மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 33

கி.ஆறுமுகம்

Nov 1, 2014

subash41941 நவம்பரில் பெர்லின் நகரில் சுதந்திர இந்திய மையத்தின் முதல் கூட்டத்தினைக் கூட்டி பேசினார் போசு. அந்தக் கூட்டத்தில்தான் மக்கள் போசுக்கு ‘நேதாஜி’ என்ற பெயர் வைத்து அழைத்தார்கள். ‘நேதாஜி’ என்றால் தலைவர் என்பது பொருள். பிற்காலத்தில் இந்தப் பெயர் போசின் பெயருடன் இணைந்து நின்றுவிட்டது மக்களின் மனதில். கூட்டத்தில் போசு தனது சுதந்திர இந்திய மையத்தின் செயல்திட்டங்களைத் தெளிவாக மக்களுக்கு எடுத்துரைத்தார். இதன் மூலம் போசின் மதிப்பு கூடியது. 1942ம் ஆண்டின் தொடக்க மாதத்தில் பெர்லின் நகரில் அமைக்கப்பட்டிருந்த ‘ஆஸாத் ஹிந்த்’ வானொலியில் போசு முதல் முறையாகப் பேசினார். அதுவரை இந்தியாவில் இருந்து போசு வெளியேறியதிலிருந்து போசு எங்கு உள்ளார், உயிருடன் இருக்கிறாரா, இல்லையா என்று இந்தியாவில் நிலவிய பதட்டத்திற்கு போசின் வானொலிப் பேச்சு ஒரு முற்று புள்ளி வைத்தது. இது வெள்ளையர்களுக்கு மிகவும் அச்சத்தைக் கொடுத்தது. அவர்கள் போசு இறந்திருக்கக் கூடும் என்று மக்கள் மத்தியில் பொய்யான தகவல்களை வெளியிட்டுக் கொண்டிருந்தனர். எனவே போசின் குரலை ஏறத்தாள ஓர் ஆண்டிற்குப் பின் இந்திய மக்கள் கேட்டனர். அவரின் கருத்துக்களை வானொலியில் கேட்டதும், பின் அவரின் செயல்திட்டங்களை அறிந்ததும் மக்கள் இதுதான் உண்மையான சுதந்திர இந்திய அரசு என்று வியக்கும் வகையில் போசு செயல்பட்டுக் கொண்டிருந்தார். முதலில் வானொலி 45 நிமிடங்கள் ஒலிபரப்பானது, பின் நான்கு மணி நேம் ஒலிபரப்பானது. வானொலி நிகழ்ச்சிகள் ஆங்கிலம், இந்தி, தமிழ், வங்காளி மற்றும் சில இந்திய மொழிகளில் ஒலிபரப்பானது.

subashu11942ல் இந்திய தேசிய காங்கிரசு “வெள்ளையனே வெளியேறு” இயக்கத்தைத் தொடங்கிய சமயத்தில் போசு, ‘தேசிய காங்கிரசு வானொலி’ என்று தனியாக ஒரு வானொலி நிலையம் அமைத்து காங்கிரசு போராட்டத்தின் செயல்பாடுகளை மக்கள் அறியச் செய்தார். ஜின்னா ஏற்படுத்திய பிரிவினைக் கொள்கையினால் இந்தியாவில் ஏற்பட்ட இந்து-முஸ்லீம் பிரிவினையைக் குறைக்கும் விதம், இந்து முஸ்லீம் ஒற்றுமையை ஏற்படுத்தும் விதம் ‘ஆஸாத் முஸ்லீம் வானொலி’ நிலையம் தனியாக அமைத்து சிறப்பு நிகழ்ச்சிகள் ஒலிபரப்பானது. ஆஸாத் ஹிந்த் வானொலி நிலையம் தனது பணிகளை சிறப்பாகச் செயல்படக் காரணம் போசின் தலைமை. அது போர்களம் என்பதினால் வானொலி நிலையம் பல முறை இடம் மாற்றம் செய்ய வேண்டியிருந்தது. தொடர்ந்து ஒரே இடத்தில் செயல்பட முடியவில்லை. இதில் பணி செய்தவர்கள் இடம் மாற்றத்தினால் பல இன்னல்களுக்கு உள்ளானார்கள். எனினும் அவர்கள் தனது தாயகத்தின் விடுதலையை எண்ணிக்கொண்டு செயல்பட்டனர். அவர்கள் அனைவரும் ஒரே இடத்தில் தங்கி ஒன்றாக உணவு உட்கொண்டு ஒரே குடும்பத்தின் உறுப்பினர் போன்று வாழ்ந்து கொண்டிருந்தனர்.

subashu21942ம் ஆண்டின் பிற்பகுதியில் போசை கௌரவிப்பதற்காக இந்திய இராணுவம் ஓர் அணிவகுப்பு மரியாதையை நடத்தியது. அதை ஏற்றுக்கொண்டு போசு அணிவகுப்பை சிறப்பித்து அவர்களை உறுதிமொழியை எடுத்துக்கொள்ளச் செய்தார். போசு ஜெர்மன் சென்றவுடன் அவரின் முயற்சியின் மூலம் தீவிரப்படுத்தப்பட்ட இந்திய-ஜெர்மன் கமாண்டோ படைத் தாக்குதலுக்குத் தயாராக இருந்தது. அந்தத் தாக்குதலில் இந்தியாவின் வடமேற்கு பகுதியைத் தாக்கி இந்தியாவில் நுழைவது என்பது போசின் திட்டம். இந்தத் திட்டத்தினை சீர்குலைக்கும் விதத்தில் ஜெர்மன் அரசு திடீரென்று ரசியா மீது போர் அறிவித்தது. இதனால் போசின் திட்டம் தவிடுபொடியானது. ஜெர்மனின் இந்தப் போர் ஒப்பந்த மீறல் எதனால் ஏற்பட்டது என்று இதுவரை வரலாற்று ஆசிரியர் எவரும் தெளிவாக கூறமுடியவில்லை. போசு ஜெர்மனி சென்றதிலிருந்து இத்தாலி, ஜெர்மன், ஜப்பான் நாடுகள் இந்தியாவின் சுதந்திரத்தினை தெளிவாக வெளிப்படையாக அறிவிக்க வேண்டும் என்று வலியுறுத்தி வந்தார். ஆனால் ஜப்பான் அரசு இத்தாலியும், ஜெர்மனியும் இந்திய சுதந்திரத்தை ஆதரித்தால் ஜப்பான் ஆதரிக்க தயாராக உள்ளது என்று அறிவித்தது. இத்தாலி ஜெர்மனுடன் கொண்ட போர் ஒப்பந்தத்தினால் வெளிப்படையாக அறிவிக்கத் தயங்கியது. ஜெர்மன் அறிவிப்பை தாமதித்தது. போசு சற்றும் மனம் தளராமல் பலமுறை இத்தாலி சென்று முசோலினை சந்தித்து இந்தியவிடுதலைப் பற்றி பேசி அதன் முக்கியத்துவத்தை எடுத்துரைத்தார்.

எனவே 1942ல் ஏப்ரலில் ஹிட்லரை சந்தித்த போது இந்திய விடுதலையைப் பற்றி ஆதரித்துப் பிரகடனம் எதையும் தாம் வெளியிடப் போவதில்லை என்று உறுதி அளித்து பின், 1942 மே மாதத்தில் இந்திய விடுதலைக்கு இத்தாலி ஆதரவு அளிப்பதற்குத் தயாராக உள்ளது என்று முசோலினி அறிவித்தார். இது போசிற்கு கிடைத்த வெற்றி. இத்தாலியின் அறிவிப்பைத் தெரிந்ததும் போசு ஜெர்மனியில் ஹிட்லரை சந்திக்க முயற்சி செய்து அதில் வெற்றியும் பெற்று ஹிட்லரை சந்தித்துப் பேசும் போது,

subashu4போசு: ஜெர்மன் இதுவரை தனக்கு அளித்து வந்த ஆதரவுக்கு நன்றி. (ஹிட்லருக்குப் பிடிக்காத செய்தி என்று அறிந்தும் துணிச்சலாக) இந்தியர்களைப் பற்றி இழிவாக ‘மெயின் கேம்ப்’ என்ற நூலில் எழுதிய விவரத்தை உடனே நீக்க வேண்டும்.

ஹிட்லர்: அதைப் பற்றி நான் உங்களுக்கு கருத்து தெரிவிக்க விரும்பவில்லை.

இது போசுக்கு மிகுந்த எரிச்சலை உண்டாக்கியது.

போசு: போர் முடிந்ததும் இந்திய சுதந்திரம் பற்றி அறிவிக்க நான் பல முறை ஜெர்மனியை வலியுறுத்தியிருந்தேன். அதன் கருத்தைத் தெளிவாக எனக்குத் தெரிவிக்க வேண்டும் என்றார்.

ஹிட்லர்: இந்தியாவிற்கு தற்போது சாதகமான சூழ்நிலை இப்போது இல்லை, எனவே நான் எப்படி இந்திய சுதந்திரத்தைப் பற்றிய அறிவிப்பை வெளியிடுவது.

என்று கூறியவுடன் போசு, கோபத்தின் உச்சிக்கே சென்றுவிட்டார்.

போசு: நான் என் வாழ்நாள் முழுவதும் அரசியலில் இருந்து வருகிறேன். எவருடைய ஆலோசனையும் அறிவுரையும் எனக்குத் தேவைப்படவில்லை என்பதை உங்கள் மாண்புமிகு அதிபருக்குச் சொல்லுங்கள்.

இந்த சந்திப்பின் மொழிப் பெயர்ப்பாளராக இருந்தவர் ஆடம் பரோன்வான் டிராட். பிற்காலத்தில் போசின் துணிச்சலையும் தேசபக்தியையும் பலவாறு வியந்து பாராட்டியுள்ளார் இவர். இந்த சந்திப்புக்குப் பிறகு போசு ஒரு தெளிவான முடிவுக்கு வந்தார். தான் ஒரு ஆண்டுகாலத்தை, தமது வாழ்க்கையின் புனிதமான கால நேரத்தை ஜெர்மனியில் தங்கியிருந்து வீணாகிவிட்டது என்று எண்ணினார். ஹிட்லரின் சந்திப்பின் இறுதியில் ஹிட்லரிடம்,

போசு: தான் தென்கிழக்கு ஆசியாவுக்குச் செல்ல விரும்புவதாகவும் அதற்குத் தேவையான உதவியை ஜெர்மன் செய்ய வேண்டும்.

ஹிட்லர்: இதுதான் சரியான முடிவாக எனக்கும் தோன்றுகின்றது உடனே அதற்குத் தேவையான உதவிகளை கண்டிப்பாக செய்கிறேன்.

போசு – ஹிட்லர் சந்திப்பில், ஹிட்லர் ஏன் அப்படி நடந்து கொண்டார் என்று கண்டுபிடிப்பது, விளக்கமளிப்பது என்பது அவ்வளவு சுலபமல்ல. ஓர் உண்மையான காரணம் என்னவென்றால் ஹிட்லருக்கு இந்தியாவைப் பற்றி எதுவும் தெரியாது என்றுதான் எண்ண வேண்டியுள்ளது. மற்றும் அவரின் இனவெறிக் கொள்கையும் ஒரு காரணமாக இருக்கலாம். வரலாற்றில் கடந்த கால நிகழ்ச்சிகளைத் திரும்பிப் பார்த்தால் ஒரு முடிவுக்குத்தான் வரமுடியும், போசு 1941ல் ஜெர்மனிக்கு சென்று அங்கு ஓராண்டு காலத்தை வீணாக்காமல் 1941ம் ஆண்டின் தொடக்கத்திலேயே நேரடியாக ஜப்பான் சென்றிருந்தால் தென்கிழக்கு ஆசியப் போரின் போக்கே மாறியிருக்கும், இந்தியாவின் விடுதலையும் சற்று முந்தியிருக்கும். காந்தியின் அகிம்சையினால் விடுதலை பெறவில்லை, இராணுவத்தின் போராட்டத்தினால் வீரசுதந்திரம் இந்தியா பெற்றது என்று ஆகியிருக்கும் உண்மையை காங்கிரசினால் மறைக்க முடியாமல் போயிருக்கும்.

subashu5போசு ஜெர்மன் சென்ற பின்னர் அவருக்கு நம்பிக்கையூட்டும் பல உதவிகளையும், ஏற்பாடுகளையும் செய்து கொடுத்த ஹிட்லர் அரசாங்கம், 1943ம் ஆண்டில் இந்திய விடுதலைக்காக எதுவும் செய்ய முடியாது என்று கைவிரித்தது ஏன்?, போசு மதிப்புமிக்க காலத்தில் மிகவும் பொன்னான ஓராண்டு காலத்தை வீணாக்கியது ஏன்?, அனாக்கிரமிப்பு ஒப்பந்தத்தை மீறி ஹிட்லர் திடீரென்று போர் தொடுத்து போரின் போக்கையே திசை மாற்றியது ஏன்?, இரண்டாம் உலகப்போரில் கலந்து கொள்ளும் எண்ணமே இல்லாமல் ஒதுங்கியிருந்த அமெரிக்க நாட்டின் ‘பேரில் ஹார்பர்’ துறைமுகத்தின் மீது ஜப்பான் திடீரென்று தாக்குதல் தொடுத்து அமெரிக்காவையும் போரில் குதிக்க வைத்தது ஏன்? என்பது போன்ற கேள்விகள் வரலாற்றாசிரியர்களால் இன்னும் சரியாக விளக்கப்படாத கேள்விகளாகவே நீடிக்கின்றன. 1942ம் ஆண்டின் மத்தியில் ஐரோப்பிய நிலையைப் பற்றி அலசிப் பார்த்தபோது போசுக்குத்தான் இன்னும் ஜெர்மனியில் தங்கியிருப்பது வீண் தென்கிழக்கு ஆசியாவில் உள்ள பல லட்சக்கணக்கான இந்தியர்களை ஒன்று திரட்டி போராடுவதுதான் சரியாக இருக்கும் என்று திட்டமிட்டு தென்கிழக்கு ஆசியாவிற்குச் செல்ல ஏற்பாடுகளை செய்யத் தொடங்கினார் போசு.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 33”

அதிகம் படித்தது