மார்ச்சு 25, 2023 இதழ்
தமிழ் வார இதழ்

சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 37

கி.ஆறுமுகம்

Nov 29, 2014

bosu2போசு இந்திய தேசிய இராணுவத்தின் தலைமையை ஏற்றதும், இந்திய தேசிய இராணுவத்தில் பெண்கள் பிரிபவை தொடங்க வேண்டும் என்று முன்பே அதற்குத் தேவையான அனைத்துத் திட்டங்களையும் தீட்டியிருந்தார். அதனை செயல்படுத்தும் பொழுது ஜப்பானின் சில இராணுவ அதிகாரிகள், “இராணுவத்தில் பெண்களா அவர்கள் எப்படி ஆயதம் ஏந்தி போர்களில் ஈடுபட முடியும். பெண்களை இராணுவத்தில் சேர்ந்தால் பல ஒழுங்கீன செயல்கள் ஏற்படும். எனவே அவர்களை இராணுவத்தில் சேர்க்கக் கூடாது” என்றனர். ஆனால் போசு இதனை எதையும் அவர் காதில் வாங்கிக் கொள்ளவில்லை. அவரின் செயல்பாடுகளை தீவிரமாக செயல்படுத்தினார். பெண்களை இராணுவத்தில் சேர்ப்பதற்கு விதிமுறைகளை அமைத்திருந்தார். இதனை அறிந்த தென்கிழக்கு ஆசியாவில் வாழ்ந்த பெண்கள் கூட்டம் கூட்டமாக வந்து தங்களை இந்திய தேசிய மகளிர் இராணுவப் பிரிவில் சேர்த்துக் கொள்ளும்படி வேண்டினர். தங்கள் தலைமுடியை கத்தரித்துக் கொண்டனர். இதைக் கண்டு போசு அவர்களை இந்திய தேசிய இராணுவத்தில் சேர்த்துக் கொண்டார். அவர்களுக்கு ஜான்சிராணி ரெஜிமெண்ட் என பெயர் இட்டார். இதன் தளபதியாக (கேப்டன்) தமிழ்நாட்டைச் சேர்ந்த பெண்மணி டாக்டர் லட்சுமி நியமிக்கப்பட்டார். இந்த லட்சமி சென்னையில் டாக்டர் பட்டம் பெற்று சிறிது காலம் மருத்துவ சேவைசெய்து பின் தனது உறவுக்கார பெண்மணிக்கு உதவ சென்னையை விட்டுச் சென்று அங்கு போசின் கூட்டத்தில் பங்கு கொண்டு பின் போசை சந்தித்து இந்திய தேசிய இராணுவத்தின் மகளிர் பிரிவில் சேர்ந்தவர்.bosu4டாக்டர் லட்சுமி இந்தியா விடுதலை அடைந்த பின் தனது இந்திய தேசிய இராணுவ அனுபவத்தைக் குறிப்பிடும்போது இவ்வாறு கூறியுள்ளார். “போசின் கூட்டம் எங்கு நடைபெற்றாலும் அதில் மக்கள் கூட்டம் அலைமோதும். இவரின் பொதுக் கூட்டத்தில் பங்கு கொள்ள, ஒரு நாற்பது பெண்மணிகள் நாற்பது வயதை எட்டியவர்கள் போசின் பொதுக்கூட்டம் எங்கு நடைபெற்றாலும் அதில் கலந்து கொண்டனர். பின் இவர்கள் அனைவரும் போசை சந்தித்து தங்களை இந்திய தேசிய இராணுவத்தில் சேர்த்துக் கொள்ள வேண்டும் என்று மன்றாடினார்கள். போசு இவர்களின் வயதை குறித்து முடியாது என்று தெரிவித்தார். பின் இவர்கள் அனைவரும் எங்களைப் போர் வீரர்களுக்கு சமைக்கும் பணியாவது கொடுங்கள் என்று கேட்டதும் போசு இவர்களை இன்னும் தடை செல்ல முடியாது என்று முடிவு செய்து இந்திய தேசிய இராணுவ மகளிர் பிரிவுக்கு இவர்கள் அனைவரும் சமையல் செய்யும் பணியில் அமர்த்தப்பட்டார்கள். இவர்கள் அனைவரும் தமிழ்ப்பெண்கள். போசு உருவாக்கிய இந்திய தேசிய இராணுவத்தில் தமிழர்கள் அதிகம். அதில் பெண்களும் இருந்தனர் என்பது தமிழர்களின் பெருமையையும் வீரத்தினையும் பறைசாற்றுவதாக அமைந்தது.

subash3பின் போசு இந்திய தேசிய இராணுவத்திற்குத் தேவையான நிதியைத் திரட்டும் பணியில் தீவிரமாக ஈடுபட்டார். பல முறை சிங்கப்பூரிலிருந்து மலேசியா, பர்மா என்று பல இடங்களுக்கு சுற்றுப்பயணம் செய்தார். இந்திய மக்களை ஒன்றுபடுத்தி இந்திய தேசிய இராணுவத்தில் ஆட்களை சேர்ப்பதற்கும், நிதியை திரட்டவும் பெரும் முயற்சி எடுத்தார். 1943ல் பெனாங் நகரில் நடந்த பொதுக்கூட்டத்தில் போசு பேசி முடிந்ததும் அங்கு அலைகடலாக திரண்டிருந்த மக்கள் தங்கள் கையில் இருந்த பணம், பெண்கள் தங்கள் ஆபரணங்கள் அனைத்தும் போசின் காலடியில் கொட்டினர். பலர் பெயர்களைக் கூட குறிப்பிடாமல் லட்சம் லட்சமாகப் பணத்தைக் கொடுத்தனர். பலர் தங்கள் சொத்து முழுவதையும் கொடுத்தனர். இந்த ஒரு கூட்டத்தில் மட்டும் சுமார் 20 லட்சம் டாலர் நிதி சேர்ந்தது. பின்னர் பல இடங்களுக்குச் சென்று நிதி திரட்டிவிட்டு மீண்டும் பெனாங் நகருக்கு வந்து அங்கிருந்து  இரயில் மூலம் கோலாலம்பூருக்குச் சென்றார். போசு செல்லும் பாதையில் எல்லாம் மக்கள் கூட்டம். எங்கள் நேதாஜி வாழ்க என்ற முழக்கம் விண்ணைப் பிளந்தது. இதனால் இரயில் போக்குவரத்து, மக்கள் நடமாட்டமும் பெரிதும் தடைபட்டது. அப்பொழுது போசு, “உள்ளூர் சுதந்திர இந்திய சங்கத் தலைவர் ஒருவரை அழைத்து இம்மாதிரி தனிப்பட்ட மனிதரை நீங்கள் பூஜை செய்யக்கூடாது அதுவே நம் இயக்கத்திற்குப் பெரும் சாபம். இயக்கத்தின் நலனைக் கருதித் தங்களை அர்ப்பணம் செய்ய எல்லாரும் சித்தமாயிருக்க வேண்டும். மக்களின் உற்சாகம் இவ்வாறு நல்ல வழியில் செலுத்தப்பட்டால்தான் நன்மை ஏற்படும். தலைவர்கள் முக்கியமல்ல, தலைவர்கள் தோன்றி மறைவார்கள் ஆனால் இயக்கம் மட்டும் என்றும் நிரந்தரமாக நடக்க வேண்டும்” என்று கூறினார். சற்று இன்றைய அரசியல் தலைவர்களை சிந்தித்துப் பாருங்கள். போசைப் போன்று எவனாவது ஒரு தலைவன், வரும்போதே தன்னை வாழ்க என்று கூற ஒரு கூட்டத்தினை ஏற்படுத்தி அதற்கு பணம், மது என்று தருபவன்தான் இன்றைய நமது தலைவர்கள். போசை தலைவராக ஏற்றுக் கொண்ட ஒருவர் கூட அவர் செயல்பாடுகளை தனியாக தான் செய்ததாக கூறவில்லை. தன் தாய்நாட்டுக்கு தாங்கள் செய்ய வேண்டிய நமது கடமை என்று செயல்பட்டவர்கள். போசு சிங்கப்பூருக்கு வந்து இந்திய தேசிய இராணுவத்திற்கு 3 லட்சம் வீரர்களும் மூன்று கோடி டாலரும் தேவை என அறிவித்தார். இதனைக் கேட்டதும் மலேசியாவிலிருந்து 80 ஆயிரம், பர்மாவிலிருந்து 1 லட்சம், பின் இந்தியர்கள், தாய்லாந்து, இந்தோசீனம் போன்ற இடங்களில் இருந்தவர்களும் பல லட்சம் நிதி உதவி செய்து இந்திய தேசிய இராணுவத்தில் சேர்ந்தனர்.

subashu1பர்மாவில் நடந்த ஒரு பொதுக்கூட்டத்தில் போசு பேசினார். இந்த உரையை தன் பெயர் குறிப்பிடாமல் ஜெய்ஹிந்த் டயரி என்ற தொகுப்பு நூலில் 1946ல் ஜான்சிராணி படைப்பிரிவைச் சேர்ந்த ஒரு வீராங்கனை எழுதிய நாள் குறிப்பு வருமாறு. “இன்று நாங்கள் சுதந்திர தினத்தைக் கொண்டாடினோம். சுமார் அறுபதாயிரம் பேருக்கும் மேல் திரண்டிருந்த ஒரு கூட்டத்தில் நேதாஜி உணர்ச்சி மிகுந்த சொற்பொழிவாற்றினார். கூட்டம் தொடங்கும்போது அவருக்கு மாலை அணிவிக்கப்பட்டது அதனை தனது கையில் வைத்துக் கொண்டு பேசி முடிக்கும் பொழுது, இந்த மாலையை நான் ஏலம் விடலாம் என்று கருதுகிறேன். அந்தப் பணம் நம் சேனையின் நிதிக்குச் செல்லும் என்று கூறினார். எடுத்த எடுப்பிலேயே ஒருவர் ஒரு லட்சம் ரூபாய் என்று கேட்டு அனைவரையும் வியப்பிலும் திகைப்பிலும் ஆழ்த்தினார். இவர் ஒரு பணக்காரப் பஞ்சாபி இளைஞர். பின் இரண்டு, மூன்று, நான்கு என்று சென்றது. ஏழு லட்சம் ரூபாய் எட்டியதும் இந்த பஞ்சாபி இளைஞர் தனக்கு மாலை கிடைக்காமல் போய்விடுமே என்று எண்ணி மேடையில் பாய்ந்தார். இந்த மாலைக்காக என் சொத்து முழுவதையும் தருகிறேன், அனைத்தையும் அர்ப்பணிக்கிறேன். எனக்குச் சொந்தமான ஒவ்வொரு காசையும் தருகிறேன். எனக்கே இந்த மாலை வேண்டும் என்று கதறினார். உணர்ச்சி வேகத்தில் நடுங்கிக் கொண்டு நின்ற அந்த இளைஞரை போசு தமது இருகைகளாலும் பிடித்து சமாதானப்படுத்தினார். மாலை உம்முடையதே அது உமக்கே உரியது நம் சேனை பெறும் பெருமை அனைத்தும் உம்மைப் போன்று தேசப்கதர்களுக்கே உரித்தானது என்று அந்த இளைஞரை ஆசீர்வதித்தார். ஆனால் அந்த இளைஞரின் செவியில் எதுவும் ஏறவில்லை. மாலையை இறுக்க அனைத்துக் கொண்டு ஆனந்தக்கூத்தாடிக் கொண்டிருந்தார். இப்பொழுது என் எல்லாச் சொத்துக்களையும் தேசிய சேனைக்குக் கொடுத்து விட்டேன். இப்பொழுது நானும் இந்த விடுதலை சேனையில் சேர விரும்புகிறேன். தாய்நாட்டின் விடுதலைக்காக உயிரையும் அர்ப்பணம் செய்ய சித்தமாயிருக்கிறேன் என்று அந்த இளைஞர் கூறினார். அந்த மலர் மாலை இன்று வாடியிருக்கும் இதழ்கள் உதிர்ந்து கருகியிருக்கும் மலர்ந்து மணம் பரப்பிய அந்த மலர் மாலை இன்று மரணத்தின் சாயலும் வாட்டமும் பற்றியிருக்கும். இன்று இம்மலர் மாலைக்கு ஏற்பட்ட கதியே நாளை இந்த இளைஞருக்கும் நேரிடலாம் ஆனால் அந்த மலர் மாலையை மனங்குளிர்ந்து அன்று அவர் எடுத்துச் சென்றபோது அவருடைய கண்ணில் தென்பட்ட ஒரு புது ஒளி இன்ப ஒளி இருக்கிறதே அது என்றும் வாடாது என்று உள்ளமுறுக தம் டயிரியில் குறிப்பிட்டிருக்கிறார் அந்த பெண். அதில் தன் பெயரை குறிப்பிடவில்லை. இது தான் போசை பின்பற்றிய இந்திய தேசிய இராணுவ வீரர் மற்றும் வீராங்கனைகளின் தியாகப் பண்பு.

போசு திரட்டிய நிதியில், 1944-ஆம் ஆண்டில் ஜப்பானில் இருந்த போசு ஜப்பான் அரசாங்கத்திற்குத் தெரிவித்துவிட்டு டோக்கியோ நகரில் உள்ள ஜெர்மன் தூதரகத்தின் மூலம் 5 லட்சம் யென்களை (ஜப்பான் நாணயம்) ஜெர்மனியின் கடனைத் தீர்க்க முதல் தவணையாக அனுப்பியும் வைத்தார்.

subash4இந்திய தேசிய இராணுவத்தில் இருந்த மற்றொரு தமிழர் வாட்டாக்குடி இரணியன் இவர் இயற்பெயர் வெங்கடாச்சலம் தேவர். இவர் இளம் வயதில் சிங்கப்பூர் சென்று அங்கு பணி செய்யும் பொழுது பொதுவுடைமை கொள்கையில் ஈர்க்கப்பட்டு தனது பெயரை இரணியன் என்று மாற்றிக் கொண்டு போசினால் கவரப்பட்டு இந்திய தேசிய இராணுவத்தில் பணி செய்து பின் தனது 28வது வயதில் 1948ல் சொந்த ஊர் திரும்பினார். அப்பொழுது காங்கிரசின் ஆட்சியில் முதலாளித்துவம் வளர்ந்து தொழிலாளர்கள் பல இன்னல்களைக் கண்டனர். இதனைப் பார்த்ததும் பல தொழிலாளர்களை ஒற்றுமைப்படுத்தி முதலாளித்துவத்திற்கு எதிராக பல போராட்டங்களை செய்து தொழிலாளர்களின் முன்னேற்றத்திற்கு பாடுபட்டு வந்தார். பல குள்ளநரி முதலாளிகள் இவரின் மேல் பல பொய்யான வழக்குகளை பதிவு செய்து காவல் துறையினால் தேடப்பட்டார். பின் இவர் தலைமறைவு வாழ்க்கை வாழ்ந்தார். காவல்துறை இவரை கைதுசெய்த போது இவருடன் இருந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவரை காவல்துறை உன்மீது வழக்கு ஏதும் இல்லை சென்றுவிடு என்று கூறியும் இரணியனிடம் கொண்ட நட்பினால் பிரியாமல் இருக்க இருவரையும் சுட்டு கொன்றது காவல்துறை. இந்த ஆம்லாப்பட்டு ஆறுமுகம் என்பவர் ஒரு தாழ்த்தப்பட்ட பிரிவினர். போசின் தலைமையை ஏற்றுக் கொண்ட இரணியன் சாதிபார்க்கவில்லை. தனது இறதி மூச்சுள்ள வரை நாட்டிற்காக மட்டும் பாடுபட்ட வீரர் அவர் தனது 30வது வயதில் இறந்தார். போசை தலைவராக ஏற்றுக் கொண்ட எவரும் தன்னை முன்னிலை படுத்தவில்லை சாதிபார்க்கவில்லை போசு உட்பட அனைவரும் நாட்டிற்காக உழைத்தவர்கள் இதுதான் போசின் தலைமை.

-தொடரும்


கி.ஆறுமுகம்

இவரது மற்ற கட்டுரைகளைக் காண இங்கே சொடுக்குங்கள்.

கருத்துக்கள் பதிவாகவில்லை- “சுபாசு சந்திரபோசு வாழ்க்கையும் இறப்பின் மர்மமும் – பகுதி 37”

அதிகம் படித்தது