மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 36

கி.ஆறுமுகம்

Nov 22, 2014

subaash3ஜப்பான் பாராளுமன்றக் கூட்டத்தில் பிரதமர் டோஜோ மிக நீண்ட உரை ஒன்றை ஆற்றினார். அதில் இந்தியாவின் விடுதலையைப் பற்றியும் அவர் பேசினார். அந்த அறிக்கை “ இந்தியா இன்னும் பிரிட்டனின் ஆதிக்கத்தில் இருப்பது நமக்குத் துயரமாக உள்ளது. இந்திய விடுதலைக்கு மக்கள் செய்யும் போராட்டத்திற்கு ஜப்பான் முழுமையான ஆதரவு அளிக்க தீர்மானித்துள்ளது. மிக விரைவில் இந்தியா சுதந்திரம் அடையும் என்று நாம் அனைவரும் உறுதியாக நம்புவோம். ” இந்த அறிக்கையானது, அங்கு அமர்ந்திருந்த போசுக்கு மிகவும் மகிழ்ச்சியான செய்தியாக இருந்தது. டோஜோவை போசு சந்தித்த போது, அவர் எழுப்பிய கேள்விகளுக்கு அந்த நான்கு சுவர் கொண்ட அறையில் அவர் தெரிவித்திருந்தால் அங்கு இருந்தவர்கள் மட்டும் அந்த பதிலை அறிந்திருக்கக்கூடும். ஆனால் டோஜோ அவர்கள் உலகம் அறியும் வகையில் மிகத் தெளிவாக தமது அறிக்கையை வெளிப்படையாகத் தெரிவித்தார். இந்த அறிக்கையில் போசு மட்டும் மகிழ்ச்சி அடையவில்லை, தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த இந்தியர்கள் அனைவரும் மகிழ்ச்சி அடைந்தனர்.

subash2அக்டோபர் 21, 1943- அன்று மாலை காதே சினிமா அரங்கில் மிகப்பெரிய ஒரு கூட்டம் கூடியிருந்தது, அங்கு பேசினார் போசு. இந்தப் பொதுக்கூட்டத்தில் கூடியிருந்தவர்களில் அதிகம் தமிழர். போசு தனது சுதந்திர அரசை பிரகடனம் செய்த போது கூடியிருந்த கூட்டத்தில் பெரும்பாலோர் தமிழர்களாக இருந்தார்கள் எனவேதான் நேதாஜி போசு தன்னுடைய பேச்சை தமிழில் மொழிப் பெயர்க்கும் படி ஆணையிட்டார். சிதம்பரம் என்னும் தமிழர் போசின் பேச்சைத் தமிழ்மொழியில் மொழி பெயர்த்தபோது பெரும் ஆரவாரம் எழுந்தது. வேறு எந்த இந்திய மொழியிலும் அவரது பேச்சு மொழி பெயர்க்கப்படவில்லை என்பது குறிப்பிடத்தக்கது. தி ஸ்டேட்ஸ்மென் பத்திரிகையின் முன்னாள் ஆசிரியரும், ‘மான்ஆன் மார்லிங்’ என்னும் புத்தகத்தின் ஆசிரியருமான ஜான் ஸ்டீபன்ஸ் என்பவர் எழுதியுள்ள நூலில் போசைப் பற்றி குறிப்பிடும்போது 1943-ம் ஆண்டில் பிரிட்டிசு அரசு போசைக் கண்டு அவரின் நடவடிக்கைகள் குறித்து பெரிதும் அச்சம் மற்றும் கலவரமடைந்திருந்தது என்று குறிப்பிட்டுள்ளார்.

போசு ஜப்பான் வானொலியில் பேசியபோது அவர் குரல் கேட்டதும் பிரிட்டனின் அச்சம் அதிகமாகியது. அவர்கள், போசு ஜெர்மனியில் இருந்து தென்கிழக்கு ஆசிய நாடுகளுக்கு வந்துவிட்டால் அங்கு வாழும் இந்தியர்கள் அனைவரையும் ஒன்றுபடுத்தி விடுவார். இவருக்கு முன்பே ஃப்யுஜிலாரா என்ற ஜப்பானியர் பர்மா மற்றும் தென்கிழக்கு ஆசிய நாடுகளில் ஜப்பான் இராணுவத்தில் சரணடைந்த பிரிட்டன் இராணுவ இந்திய வீரர்களை மோகன்சிங்கிடம் அனுப்பி அவர்களை இந்திய இராணுவத்தில் சுதந்திரமாக செயல்படவிட்டிருக்கின்றனர். ஜப்பானின் போர் வெற்றிகளினால் நாம் (பிரிட்டன்) ஏற்கனவே தோற்று உயிருக்கு பயந்து ஓடி வந்துள்ளோம். இந்தியாவின் மூலம்தான் ஜப்பானை எதிர்க்கும் சீனாவுக்கு போர் ஆயுதங்கள் செல்கிறது. இந்த நேரத்தில் போசு தென்கிழக்கு ஆசியாவில் உள்ளார் என்றால் இந்திய தேசிய இராணுவம் இன்னும் பலமடையும், தமது தோல்வியையும் இந்தியாவின் விடுதலையும் தவிர்க்க முடியாது என்று அஞ்சினர்.

subash3அமெரிக்க உளவுத்துறையும் பிரிட்டனிடம், “இந்தப் போர் காலத்தில் போசு இந்தியாவுக்குள் வந்துவிட்டால் இந்தியாவில் மிகப்பெரிய போராட்டம் வெடிக்கும்” என்று பிரிட்டனை முன்பே எச்சரித்திருந்தது. இந்தப்போர் நிகழும் காலத்தில் நேற்றுவரை ஜெர்மனியில் இருக்கிறேன் என்று பேசிய போசு, இன்று ஜப்பானில் உள்ளேன் என்று எப்படி பேச முடியும். அவர் எவ்வாறு பிரிட்டன், அமெரிக்கா மற்றும் ரசியா போன்ற பெரிய நாடுகளின் கண்களில் மண்ணைத் தூவி எப்படி ஜப்பான் வந்து சேர்ந்தார்? உடனே சர்ச்சில், எப்படியாவது இந்திய மக்களிடம் பிரிட்டன் நம்பிக்கை பெற வேண்டும் அதனால் பிரிட்டிசு அமைச்சரவையில் முக்கியப் பங்கு வகிப்பவரும் காங்கிரசு தலைவர் நேருவுக்கு மிகவும் நெருக்கமானவர் என்று கருதப்பட்டவருமான ‘லார்டு கிரிப்ஸ்’ என்பவரை இந்தியாவிற்கு அனுப்பி காங்கிரசு தலைவர்களோடு பேச்சுவார்த்தை நடத்துவதென்று முடிவு செய்தார். இந்த முடிவில் அமெரிக்காவின் ஆலோசனையும் இதில் சேர்ந்து இருந்தது.

subash - rash bihari boseஜப்பான் மலேயா, சிங்கப்பூர் போன்ற நாடுகளில் பிடித்திருந்த சுமார் 80 ஆயிரம் இந்தியர்களை இந்திய தேசிய இராணுவத்தில் சேர அனுமதித்திருந்தது. போசு வானொலி உரை தென்கிழக்கு ஆசிய மக்களை காந்தம் போன்று ஈர்த்தது. போசும், ராஷ்பிகாரி போசு இருவரும் ஜப்பானிலிருந்து சிங்கப்பூர் சென்றனர். அங்கு போசுக்கு மிகப்பெரிய வரவேற்பு அளிக்கப்பட்டது. அங்கு கூடிருந்த பெரிய கூட்டத்தில் ராஷ்பிகாரி போசு, “இன்றிலிருந்து இந்திய விடுதலை போராட்டத்தில் மிகப் பெரிய திருப்பம் அமையப்போகிறது. நம் இந்திய தேசிய இராணுவம் புது உற்சாகத்துடன் செயல்பட நமக்கு மிகச் சிறந்த தலைவர் கிடைத்துவிட்டார். இன்று நான் எனது தலைவர் பதவியை ராஜினாமா செய்கிறேன். இதோ உங்களின் புது தலைவர் போசு” என்று கூறினார். இன்றைய தினத்திலிருந்து நமது தென்கிழக்கு ஆசிய இந்திய சுதந்திர லீக் அமைப்பின் தலைமைப் பதவியும், இந்திய தேசிய இராணுவத்தின் தலைமைப் பதவியையும் போசு ஏற்று செயல்படுவார் என்று அறிவித்தார். அவருக்குப் பின் பேசிய போசு, நீங்கள் அனைவரும் தொடர்ந்து ஒற்றுமையுடன் ஒன்றுபடவேண்டும், நாம் அனைவரும் உயிர் உள்ளவரை இந்திய விடுதலைக்குப் போராடுவோம். இந்தியா விடுதலை அடைந்ததும் நம் இந்திய தேசிய இராணுவ வீரர்கள் அனைவரும் இந்தியாவை மீண்டும் எவரும் நெருங்காமல் நாம் காப்பாற்றுவோம் என்று உரையாற்றினார்.

ஜப்பான் இராணுவத்தின் ஒரு பிரிவு சிங்கப்பூரில் ஜப்பானின் சுப்ரீம் கமாண்டரான ஜீய்ச்சி டொராச்சியின் கீழ் செயல்பட்டுக் கொண்டிருந்தது. இவரை சந்தித்தார் போசு. டொராச்சி மிகவும் செல்வாக்கான கௌரவம் மிக்க ஒரு ஜப்பானியக் குடும்பத்தில் பிறந்தவர். ஜப்பானில் இராணுவக் கல்லூரியில் படித்து மேல்படிப்பு ஜெர்மனியில் சென்று படித்தவர். இவருக்கு ஜெர்மன் மொழி சரியாக பேசவராது ஆனாலும் போசுக்கு ஜெர்மன் தெளிவாகத் தெரியும் எனவே போசுடன் ஜெர்மானிய மொழியில் பேசுவார். இவரின் முதல் சந்திப்பிலிருந்து இறக்கும் வரை போசின் உண்மையான நண்பராக இருந்தவர். இவர் ஜப்பானில் இராணுவ செயல்பாடுகளை திறமையாகக் கையாண்டவர். சிறந்த அரசியல் ஞானியாகவும், ஜப்பானின் யுத்த அமைச்சராகவும், பிரதமர் பதவிக்கு போட்டியிடத் தகுதிவாய்ந்தவராகவும் ஜப்பானிய மக்களால் போற்றப்பட்டவர். ஜப்பான் பிரதமருடன் சமமாக அமர்ந்து பேசும் ஆற்றல், பிரதமரின் கருத்துக்கு எதிர் கருத்து தெரிவிக்கும் ஆற்றல் கொண்ட சிறந்த மனிதர் டொராச்சி. இவரை போசு சந்தித்து தனது செயல்திட்டங்களை எடுத்துரைத்தார்.

subash1பின் சிங்கப்பூர் சுற்றுப்பயணம் வந்திருந்த ஜப்பான் பிரதமர் ஜெனரல் டோஜோ மற்றும் டொராச்சியும், சில இராணுவ அதிகாரிகளும் போரின் செயல்பாடுகள் குறித்து விவாதம் நடத்தினர். அப்போது ஒரு அதிகாரி போசு 24 மணி நேரமும் தம் தாய்நாட்டு விடுதலைக்காகவே உழைக்கிறார், வேறு சிந்தனையே அவருக்கு இல்லை. ஓர் அரசியல் தலைவருக்குள்ள தனிப்பட்ட பலவீனங்களோ, சுகபோகங்களை நாடும் குணமோ அவரிடம் துளியும் இல்லை. ஓர் இராணுவ அதிகாரியிடம் உள்ள மதுப்பழக்கம் போன்ற கெட்ட பழக்கமும் அவரிடம் இல்லை. இப்படிப்பட்ட ஒரு சுத்தமான தலைவரை நான் இதுவரை பார்த்ததே இல்லை என்று வியந்து பாராட்டினார். பின் டொராச்சியும், போசு ஒரு தற்காலிக சுதந்திர இந்திய அரசை அமைக்க விரும்புகிறார். நான் அதை ஆதரிக்க உள்ளேன் என்றார். பிரதமர் டோஜோவின் முகம் மலர்ந்தது. தனது கணிப்பு சரியாகப் போனது, போசை முதல் தடவை சந்தித்தபோதே, அவர் மிகச் சிறந்த தலைவர் என்று கணித்திருந்தார் டோஜோ. அது சரியான மகிழ்ச்சியில் டொராச்சியிடம் போசை உடனே தற்காலிக இந்திய அரசை தொடங்க என்ன உதவி வேண்டும் என்றாலும் செய்யுங்கள், இப்போது போரின் சூழ்நிலைகளும் சரியாக உள்ளது என்று தெரிவித்துவிட்ட பின் போசை சந்தித்தார் ஜப்பான் பிரதமர் டோஜோ. நீங்கள் ஆரம்பிக்க உள்ள தற்காலிக சுதந்திர இந்திய அரசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் ஜப்பான் செய்யும் என்று தெரிவித்தார். போசு உடனே நீங்கள் மீண்டும் இங்கு வந்து எங்கள் இந்திய தேசிய இராணுவத்தின் இராணுவ மரியாதையை ஏற்றுக்கொள்ள வேண்டும். மொத்தமுள்ள 80000 வீரர்களில் தற்போது 30000 இந்திய தேசிய இராணுவ வீரர்கள் உள்ளனர். மீதம் உள்ள 50000 இராணுவ வீரர்களுக்கும் இராணுவத்திற்குத் தேவையான ஆயுதங்களை ஜப்பான் கொடுக்க வேண்டும் என்றார். உடனே ஜப்பானின் இராணுவ அதிகாரிகளில் சிலர் போசிடம் நீங்கள் கூறும் அளவில் ஆயுதம் தற்போது இல்லை. பின் ஜப்பான் பிரதமருக்கு இராணுவ மரியாதை அளிப்பது சாதாரணமான காரியம் இல்லை அது உங்கள் இந்திய தேசிய இராணுவத்தினால் முடியாது இவர்களுக்கு இன்னும் இராணுவ பயிற்சி தேவை எனவே இந்தத் திட்டத்தினை உடனே நிறுத்துங்கள் என்று வாதாடினார்கள். போசு, அவர்களைப் பார்த்து அமைதியாக இருந்துவிட்டு பிரதமர் டோஜோவுக்கு குறித்த நேரத்தில் சிங்கப்பூரில் ஒரு சிறப்பான இராணுவ மரியாதையை ஏற்பாடு செய்தார்.

அக்டோபர் 21, 1943-ல் காலை அணி திரண்டிருந்த இந்திய தேசிய இராணுவ வீரர்களைக் கண்டு பிரதமர் டோஜோ மற்றும் போசுக்கு எதிர்ப்பு தெரிவித்த ஜப்பான் இராணுவ அதிகாரிகள் பெரும் அதிர்ச்சி அடைந்தனர். இவர்கள் சிறந்த வீரர்கள் அவர்களின் அணிவகுப்பு மற்றும் போசின் தலைமையைக் கண்டு வீரர்களிடம் இவ்வளவு ஒழுக்கமா என்று பிரதமர் டோஜோ முழு மகிழ்ச்சி அடைந்தார். போசுக்குத் தேவையான அனைத்து உதவிகளையும் செய்வதாகவும், அனைத்து தகவல்களையும் டொரோச்சியுடன் பரிமாறிக் கொள்ளுங்கள் என்றும் தெரிவித்தார். பின் அந்த இடத்தில் போசு தனது தற்காலிக சுதந்திர இந்திய அரசை அறிவித்தார். இதனை ஜப்பான் பிரதமரும் ஏற்றுக் கொண்டார்.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 36”

அதிகம் படித்தது