மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 31

கி.ஆறுமுகம்

Oct 18, 2014

bosu3போசு ஆப்கானிஸ்தானிலிருந்து தப்பிச் செல்வதைப் பற்றிய திட்டத்தினை ஜெர்மன், இத்தாலி அரசுகள் ரசியாவிடம் பேசியது. ரசிய அரசு போசை தம் நாட்டின் வழியாக தப்பிச் செல்ல அனுமதி அளித்தது. உடனே இத்தாலி அரசு ஒரு திட்டம் தயாரித்தது. அது, காபூலில் உள்ள இத்தாலிய தூதரக அலுவலக ஊழியரான அர்லண்டோ மெஜோட்டா பேரில் ஒரு பாஸ்போர்ட் தயாரிக்கப்பட்டது, அதில் போசின் புகைப்படம் ஒட்டப்பட்டது. இப்போது போசு ஜியாவுதீன் வேடத்திலிருந்து அர்லண்டோ மெஜோட்டா என்ற வேடத்திற்கு மாறினார். ஆப்கானிஸ்தான் அரசு விசா வழங்கியது. போசு சில கடிதங்களையும், பார்வர்டு பிளாக் கட்சி ஏன் தொடங்கப்பட்டது, அதன் செயல்பாடு என்ன என்பதை விளக்கும் வகையில் சில கட்டுரைகளையும் பின் தேதியிட்டு அவர் எழுதி பகத்ராம்க்கு கொடுத்து இதனை தனது சகோதரரிடம் ஒப்படைக்கும் படி செய்தார். போசு அர்லண்டோ மெஜோட்டா என்ற பெயரில் தனது பயணத்தைத் தொடங்கினார். இந்துகுஷ்மலையின் நடுவில் அவர் பயணம் தொடர்ந்தது. மூன்று நாட்கள் பயணத்திற்குப் பிறகு சோவியத் ரசியாவின் யூனியன் பிரதேசத்திற்குள் நுழைந்து சாமர்கண்ட் நகரை அடைந்தார். அங்கு சிறிது ஓய்வு எடுத்துக் கொண்டு அங்கிருந்து மாங்கோ நகரத்திற்குச் செல்லும் இரயிலில் போசின் பயணம் தொடங்கிய சமயம், ஆப்கானிஸ்தானில் பாஸ்போர்ட் விசா பெற்றுக் கொண்ட அர்லண்டோ மெஜோட்டா இன்னும் ஆப்கானிஸ்தானில் இருக்கிறார், அவர் வெளியேறவில்லை என்ற செய்தி சற்று தாமதமாகவே ஆப்கானிய அரசுக்கு தெரிந்தது.

போசு மாஸ்கோவிலிருந்து விமானத்தின் மூலம் ஜெர்மனியின் தலைநகரான பெர்லின் நகரை அடைந்தார். போசு வீட்டை விட்டு வெளியேறி, தான் நினைத்தபடி இந்தியாவின் சுதந்திரத்திற்குப் போராட இந்தியாவிலிருந்து வெளியேற அவர் கார், பேருந்து, விமானம், நடை போன்ற பல பயணங்களைக் கண்டு ஆங்கிலேயர்களின் ஒற்றர்கள், காவலதிகாரிகள், பல சோதனை சாவடிக் காவல்கள் என்று பலரின் கண்களில் மறைந்து 71 நாட்களுக்குப் பிறகு பெர்லின் நகரை அடைந்தார். இந்த தப்பித்தல், இந்தப் பயணம் உலக வரலாற்றில் இடம் பெற்றுவிட்ட எத்தனையோ பரபரப்பான மகத்தான தப்பித்தல்களில் (Great Escapes) மிகவும் முக்கியமான ஒன்றாகும். போசு ஜெர்மனியை அடைந்த போது அவருக்கு உதவி செய்தவர்கள் ஜெர்மனியில் செய்தி மற்றும் தகவல் தொடர்புத்துறை இயக்குனரான டாக்டர் ஆடம் பரோன் வான்டிராட் சு ஸோல்ஸ் மற்றும் அவருக்கு அடுத்த இடத்தில் இருந்த டாக்டர் அலெக்ஸாண்டர் எவர்த் என்பவரும் மற்றும் அதன் அதிகாரிகள் பலர் போசிற்கு உதவ முன்வந்தனர்.

bosu1போசு 1933ல் முதல் முறையாக ஜெர்மனி வந்த போது அவருடைய பயணம் தோல்வியை அடைந்தது. அப்போது இத்தாலி அரசு ‘சிக்னர் பெனிடோ முஸோலினி’ போசை பல முறை இத்தாலிக்கு அழைத்து பாராட்டியும், இந்திய விடுதலைக்கு தன்னால் ஆன அனைத்து உதவியும் செய்வதாக கூறியிருந்தார். இவ்வாறு கூறிய இத்தாலியை விட்டுவிட்டு போசு ஏன் ஜெர்மனி வந்தார் என்று அங்கு இருந்தவர்கள் சிலர் போசிடம் கேட்டனர். அதற்கு போசு அதிக பலத்துடன் உள்ள பிரிட்டிசு அரசை இராணுவ முறையில் போராடி இந்தியா விடுதலை பெற வேண்டுமெனில் பிரிட்டிசு அரசை விட அதிக பலம் கொண்ட நாடு தான் இந்தியாவிற்கு உதவ முடியும். அதன் அடிப்படையில், நான் தேர்ந்தெடுத்த நாடுகள் ரசியா மற்றும் ஜெர்மனி. நான் முதலில் ரசியாவிற்குத்தான் செல்ல திட்டம் தீட்டினேன் ஆனால் ரசியாவிடம் இருந்து எதிர்பார்த்த அனுமதி கிடைக்கவில்லை, எனவே ஜெர்மனி வந்தேன். இப்போது உள்ள போர் சூழ்நிலையில் ஐரோப்பாவில் மிகவும் பலம் கொண்ட நாடு ஜெர்மனி. ஜெர்மனியில் பிரிட்டிசு இராணுவத்தில் வேலை செய்த இந்தியர்கள் பலர் கைதிகளாக இங்கு உள்ளனர். அவர்களை பிரிட்டிசு இராணுவத்திற்கு எதிராக போரில் பயன்படுத்தும் எண்ணம் ஜெர்மனியிடம் தோன்றவில்லை. அவர்களைக் கொண்டு நான் இந்திய தேசிய இராணுவம் அமைக்கப் போகிறேன் மற்றும் முதல் உலகப் போரில் இருந்து இந்தியாவின் விடுதலையில் பற்று கொண்ட நாடு ஜெர்மனி. அதன் தலைவர்கள் பலர் இந்திய விடுதலையைப் பற்றி பேசி உள்ளனர் மற்றும் முதல் உலகப் போரின் போது தமிழகத்தில் இருந்து வந்த இந்திய விடுதலை உணர்வு கொண்ட செண்பக ராமன் மற்றும் சிலருக்கு அடைக்கலம் கொடுத்த நாடு ஜெர்மனி என்றார். போசின் முயற்சிக்கு இந்தியப் பணிக்குழு என்ற பெயரில் ஒரு குழுவை ஜெர்மனியின் இராணுவத் தலைமையகத்தின் உதவி மற்றும் செய்தி மற்றும் தகவல் தொடர்பு அதிகாரிகள் மூலம் அதிலிருந்து சிலர் இதன் உறுப்பினர்களாக செயல்படவும் தொடங்கியது. போசு தனது அலுவலகமாக ஜெர்மனியின் ஒரு ஓட்டல் விடுதியில் தம் தலைமையகத்தை அமைத்து செயல்படத் தொடங்கினார்.

bosu4ஜெர்மன் அரசாங்கத்திடம் ஒரு அறிக்கையைச் சமர்ப்பித்தார். அதில் இந்தியா-ஜெர்மனி ஒத்துழைப்பைப் பற்றியும், இந்திய பணிக்குழுவில் உள்ளவர்கள் செய்ய வேண்டிய பணிகளைப் பற்றியும் தெளிவாக கூறியிருந்தார். முதல்படியாக சுதந்திர இந்திய மையம் ஒன்றினை பெர்லின் நகரில் தொடங்கவேண்டும், அடுத்து பெர்லினில் இந்திய அமைச்சரகத் தூதரகம் ஒன்று தொடங்க வேண்டும், இந்திய அமைச்சரகத்திற்கும் ஜெர்மன் இராணுவத் தலைமையகத்திற்கும் நெருங்கியத் தொடர்பும் ஒத்துழைப்பும் நிலவ வேண்டும், இதன் மூலம் இந்தியா-ஆப்கானிஸ்தான் எல்லையில் பிரிட்டிசு இராணுவத்திற்கு எதிராக கலகத்தை தொடங்க வேண்டும், இந்திய விடுதலை உணர்வு மற்றும் பிரிட்டிசு அடக்குமுறையும் கொடுமையான ஆதிக்கத்தையும் இந்திய மக்கள் தெளிவாக புரிந்து கொள்வதற்கு ஜெர்மனியில் இருந்து ஒரு வானொலி நிலையத்தை அமைத்து அதில் பிரச்சாரம் செய்வதற்கு ஒரு சுதந்திர வானொலி நிலையம் ஜெர்மனிய அரசு ஏற்படுத்தித் தர உதவ வேண்டும் என்று அறிக்கையில் குறிப்பிட்டிருந்தார் போசு. மேலும் அறிக்கையில் இந்தியா எதிர் நோக்கியுள்ள பிரச்சனைகள் என்ன என்ன, பிரிட்டிசு ஆதிக்கத்தை அழிப்பதற்கு எவ்வாறு ஜெர்மன் உதவ வேண்டும் என்றும், அச்சு நாடுகளின் போருக்குப் பின் இந்தியாவிற்கு சுதந்திரம் வழங்கப்படும் என்றும் ஜெர்மனி வாக்குறுதி அளிக்க வேண்டும். அவ்வாறு அங்கீகரிக்கும் நாடுகளில் தற்காலிக இந்திய அரசின் தூதரகங்களையும் தொடங்க வேண்டும் இவ்வாறு செய்தால் இந்திய மக்களிடம் அச்சுநாடுகள் மிகுந்த நம்பிக்கையை பெறும் என்றும் அறிக்கையில் தெளிவாக குறிப்பிட்டிருந்தார் போசு. இந்த அறிக்கை ஆறு அம்சங்கள் கொண்டதாக இருந்தது. அது இராணுவம், பொருளாதாரம் போன்றவையாகும். இவற்றை விளக்குவதற்கு ஒவ்வொரு அறிக்கைக்கும் ஒவ்வொரு தனித்தனி விளக்க உரையைத் தெளிவாக எழுதியிருந்தார். அதில் இராணுவ பலம் என்ற அறிக்கையில், பிரிட்டிசு இராணுவம் இந்தியாவில் உள்ள பல இந்தியர்களைக் கொண்டது, அதில் பிரிட்டிசார்கள் மிகவும் குறைவு. இந்த இந்திய வீரர்கள் அனைவரும் பிரிட்டிசு இராணுவத்தை எதிர்த்து போரிடவும் பிரிட்டிசை வெற்றி கொள்ளவும் 50,000 பேர்கள் கொண்ட சிறு இராணுவம் மட்டும் போதுமானது. இதனை இங்கு உள்ள சிறையில் உள்ள பிரிட்டிசு இந்திய இராணுவ வீரர்களைக் கொண்டு உருவாக்கலாம். அல்லது பற்றாக்குறைக்கு தென்கிழக்காசிய நாடுகள் ஜப்பான், மலேசியா, சிங்கப்பூர் ஆகிய நாடுகளில் உள்ள இந்தியர்களைக் கொண்டு அமைக்கலாம் என்றும் மேற்கூறிய வேலைகளுக்குத் தேவையான பொருளாதார உதவியையும் நிதியையும் அச்சுநாடுகள் அளிக்க வேண்டும். இந்த நிதி ஐரோப்பாவில் அமைக்கப்படும் சுதந்திர இந்திய அரசுக்குக் கடனாக அளிக்கப்பட வேண்டும். போரின் முடிவில் இந்தியாவில் சுதந்திர அரசாங்கம் அமைக்கப்படும் போது, இந்தக் கடன் தொகை முழுவதும் திருப்பிக் கொடுக்கப்படும் என்றும் தெளிவாக குறிப்பிட்டிருந்தார் போசு. இதன் மூலம் தான் ஜெர்மனிக்கு அடைக்கலம் தேடிவந்த ஓர் அகதி அல்ல என்பதையும், விடுதலை பெற இருக்கும் இந்திய நாட்டின் வருங்கால ஆட்சித் தலைவர் என்ற முறையிலேயே ஜெர்மனியிடமும், இதர அச்சு நாடுகளிடமும் உதவி கோருவதையும் அதையும் கடனாகவே கோருவதையும் ஜெர்மன் அரசுக்கும் அதன் தலைவர் ஹிட்லருக்கும்  தெளிவுபடுத்தினார் போசு.

இந்த அறிக்கை அனைத்தையும் போசு காபூலில் இருந்த போதே தயாரித்திருந்தார் மேலும் தான் ஜெர்மனி சென்றதும் இதைத்தான் செய்ய உள்ளதாக ஏற்கனவே போசு காபூலில் சந்தித்த ஜெர்மனி தூதரக அதிகாரியிடம் பேசும் பொழுது தெளிவாக தெரிவித்தும் இருந்தார். போசின் இந்த அறிக்கையைக் கண்ட ஜெர்மனிய அரசு அதிகாரிகள், போசை “இவர் சாதாரணமான மனிதர் அல்ல, இரும்பு உள்ளம் கொண்ட வரலாற்றில் பெரும் இடம் பிடிக்கப் போகிறவர்”. இவரிடம் பணியாற்றுவது நமக்கு இந்தப் பிறவியில் கிடைத்த பெரும் பாக்கியம் என்று பேசினார்கள்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 31”

அதிகம் படித்தது