரோனியைச் சந்தித்து தான் இத்தாலி, ஜெர்மன் சென்றதும் அங்கு சிறைக்கைதிகளாக உள்ள இந்திய இராணுவ வீரர்களைக் கொண்டு ஓர் இராணுவத்தை உருவாக்கி பின் ஓர் வானொலி நிலையம் அமைத்து இந்திய விடுதலைக்குப் போராட உள்ளதாக தெரிவித்தார். இதனை முன்பே போசு சரியாக திட்டம் தீட்டி இருந்தார். இதனை அல்பர்ட்டோ குவாரோனி அறிந்ததும் ஜெர்மனி, இத்தாலி உங்களுக்கு உதவுமா என்று எனக்கு சரியாக தெரியவில்லை. இருந்தாலும் தனது குடும்ப உறவினர்கள், சொத்து அனைத்தும் விட்டுவிட்டு ஓர் அன்னிய நாட்டில் தலைமறைவாக இருந்து கொண்டு நாட்டின் விடுதலையைப் பற்றியே சிந்தித்துக் கொண்டிருக்கும் உமது செயலில் நான் என்னால் ஆன உதவியைக் கண்டிப்பாக செய்வேன் என்றார். மேலும் இதன் தொடர்பாக தகவல்களைப் பகிர்ந்து கொள்வதற்குத் தனது மனைவியை உத்தம் சந்தின் கடைக்கு அனுப்புவதாகக் கூறினார். பின் ஜெர்மனி இத்தாலி அரசு ரசியாவுடன் போசை ரசியா வழியாக ஐரோப்பாவிற்கு அனுப்புவது குறித்து ஆலோசனை நடத்தியது. இதற்கு இடையில் போசு தான் எதிர்காலத் திட்டத்தினை தீட்டத் தொடங்கினார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 30”

அதிகம் படித்தது